Tuesday, March 08, 2016

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு பயணம்


தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய மிதிவண்டி பயணம் பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது .

7 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய மிதிவண்டி பயணம் இன்று மதியம் பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது. யேர்மன் மனிதநேய செயற்பாட்டாளர்கள் மிதிவண்டி பயணத்தை பிரான்ஸ் செயற்பாட்டாளர்களிடம் Saargemünd  நகரில் பொறுப்பு கொடுத்தார்கள்.

 தொடர்ந்து Saargemünd நகரபிதாவும் நாடாளுமன்ற உறுப்பினருமானவரின் உதவி முதல்வர்களுடன் அரசியல் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. அத்தோடு பிரான்சில் அரசியல் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்பட வேண்டும் எனவும், நடைபெற்ற கொலை தாக்குதலுக்கு விசாரணை நடாத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இச் சந்திப்பில் பிரான்ஸ் உள்ளூர் ஊடகங்களும் வருகைதந்து , ஐநா நோக்கிய மிதிவண்டிப்பயணம் தொடர்பாக  பதிவுகளை மேற்கொண்டனர். Saargemünd நகரை தொடர்ந்து ஏனைய ஒரு நகர முதல்வருடனும் சந்திப்பு நடைபெற்று மனுக்கையளிகப்பட்டது. இங்கும் உள்ளூர் ஊடகம் கலந்துகொண்டு செய்திகளை சேர்த்தது குறிப்பிடத்தக்கது . இன்றைய பயணம் 85 Km தூரத்தை கடந்து நிறைவடைந்தது.


கன்ஹையா குமார் நேர்காணல்

 கன்ஹையா குமார் நேர்காணல் இதோ...
நீங்கள் இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்து கொண்டு தேசத்திற்கு எதிராக செயல்படுவதாக ஒரு தரப்பு சொல்கிறதே....?    

எந்த தரப்பு இதைக் கூறுகிறது...? ஜே.என்.யூவில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்த சமூகத்தில் பலவீனமானவர்கள். இந்த தேசத்தின் உண்மையான பிரச்னைகள்,  ஊழல் அரசாங்கம், சாதிய முறை மற்றும் விவசாய தற்கொலைகள். நாங்கள், ஜே.என்.யூ மாணவர்கள் இதற்கு எதிராக பேசுகிறோம். நாங்கள் வரி செலுத்துபவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறோம். அவர்களின் வரிப் பணம் உரிய முறையில் பயன்படுத்தப்படுகிறதா...? உண்மையாக அந்த பணம் தேவையற்ற வெளிநாட்டு சுற்றுலாவிற்கும், விலையுயர்ந்த சூட்டுகளுக்கும், வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. எப்படி ஒரு ஏழை விளிம்பு நிலை மாணவன் கல்விக்கு வரிப்பணத்தை செலவிடுவது தேவையற்ற ஒன்றாகும்..?
உங்களது போராட்டத்தின் நோக்கம்தான் என்ன...? நீங்கள் இடதுசாரி, ஏறத்தாழ இரண்டு தலைமுறையாக உங்கள் குடும்பம் கம்யூனிச சித்தாந்தத்தை பின்பற்றுகிறது,   பிரதமர் மோடி வலதுசாரி என்கிற ஒரே காரணத்திற்காக மட்டும்தான் அவரை எதிர்க்கிறீர்களா...?

மோடிஜி பி.ஜே.பியை சேர்ந்தவர். நாங்கள் இடதுசாரி என்பதற்காக அவரை எதிர்க்கவில்லை. நாங்கள்தான்  ‘right' என்ற ஆங்கில வார்த்தையின் சரியான பொருளுக்குரியவர்கள். மோடி எல்லாருக்குமான இந்திய பிரதமர். அவர் பிரதமர் பதவியேற்கும் போது, சில சபதமேற்றார். அந்த சபதத்திற்கு அவர் நியாயம் செய்ய வேண்டும்.  ஆனால், அவர் அந்த சபதத்தையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்து விட்டார்.


சரி. நீங்கள் மரண தண்டனையை எதிர்க்கிறீர்களா அல்லது அஃப்சலுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை மட்டும் எதிர்க்கிறீர்களா...?

