Saturday, November 01, 2008

கடற்புலிகள் அதிரடித் தாக்குதல்

வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் அதிரடித் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, ஹோவர்கிராப்ட் கலம் மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகும் ஹோவர்கிராப்ட் எனும் மிதக்கும் கனரக கடற்கலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

வடமராட்சி கிழக்கு குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் 20 டோறா பீரங்கிப் படகுகளுடன் ஹோவர்கிராப்ட் கலம் நிலைகொண்டிருந்த போது அந்த அணி மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 5:15 நிமிடத்துக்கு கடற்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.


சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள ஹோவர்கிராப்ட் கனரக கடற்கலம்


சிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள ஹோவர்கிராப்ட் கனரக கடற்கலம்

இத்தாக்குதல் வேளையில் சிறிலங்கா தரைப்படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்திய அதேவேளை, சிறிலங்கா வான்படையினரின் மிகையொலிவேகத் தாக்குதல் வானூர்திகளும் தாக்குதல் நடத்தியுள்ளன.

இவற்றுக்கு மத்தியில் சிறிலங்கா கடற்படையினருக்கு கடற்புலிகள் அழிவுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் கடற்படையினரின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் தரையிறக்க கொமாண்டோத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஏ-530 தொடரிலக்கத்தினைக் கொண்ட ஹோவர்கிராப்ட் கனரக கலம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீருந்து விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.

பெரும் இழப்புக்களையடுத்து சிறிலங்கா கடற்படையின் கலங்கள் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடிவிட்டன.

இம் மோதலில் கடற்புலிகள் தரப்பில் ஏழு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வான் புலிகளுக்கு "நீலப்புலி", "மறவர்" விருது


வான் தாக்குதல்களை சிறப்பாக நடத்திய வான் புலிகளுக்கு "நீலப்புலி", "மறவர்" விருதுகள்: தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு
எதிரிகள் மீதான வான் தாக்குதலில் சிறப்பாகச் செயற்பட்ட வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விருதுகள் வழங்கி மதிப்பளித்துள்ளார்.

பிரத்தியேகமான இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளத்தின் மீதான தாக்குதலில் வீரவரலாறான கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார்.





தொடர்ந்து மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில் விடுதலைப் புலிகளின் வான் புலிகளில் சிறப்பாகச் செயற்பட்ட குறிப்பாக சிறிலங்காவில் உள்ள களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதான தாக்குதல் உட்பட சிறிலங்கா படைய பொருண்மிய இலக்குகள் மீதான தாக்குதல்களை ஐந்து தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக நடத்திய வானோடிகளுக்கு "நீலப்புலி" என்னும் சிறப்பு விருதை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.





மூன்று தடவைகளுக்கு மேல் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்திய துணை வானோடிகளுக்கு "மறவர்" விருதையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கினார்.

அத்துடன் 09.09.2008 அன்று வவுனியா சிறிலங்கா கூட்டுப் படைத்தளம் மீதான தாக்குதலை நடத்திய வான் புலிகளின் வானோடிகளுக்கும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணிப் போராளிகளுக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சிறப்புப் பரிசில்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் தளபதிகள், பொறுப்பாளர்கள், கட்டளைத் தளபதிகள், போராளிகள் உட்பட பெருமளவிலானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.