Sunday, July 19, 2015

சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் ஏன்? வைகோ

அதானி குழுமத்திடமிருந்து அதிக விலைக்கு 
சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் ஏன்?
முதல்வர் விளக்கம் கூறுவாரா?
வைகோ அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், 4530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்காக, குஜராத்தை சேர்ந்த அதானி குழுமத்துடன் ஜூலை 4 ஆம் தேதி தமிழக மின்சாரவாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த திட்டம்தான் உலகிலேயே ஒரே இடத்தில் அமையவுள்ள மிகப்பெரிய சூரிய மின்சக்தித் திட்டம் என்று அதானி குழுமம் கூறி இருக்கிறது. அதானி குழுமம் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின்சரம் ஒரு யூனிட், 7 ரூபாய் ஒரு காசுக்கு கொள்முதல் செய்திட, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 25 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் போல, மத்திய பிரதேச மாநில அரசும், 300 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியதையடுத்து, பல நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அளித்துள்ளன. ஜூலை 17 ஆம் தேதி இந்த ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டபோது, மொரீசியஸ் நாட்டின் ஸ்கை பவர் சௌத் ஈஸ்ட் ஆசியா கோல்டிங் லிமிடெட் நிறுவனம் ஒரு யூனிட் 5 ரூபாய் 5 காசுகள் என்று 25 ஆண்டுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க ஒப்புக்கொண்டது. அதானி குழுமம், 6 ரூபாய் 4 காசுக்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ஒப்பந்தப்புள்ளி அளித்திருக்கிறது.

மத்திய பிரதேசத்தில், சூரிய மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு, ஒரு யூனிட் 6 ரூபாய் 4 காசுக்கு விற்பனை செய்திட ஒப்பந்தப்புள்ளி அளித்துள்ள அதானி குழுமத்திடமிருந்து, தமிழக அரசு 7 ரூபாய் ஒரு காசுக்கு கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுகிறது. தமிழக அரசு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதால் தமிழக மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்திற்கு ஒரு நாளைக்கு 7.76 கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு ஆண்டுக்கு சுமார் 2800 கோடி ரூபாய் தமிழக மின்சார வாரியம் நட்டத்தை சந்திக்கும் நிலைமை உருவாகும்.

தமிழக மின்சார வாரியம் ஏற்கனவே ஏற்பட்டுள்ள 58,000 கோடி ரூபாய் நட்டத்தை ஈடு கட்ட முடியாமல், மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்கள் மீது சுமையை ஏற்றி இருக்கிறது. இந்நிலையில் அதானி குழுமத்திடம் அதிக விலை கொடுத்து சூரிய மின்சாரம் கொள்முதல் செய்ய ஜெயலலிதா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது ஏன்?


அதானி குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு குஜராத் மாநிலத்தில் மோடி அரசு உறுதுணையாக இருந்தது. 2002 இல் மோடி, குஜராத் மாநில முதல்வர் பொறுப்பை ஏற்றபோது, அதானி குழுமத்தின் வணிக மதிப்பு 3741 கோடி ரூபாய். 2014 இல் 75,659 கோடி ரூபாய் அளவுக்கு 20 மடங்கு வளர்ச்சி அடைந்தது. மோடி பிரதமராக பொறுப்புக்கு வந்த பிறகும் அதானி குழுமத்தின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறார் என்பதற்கு மோடியின் ஆஸ்திரேலியா பயணம் உணர்த்தியது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியையும் உடன் அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானி குழுமத்திற்கு வாங்கி தருவதற்கு பிரதமர் மோடி, தாமே முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதுமட்டுமின்றி பாரத ஸ்டேட் வங்கி மூலம் 6200 கோடி ரூபாய், அதானி குழுமத்திற்கு கடன் வழங்கவும் மோடி அரசு நிர்பந்தம் கொடுத்தது என்று செய்திகள் வந்தன.

மோடியை பின்பற்றி ஜெயலலிதா அரசும் அதானி குழுமத்திற்கு சலுகைகள் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதாதான் இதற்கு உரிய விளக்கத்தை, நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு செயல்படாத அரசு - தமிழிசை குற்றச்சாட்டு


தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது  துறைகளிலும் ஊழல்  வருகிறது தமிழக  அமைச்சர்கள்  இதற்கு பதில் கூறுவதாக இல்லை அதானி மின்சார ஒப்பந்தம் உணமையிலேயே நேரடியாக டெண்டர் விடப்பட்டு தான் தேர்ந்து எடுக்க பட்டு இருக்க வேண்டும் .

மேலும் மின்சார துறையிலும் ஊழல  வருகிறது யார் யார் ஒப்பந்தத்திற்கு வந்தார்கள் யார் யார் குறைவான மதிபிட்டில் கொடுத்து இருந்தார்கள் என்று தெளிவான  அரசு தமிழக மக்களுக்கு 
கொடுக்க வேண்டும் மேலும் கேரளா அரசு தமிழக காய்கறிகள் பூச்சி கொல்லி தன்மை அதிகமாக உள்ளது என  தெரிவித்து உள்ளது தமிழக அரசு விவசாயிக்கு கை கொடுக்கும் அளவுக்கு பரிசோதனை செய்து விவசாயிக்கு உதவி செய்து இருக்க வேண்டும் என தெரிவித்தார்

Saturday, July 18, 2015

காதலர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் காதல் கிராமம்

பேரத்தை துவங்கியது மூ.மு.க


திருச்சியில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைதொடர்ந்து, மூ.மு.க., தலைவர் டாக்டர் சேதுராமன் கூறியபோது, 'நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால் அதன் தலைமை எங்களை கண்டு கொள்வதில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுக்கள் ஒதுக்குபவர்களுடன் கூட்டணி அமைப்போம்' என்றார்.

போலி குடிநீர் நிறுவனத்துக்கு அபராதம்

போலி குடிநீர் நிறுவனத்துக்கு அபராதம் 

காஞ்சீபுரம் மாவட்டம், செவிலிமேடு கிராமத்தில் கோகுல் அக்வா ஃபுட் புராடக்ட் நிறுவனம், போலியான ஐ.எஸ்.ஐ. முத்திரையை குடிநீர் கேன்களில் ஒட்டி விற்பனை செய்து வருவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான பி.ஐ.எஸ். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 20 லிட்டர் பெட் பாட்டில்களில் அக்வா பிரைட் என்ற வணிகப் பெயரில் வேறு ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழ் எண்ணை சட்ட விரோதமாக இந்த நிறுவனம் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையொட்டி அந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.எஸ்.ஐ. முத்திரையை தவறாக பயன்படுத்திய நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை அல்லது ரூ. 50000 அபராதம் அல்லது இவை இரண்டும் பி.ஐ.எஸ். சட்டம் 1986ன் படி தண்டனை விதிக்கப்படும்.
ஐ.எஸ்.ஐ. தர முத்திரையை தவறாக பயன்படுத்துபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் பி.ஐ.எஸ். நிறுவனத்திற்கு 044-22542168 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது sro@bis.org என்ற இமெயில் முகவரிக்கோ தெரிவிக்கலாம். அவர்கள் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று பி.ஐ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஒரு லட்சம் கோடி நஷ்டத்திற்கு அமைச்சரின் பதில் என்ன?

