Thursday, March 17, 2016

சென்னையின் No. 1 அவலம்: தேவை 50 ஆயிரம்.... இருப்பதோ வெறும் ஆயிரம்!













சென்னை மாநகராட்சியின் மூலமாக கடந்த நான்கரை ஆண்டுகளில் 348 கழிவறைகளே கட்டப்பட்டுள்ளன என்று வேதனைப்படுகிறார் ‘தேவை’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ. சென்னை மாநகராட்சி இவருக்கு வழங்கிய விருதை இன்று (16-ம் தேதி) திருப்பி அளித்தார்.
சென்னை, வியாசர்பாடி பகுதியில் செயல்பட்டு வருகிறது 'தேவை' இயக்கம். சென்னை மாநகர மக்களின் கழிப்பிடம், குடியிருப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக இந்த அமைப்பு போராடி வருகிறது. குறிப்பாக தலித் மக்கள் அதிகம் வசிக்கும் வடசென்னைப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
விருதை திருப்பி அளித்தது குறித்தும், கடந்த நான்கரை ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பேசிய இளங்கோ, "சென்னையின் மக்கள் தொகை சுமார் 1 கோடி. இவ்வளவு மக்களுக்கு 50 ஆயிரம் கழிவறைகள் தேவைப்படுகின்றன. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் 348 கழிவறைகளே சென்னை மாநகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ளன. மும்பையின் மக்கள் தொகை 1 கோடியே 35 லட்சம். அங்கு 80 ஆயிரம் பொதுக் கழிவறைகள் இருக்கிறது. ஆனால், இங்கு இந்த 348 கழிவறைகளையும் சேர்த்து சுமார் ஆயிரம் கழிவறைகளே உள்ளன. இருப்பதையும் இடித்து தள்ளி வருகிறார்கள்.
வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் சாலையில் இருந்த கழிவறை, தனியார் கட்டுமானத்தின் வாசலில் இருப்பதாக கூறி அகற்றப்பட்டுள்ளது. இதேபோன்று பட்டாளம் மணிகூண்டுக்கு பக்கத்தில் இருந்த 60 ஆண்டுகள் பழமையான செல்வபதி செட்டியார் பூங்கா,  தனியார் கட்டுமானத்துக்காக இடித்து தள்ளப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகர மேயருக்கும், ஆணையருக்கும் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. பல இடங்களில் கட்டப்பட்ட கழிவறைகளும் பராமரிப்பின்றி இருக்கின்றன. இதுகுறித்து 10க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் சென்னை மாநகராட்சி மீது தார்மீக கோபம் எங்களுக்குண்டு.
இப்படி இருக்கும்போது, சென்னை மாநகராட்சியின் மூலம் எங்கள் சேவையை பாராட்டி கேடயமும், நற்சான்றிதழும் எங்கள் அமைப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை கடந்த திங்கட்கிழமை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். இந்த விருதுக்கு நாங்கள் விண்ணப்பிக்கவும் இல்லை. இதோடு, தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும்போது, முதல்வரின் படம் போட்ட கேடயத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். சென்னை மக்களின் நியாயமான தேவைக்களுக்காக பாடுபடாத இந்த மாநகராட்சி  கொடுக்கும் விருது எங்களுக்கு வேண்டாம். இதை திருப்பி அளிக்கிறேன்" என்றார்.
விருதை திருப்பி அளிக்க ரிப்பன் பில்டிங்கில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்துக்கு சென்றார் இளங்கோ. அங்கு பார்ப்பதற்கு நேரம் கேட்டும் தரப்படவில்லை.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள்,  ‘எங்களிடம் கொடுங்கள்; நாங்கள் கொடுத்துவிடுகிறோம்’ என்றனர். ஆனால், தர மறுத்துவிட்டார். ‘நீங்கள் வாங்கவில்லை என்றால், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துவிடுகிறேன்’ என்றார்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தின் வாசலில் கேடயம் மற்றும் நற்சான்றிதழை வைத்துவிட்டு சென்றார் இளங்கோ.

