Tuesday, July 11, 2006

சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்! - இளங்கோ (இலண்டன்)

சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரம்! - இளங்கோ (இலண்டன்)பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை முதலில் அடி பிறகு பாம்பை அடி என்றார் தந்தை பெரியர். அந்த ஈரோட்டுக் கிழவரின் வரிகள் நூற்றுக்கு நூறு சரி என்பதை நாளுக்கு நாள் மெய்ப்பித்து வருகிறது ஓர் அக்கிரகாரத்து வக்கிரப் பிறப்பு. அதன் பெயர் சோ. எழுத்துச் சந்தையில் விலை போகாத துக்ளக் இதழை அது நடத்தி வருகிறது. பாம்பிற்கு பல்லில் மட்டும் நஞ்சு என்றால் இதற்கோ உடல் முழுவதும் நஞ்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் விடுதலைப் புலிகளைக் கரித்துக் கொட்டுவதற்கும் அவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டை வாரி இறைப்பதற்கும் அது சற்றும் தயங்கியதில்லை. சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) “மீண்டும் வருகிறது புலி ஆதரவு” என்று தலையங்கம் தீட்டி விடுதலைப் புலிகளின் மீது வசைமாரி பொழிந்திருக்கிறது. அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில், பேருந்து மீது நடத்தப் பட்ட தக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அனுதாபமும் தெரிவித்து தாக்குதலை விடுதலைப்புலிகளே நடத்தியதாக குற்றமும் சாட்டியுள்ளது. இத் தாக்குதல் மனித நேயத்திற்கு எதிரான பயங்கரவாதச் செயல் என்பதை சோ சொல்லி நமக்கு தெரிய வேண்டியதில்லை. அந்தப் படுகொலைக்கு விடுதலைப் புலிகள் தங்களது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துவிட்டார்கள். விடுதலைப் புலிகள் மீது மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்கள்கூட அப்படிப்பட்ட தாக்குதலை விடுதலைப் புலிகள் செய்யமாட்டார்கள் என்றே கூறியிருக்கின்றனர். இலங்கையில் உள்ள சிங்கள இனவெறியர்களே இத்தாக்குதலுக்கு புலிகளைக் காரணம் காட்டியிருந்தார்கள். அந்தச் சிங்கள வெறியர்களின் இனப் பகைக்குச் சற்றும் குறைந்ததல்ல தன்னுடைய இனப் பகை என்பதை சோ நன்றாக வெளிக்காட்டியிருக்கிறது.இங்கே நமக்குள் மற்றுமொரு கேள்வி எழுகிறது. அப்பாவி மக்கள் தமிழர்களாக இருந்தாலும் சிங்களவர்களாக இருந்தாலும் அல்லது வேறு இனத்தவராக இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் காலம் காலமாக தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டபோது அதைக் கண்டிக்காமல் அந்தப் படுகொலைகளுக்கு காரணமான சிங்கள அரசைத் துதி பாடிய சோ, தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த சோ, குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப் பட்டபோது அவைகளெல்லாம் கொலைகள் அல்ல என்று வெட்கமின்றி எழுதிய சோ தற்போது தன்னுடைய ஆரியப் பாசத்தைக் காட்டுகிறது என்றால் அதன் பொருள் என்ன? காஷ்மீர் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரிப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்று பெரியார் சொன்னதற்கு ஒரு படி மேலே போய் ஆரியச் சிங்களவனுக்கு தேள் கொட்டினால் ஆரியப் பார்ப்பானுக்கு நெறி கட்டும் என்பதுதானே பொருள்.
தனது தலையங்கத்தில் “இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவுக் கூட்டங்கள் அல்ல, விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே!” என எழுதியிருப்பதுடன் தமிழின உணர்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களையும் வசை பாடியிருக்கிறது. வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் என்றைக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களே, இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை மறைக்க அவர்கள் எந்நாளும் முற்பட்டதில்லை. அவர்களின் ஈழ அதரவுக் குரல் தற்போது ஓங்கி ஒலிப்பதற்கான முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையே ஆகும். இந்த உண்மை சோவிற்கு நன்றாகத் தெரியும் ஆனால் அதன் வக்கிரப் புத்தி மனித நேய உணர்வோடு செயற்படும் தமிழ் உணர்வாளர்களையும் விட்டு வைக்கவில்லை. உண்மையில் சோவிற்கு எதிரி விடுதலைப் புலிகளோ அல்லது வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்களோ அல்ல. சோவிற்கு எதிரி தமிழும் தமிழர்களும்தாம். புலிகள் மீது அதற்குத் தனிப் பட்ட முறையில் வெறுப்பு எதுவும் கிடையாது. புலிகள் யார்? தமிழர்கள். அந்த ஒன்றைத்தான் அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டுமென்று அவர்கள் போராடுகிறார்களே! அதை இங்கிருக்கும் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றவர்கள் ஆதரிக்கின்றார்களே! இது தொடர்ந்தால் தமிழின உணர்வு பெருகிவிடுமே! இதை நினைக்கும் போது அந்த வக்கிரப் பிறப்பால் இருப்புக் கொள்ள முடியவில்லை. நச்சுக் கருத்துக்களைப் பூசி மெழுகி நடுநிலைவாதக் கருத்துக்களாகக் காட்ட முயற்சிப்பதே அதன் பத்திரிகைப் பாணி. ஒரு முறை துக்ளக் கேள்வி-பதிலில் "காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே எந்த இயக்கத்தையும் சேர்ந்தவரல்ல" எனக் கூறியிருந்தது. ஆஹா! என்ன ஒரு நடுநிலை! முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையை சோவிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். "நாதுராம் கோட்சேயும் நானும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்திருந்தோம்" என நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே வாக்குமூலம் கொடுத்து அது, பல இதழ்களில் வெளி வந்த பிறகும் சோ இப்படி பதிலளிக்கிறது என்றால் அந்தப் பித்தலாட்டத்தை என்னவென்று அழைப்பது? அதே போல் இறுதியாக நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் நேயர் ஒருவர் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சோ, விடுதலைப் புலிகள் இஸ்லாமியர்கள் அல்ல எனத் தொடங்கி கிறிஸ்தவ தீவிரவாதம் பௌத்த தீவிரவாதம் போன்றவற்றை விமர்சித்து இறுதியில் நக்சலைட்டில் இந்துக்களும் உள்ளார்கள் என்று முடித்தது. ஆனால் இந்தியாவை அச்சுறுத்தும் இந்துத் தீவிரவாதம் பற்றி ஒரு வரி பேசவில்லை. ஆழகாக முடிச்சவிழ்ப்பது என்று சொல்வார்களே அது போன்றதுதான் சோவின் பூணூல் வேலை. தனக்கும் தலைமுடிக்கும் தாடிக்கும் வெகு தூரம் என்றாலும் தலைக்கொரு சீயாக்காயையும் தாடிக்கொரு சீயாக்காயையும் பூசிக்கொண்டு தன்னை நடுநிலைவாதி எனப் பீதற்றிக் கொள்கிறது. இதன் நடுநிலைமை முன்னாள் ஓடுகாலியும் இந்நாள் கொலைகாரருமான சங்கராச்சாரி ஜெயந்திர சரஸ்வதி விடயத்தில் முற்றிலுமாக அடி பட்டுப் போய்விட்டது. தமிழர்கள் மீதுதான் அதற்கு இனப்பகை என்றால் ஒரு பாவமும் அறியாத தமிழ் இலக்கியங்களையும் அது விட்டு வைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்றவற்றுக்கு உரை எழுதினால் அவற்றை தனது துக்ளக்கில் கேலிப் படங்களாக அச்சிட்டு கொச்சைப்படுத்துவதுடன் தற்போது நாடிருக்கும் நிலையில் இவைகள் தேவையா எனக் கேள்வி எழுப்பும். ஆனால் அது மட்டும் தனது இதழில் வேத உபநிடதக் குப்பைகளையும் புராண இதிகாசக் கழிசடைகளையும் கறுப்பு மையால் நிரப்பிக் கொண்டிருக்கும். தற்போது ‘ஹிந்து மஹா சமுத்திரம்’ என்ற ஆபாச அருவருப்புத் தொடரை வெட்கம் சிறிதும் இல்லாமல் எழுதி வருகிறது.