மின் வாரியத்தில் ஒரு லட்சம் கோடி நஷ்டத்திற்கு அமைச்சரின் பதில் என்ன?
திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி





தமிழகம் ஒளிருகிறது என்று அ.தி.மு.க. நினைக்கலாம். ஆனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்பது தான் உண்மை. அனலடிக்கும் கோடையில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். சமீபத்தில் மின் நிலைமை பற்றி அடுத்தடுத்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். முதல் அறிக்கையிலும் சரி, தற்போது தலைவர் கலைஞருக்கு பதில் அளிக்கிறேன் என்று அநாகரீகமாக வெளியிட்டுள்ள இரண்டாவது அறிக்கையிலும் “2011ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி, அ.தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட புதிய மின்திட்டங்கள் பற்றியோ, அதன் மூலம் எத்தனை மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பது பற்றியோ ஏதும் குறிப்பிடவும் இல்லை. அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதையும் அமைச்சர் மறுக்கவில்லை. கழக அரசு துவங்கிய உடன்குடி மின்திட்டத்திலும் அ.தி.மு.க. அரசு ஏகப்பட்ட டெண்டர் குளறுபடிகளைச் செய்துள்ளதையும் மறுக்கவில்லை. அந்தத் திட்ட விவகாரம் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை ஏனோ அமைச்சர் தன் அறிக்கையில் மூடி மறைத்துள்ளார். அதே நேரத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் ஏன் புதிய மின் திட்டங்கள் துவங்கப்படவில்லை என்றோ, கழக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட மின்திட்டங்கள் ஏன் விரைந்து முடிக்கப்படவில்லை என்பது பற்றியே அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எந்த விளக்கமும் கூறவில்லை

. தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் மின் மீட்டர்களை ஏன் வாங்கியது அ.தி.மு.க. அரசு என்பதற்கும் விளக்கம் ஏதுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக என்ன விலை கொடுத்து, எவ்வளவு புதிய மின் மீட்டர்கள் வாங்கப்பட்டன என்பதைக் குறிப்பிடாமல், எத்தனை எலெக்ட்ரோ மெக்கானிக் மீட்டர்கள் இதுவரை மாற்றப்பட்டுள்ளன என்பதை மட்டுமே மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே தி.மு.க தலைவர் வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு அறிக்கை என்ற போர்வையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதன் ஒப்புதல் வாக்குமூலம் தான் அமைச்சரின் இரு அறிக்கைகள்! சூரிய ஒளி மின்சாரம் ஒரு யூனிட் 3.50 ரூபாய்க்கும், மின்சாரம் ஒரு யூனிட் 4 ரூபாய்க்கும் கிடைக்கும் போது அதானி குழுமத்திடமிருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை 7.01 ரூபாய் கொடுத்து வாங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏன் திட்டமிடுகிறது என்ற கேள்விக்கும் அமைச்சரிடமிருந்து
பதில் இல்லை. “ஏன் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்தீர்கள்” என்று தலைவர் கலைஞர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் “வெற்று அறிக்கை”களை விட்டு மின்துறை அமைச்சர் தன் பொறுப்பினை தட்டிக் கழிக்க முடியாது என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். "கரெப்ஷன்" "கமிஷன்" கலாச்சாரத்திற்கு விடை கொடுத்து விட்டு அமைச்சர் பணியாற்றியிருந்தாலே, இந்த மின்திட்டங்கள் எல்லாம் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பதே மின்துறை அமைச்சர் ஏனோ இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறாரா அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போல் நடிக்கிறாரா என்று தான் கேள்வி எழுப்ப வேண்டியதிருக்கிறது. ஆகவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில் எழுப்பப்பட்டுள்ள முறைகேடு புகார்களுக்கும், ஏன் அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது அ.தி.மு.க. அரசு என்பதற்கும் அமைச்சர் பொறுப்பேற்றுத்தான் ஆக வேண்டும். மோசமான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளால் கடந்த நான்கு வருடங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது அ.தி.மு.க. அரசு. இந்நிலையில் நான் மின் துறை அமைச்சரைப் பார்த்து மூன்றே மூன்று கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

1) புதிய மின்திட்டங்கள் மற்றும் ஏற்கனவே கழக ஆட்சியில் துவங்கப்பட்ட மின் திட்டங்களை விரைந்து முடிப்பது பற்றி எத்தனை முறை மின்வாரியப் பொறியாளர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் என்ற முறையில் ஆலோசனை நடத்தியிருக்கிறீர்கள்? அல்லது அதிகாரிகளுடன் ஆய்வு செய்திருக்கிறீர்கள்?
2) தன் பதவிக்காலத்தில் இதுவரை எத்தனை முறை அதிமுக அரசின் புதிய மின்திட்டங்கள் நடைபெறுவதாக சொல்லப்படும் இடத்திற்கோ, அல்லது ஏற்கனவே கழக ஆட்சியில் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் மின்திட்டங்கள் உள்ள இடத்திற்கோ அமைச்சர் என்ற முறையில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறீர்கள்?
3) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் மூழ்க விட்டது ஏன்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் அமைச்சர் பதில் சொல்கிறாரோ இல்லையோ அ.தி.மு.க. ஆட்சியின் கையாலாகாத தனத்தாலும், நிர்வாக திறமையின்மையாலும் தமிழகம் மின் பற்றாக்குறையிலும், மின்வெட்டிலும் சிக்கித் தவிக்கிறது என்பது தான் உண்மை. ஆகவே தமிழக மக்கள் காதுகளில் "பூ சுற்று" முயற்சிக்காமல், கழக அரசில் துவங்கப்பட்ட மின் திட்டங்களை விரைவுபடுத்தி, ஏற்கனவே முடிக்கப்பட்ட மின் திட்டங்களில் இருந்து மின்சார உற்பத்தியைத் தொடங்கி தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை மற்றும் மின்
வெட்டை உடனே நீக்குவதற்கு மின் துறை அமைச்சர் பணியாற்ற வேண்டும், அதனை "மக்களுக்காகவே நான்" என்று கூறும் முதலமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விஜயகாந்த் கல்லூரி நிர்வாகிகள் மீது புகார்



விஜயகாந்த் கல்லூரி நிர்வாகிகள் மீது புகார் ஆள் வைத்து தாக்கியதாக துணைபேராசிரியர் குற்றச்சாட்டி உள்ளார்.


ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் துணைபேராசிரியராக பணியாற்றியவர் விக்ரம். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், கல்லூரி நிர்வாகம் பல மாதங்களாக சம்பளம் தரவில்லை என்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிட தன்னை போன்ற ஆசிரியர்களை கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செயலை கண்டித்து தான் கல்லூரியில் துண்டு பிரசரம் விநியோகம் செய்யதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி தன்னை மிரட்டியதாகவும் கூறியுள்ளார். கடந்த 15-ம் தேதி கல்லூரி அருகே இருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கியதாகவும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு எதிராக பேசக்கூடாது என்று மிரட்டி விட்டு சென்றாகவும் அந்த புகார் மனுவில் விக்ரம் தெரிவித்துள்ளார்.

Sunday, August 24, 2014

மின்வெட்டு - தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - பாமக ராமதாஸ்