-த.ஜெயகுமார்

நன்றி - விகடன்.காம்

ஆணவக் கொலைகளுக்கு களம் அமைக்கிறதா தமிழ் சினிமா?

‘அவன் வேறு சாதி. அவனும் இருக்கக் கூடாது. அவன் தொட்ட, அல்லது அவனைத் தொட்ட அவளும் இருக்கக்கூடாது. சாகடிப்போம்’ என்று இளைஞர்களின் மனதில் சாதிய வெறியை பல தளங்கள் விதைக்கிறது. அதில் திரைப்படங்களுக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதிற்கில்லை. திரைக் கலைஞர்களும் ‘மேல் சாதி’ என்று சொல்லப்பட்டு வருகிற ஒரு சில சாதியைச் சார்ந்தே திரைப்படம் எடுப்பது, அவர்களைப் பற்றிய வசனங்களில் அடக்கி வாசிப்பது என்று சாடவேண்டிய சாதிக் கொடுமையைச் சாடாமல், பேசாப் பொருளாய் பட்டும் படாமலும் காட்சிகளில் வைத்துச் செல்கின்றனர். 
அதையும் மீறி, ஒருசில படங்களில் ‘இந்த மாதிரியெல்லாம் சாதியக் கொடுமைகள் நடக்கிறது’ என்று கொடுமையை முன்னிறுத்தப் படமெடுத்தால் அதுவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அது என்னமோ தங்கள் சாதிப்பெருமையைக் குறிப்பிடுவதாய் சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
சாதிமறுப்பைப் பேசும் காட்சிகள்
திரைப்படங்களில் சாதியை எதிர்த்து குரல் கொடுத்தவர்களில் சத்யராஜ் எப்போதும் முன்னிலையில் இருக்கிறார் எனலாம். 1990ல் வெளிவந்த ‘மதுரைவீரன் எங்க சாமி’ படத்தில் சத்யராஜ் தலித்தாக நடித்திருப்பார். அவருக்கும், வினுச்சக்கரவர்த்தியின் தங்கையான சாரதாவுக்கும் காதல். பெண்கேட்டுச் செல்லும்போது ‘பின்வாசல் வழியா வந்து கொட்டாங்குச்சில வாங்கிக் குடிக்கற உனக்கு.. என்ன தைரியம் இருந்தா’ என்று வினுசக்கரவர்த்தி மிரட்ட, ‘எங்களுக்கு செருப்பு தைக்கவும் தெரியும்.. தேவைப்பட்டா அதை எடுத்து அடிக்கவும் தெரியும்’ என்று சாதியை மறைமுகமாகக் குறிப்பிட்டிருப்பார்கள். காதல் திருமணம் முடிந்து இருவரும் தனித்து குடிசையில் இருக்கும்போது, வினுசக்கரவர்த்தியின் ஆட்கள் வந்து சத்யராஜைக் கொலை செய்துவிடுவார்கள். பிறகு மகனாக வந்து பழிவாங்குவதெல்லாம் இருந்தாலும், ஆணவக்கொலையை அன்றைக்கே பேசிய இந்தப் படம் சரிவர ஓடாத ஒரு படம்.
அதற்கு முன் 1988ல் வெளிவந்த 'இதுநம்ம ஆளு; மொத்தப்படமுமே இதைத்தான் அலசியது. பிராமணப் பெண்ணான ஷோபனா, நாவிதரான பாக்யராஜைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள, ஷோபனாவின் தந்தையான சோமையாஜுலுவால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் இறுதிக்காட்சியில் தற்கொலை செய்துகொள்ள முயல்வார். இதில் மேல்சாதியாகக் காண்பிக்கப்படும் சோமையாஜுலு, உடல்ரீதியான வன்முறையில் இறங்கமாட்டார் எனினும் அந்த திருமணத்தை ஏற்கமாட்டேன் என்று ஷோபனாவையும், பாக்யராஜையும் மனரீதியாக துன்புறுத்துவார் எனலாம். அதுவும் ஒருவகை வன்முறைதான். .
கமல் நடித்த ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் சைவப்பிள்ளைக் குடும்பத்தில் பிறந்த கமல், சீதாவைக் காதலிப்பார். வழியில் இருவரையும் சந்திக்கும் ஜெமினி கணேசன், ‘நீ ஹரிஜனப் பொண்ணுதானே... தீண்டத்தகாதவளா இல்லையா?’ என்று கேட்க, சீதாவோ கமல் கன்னத்தில் முத்தமிட்டு, ‘தீண்டலாமே’ என்று பதிலடி கொடுப்பார். 