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். ஜே,என். யூ, அஃப்சல் விஷயத்தில் பல வதந்திகள் உலாவுகிறது. நாங்கள் மரண தண்டனைக்கு எதிரானவர்கள். மாய கொட்வானிக்கு (குஜராத் கலவரத்திற்காக தண்டிக்கப்பட்டவர்) மரண தண்டனை கொடுத்தாலும் எதிர்ப்போம். இது யாகூப் மேமனுக்கு அல்லது அஃப்சலுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை குறித்தது மட்டுமல்ல. அவர்கள் ஆர்.எஸ்.எஸ்க்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் எது சரி, எது தவறென்று முன் மொழிகிறார்களோ, அதை இந்த அரசாங்கம் வழிமொழிகிறது. அதை எதிர்ப்பவர்கள் மீது தேசத்துரோக முத்திரை குத்தப்படுகிறது. நாங்கள் கவலைப்படுவது சில கட்சிகள், மனிதர்களுக்குமானது மட்டுமல்ல... அனைவரது மரண தண்டனையையும் எதிர்க்கிறோம்.

மோடியின் வருகைக்கு பிறகு, தேசம் வளர்ச்சி அடைந்து இருப்பதாகதானே கூறப்படுகிறது... ஊழலற்ற அரசாங்கமாக இருப்பதாக கூறுகிறார்களே...?
அவர்கள் வெற்றி பெற்ற பின், அனைத்து மக்களின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் பணம் வரவு வைக்கப்படும் என்றார்கள், ஒரு வருடத்தில் அனைவருக்கும் வேலை வாய்ய்பு வழங்கப்படும் என்றார்கள். நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்போம் என்றார்கள். அவர்களின் சபதங்கள் மங்கி வருகிறது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் குறைந்துள்ளதால், இவர்களால் குறைந்த விலையில் பெட்ரோல் கொடுக்க முடிகிறது. ஆனால் பணவீக்கம், வேலையின்மை, வறுமை எல்லாம் அப்படியே இருக்கின்றன. நான் இந்த அரசாங்கம் சரியான பாதையில் இயங்குவதாக எண்ணவில்லை.
அப்படியானால், இந்த அரசு உருப்படியாக எதுவுமே செய்யவில்லையா...?

நான் அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் வெற்றிகரமாக அரசின் செயல்பாடு குறித்த மக்களின் கேள்விகளை திசை திருப்பி விட்டார்கள். அவர்கள் மக்களுக்கு அளித்த சத்தியங்களை நிறைவேற்றவில்லை. சாதிகள், மசூதிகள், மந்திர்கள் சார்ந்த பிரச்னைகளை தூண்டிவிட்டு மக்களை பெரும் குழப்பமடைய செய்கிறார்கள். இதெல்லாம் செய்கிறார்கள் அல்லவா...? பின்பு, நான் எப்படி இந்த அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்று  கூறமுடியும். இது போன்று இந்த அரசு நிறைய செய்திருக்கிறது. (சிரிக்கிறார்)
இந்த விஷயத்தில், ஊடகங்கள் உங்களுக்கு எதிராக செயல்பட்டதாக எண்ணுகிறீர்களா...?
ஊடகங்கள் நம் நாட்டில் ஜனநாயகமாக இயங்கும் ஒரு அமைப்பு. ஆனால், சில ஊடகங்கள் ஆர்.எஸ். எஸ் இயக்கத்தின் தூணாக செயல்படுகிறது.  ஆனால், ஊடகங்களின் பெரும் பகுதி நியாயத்தின் பக்கம் நின்றன, ‘சரி’யின் பக்கம் நின்றன, ஜனநாயகத்தை காக்க நின்றன, ஆம். மக்களின் பக்கம் நின்றன.


முன்பு வெளிநாட்டில் வாழ்பவர்கள் தாங்கள் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ளவதை அசிங்கமாக நினைத்தார்கள். தம் வருகைக்கு பிறகே, தாம் இந்தியர் என்பதை பெருமையாக உணர்கிறார்கள் என்றாரே மோடி...?
இது சுயபுராணம்.  நாளை மோடிஜி கிழக்கே சூரியனே என்னால்தான்  உதிக்கிறது என்று சொன்னாலும் சொல்வார். நாங்கள் இந்தியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் என்கிறோம். வருவோர், போவோருக்காகவெல்லாம் இல்லை.


பி.ஜே.பி அரசாங்கம் கல்வி நிலையங்களை குறி வைத்து, திட்டமிட்டே,  இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதாக நினைக்கிறீர்களா...?