மீண்டும் மின்வெட்டு: மக்களை ஏமாற்றிய
 தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததையடுத்து சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் மின்வெட்டு தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் நாள் தோறும் 4 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் மின்நிலைமை குறித்து கடந்த மே மாதம் 27 ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, ஜூன் ஒன்றாம் தேதி முதல் மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும் என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி, மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தை மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாற்றியதில் பெருமிதம் அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலம் என்று 3 ஆண்டுகள் சிரமப்பட்டு ஜெயலலிதா உருவாக்கி வைத்த மாயை மூன்றே மாதங்களில் கலைந்து போயிருக்கிறது. தமிழகத்தின் மின்தட்டுப்பாட்டை போக்க ஜெயலலிதா தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்ற உண்மையும் இப்போது அம்பலமாகியிருக்கிறது. 
மின்வெட்டு நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்த சில நாட்களிலேயே பல பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டது. இதை நான் சுட்டிக்காட்டியபோது, முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின்வெட்டு இல்லை என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சாதித்தார். ஆனால், பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பதைப் போல இப்போது உண்மை வெளிவந்துவிட்டது. கடந்த 18ஆம் தேதி 360 மெகாவாட் அளவுக்கும், 19ஆம் தேதி 340 மெகாவாட் அளவுக்கும் 20ஆம் தேதி 940 மெகாவாட் அளவுக்கும், 21ஆம் தேதி 1190 மெகாவாட் அளவுக்கும், 22 ஆம் தேதி 966 மெகாவாட் அளவுக்கும் மின்வெட்டு செய்யப்பட்டதாக தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அ.தி.மு.க. அரசு பதவியேற்ற போது தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகாவாட் ஆகவும், மின் உற்பத்தி 8500 மெகாவாட் ஆகவும் இருந்தது. அதன்பின் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் உற்பத்தியை தொடங்கியதால் 1800 மெகாவாட், தேசிய அனல் மின் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் வல்லூர் மின் திட்டத்தின் இரு பிரிவுகள் உற்பத்தியைத் தொடங்கியதால் 750 மெகாவாட் என மொத்தம் 2550 மெகாவாட் மின்சாரம்  கூடுதலாக கிடைக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் மின் தேவை 14,500 மெகாவாட் ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் மின்னுற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், கிட்டத்தட்ட அதே அளவுக்கு மின் தேவையும் உயர்ந்திருப்பதால் தமிழகத்தின் மின்பற்றாக்குறை குறையாமல் அதே அளவிலேயே இருந்து வருகிறது. இந்த இடைவெளியை குறைத்து மின்வெட்டை போக்க வேண்டுமானால், புதிய அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது தான் ஒரே வழியாகும். ஆனால், அதை செய்யாமல், ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டும் கிடைக்கும்  காற்றாலை மின்சாரத்தை நம்பி தமிழகம் மின்வெட்டே இல்லாத மாநிலம் என்பது போன்ற பொய்யானத் தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் அரசு தீவிரம் காட்டுகிறது. இதன்மூலம் மின்வெட்டு விவகாரத்தில் மக்களை மட்டுமின்றி தன்னைத் தானே தமிழக அரசு ஏமாற்றிக் கொள்கிறது என்பது தான் உண்மை.
 மழை காரணமாக மின்தேவை குறைந்துள்ள  நிலையிலேயே ஆயிரம் மெகாவாட்டுக்கும் கூடுதலாக மின்வெட்டு செய்யப்படும் நிலையில், மின்தேவை உயரும் போது மின்வெட்டு நேரமும் 10 மணி நேரம் முதல் 12 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாநிலத்தின் மின்நிலைமை கவலையளிக்கும் வகையில் இருக்கும்போதிலும் அதை சரி செய்ய வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு இல்லாதது தான் இதற்குக் காரணம் ஆகும். மின்வெட்டு தொடர்பாக கடந்த ஜூன் மாதத்தில் நான் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்திருந்த அமைச்சர் விஸ்வநாதன், 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் திட்டத்திற்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், 26.07.2013 அன்று ஒப்பந்தப் புள்ளியும், 05.02.2014 அன்று விலைப்புள்ளியும் பிரிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு அதன்பின் பல மாதங்கள் ஆகியும் இன்று வரை பணி ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. 1320 மெகாவாட் உடன்குடி மின்திட்டத்திற்கும் ஒப்பந்தப்புள்ளி மற்றும் விலைப்புள்ளி பிரிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் ஒப்பந்தம் வழங்கப்பட வில்லை.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் 1000 மெகாவாட் மின்திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் மின்னுற்பத்தியை தொடங்கும் என  அமைச்சர் அறிவித்திருந்தார். ஆகஸ்ட் மாதம் முடிவடையப்போகும் நிலையில், அங்கு மின்னுற்பத்தி தொடங்குவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. மின்வெட்டை சமாளிக்க ஆகஸ்ட் மாதத்தில் 2000 மெகாவாட் மின்சாரம் வெளிமாநிலங்களிலிருந்து வாங்கப்படும் என அமைச்சர் அறிவித்திருந்தாலும் இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக வாங்கப்படவில்லை. மின்வெட்டை சமாளிப்பதில் தமிழக அரசு எவ்வளவு அலட்சியமாக செயல்படுகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணம் ஆகும்.
மின்னுற்பத்தியை அதிகரித்து, மின்வெட்டை போக்குவதற்கு பதிலாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் தமிழக அரசின் அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. மின்வெட்டு முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டதாக கூறி மக்களை ஏமாற்றியதற்காக ஜெயலலிதா அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இனியாவது மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடாமல், உண்மையான அக்கறையுடன் மின்னுற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

மகனை கொலை செய்தததாக அதிமுக பிரமுகர் கைது

அம்மாப்பேட்டை அருகே உள்ள ஊஞ்சபாளையத்தில் மகனை கொலை செய்தததாக அதிமுக பிரமுகர் கைது

மோடியுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.

The Prime Minister, Shri Narendra Modi, today received a six-member delegation of the Tamil National Alliance (TNA) from Sri Lanka. The delegation is currently on a visit to India. The visit of TNA leaders is part of India’s continuing engagement with the Government and political parties in Sri Lanka. The TNA delegation, led by its senior leader and member of Sri Lankan Parliament Mr. R.Sampanthan briefed the Prime Minister on the situation in the island nation and their assessment and expectations regarding devolution and national reconciliation. The Prime Minister stressed the need for a political solution that addresses the aspirations of the Tamil community for equality, dignity, justice and self respect within the framework of a united Sri Lanka. In this context, the Prime Minister urged all stakeholders in Sri Lanka to engage constructively, in a spirit of partnership and mutual accommodation, towards finding a political solution that builds upon the 13th Amendment of the Sri Lankan Constitution. The Prime Minister also assured the TNA delegation of India’s continuing support for relief, rehabilitation and reconstruction works in Northern and Eastern Sri Lanka particularly in projects relating to housing, livelihood generation, capacity building, education, hospitals and infrastructure. The other members of TNA delegation were Mr. Mavai S. Senathirajah, MP; Mr. Suresh Premachandran MP; Mr. P. Selvarajah MP; Mr. Selvam Adaikkalanathan MP and Mr. M.A. Sumanthiran MP. The Principal Secretary to the Prime Minister Shri Nripendra Misra, the National Security Adviser Shri Ajit Doval, and the Foreign Secretary Smt. Sujatha Singh, were present at the meeting.

Saturday, August 16, 2014

தமிழிசைக்கு வைகோ வாழ்த்து

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு

வைகோ வாழ்த்து



தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், அக்கட்சியின் அகில இந்தியத்  தலைமையால் அறிவிக்கப்பட்ட செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், 

தன் பேச்சு ஆற்றலாலும், கட்சிப் பணிகளாலும் அனைவரின் மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள சகோதரி தமிழிசை அவர்கள், அக்கட்சியின் அகில இந்திய தேசியச் செயலாளராகவும் சிறப்பாகப் பணி புரிந்தார். மருத்துவத் துறையிலும் சிறந்த சேவை செய்து வருவதாகவும், அவரது அருமைத் தந்தையார் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் வழியிலேயே தமிழ் மொழி, தமிழ் இனம் மீது எல்லையற்ற பற்றும் அதற்குத் தொண்டு ஆற்றும் அர்ப்பணிப்பு உணர்வும் மிக்கவர் என்றும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளில் ஆழ்ந்த புரிதலும், மதிநுட்பம் கொண்டு வாதாடும் வல்லமையும் கொண்டவர் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

 அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, இனிய இயல்புடன் பழகுகின்ற பண்புகள் நிறைந்தவர் என்றும் இத்தகைய பன்முகத் திறன் வாய்ந்த சகோதரி திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியோடு வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.,

கோவையில் தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி  வரப்பட்ட 850 கிராம்  தங்கத்தை  சுங்க இலக்கா  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு 10 30 மணி அளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது மேலும் பயணிகளிடம் சுங்க இலக்கா அதிகாரிகள் சோதனை நடத்தியதில் திருப்பூர் மாவட்ட சேர்ந்த ஜாகிர் உசேன் என்ற இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததை அடுத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவர் மறைத்து வைத்திருந்த  20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மீட்கப்பட்டது.

சுங்கசாவடி வரி வசூலை எதிர்த்து விரைவில் போராட்டம் - சீமான் அறிவிப்பு

சுங்கசாவடி வரி வசூலை எதிர்த்து விரைவில் போராட்டம் - சீமான் அறிவிப்பு


கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் தீரன் சின்னமலை வீர அஞ்சலி செலுத்தம் கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான், நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி வரி வசூலை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்

Monday, August 19, 2013

நதியோடும் பாதையில்...(9)


ஓங்கிச் சொல்லுதல்


இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட சிந்தனையாளர்  காஞ்சா அய்லையாவின் எழுத்துகளைச் சில   ஆண்டுகளுக்கு முன்புதான் படிக்கத் தொடங்கினேன். தில்லியில் உள்ள என் நண்பர் அண்ணாதுரையும், பேராசிரியர் அரச முருகு பாண்டியனும் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி,அவருடைய நூல்களையும் கொடுத்தனர். 

அய்லையாவின் நூல்கள்  எனக்குள் சில புதிய பார்வைகளையும், மனக் கிளர்ச்சிகளையும் உருவாக்கின என்று கூறலாம். அவருடைய 'Why i am not a Hindu' என்னும் புத்தகம்தான் நான் முதலில் படித்தது. அடுத்ததாக, ஓராண்டிற்கு முன், 'God as a political philosopher' என்னும் அவரது நூலைப் படிக்கத் தொடங்கினேன். இன்னமும் பாதியில்தான் உள்ளது.முடிக்கவில்லை.