அலைகள் ஓய்வதில்லை, பாம்பே போன்று மத ஒற்றுமையைக்கூட வலிமையாய்க் காட்சிப்படுத்த முடியும். ஆனால் சாதி மறுப்பை அவ்வளவு வலிமையாக, நேரடியாக படங்களில் காட்சிப்படுத்திய படங்கள் மிகம் மிகக் குறைவே. ஆத்தா உன் கோவிலிலே, சேரன் பாண்டியன், ஒண்ணா இருக்கக் கத்துக்கணும், பாரதி கண்ணம்மா ஆகிய பல படங்கள் இந்த சாதிய வெறியைப் பேசியிருக்கும். ஆனால் எல்லாமே ‘அப்டி பண்ணினா விளைவுகள் விபரீதமாகும்’ என்கிற ரீதியில் இருக்கின்றன என்பதுதான் உண்மை. சாமி, தமிழ், சேவல் என்று ஹரியின் படங்களில் பிராமணப் பெண் வேறு சாதியில் மணமுடித்து வாழ்வதாய்க் காட்டியிருந்தாலும் முழுக்க சாதிமறுப்பைப் பேசும் படங்கள் அல்ல அவை

வேதம் புதிது படமும் சாதியை எதிர்த்துப் பேசப்பட்ட படம்தான். மகனை இழந்த தேவர் சாதி சத்யராஜ், அப்பாவை இழந்த பிராமண சாதியைச் சேர்ந்த சிறுவனான சங்கரனை ஆற்றைக் கடக்க தோளில் சுமந்து செல்லும்போது, ’நம்ம ஆளுக நெஞ்சுல சாதியை துருப்பிடிச்ச ஆணிய அறைஞ்ச மாதிரி அடிச்சுட்டாங்க’ என்று சொல்ல, ’அப்ப பாலுத்தேவர் பாலுத்தேவர்னு சொல்லிக்கற உங்க பேர்ல இருக்கற ‘தேவர்’ங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா’ என்று முகத்திலறையக் கேட்டுவிட்டு ‘நான் கரையேறிட்டேன்.. நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே’ என்று கேட்ட கேள்விக்கு இதுவரை பலரும் கரையேறாமல் இருக்கிறார்கள் என்பதே பதிலாக இருக்கிறது. 
வில்லாதிவில்லன் படத்தில் பிராமண வக்கீலாக வரும் கதாபாத்திரத்தில் சத்யராஜ், அவர்கள் எத்தனை வேற்றுமைத்தனத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருப்பார். ‘சாதியாக மதமாக இவர்கள் பிரிந்து நிற்பதுதான் நமக்கு நல்லது’ என்பதை சத்யராஜ், அமைதிப்படையில் மணிவண்ணன் வசனத்தின்மூலம் பேசி அரசியல்வாதிகள் பொட்டிலறைந்திருப்பார்.
சேரன் பாண்டியன் படத்தில், சுவர் தாண்டி வரும் பூனையை விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுவார். ஒரு விலங்குகூட, தன் சாதியைவிட கீழான சாதியாக நினைக்கப்படுகிற எல்லையிலிருந்து தன் எல்லைக்கு வந்துவிடக்கூடாது என்கிற சாதிப்பித்தை இது சொல்லும். இன்றைக்கும் தலித் குடியிருப்புகளில் ஆண் நாய்கள் வளர்க்ககூடாது என்று சொல்கிற தென்தமிழகக் கிராமங்கள் உண்டு.
நிஜமாகவே, சாதி வெறியைச் சாடுகிறதா தமிழ்சினிமாக்கள்?
என்னதான் படங்களில் சாதியை எதிர்த்துப் பேசுவதாகச் சித்தரிக்கப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கிப்பிடித்தே அதைப் பேசவேண்டியதாக இருக்கிறது என்பதே உண்மை. தேவர்மகன் படத்தில் படம் முழுக்க சாதியைத் தூக்கிப்பிடிக்கிற வசனங்கள் பாடல்கள் இருக்கும். சாதியை எதிர்த்த படமாக அது இருந்தாலும் அதைப் பேச, ஒரு ‘போற்றிப்பாடடி பொண்ணே.. தேவர் காலடி மண்ணே’ தேவைப்பட்டது. வேதம் புதிதில், ‘சாதி பேதங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பொன்மனச் செம்மலே’ என்று எம்ஜியாருக்கு படத்தை சமர்ப்பிக்கிறார். தொடர்ந்து ‘மாதா ச பார்வதி தேவோ’ என்று ராஜா குரலில் சமஸ்கிருத ஸ்லோகம் ஒலிக்கத்தான் படத்தை ஆரம்பிக்க வேண்டியதாயிருக்கிறது. விருமாண்டி, காதல், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, மதயானைக்கூட்டம், கொம்பன் படங்களெல்லாமே ஒரு ஆதிக்க சாதியைக் கொண்டாடிய படங்கள்தான். வெளிவர இருக்கிற ‘முத்துராமலிங்கம்’  படத்தில் இளையராஜா இசையில்  ‘தெற்கு தெச சிங்கமடா’  என்று பாடுகிறார் கமல். இதுபோன்ற முரண்களால் ஆனதுதான் சினிமாவின் சாதி எதிர்ப்புப் படைப்புகள்.