இது மாணவர்களை குறிவைத்து மட்டும் நடத்தப்படும் தாக்குதல் அல்ல. இது கலைஞர்கள், எழுத்தாளர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரானதும் கூட.  கல்வி நிலையங்கள் மீதான தாக்குதல், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.  ஆர்.எஸ். எஸ்சும், ஏ.பி.வி.பி யும் இதற்கு காரணமானவர்கள். 


வெங்கையா நாயுடு சொல்வது போல் படிக்கும் காலத்தில், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் என்ன...? உங்கள் குடும்பமும் மிகவும் வறுமையில் உழல்கின்ற குடும்பம்... அதன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தலாமே...?

நாயுடுஜி யே ஏ.பி.வி.பி இயக்கத்தில் பங்கெடுத்தவர். அதுனுடன் தொடர்ந்து இயங்கி வருபவர். நிறுவனத்தில் பிரச்னை இருக்கும் போது, எதுவும் செய்யாமல், ஒரு மாணவன் எப்படி தொடர்ந்து படிக்க முடியும்...? சுதந்திர காலக்கட்டத்தில், வழக்கறிஞர்கள் அவர்களது கடமையை செய்தார்கள், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நாங்கள் இந்த சமூகத்தை அனைவருக்கும் உகந்த இடமாக மாற்ற முயற்சிக்கிறோம். இது போன்ற கருத்துகளால், நாங்கள் அரசியல் செய்யவில்லை, அவர்தான் அரசியல் செய்கிறார். சிவில் சமூகம்  மேம்படுவதையும் தடுக்கிறார்.



நீங்கள் நம்நாட்டின் நீதிமுறையின் மேல் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறுகிறீர்கள். சட்டம் அனைவரையும் சமமாக நடத்துகிறதா... அதாவது உங்களையும், சத்தீஸ்கர் ஆதிவாசிகளையும், மும்பை பெரும் பணக்காரர்களையும்...?
நீதி முறை மேம்பட வேண்டும். ஆனால், இந்த கருத்தை கூறுவதன் மூலம், நாங்கள் நீதித் துறையை மதிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. நாங்கள் நடைமுறையில் இருக்கும் நீதிமுறையை நம்புகிறோம். அதில் இருந்து கொண்டே, அதற்கு கீழ்படிந்து கொண்டே, அது மேம்பட வேண்டும் என்கிறோம்.

மதச்சார்பின்மைதான் உங்கள் நோக்கம் என்கிறீர்கள். ஆனால், உங்கள் மதச்சார்பின்மை ஒரு தலைபட்சமாக இருப்பதாக கூறிகிறார்களே... அதாவது சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிரான தாக்குதல் என்றால் ஒரு மாதிரியாகவும், பெரும்பான்மை இந்துகளுக்கு எதிரான தாக்குதலென்றால் ஒரு மாதிரியாகவும் செயல்படுவதாகவும் கூறுகிறார்களே...?

மதம் என்பது சிறுபான்மை, பெரும்பான்மை என்பதில் இல்லை. அந்தந்த மதத்தை வழிப்படுபவர்களின் கணக்கை கொண்டு வேண்டுமானால் சிறுபான்மை, பெரும்பான்மையை தீர்மானிக்கலாம். மதத்தின் தத்துவத்தில் சிறுபான்மை, பெரும்பான்மை  இல்லை. எண்ணிக்கை விளையாட்டு இல்லை இது. வாக்கிற்காக  வேண்டுமானல் இந்த எண் விளையாட்டு பயன்படலாம்.  அதிக எண்ணிக்கையில் வாக்குகளைக் கவர விரும்புபவர்கள்  வேண்டுமானால் எண்ணிக்கை அரசியலில் ஈடுபடலாம். நாங்கள் அது போன்ற காரியங்களில் ஈடுபடுவதில்லை.

என்று பேட்டியை முடிவுக்கு கொண்டு வந்தவர், " இப்போது, இது போதுமென்று நினைக்கிறேன்... நேரமாகிவிட்டது. பேராசிரியர்களும், நண்பர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்குமென்றால், இன்னும் விரிவாக உரையாடலாம்" என உரையாடலை நிறைவு செய்தார்!
மு. நியாஸ் அகமது 

நன்றி - விகடன்.காம்