அய்லையா ஆந்திர மாநிலம், வாரங்கல்  மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளானவர். உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் முதுகலை படித்துக் கொண்டிருந்தபோது, இடதுசாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, தீவிரமாக இடதுசாரி இயக்கங்களில் இயங்கியவர். ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் (OPDR - Organisation for Protection of Democratic Rights) பொதுச் செயலாளராக 1981 முதல் பணியாற்றியவர். பிறகு, புத்தர்,பூலே, பெரியார், அம்பேத்கர், சாகு மகராஜ் , சாவித்திரி பாய் ஆகியோரை உள்வாங்கியபின், பகுஜன் சமாஜ் கட்சியையும், அதன் தலைவர் கன்ஷி ராமையும் பின்புலமாகக் கொண்டு சிந்திக்கவும், இயங்கவும் தொடங்கியவர்.

அவருடைய நேர்காணல் ஒன்று 'இந்து ஆன்மிகமே பாசிசம்தான்' என்னும் பெயரில் சிறு நூலாக வெளிவந்துள்ளது. முனைவர் தனபால், ஆர்.ஆர். சீனிவாசன் ஆகியோர் அவரை நேர்கண்டுள்ளனர். அதனைக் கவின்மலர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 40 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள அந்நூல், சாதி, மதம், மொழி ஆகியனவற்றிற்குள் உள்ள தொடர்புகள் சிலவற்றை  வெளிப்படுத்துகின்றது. அதில், 'அடடா' என வியக்க வைக்கும் செய்திகளும் உள்ளன. 'என்ன இது,இப்படிச் சொல்கின்றாரே' என அதிர வைக்கும் வெடிகளும் உள்ளன.

அந்த நேர்காணலில் மூன்று முதன்மையான செய்திகள் உள்ளன. வர்க்கப் பார்வையிலிருந்து வருணப் பார்வைக்கு அவர் மாறியது எப்படி, ஐரோப்பியப் பாசிசத்திற்கும், இந்தியப் பாசிசத்திற்கும் இடையிலான வேறுபாடு என்ன, மொழி குறித்த நம் பார்வையில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ன ஆகிய மூன்று செய்திகள் இச்சிறு நூலுள் அடங்கியுள்ளன.

1985 ஆம் ஆண்டு நடைபெற்ற காரம்செடு, படுகொலை, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை நாம் அறிவோம். கம்மா சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், தலித்துகளான மாதிகா சாதி மக்களை அங்கு கொன்றுவிட்டனர். அதுதான் காரம்செடு படுகொலை. அதனைக் கண்டித்து அய்லையா விடுத்த அறிக்கையில், கம்மா நிலப்பிரபுக்கள், மாதிகா தொழிலாளர்களைக் கொன்றுவிட்டதைக் கண்டித்திருந்தார். சாதி குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டதை இடதுசாரித் தலைவர்கள் ஏற்கவில்லை. நிலப் பிரபுக்கள், தொழிலாளர்களைக் கொன்றுவிட்டனர் என்று மட்டுமே இருக்க வேண்டும் என வாதிட்டனர். அய்லையா அதனை மறுத்தார். அவர்கள் கொலை செய்யப்பட்டது, முதலில் மாதிகாக்கள் என்பதால்தான். பிறகுதான் தொழிலாளர்கள் என்பது வருகிறது என்றார் அய்லையா.

அய்லையாவின் நியாயமான வாதம் அங்கு எடுபடவில்லை. அந்த இடத்தில்தான் அவருடைய அரசியல் வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. இந்திய சமுதாயத்தில், வர்க்கப் பார்வையுடன், வருணப் பார்வையும் கண்டிப்பான தேவை என்பதை அவர் புரிந்து கொண்டார்.



இரண்டாவதாக, அவர் இந்துப் பாசிசத்தை மிகச் சரியான புரிதலோடு விளக்குகின்றார். ஹிட்லரும், முசோலினியும் அரசியல் தளத்தில் பாசிசத்தை நிறுவினர். ஆனால் இந்தியாவின் இந்துமத வெறியர்களோ, ஆன்மிகத்தின் மீது பாசிசத்தை உருவாக்கி வருகின்றனர் என்கின்றார். ஆன்மிகப் பாசிசத்தை எளிதில் அழித்துவிட முடியாது. அதன் முக்கியமான பரிணாமங்களை மக்கள் புரிந்து கொள்வதும் கடினம் என்று அவர் கூறுவது எவ்வளவு  உண்மை! 

மேலே காணப்படும் இரு செய்திகளும் மிகச் சரியானவை என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அவர் கூறியுள்ள மொழி பற்றிய சிந்தனை நமக்கு அதிர்ச்சி ஊட்டுவதாக உள்ளது. அவர் வரிகளை அப்படியே முதலில் காணலாம்:

"....அறிவுத்தளத்தில் நம் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய,
சீராக ஆங்கிலத்திலேயே எழுதவேண்டும் என்று 
நினைத்தேன்............பிறகு, சமஸ்கிருதத்தையும்,
பிராந்திய மொழிகளையும் ஒழிக்க வேண்டும் என்று 
கூறத் தொடங்கினேன். ஏனெனில், எல்லா பிராந்திய 
மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் வேர்கள் இருந்தன."

சாதி அடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒருவர் எப்படி மொழி அடிமைத்தனத்தை மட்டும் ஏற்கின்றார் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்த் தேசியம் என்ற உணர்வுகளோடு வளர்ந்த என் போன்றோருக்கு இக்கூற்று பெரும் அதிர்ச்சியாய்  இருக்குமென்பதில் வியப்பில்லை. ஆனாலும் அவர் கூறும் ஒரு காரணத்தை ஆழ்ந்தும் பார்க்கவேண்டியுள்ளது.

இந்திய மொழிகள் பலவற்றில் சமஸ்கிருதத்தின் வேர்கள் பதிந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மைதான். தமிழ் தனித்தியங்க வல்லது என்பதை அய்லையா மறுக்க மாட்டார் என நம்பலாம். எனினும், சமஸ்கிருதம் என்பதை ஒரு மொழியாக  மட்டும் நாம் பார்க்க முடியாது. அது ஒரு சமூக, பண்பாட்டு வல்லாண்மை. அதன் வேர்களைத் தமிழ் மொழியிலிருந்து பிரித்து விட முடியும் என்றாலும், தமிழ்ப் பண்பாட்டில் கலந்து போயிருக்கிற அதன் நச்சுத் தன்மையை அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. அந்தப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றுதான்,மனிதர்களை இழிவுபடுத்தும் சாதியம். அது கண்டே அய்லையா அஞ்சுகின்றார் என்பது  புரிகின்றது.

ஆங்கில மொழியில் எழுதினால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? ஆங்கில இலக்கியங்களில் கடவுள், மத, மூட நம்பிக்கைகள் எல்லாம் எதுவுமே இல்லையா? கண்டிப்பாக இருக்கின்றது. பேய், பிசாசுகளுக்கெல்லாம் அங்கு பஞ்சமே இல்லை. மொழிகளை அறிவியல் மொழி, மூட மொழி என்றெல்லாம் பிரிப்பது சரியன்று. ஆனாலும் ஒன்றே ஒன்றை நாம் ஏற்றே ஆக வேண்டும். ஆங்கிலம் உட்படப் பல மொழிகளில் உறுதியாகச் 'சாதிய நஞ்சு' இருக்கவே முடியாது.

சாதி என்பதும், அதன் உடன் விளைவாகத் தோன்றிய தீண்டாமை என்பதும், இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த சில நாடுகளிலும் மட்டுமே உள்ள ஒழிக்கப்பட வேண்டிய தீமைகள். அதனை ஒழிக்க வேண்டும் என்ற  வெளிப்பாடே அய்லையாவின் நேர்காணலில் வெளிவந்துள்ளது என்று கொள்ளலாம்.



பல ஆண்டுகளுக்கு முன்பு, அய்யா பெரியார், வீட்டு வேலைக்காரப் பெண்ணிடம்கூட ஆங்கிலத்திலேயே  பேசுவோம் என்று கூறியது இதே கோபத்தின் வெளிப்பாடுதான்.