‘அதுசரி, உள்ளாடையில் அரசியல் தலைவர் படம் ஸ்டிக்கர் ஒட்டிய படத்தை வெளியிட்டவரை கைது செய்யும் காவல்துறை, ஒரு அரசியல் தலைவருக்காக கடை அடைப்பா என்று கேள்வி கேட்டு பதிவிட்டவரையும், அந்தப் பதிவிற்கு லைக் போட்டவரையும் உடனடியாக கைது செய்யும் காவல்துறை, அதிகாரம் ஒன்றையே ‘சிஸ்டமாக’ வைத்திருந்தும்கூட பொதுத் தளங்களில் இந்தக் கொலைகளை ஆதரித்தும், மிகக் கேவலமாக சாதிவெறியைத் தூண்டியும் பதிவிடுபவர்களை கிஞ்சித்தும் கண்டுகொள்வதில்லை எனும்போது.. பொழுதுபோக்கு ஊடகமாகவே பார்க்கப்படுகிற சினிமா மட்டும் என்ன மாற்றம் செய்துவிட முடியும்?’ என்று கேட்பீர்கள்.


ஒரு காவல்துறை அதிகாரி சொல்வதுதான் உங்களுக்கான பதில். ‘சினிமா தியேட்டர்களை ஒருவாரம் இழுத்து மூடிட்டா நாட்ல க்ரைம் ரேட் கூடும். நேரடியா தன்னால எதிர்க்க முடியாத ஒரு விஷயத்தை திரையில் நாயகனோ, நாயகியோ எதிர்க்கும்போது ரசிகன் சந்தோஷமாகி அவனுக்கு ஒரு வடிகாலா அமைஞ்சுடுது. சினிமா இந்த மாதிரி சமூக விரோதச் செயல்களை தொடர்ந்து எதிர்க்கணும். அட்லீஸ்ட் பேசணும்’ என்கிறார்.

ஆம். கலைகளால் நிச்சயம் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். மாற்றாவிட்டால் அது கலையாகாது!
-பரிசல் கிருஷ்ணா

நன்றி விகடன்.காம்

சங்கரின் கொலைக்கு யார் காரணம்....?