பெரியாரின் நோக்கமும், அய்லையாவின்  நோக்கமும்  மொழியை ஒழிப்பதன்று; சாதி இழிவை ஒழிப்பதுதான். 'ஓங்கிச் சொல்லுதல்' என்று இவற்றைக் கொள்ளலாம். இது ஒரு 'அறச் சினம்.' இதனைத்தான் சமஸ்கிருதத்தில் 'தார்மீகக் கோபம்' என்று நாம் கூறிப் பழகியுள்ளோம்.

Wednesday, August 07, 2013

இடஒதுக்கீடு: வேலைவாய்ப்பு அல்ல, அதிகாரப்பகிர்வு

இடஒதுக்கீடு: வேலைவாய்ப்பு அல்ல, அதிகாரப்பகிர்வு


வி.பி. சிங்







சாதி அமைப்புதான் நாம் வைத்திருக்கும் மிகப் பெரிய இடஒதுக்கீடு. எல்லாமே முறையாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஒரு பிரிவினர்தான் ஆள வேண்டும்; ஒரு பிரிவினர்தான் அர்ச்சகராக வேண்டும்; ஒரு பிரிவினர் வியாபாரம் செய்ய வேண்டும்; மற்ற பிரிவினர் அடிமை வேலைகளைச் செய்ய வேண்டும். இதுதான் ஒட்டுமொத்த சமூக அமைப்பாக இருந்தது. ஒரு பார்ப்பனர், கடினமான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபட்டுத் தன்னுடைய வாழ்க்கையை நடத்த வேண்டியதில்லை. தற்பொழுது இந்த நிலைமைகளில் மாற்றங்கள் வரத் தொடங்கி இருந்தாலும், இதற்கு முன்பு அவ்வாறு இருந்ததில்லை. சாதி அமைப்பு முறை உச்சகட்டத்தில் நடைமுறையில் இருந்தபோது, யாருமே மற்றவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்ய முடியாது.



அதற்குப் பிறகு சாதிகளுக்கிடையே மேலும் உட்பிவுகள் ஏற்படுத்தப்பட்டன. நீங்கள் ஒரு நாவிதராக இருந்தால், நீங்கள் ஒரு நாவிதருக்குரிய வேலையைத்தான் செய்ய வேண்டும்; நீங்கள் பொற்கொல்லராக இருந்தால், பொற்கொல்லருக்குரிய வேலையைத்தான் செய்தாக வேண்டும். நீங்கள் ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ளவர்களிடம் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யச் சொன்னால், "அது என்னுடைய வேலை அல்ல; அவரைச் செய்யச் சொல்லுங்கள்' என்று சொல்வார்கள். சாதி அடிப்படையில் அனைத்து வேலைகளும் பல்வேறு பிரிவினருக்கும் பிரித்தளிக்கப்பட்டன. இது, சமூகத்தில் சீர்கேடுகளை உருவாக்கியது. இந்து சமூகம் விலக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகமாக ஆகிவிட்டது. ஒன்றிணைந்த சமூகமே நாட்டைப் பலப்படுத்தும். ஆனால், நம் நாட்டின் நிலை வேறாக இருந்தது.



பல்வேறு நிலைப்பட்ட வெறுப்புகளின் அடிப்படையில் இந்தச் சமூகம் அமைந்திருந்தது. தலித் மக்கள் மிக அதிகளவுக்கு வெறுக்கப்பட்டார்கள்; மற்றவர்கள் சகித்துக் கொள்ளப்பட்டவர்களாக இருந்தார்கள். "தாகூர்'கள் மரியாதைக்குரியவர்களாகவும், பார்ப்பனர்கள் வணங்குதற்குரியவர்களாகவும் கருதப்பட்டனர். இதன் அடிப்படையில் மாபெரும் அநீதிகள் நடந்ததற்குப் பல்வேறு எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும். நம்மிடையே ஏராளமான "ஏகலைவன்'கள் உண்டு. இந்நிலையில்தான் தற்பொழுது திறமை என்றொரு கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்: 80 சதவிகித மக்களை சாதியின் பெயரால் சமூகத்தின் மய்ய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைத்திருப்பதைவிட, மிகப் பெரிய திறமைக்கெதிரான ஒரு செயல் இருக்க முடியுமா? இந்தியாவில் ஜவகர்லால் நேரு, இடஒதுக்கீட்டுக்கான அடிப்படையை நிறுவினார். அதன் பிறகு மொரார்ஜி தேசாய் வந்தார்; "ஜன்சங்' அவருடன் இருந்தது; வாஜ்பாயும், அத்வானியும் அவருடன் இருந்தனர். அவர்கள்தான் மண்டல் குழுவை நியமித்தனர். இறுதியில் ஒரு சுவர் உருவாக்கப்பட்டது. நான் மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் அந்தச் சுவர்களின் மீது கூரையை அமைத்தேன். அதன்பிறகு, "நீ என்ன செய்திருக்கிறாய் தெரியுமா?' என்று எல்லோரும் என்னைப் பார்த்துக் கேட்டார்கள். ஆனால், அதற்குப் பிறகு வாஜ்பாய் இன்னொரு படி மேலே சென்று, மேலும் சில அறைகளைக் கட்டினார். தற்பொழுது அர்ஜுன் சிங் அதில் பொருட்களை இட்டு நிறைவு செய்து வருகிறார். இது நீண்ட கால நடைமுறையின் ஒரு பகுதியாகும்.



இத்தகைய நடைமுறையில் ஒவ்வொரு நிலையிலும் கடும் எதிர்ப்புகள் காணப்பட்டன. ஆனால், பணக்காரர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தரமான கல்வி குறித்து யாரும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிப்பது இல்லை. பணக்காரர்களுக்கு மட்டுமே தரமான கல்வியை ஒதுக்கீடு செய்வதன் மூலம் அவர்கள் நிரந்தரமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உறுதியை நாம் அளிக்கிறோம். இத்தகையோர் அதிகாரத்திற்கு வந்தால், என்ன மாதிரியான திட்டங்களை உருவாக்குவார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். அய்.அய்.டி.யையும், அய்.அய்.எம். களையுமே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்நிறுவனங்களில் எல்லாம் யார் படிக்கிறார்கள்? மிக அதிகளவு கட்டணம் செலுத்தக்கூடிய பணக்கார வீட்டுக் குழந்தைகள்தான் இந்நிறுவனங்களில் படிக்கிறார்கள். இத்தகைய நடைமுறையில், திறமைக்குக் குந்தகம் ஏற்படுவதை எதை வைத்து ஈடுகட்ட முடியும்? திறமை பாழாகும் இத்தகைய இடஒதுக்கீடு குறித்து யாரும் பேசுவதில்லையே! இத்தகைய போக்கு, உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, ஆரம்பக் கல்வி நிலையிலிருந்தே தொடங்கி விடுகிறது. தரமான கல்வி அளிக்கும் பணக்காரப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது, பெற்றோர்களிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் நிலை ஒன்றும் ரகசியமானதல்ல. அரசின் கல்விக் கட்டுமானம் மிக மோசமான நிலையில் உள்ளது.



இங்கிலாந்தில் உள்ள இணக்கமான பள்ளிகளின் தத்துவம்தான் இதற்கான பதிலாக இருக்கும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பணக்கார, ஏழை, வட்டார அளவிலான குழந்தைகள் ஒரே பள்ளியில் ஒரேவித கல்வி அளிக்கப்படுகிறது. இத்தகைய இணக்கமான பள்ளிகளைப் போன்று இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஒரேவித தரத்தையும், பாடத்திட்டத்தையும் பின்பற்ற வேண்டும். தேவை ஏற்பட்டால், அரசு மானியங்கள் வழங்க வேண்டும். இதை அரசு உறுதி செய்யும் நிலையில், தொடக்கப்பள்ளியிலிருந்தே கல்வியில் சீர்மை கடைப்பிடிக்கப்பட்டால், இட ஒதுக்கீட்டுக்கான தேவையே இருக்காது. ஆனால், இதற்கு மாறாக தொடக்க நிலையிலிருந்தே பணக்காரர்களுக்கான இடஒதுக்கீடுதான் நீடித்து வருகிறது. இதில் ஒரு ஏழையின் குழந்தை எப்படி போட்டிப்போட முடியும்?



நீங்கள் ஒரு குழந்தையின் தொடக்க நிலையிலிருந்தே அதை அநியாயமாகப் பின்தங்கி இருக்க வைத்துவிட்டு, அதற்குப்பிறகு திறமை குறித்து அக்குழந்தைக்கு எதிரான வாதத்தையும் முன்வைக்கின்றீர்கள். நம்முடைய தென்னிந்திய மாநிலங்களில் இடஒதுக்கீடு உள்ளது. இங்கு எந்தவிதத் தகுதியும் குறைந்துவிடவில்லையே! வளர்ச்சிக்கான திறமையை அனுமதிப்பதுதான் திறமைக்கு ஆதரவான முயற்சி. கடந்த காலங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு, வாய்ப்புகளை வழங்குவதுதான் திறமைக்கு ஆதரவான செயல். இது திறமைக்கு எதிரானது அல்ல. தென் மாநிலங்களில், திறந்த போட்டியில் போட்டியிடும் ஒரு மாணவர் மருத்துவக் கல்லூரியில் 81 சதவிகிதம் பெற்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு மாணவர் 79 சதவிகிதம் பெற்றால், திறமை போய்விடும் என்ற கேள்வி எங்கே எழுகிறது? பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே இடஒதுக்கீட்டுப் பிரிவினரிடையே தானே போட்டி ஏற்படும்.



குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். உற்பத்தியை அதிகரிப்போம். இரட்டிப்பு வேளை பணி செய்வோம். உண்மையில், சிறுபான்மை நிறுவனங்களைப் போல, பிற்படுத்தப்பட்ட மக்களும் தங்களுடைய நிறுவனங்களைத் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதிகளவில் நிறுவனங்கள் இருந்தால், இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் வரும் மாணவர்களிடம் தேர்ந்த மனித ஆற்றல் குறைவதற்கு வாய்ப்பு இருக்காது.



இடஒதுக்கீட்டினால் சாதி அடையாளங்கள் நிரந்தரமாக நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. மண்டல் குழு அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பை நான் நினைவு கூர்கிறேன். இத்தகைய தீர்ப்புகளை யாருமே படிப்பதில்லை. ஒருவர் பிறப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்டால், அவருக்கான நிவாரணம் பிறப்பின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்று அத்தீர்ப்பு சொல்கிறது. இல்லை எனில், நீங்கள் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பீர்கள்? எனவே, இடஒதுக்கீடு என்பது உள்ளபடியே சாதியத்தை ஆதரிப்பதாக ஆகாது. ஏனெனில் நிவாரணம் அளிக்க, பாதிப்பு எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.



என்னைப் பொறுத்த அளவில், அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளவற்றை மட்டும்தான் நாம் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் சிலருக்கு எதிர்வினையான அரசியல் விளைவுகள் ஏற்படும் எனில், அது இயல்பானது. நான் எல்லா இடங்களிலும் சொல்வது இதுதான். நீதி வழங்கப்பட வேண்டும். ஆனால், மக்கள் வாக்களிக்கச் செல்லும்பொழுது அவர்கள் விவசாயிகளை, தொழிலாளர்களை, கைவினைஞர்களை மறந்து விடுகிறார்கள். தங்கள் சாதிகளை மட்டுமே நனைவில் கொள்கிறார்கள். "நான் என்னுடைய ஜாதிக்கு மட்டும்தான் வாக்களிப்பேன் என்ற போக்கு, வளர்ச்சியின்மைக்கு வழிவகுத்துவிட்டது.



மண்டல் குழு பரிந்துரைகள் பொதுவாக சொல்லப்படுவது போல சாதியமயமானது அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசத்திலும், பீகாரிலும் "குர்மி' என்ற சாதி பிற்படுத்தப்பட்ட சாதியாகும்; ஆனால், மத்தியப் பிரதேசத்தில் அல்ல. வடமாநிலங்களில் "சத்யரின் முன்னேறிய பிரிவினர். ஆனால், குஜராத்தில் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள். எனவே, மண்டல் குழு அறிக்கை, மேல் மற்றும் அடித்தட்டு சாதிகள் என்ற அடிப்படையில் மட்டுமே வகைப்படுத்தப்படவில்லை. பொருளாதார மற்றும் பிற அளவுகோல்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள், மண்டல் குழு அறிக்கையைப் படிக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.



ஒரு குறிப்பிட்ட சமூகம் பிற்படுத்தப்பட்டுள்ளதா, இல்லையா என்று நிறுவுவதற்கு மண்டல் 36 அளவு கோல்களை வைத்துள்ளார். அதில் பொருளாதார அளவுகோலும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் எத்தகைய வீட்டில் வசிக்கிறது நல்ல வீடா, குடிசை வீடா; சுய வேலைவாய்ப்புகளை யார் உருவாக்குகிறார்கள் சந்தைக்கான பொருட்களை யார் உற்பத்தி செய்கிறார்கள்; கல்வித் தகுதி ஆகியவை குறித்தும் இதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவு, ஒரு குறிப்பிட்ட சாதி நாட்டின் ஒரு பகுதியில் இடஒதுக்கீடு கோருபவையாகவும், அதே சாதிக்குப் பிற பகுதியில் இடஒதுக்கீடு தேவையற்றதாகவும் இருக்கிறது. காழ்ப்புணர்வினால் யாருமே மண்டல் குழு அறிக்கையைப் படிக்கத் தயாராக இல்லை. அவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கிறார்கள்.



இடஒதுக்கீடு என்பது அதிகாரப்படுத்துவது. மண்டல் குழு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவதன் உண்மையான நோக்கம், வெறும் வேலைவாய்ப்புகளை அளிப்பது அல்ல. அதன் உண்மையான நோக்கம் ஆட்சி நிர்வாகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களை பங்கேற்க வைப்பதும் அதிகாரம் அளிப்பதும்தான். அது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை நான் சமூகப் புரட்சி என்பேன். பஞ்சாயத்திலிருந்து நாடாளுமன்றம்வரை, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. ஆதிக்க சாதியினடமிருந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு, அமைதியான அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவேதான், நான் இதை சமூகப் புரட்சி என்கிறேன். ஆதிக்க சாதியினர் இத்துணை நூற்றாண்டுகளாகச் செய்தது என்ன? 80 சதவிகித இந்தியாவை பின்தங்கிய நிலையில் வைத்திருக்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.



தமிழில் : அமிழ்தினி

நன்றி : 'தெகல்கா'





Sunday, August 04, 2013

நதியோடும் பாதையில்...(6) - இடது சாரிகளும் ஈழச்சிக்கலும்



 அண்மையில் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த ஒரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன்.  எங்கள் பேச்சு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துத் திரும்பியது. அவர் சொன்ன ஒரு செய்தி, ஓரளவு நாம் அறிந்ததுதான் என்றாலும், கம்யூனிஸ்ட்களின் மீது இருந்த கடைசி நம்பிக்கையையும் போக்கி விடுவதாக இருந்தது.

எத்தனை அவமானங்களுக்கு உள்ளானாலும், வரும் தேர்தலிலும் அ,தி.மு.க.வை ஆதரிப்பதுதான் அவர்களின் மேலிட முடிவாம். காங்கிரஸ், பா.ஜ.க., மம்தா தவிர்த்த மூன்றாவது அணியை ஏற்படுத்துவதும், வெற்றி பெற்றால்(?), முலாயம் சிங் அல்லது ஜெயாவை உயர் பதவிக்கு முன்மொழிவதும் அவர்கள் திட்டமாம். தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. எதிர்ப்புக் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பார்களாம்.


 தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம் ஆகியன ஈழச் சிக்கலை, தேர்தல் வரும் நேரத்தில் முழு மூச்சுடன் முன்னெடுக்கப் போகின்றனராம்.  தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை ஈழத்தைச் சொல்லிச் சொல்லியே ஒழித்துக் கட்டிவிடுவது அவர்களின் நோக்கமாம்.

சரி, ஈழப் பிரச்சினையில் உங்கள் நிலை என்ன என்று கேட்டேன். எங்கள் நிலை எப்போதும் போலத்தான் என்றார் நண்பர். 'எப்போதும் போல' என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்தானே? இதோ அவர்களின் கட்சி ஆவணங்களிலிருந்து சில செய்திகளைப் பார்ப்போம்.