பேருந்திலோ, தொடர்வண்டியிலோ அதிகபட்சம் அரைமணி நேரம் யாருடனாவது புதிதாக பேசிக்கொண்டு வந்தால் போதும், அடுத்த நிமிடம் "நீங்க எந்த ஆளுங்க...?" என்று கேட்டுவிடுவதுதான் பெரும்பாலான தமிழர்களின் வழக்கம்.
தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடும் வழக்கம் தமிழ்நாட்டில் தற்போது குறைந்துவிட்டதால் இப்படி சாதியை நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ளும் தவறான பழக்கம் நம் மக்களிடையே தோன்றியிருக்கலாம். இதோ இப்போது சங்கர் என்ற தலித் இளைஞரை சாதிக்கு பலி கொடுத்துவிட்டது தமிழ்நாடு. அண்மைக்காலங்களில் தமிழகத்தை உலுக்கிய "தலித் இளைஞர்களின்" கொலைகளில் இது மூன்றாவது கொலை.

இன்னும் சரியாக அதிகபட்சம் ஒரு வாரம் இதைப்பற்றி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பேசிக்கொண்டிருப்போம்.  பேசிக்கொண்டே...... இருப்போம். அடுத்து தேர்தல் செய்திகள் வந்ததும் அதில் நடக்கும் களேபேரங்களை எல்லாம் விவாதிக்க கிளம்பிவிடுவோம். சங்கரின் கொலையும் இளவரசன், கோகுலராஜின் கொலையைப் போல் எளிதாக மறக்கப்படும். மறப்பது நமக்கு என்ன அத்தனை கடினமான செயலா? இல்லைதான்,  ஆனால் இந்த கொலையையும் மறப்பதற்கு முன்பு உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள சில கேள்விகள் இருக்கின்றன.

உங்களிடம் என்றால் உங்கள் எல்லோரிடமும் தான். உங்களுக்கு கொஞ்சம் கூட சாதிப்பற்றே இல்லையென்றாலும் இந்த கேள்விகளை உங்களைப் பார்த்து கேட்டுக்கொள்ளுங்கள். ஏன் தெரியுமா?  சங்கரின் மரணத்திற்கு யாரோ சிலர் மட்டும் காரணம் அல்ல நீங்களும், நானும், அதிகபட்சம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த சிசிடிவி கேமராவைப் போன்ற நம் சமூகமும் தான் காரணம். அதனால் உங்கள் ரத்தத்தின் அணுக்களிலும், ஆழ்மனதின் கோடுகளிலும் புதைந்திருக்கும் உங்களுக்கு தெரியாமல் உங்களை ஆக்கிரமித்திருக்கும் அந்த சாதி வெறியிடம் இந்த கேள்விகளைக் கேளுங்கள்....!

முதலாவதாக சங்கரை தலித் இளைஞன் என்று குறிப்பிட்டிருந்தேன், அதை படித்த போது உங்களுக்கு ஏதேனும் வித்தியாசமாக தோன்றியதா, கண்டிப்பாக இருக்காது ஏனென்றால் நம் மொத்த தமிழ்நாடும் இதை தலித் இளைஞனின் மரணம் என்றுதான் கூறியது. இதுவே இந்த இடத்தில் "தேவர் சாதியை சேர்ந்தவர்கள் சங்கரை வெட்டிக் கொன்றனர்" என்று குறிப்பிட்டிருந்தால் உங்களுக்கு அந்த வாக்கியம் கண்டிப்பாக ஏதேனும் உறுத்தலை தந்திருக்கும். ஏன் தெரியுமா....நாம் இப்படியே பழகிவிட்டோம். தலித் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.  மாறாக தேவர் என்றோ, கள்ளர் என்றோ, வன்னியர் என்றோ பயன்படுத்துவதில்தான் எல்லா பிரச்னையும்.இதுவரை யாரும் இந்த கொலை பற்றி எழுதும் போது சமூக வலைதளங்களில் தேவர் என்று குறிப்பிடவில்லை ஆனால் வரிக்கு வரி தலித் இளைஞன் என்ற வார்த்தை மட்டும் இருக்கிறது. இதுதான் நம்முள் ஊறியுள்ள சாதியின் முதல் அடையாளம், தலித் என்று குறிப்பிட்டால் பெரிதாக என்ன ஆகிவிடும் என்ற மானோபாவம், யார் என்ன செய்துவிடுவார்கள் என்ன நினைப்பு. அதே எண்ணம்தான் உங்களை தேவர் என்ற சொல்லை பயன்படுத்துவதில் இருந்தும் தடுக்கிறது. ஏதோ ஒரு பயமோ, பாதுகாப்பற்ற  உணர்வோ, நமக்கு ஏன் வீண் 
வம்பு என்ற எண்ணமோதான் இதற்கெல்லாம் காரணம். தவறு செய்த ஒரு சாதியின் பெயரைக் கூட குறிப்பிட முடியாத அந்த அச்சம்தான் இந்த கொலைக்கு முதல் காரணம்.