2012 ஏப்ரலில் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற சி.பி.எம். கட்சியின் பேரவைக் கூட்டத் தீர்மானம்:
"The CPI(M) stands for a united Sri Lanka in which the Tamil minorities can live in peace and harmony with the majority Sinhala community"

(பெரும்பான்மையான சிங்கள சமூகத்தோடு, சிறுபான்மையினரான தமிழர்கள் அமைதியாகவும், இணக்கமாகவும் சேர்ந்து வாழக் கூடிய ஒன்றுபட்ட ஸ்ரீ லங்கா என்பதே சி.பி.எம். கட்சியின் நிலைபாடு ஆகும்.")

இன்றுவரை, சி.பி.எம். கட்சி அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. தனித் தமிழ் ஈழம் என்னும் கோட்பாட்டை அவர்கள் ஒருநாளும் ஏற்பதில்லை.  அது மட்டுமின்றி, ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணை, பொது வாக்கெடுப்பு போன்றனவற்றைக் கூட அவர்கள் மறுக்கின்றனர். 27.03.2013 அன்று வெளியான, தமிழ் மாநில சி.பி.எம். கட்சியின் அறிக்கை கீழ் வருமாறு கூறுகின்றது.

            "Demanding referendum on the demand for a separate eelam or announcing that Sri Lanka is not to be regarded as a friendly country will not only not help solve the Sri Lankan Tamil issue. It will in fact complicate the issue further."

             "The immediate task before us today is not to demand an international inquiry into the war crimes committed by the Sri Lankan forces." 

(தனித் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பைக் கோருவதோ, ஸ்ரீ லங்காவை நம் நட்பு நாடு இல்லை என்று அறிவிப்பதோ அவர்களின் சிக்கலைத் தீர்க்க உதவாது. உண்மையில், அது மென்மேலும் சிக்கலைக் கூட்டும்.)

(ஸ்ரீ லங்கா ராணுவம் இழைத்த போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையைக் கோருவது, நம் முன் உள்ள உடனடிப் பிரச்சினை அன்று.) 


கட்சியின் அறிக்கை மூன்று செய்திகளைத் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றது.
(1) பொது வாக்கெடுப்பு தேவையில்லை
(2) ஸ்ரீ லங்கா நம்முடைய நட்பு நாடுதான்
(3) போர்க் குற்றங்களை விசாரிப்பது உடனடித் தேவை இல்லை.

போர்க் குற்றங்கள் பற்றிக் குறிப்பிடும்போது கூட, அரசு இழைத்த போர்க் குற்றங்கள் என்று கூறாமல், ராணுவம் இழைத்த போர்க் குற்றங்கள் என்று குறிப்பிடும் சி.பி.எம்.மின் 'நேர்மையை' என்னென்பது! (அண்ணன் வைகோ அவர்கள் கூட, தி.மு.க. ஆட்சியில் ஏதேனும் தடை விதிக்கப்பட்டால், அரசைக் கண்டிப்பார்.  அ.தி.மு.க. ஆட்சி தடை விதித்தால், காவல் துறையைக் கண்டிப்பார்.)

இலங்கை நம் நட்பு நாடு என்றும், ஒன்றுபட்ட இலங்கையே எங்கள் நிலைப்பாடு என்றும், பொது வாக்கெடுப்பு கூடத் தேவையில்லை என்றும், சர்வதேச வாக்கெடுப்புக்கு இப்போதென்ன அவசியம் என்றும் அறிக்கை விடும் சி.பி.எம். கட்சியுடன், தமிழ் நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களால் இணக்கமாகச் செல்ல முடிகிறது.அவர்களுக்கு எதிராகவோ, அவர்கள் சார்ந்திருக்கும் கூட்டணிக்கு எதிராகவோ எந்தச் சீமானும் இடி முழக்கம் செய்வதில்லை. 

 1983 தொடங்கி, தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று மாற்றமில்லாமல் ஒரே குரலில் ஒலித்துவரும் தி.மு.க.வும், போர்க் குற்றங்களின் மீது அனைத்துலக நாடுகளின் புலனாய்வைக் கோரும், பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று உரத்த குரலில் கூறும் டெசோவும் மட்டுமே இங்கு எதிரிகளாகக் காட்டப்படுகின்றனர்.

இங்குள்ள தமிழ்த் தேசியத் தலைவர்கள்,  செந்தமிழன்கள் மட்டுமல்ல, புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் சி.பி.எம்.மை எதிர்ப்பதில்லை. என்ன நியாயம் இது?    

 இந்தியப் பொதுவுடமைக் கட்சின் (சி.பி.ஐ) நிலைப்பாடும் ஏறத்தாழ அதேதான். அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா, சென்னையில் நடைபெற்ற மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தின்போது மிக ஆவேசமாகப் பேசினார். தனி ஈழம் என்றெல்லாம் முழங்கினார். ஆனால் அது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு இல்லை. கட்சிக்கு வேறு, மாணவர்கள் முன்னால்  வேறு என்று 'தந்திர உத்தி' (tactics) எல்லாம் தெரிந்தவர்கள் அவர்கள். அதனை இரட்டை நிலை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது.  கோபப்படுவார்கள் - அது தந்திர உத்தி அவ்வளவுதான்.



அதே இந்தியப் பொதுவுடமைக் கட்சியினர்,  20.03.2013 அன்று புது தில்லியில், நாடாளுமன்ற அவைத் தலைவர் மீரா குமார் கூட்டிய கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஈழப் பிரச்சினைக்காகவே கூட்டப்பட்ட கூட்டம் அது. எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் என்ன சொன்னாரோ அதனையே அவர்களும் வழிமொழிந்தார்கள்!  இதோ அந்தச் செய்தி:

 "Leader of opposition Sushma Swaraj, however questioned why all parties had been called for the meeting to discuss an issue which strictly is between the Government and the DMK. Communist Party of india leader gurudas dasgupta was of the similar view." 

(அரசுக்கும் , தி.மு.க.விற்கும் மட்டுமே உரிய ஒரு சிக்கலைப் பற்றிப் பேசுவதற்கு ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவும் அதே கருத்தைக் கொண்டிருந்தார்.)

தில்லிக்குப் போனவுடன், ஈழப்  பிரச்சினை, தி.மு.க.வின் பிரச்சினை ஆகிவிடுகிறது. மாணவர்களின் முன்பு பேசும் வேளையில், அது தங்கள் பிரச்சினையாக மாறிவிடுகிறது. 

என்ன ஒரு வேடிக்கை என்றால், காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள் மூவரும் நேர் எதிரிகளைப் போல் பலமுறை மோதிக் கொள்வார்கள்.  ஆனால் பல பிரச்சினைகளில் மூவரின் கருத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்.ஈழச் சிக்கலில் மட்டுமன்று, காஷ்மீர், இட ஒதுக்கீடு, கூடங்குளம்  எனப் பலவற்றிலும் ஒரே கருத்துடைய மூன்று  கட்சிகள் இங்கே அடிக்கடி மோதி கொள்வதுதான் நமக்குப் புரியாத புதிராக உள்ளது! 


நதியோடும் பாதையில்...(7)


தாங்கள் உண்டு, தங்கள் படிப்பு உண்டு என்று இருந்து விடாமல், நம் மாணவர்கள் சமூக அக்கறையோடு தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஈழ மக்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தெருக்களில் இறங்கினர். இப்போது இரண்டு தளங்களில் தங்கள் ஈடுபாட்டை அவர்கள் காட்டத் தொடங்கியுள்ளனர்.

மதுரை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த நந்தினி என்னும் மாணவி, முழுமையான மதுவிலக்கைக் கோரி, காலவரையற்ற பட்டினிப் போரைத் தொடங்கி, ஐந்தாவது நாள் கைது செய்யப்பட்டுள்ளார். 29.07.2013 அன்று, 'சாதியத்திற்கு எதிரான மாணவர்கள்' என்னும் பெயரில், மாணவர்கள் சென்னையில் ஒரு கருத்தரங்கினை நடத்தியுள்ளனர்.


அறிவியல், தொழில்நுட்ப அறிவில் முன்னேறியுள்ள நம் பிள்ளைகள்  அதற்கு இணையாகச் சமூகப் பார்வையும் உடையவர்களாக இல்லையோ என்ற கவலை இருக்கவே செய்கிறது. அந்த ஆதங்கத்தை முறியடிக்கும் வகையில், ஈழ ஆதரவு, மது எதிர்ப்பு, சாதி ஒழிப்பு முதலான சமூகச் சிக்கல்களில் தங்கள் பங்கினை மாணவர்கள் ஆற்ற முன்வந்திருப்பது மிகுந்த ஊக்கம் தருவதாக உள்ளது. அதே வேளையில் இப்போராட்டங்கள் குறித்த நம் பார்வைகள் சிலவற்றையும் நாம் பதிவு செய்வதில் தவறில்லை.