நம் நாட்டில் பொது இடத்தில் எல்லோரும் "பார்க்கும் படி" கொலை செய்ய முடியும். ஆனால் அந்த கொலை செய்தவர்களின் சமூகத்தின் பெயரை மட்டும் பொதுவாக பேச முடியாது. தேவரை தேவர் என்று சொல்வதிலும்,  வன்னியரை வன்னியர் என்று சொல்வதிலும் உங்களுக்கு என்னதான் பிரச்னை இருக்கிறது. இந்த மனோபாவத்தை முதலில் கேள்வி கேளுங்கள். இந்த பயம்தான் நம் சாதிய முறைக்கு பெரிய தூண்.

ஆணாவக் கொலை, தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்ட ரத்தம் படிந்த புதிய சொல். கொளரவக் கொலைதான் ஆணவக் கொலையாகி இருக்கிறது. பிரச்னை இந்த சொற்பிரயோகம் மாற்றப்பட்டதில் இல்லை. நம்முடைய வேலையெல்லாம் இந்த வார்த்தையை மாற்றுவதில்தான் இருக்கிறதா என்பதுதான். கெளரவக் கொலை என்ற வார்த்தை பிரயோகத்தை மாற்றுவதால் எத்தனை பேர் திருந்திவிடுவார்கள். நம்முடைய இலக்கிலிருந்து நம்மை திசைதிருப்பும் செயல் இல்லையா இது. உண்மையில் கெளரவக் கொலை என்ற வார்த்தை உறுத்தலாக இருந்தால் அந்த வறட்டு கௌரவத்திற்கு எது காரணம் என்று தானே பார்க்க வேண்டும். இந்த வார்த்தையை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் நீங்களும் இந்தப் பிரச்னையை கொஞ்சம் திசை திருப்புகிறீர்கள் என்று அர்த்தம். அது ஏன் என்று நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஏனென்றால் வெறும் கௌரவக் கொலை என்ற வார்தையிலோ, ஆணவக் கொலை என்ற வார்த்தையிலோ இல்லை இந்த பிரச்னை. இது அதற்கெல்லாம் அப்பாற்பட்டது.

தமிழ்நாட்டில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான். எந்த சாதியை எடுத்தாலும் அவர்கள் தங்களுக்கே உரித்தான ஓர் "ஆண்ட பரம்பரை" கதையை வைத்திருப்பார்கள்.எல்லா சாதிக்கும் ஒரு நீண்ட வீர வரலாறு இருக்கும். எல்லா தெருவிலும் தொங்கும் ஏதேனும் ஒரு வாழ்த்த வயதில்லை கட் அவுட்டிலோ, கண்ணீர் அஞ்சலி போஸ்டரிலோ பெயரின் பின் இணைப்பாக சாதிப் பெயர் இருக்கும். அதை இதுவரை நீங்கள் எந்த அசூகையும் இல்லாமல் கடந்து சென்றிருக்கிறீர்கள் தானே...? உங்கள் பகுதியின் உள்ளூர் சேனலில் மூன்று வயது சிறுவனின் பிறந்தநாளுக்கு "ஆண்ட பரம்பரை" பாடலை ஒளிபரப்பும் செயலை எதுவுமே கேட்காமால் தானே இருந்திருக்கிறீர்களா...?ஆம் என்றால் இந்த கொலைக்கு நீங்களும் ஒரு காரணம். உங்கள் வாழ்க்கை சாதியுடன் குடித்தனம் நடத்த எளிதாக பழகிவிட்டது என்று அர்த்தம். அப்படியென்றால் இந்த சாதியுடன் வாழ்ந்து பழகிய உங்கள் வாழ்க்கை முறையை கேள்வி கேளுங்கள்.  நான் ஏன் இந்த விளம்பரங்களையும், போஸ்டர்களையும் பற்றி எதுவுமே கேட்கவில்லை என்று உங்களுக்குள்ளேயே கேளுங்கள்.

இதோ தேர்தல் வந்தவிட்டது. எல்லா தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். கண்டிப்பாக எந்த தொகுதியிலும் திறமையின் அடிப்படையில் எல்லாம் வேட்பாளர்களை தேர்வு செய்யப் போவதில்லை. எதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே, வேறென்ன சாதிதான். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை சாதி ஓட்டுகளை கணக்கில் எடுத்து வேட்பாளரை அறிவித்துவிட்டு நல்லாட்சி தருவோம் என்று கூறும் கட்சிகளை என்றாவது கேள்விகேட்டு இருக்கிறீர்களா...? இல்லைதானே. மாறாக இதில் பலருடைய மனம் நம் வேட்பாளர் என்ன சாதி என்று தேடுவதில்தானே குறிக்கோளாக இருக்கிறது. சாதி பார்த்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் உங்கள் அபிமான கட்சிக்கு வாக்களித்திருக்கிறீர்களா....? ஆம் அப்படியென்றால் உங்களுக்குள் கண்டிப்பாக சாதி அரசியல் மீதான் பலமான ஆதரவு இருக்கிறது. அது ஏன் என்று கண்ணாடியை பார்த்து உரக்கக் கேளுங்கள். சாதி படுகொலை பற்றி பதில் சொல்லாமல் செல்லும் தலைவர்களை நாம் எப்படி சகித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேளுங்கள்.

"நாய் நாய் உடனும், சிங்கம் சிங்கத்துடனும்தான் சேரணும் மாறி சேர்ந்தா உலகம் தாங்காது" - இது சங்கரின் படுகொலை செய்தியைத் தொடர்ந்து வந்து ஒரு முகநூல் பதிவு. இந்த பதிவை கண்டதும் அதிகபடசம் அவரை பிளாக் செய்தோ இல்லை அவரை திட்டி ஒரு பதிவு எழுதியோ உங்களது சாதிக்கு எதிரான மனோபாவத்தை காட்டிவிட்டீர்கள் என்றால் மன்னிக்கவும்,  உங்களுக்குள்ளும் சாதி லேசாக படர்ந்திருக்கிறது.

ஆம்.  உங்களால் முடிந்தது எல்லாம் அவ்வளவுதான் என்ற விட்டேந்தியான மனசு உங்களிடம் இருக்கிறது. சாதிக்கு தீனி போடும் மனசு அது. யார் நம்மளை என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணத்தை சாதிவெறியர்களுக்கு ஏற்படுத்தக் கூடிய மனசு அது. உங்கள் கேள்வியை அந்த பாழய்போன மனசிடமும் கேளுங்கள்.

இதோ அந்த கொலையாளிகளை பிடித்து உள்ளாடையுடன் புகைப்படம் எடுத்துவிட்டாகிவிட்டது. நம்முடைய கோவத்தை எல்லாம் அந்த புகைப்படத்தை பதிவிட்டு காட்டமாக எழுதித் தள்ளுவதிலேயே சரியாகிவிடும். இரண்டு நாள் கழித்து என்ன செய்வோம்?  எதுவும் செய்ய மாட்டோம். சாதிய அமைப்புக்கு எதிரான கோவம் எல்லாம் அந்த புகைப்படத்தை ஷேர் செய்ததிலேயே நமக்கு குறைந்திருக்கும். அதன்பின் நாம் செய்ய என்ன இருக்கிறது. நம்மால் முடிந்தது எல்லாம் அதிகபட்சம் ஷேரும், லைக்கும்தான் என்றால் மன்னிக்கவும் சங்கரையும், கோகுல் ராஜையும், இளவரசனையும் கொன்றது நீங்கள்தான்.