எந்தப் போராட்டத்திற்குப் பின்னும் சில பின்புலங்கள் இருக்கவே செய்யும். 1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பின்புலத்தில் தி.மு.க. ஊட்டிய உணர்வும், காட்டிய ஆதரவும் இருந்தன. அதனைப் போல இன்றைய மாணவர்களின் போராட்டத்திற்குப் பின்னாலும் சில அரசியல் கட்சிகள் இருக்கலாம். அதில் ஒன்றும் பெரிய பிழையில்லை. ஆனால் அவ்வாறு பின்னால் நின்று மாணவர்களை இயக்கும் சக்திகளின் நோக்கம், போராட்டக் காரணத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். அவ்வாறன்றி வேறு மறைக்கப்பட்ட உள்  நோக்கங்களுக்காக அச்செயல் அமைந்துவிடக் கூடாது.

மாணவர்கள் நடத்திய ஈழ ஆதரவுப் போராட்டத்தின் பின்புலத்தில் இருந்த கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், மறைக்கப்பட்ட ஓர் உள்நோக்கம் இருந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை. தி.மு.கவைச் சேர்ந்த அல்லது தி.மு.க.வை ஆதரிக்கக் கூடிய எவரும் மாணவர்களை நெருங்கிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாக இருந்தனர்.

அதன் காரணமாக, ஈழ ஆதரவுப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் பெரும் ஆர்வத்தைக் காட்டவில்லை. மாணவர்கள் ஒருங்கிணைக்கப்  படவில்லை. ஈழ வரலாறு குறித்தோ, உலக நாடுகளின் அழுத்தத்தை எவ்வாறு கொண்டுவர வேண்டும் என்பது குறித்தோ எல்லாம் விளக்கமாக எடுத்துச் சொல்லப்படவில்லை.

பின்னால் நின்று இயக்கியவர்களின் உண்மையான நோக்கம் ஈழ ஆதரவு என்பதாக அல்லாமல், தி.மு.க. எதிர்ப்பு என்பதாக இருந்தது என்பதுதான் அதற்கான காரணம்.  இவ்வாறு உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்கின்றவர்கள் ஈழத்திற்கும் நல்லது செய்யவில்லை, மாணவர்களுக்கும் நல்லது செய்யவில்லை என்பதைக் காலம் உணர்த்தும்.

இன்று, மாணவி நந்தினி, மதுவிலக்கிற்காகப்   போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளையிலும் சில எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.    

எந்த ஒரு போராட்டமானாலும், அதன் நோக்கம், வழிமுறை ஆகிய இரண்டும் கவனிக்கப்பட வேண்டும். நந்தினியின் போராட்ட நோக்கம் சரியானதே. குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் பல இங்கே சீரழிந்து போகின்றன. எனவே அத்தீமையை  எதிர்த்து மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் அதற்காக அம்மாணவி தேர்ந்தெடுத்துள்ள வழிமுறை நடைமுறைக்கு உகந்ததாகத் தோன்றவில்லை.

அறவழிப் போர் என்பது சரிதான். ஒருநாள் பட்டினிப்போர் என்பது கூட, கவன ஈர்ப்பு என்ற முறையில் தவறில்லை. ஆனால் வாழ வேண்டிய பிள்ளைகள் காலவரையற்ற பட்டினிப்போரை மேற்கொள்ள வேண்டியதில்லை. இப்படிச் சொன்னவுடன், போராட்டத்தை மழுங்கடிக்கின்றோம் என விமர்சனம் எழும் என்பதை அறிந்தே இதனை எழுதுகின்றேன்.

ராஜீவ் கொலை வழக்கில், தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் தமிழர்கள் மூவர் உயிர்களைக் காக்க அன்று நடைபெற்ற காலவரையற்ற பட்டினிப் போரை நாம் அனைவரும் ஆதரிக்கவே செய்தோம். ஈழத்தில் ஓர் இன அழிப்பு நடைபெறவிருந்த நேரத்தில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மேற்கொண்ட காலவரையற்ற பட்டினிப்போரையும் ஏற்கவே செய்தோம். அவையெல்லாம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை என்ற காரணத்திற்காக அப்படி ஒரு போராட்டம் தேவைப்பட்டிருக்கலாம்.

மதுவிற்கு எதிரான போராட்டத்தை அப்படிச் சொல்ல முடியாது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு உள்ள ஒரு தீய பழக்கத்தை இரண்டு மூன்று நாள்களில் நிறுத்திவிட முடியாது. நீண்ட தொடர் இயக்கங்களின் மூலம், மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திச் சிறிது சிறிதாக மாற்றவேண்டிய பழக்கம் இது.நெடுநாள் சிக்கல்களுக்கு எல்லாம் இப்போராட்ட முறை பயன் தராது. இவற்றை எதிர்த்து நாம் வாழ்ந்து போராட வேண்டுமே அல்லாமல், மாண்டு மடிந்துவிடக் கூடாது.

இந்த உண்மைகளை எல்லாம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லாமல், போராட்டப் பந்தலில் நின்று நாங்கள் இப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றோம் என்று தலைவர்கள் பேசுவது ஏற்புடையது அன்று. காலவரையற்ற பட்டினிப் போரில் ஈடுபட்டுள்ள 20 வயது மாணவியை ஊக்கப்படுத்தும் எந்தத் தலைவரும், அதுபோன்ற ஒரு போராட்டத்தை அதே காரணத்திற்காக மேற்கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.


பெரியவர் சசி பெருமாள் அத்தகைய போராட்டத்தில் ஈடுபட்ட போதும் கூட, பூரண மதுவிலக்கைத் தன் கோரிக்கையாக வைக்கவில்லை என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. பூரண மதுவிலக்கு உடனடியான நடைமுறைச் சாத்தியம் அற்றது.

இவையெல்லாம் எல்லோருக்கும் தெரியும். எனினும் இங்கே ஒரு திசை திருப்பும் நாடகம் நடந்து கொண்டுள்ளது. அரசியலற்ற போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அரசியல் போராட்டங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட முடியும். இன்று தமிழ்நாட்டில் சாதி வெறி திட்டமிட்டு வளர்க்கப் படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுக்கிடக்கின்றது. விலைவாசி விண்ணைத் தொடுகின்றது. இவைகளுக்கு எதிரான போராட்டத்தில் மக்களும், மாணவர்களும் இறங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதற்கும் மதுவிலக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைப்பது நல்ல வாய்ப்பாக அமையும். இந்த உள் அரசியலை எல்லாம் புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் உணர்ச்சி வயப்பட்டு போராட்டங்களில் இறங்கிவிடக் கூடாது என்பதே நம் வேண்டுகோள்!

சாதியத்திற்கு எதிரான மாணவர்கள் என்னும் அமைப்பு இன்றைய காலத்தின் தேவை. இந்த அமைப்பிற்குப் பின்னும் ஒரு கட்சி - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - இருப்பதை உணர முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான ஒரு மனநிலையும் அக்கருத்தரங்கில் இருந்தது. இந்த உண்மைகளை நாம் மறைக்க வேண்டியதில்லை. ஆனால் அது தனி ஒரு கட்சிக்கு எதிரானது இல்லை. அக்கட்சி ஊட்டிவரும் சாதி வெறிக்கு மட்டுமே எதிரானது. எனவே அந்த அமைப்பு தேவையான ஒன்று என்றே நான் கருதுகின்றேன்.

எனினும் அவ்வமைப்பின் பொறுப்பாளர்களாக இருக்கும் மாணவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தலித்துகளுக்கும், வன்னியர்களுக்கும் மோதலை உருவாக்கும் ஓர் அமைப்பாக அது ஆகி விடாமல், ஜனநாயக வாதிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும் இடைப்பட்ட முரண்பாட்டை வெளிப்படுத்தும் அமைப்பாக அதனை வளர்த்திட வேண்டும். அப்படிச் செய்தால், சரியான காலகட்டத்தில், மாணவர்கள் செய்திருக்கும் சரியான செயலாக அது வரலாற்றில் நிலைக்கும்.