நாயர் டீ கடை என்று போகிற போக்கில் சாதி பேசும், தனியார் பல்கலைக்கழகங்களில் எல்லாமே குறிப்பிட்ட சாதியினரே ஆசிரியர்களாக நியமிக்கப்படும், இந்திய கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டில் இருந்து குறிப்பிட்ட சாதி மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும், பள்ளிக்கு கலர் பேண்ட் கட்டி செல்வதை எந்த பிரச்னையும் இல்லாமல் அனுமதிக்கும் செயல்களையெல்லாம் கேள்வியே கேட்காமல் கடந்து செல்லும் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக சாதிக்கு எதிரான கேள்வியை உங்கள் சாதியிடம் இருந்து தொடங்குங்கள். திட்டுவது என்றால் முதலில் உங்கள் சாதியை திட்டுங்கள்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை உங்கள் பாப்பாவிற்கு சொல்லிக்கொடுப்பதை விடுத்து உங்களுக்கே முதலில் சொல்லிக் கொடுத்து கொள்ளுங்கள். பாரதி இப்போது இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்.

-லோ.சியாம் சுந்தர்
(மாணவப் பத்திரிகையாளர்)

நன்றி - விகடன்.காம்

பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும்: முரளிதர ராவ் நம்பிக்கை

விஜயகாந்துடனான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று நம்புவதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறினார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியதாவது:
''திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். அவர்களுக்கு மாற்றாகத்தான் பாஜக இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டு வைக்காது. திமுக , காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்திக்கும்.
234 தொகுதிகளிலும் பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்துள்ளோம். குற்றப்பின்னணி உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்த மாட்டோம்.
தேமுதிகவுக்கும் பாஜகவுக்கும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்கள்தான் உள்ளது. பாஜக தரப்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். தேவைப்பட்டால் முதல்வர் வேட்பாளரை ஏற்போம். விஜயகாந்த், தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்று கருதினால், அதுபற்றி எங்களிடம் பேசலாம். அதை நாங்கள் பரிசீலிப்போம்.
தேமுதிக தலைமையை ஏற்பவர்கள் எங்களுடன் பேசலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியது நம்பிக்கை அளித்துள்ளது. விஜயகாந்துடனான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று நம்புகிறோம்'' என்று முரளிதர ராவ் கூறினார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.07 உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3ரூ. 7 காசுகள் உயர்ந்தது. 
இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60 ஆக அதிகரிக்கும்.
டீசல் விலை லிட்டருக்கு 1ரூ. 90 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.49.50 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. மாதத்துக்கு இருமுறை இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

68% பால் தரமானதாக இல்லை - பாராளுமன்றத்தில் அமைச்சர் திடுக்கிடும் தகவல்

பாராளுமன்றத்தில் (16.03.2016) கேள்வி நேரத்தின்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளித்து பேசுகையில் பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
நாட்டில் அன்றாடம் வினியோகிக்கப்படும் பால் குறித்து உணவுப் பொருள் ஒழுங்குமுறை அமைப்பினர் நடத்திய ஆய்வில் 68 சதவீத பால் தரமானதாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. தவிர, பாலில் உடலுக்கு கேடு விளைவிக்கும் சோப்புத் தூள், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், வெள்ளை பெயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன.

தற்போதுள்ள நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் 40 வினாடிகளில் பாலில் கலப்படம் உள்ளதா என்பதையும், எந்த அளவிற்கு அதில் கலப்படம் இருக்கிறது என்பதையும் துல்லியமாக கண்டுபிடித்து விடலாம்.
ஒவ்வொரு எம்.பி.யும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த நவீன ஸ்கேனர்களை வாங்கிக் கொள்ளலாம். ஸ்கேனர் விலை அதிகமாக இருந்தாலும் கூட ஒருமுறை சோதனை நடத்த 10 பைசாதான் செலவாகும். விரைவில் ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் பால் எங்கிருந்து வினியோகம் செய்யப்படுகிறது, கேன்களில் அடைக்கப்பட்ட பாலில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பதை கண்டறியும் முறை அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் கூறினார்.