கண்ணகி என்ற இலக்கியப் பாத்திரத்தின் மீது பகுத்தறிவாளர்களுக்கு சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சிலையை அகற்றியது தமிழ் உணர்வாளர்களின் உள்ளங்களைக் காயப் படுத்தியது. எனவே அதை மீண்டு அதே இடத்தில் நிறுவவேண்டும் என்று கோரியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சோவிற்கோ சிலையை மீண்டும் நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை கேட்டவுடன் இனப் பகை தலைக்கேறிவிட்டது. கண்ணகியைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாதா எனக் கேள்வி எழுப்பியது. அது வரை காலமும் பெரியாரை எதிர்த்த சோ கண்ணகி விடயத்தில் பெரியாரைத் துணைக்கு அழைத்ததன் காரணம் என்ன? கண்ணகி தமிழச்சி என்ற ஒரேயொரு காரணம்தான். இதுவே அகற்றப் பட்டது சீதை, திரௌபதி போன்ற ஆரியப் பெண்களின் சிலையாக இருந்தால் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் குதித்திருக்கும். இதே போல் கன்னியாகுமரியில் கலைஞர் வள்ளுவருக்கு சிலை எழுப்பியபோதும் அதை எதிர்த்து தனது பார்ப்பனப் புத்தியைக் காட்டிக்கொண்டது. எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாத கண்ணகி, வள்ளுவர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சோ, இரத்த ஆற்றை ஓட வைக்கும் இராமர் கோவிலை ஆதரிக்கிறது. தமிழ்த் தேசியத்திற்குத் தீவிரவாதப் பட்டம் கட்டும் சோ, இந்தியத் தேசியப் போர்வையில் உலாவரும் இந்துத்துவத்திற்குப் புனிதப் பட்டம் கட்டுகிறது. இந்த நயவஞ்சகத்தனத்தைத்தான் சோ நடுநிலை எனக் கூறிக்கொள்கிறது.“நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” இப்படி ஒரு கேள்வி சென்ற வார துக்ளக் இதழில் (28.06.2006) சோவிடம் கேட்கப் பட்டிருக்கிறது. அதற்குச் சோ, இந்த ஆட்டம் பற்றியோ, அதில் பங்கு கொள்ளும் அணிகளின் பலம் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. எனப் பதிலளித்திருந்தது. கால் பந்துப் போட்டிகளில் அக்கறை கட்டாத சோ கிறிக்கற் போட்டிகள் என்றால், அவற்றைத் தனது இதழில் வருணிக்கத் தொடங்கிவிடும். இதில் என்ன தவறு எனப் பலர் நினைக்காலாம். இதில் மற்றும் ஒரு பார்ப்பனச் சூழ்ச்சி அடங்கியுள்ளது. கால்பந்து ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத் தருபவை. அவற்றை விளையாடுவதற்கு உருக்கேறிய உடல் வலிமை தேவை. பார்ப்பனர்காளால் அது முடியாது. கிறிக்கற் அப்படி அல்ல. அதனால்தான் அன்றும் சரி இன்றும் சரி இந்தியக் கிறிக்கற் அணியில் முக்கால்வாசிப் பேர் பார்ப்பனர்களாகவே உள்ளனர். வட மானிலங்களில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் கிருஷ்ணமாச்சாரி சிறிகாந்த் முதற் கொண்டு சடகோபன் ரமேஸ் வரை இந்திய அணியில் இடம்பெற்ற அனைவரும் பூணூல்காரப் பார்ப்பனர்களே. கிறிக்கற்றில் அவாள்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது. அதே நேரம், தமிழ் நாட்டில் கால்பந்தின் செல்வாக்கு அதிகரித்து விட்டால் அதில் பார்ப்பனர் அல்லாதவர்களே அதிகம் இடம்பெறுவார். அத்துடன் கிறிக்கற்றின் செல்வாக்கும் சரிந்து விடும். இப்போது புரிகிறதா சோவின் பதிலில் அடங்கியுள்ள சூட்சுமம். அரசியல், சமூகம், இலக்கியம் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆதிக்க வெறியைக் காட்டுகிறது சோ என்ற பார்ப்பனப் பாம்பு.சில மாதங்களுக்கு முன் குஷ்பு, சுஹாசினி போன்றவர்களின் கருத்துக்கள் பல தமிழக மக்களை சினம் கொள்ள வைத்தது. குஷ்பு சுஹாசினி போன்றவர்கள் தமிழ் மீதும் அதன் வளர்ச்சி மீதும் அக்கறை அற்றவர்களாக இருக்கலாம், ஆனால் தமிழை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. பெண்ணிய நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சோ என்ற அக்கிரகாரத்து வக்கிரமோ தமிழின எதிர்ப்பையே தன்னுடைய தலையாயத் தொழிலாகக் கொண்டிருக்கிறது. குஷ்பு, சுஹாசினி போன்றவர்களுக்கு எதிராக பண்பாட்டுப் போரை நடத்திய தமிழ்க் காவலர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டும், தமிழையும் தமிழர்களையும் தமிழ் இலக்கியங்களையும் கொச்சைப் படுத்திவரும் சோவை விட்டு வைத்திருப்பது வியப்பையும் வருத்தத்தையுமே அளிக்கின்றது. TAMILEELAM
http://www.dinakaran.com/daily/2005/Aug/24/chennai/chendist/kancNews4.html

வரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி - ஆர். நல்லகண்ணு

சனவரி-பிப்ரவரி 2006


வரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி

ஆர். நல்லகண்ணு



காலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 37 ஆண்டுகள். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் 37 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்று நினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமான கொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று. அன்று நடந்த கொடுமையை நான் வாசகர்களுக்கு பதிவு செய்கிறேன்.

1968 டிசம்பர் 25
கிறிஸ்துமஸ் பண்டிகை
ஏசுநாதர் பிறந்த நாள் விழா

உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாத இரவாகவும் அமைந்தது.

ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.

25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.

அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள்.

ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.

இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.

இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.

ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.

மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.

அதையொட்டி அப்பொழுது ‘உழவுச் செல்வம்’ பத்திரிகையில் வெளிவந்த கவிதையைத் தங்களுக்குத் தருகிறேன்.

“பாவிகள் வைத்த நெருப்பு
உடலைக் கருக்கிய போதும்
பெற்றெடுத்த தங்கத்தைக் கைவிடவில்லை.
பாசத்தால் பற்றிக் கொண்டாய்.

வலது கை வெந்து விட்டது.
பிள்ளையைத தாங்கிய
இடது திருக்கரத்திலும்
சதையெல்லாம் தீ தீய்த்து
விட்ட போதிலும் -
எலும்புக் கரத்தால்
பிள்ளையை ஏந்திக்
கொண்டே பிணமாக கருகி
விட்டாயே.

உன் பிறப்பு உறுப்பெல்லாம்
நெருப்பு தின்று விட்ட
போதும் தாயே
பெற்றெடுத்த பிள்ளையை
அணைத்துக் கொண்டிருந்த
தாய்ப் பாசத்தை
தரணியெல்லாம் போற்றிப்
புகழப் போகிறது.

நீ உழைக்கும்
பெண்ணினத்துக்கு பெருமை
தேடித் தந்து விட்டாய்.
தாய்மைக்கு எடுத்துக்
காட்டாய் விளங்குகிறாய்.
நமது வர்க்கத்தின் சிறப்புச்
சின்னமாய் - அழியாத
ஓவியமாய் - உயர்ந்து
விட்டாய்.

உனது தியாகம் கவிஞர்களின்
கருப் பொருளாய் -
ஓவியர்களின் திரு உருவாய்
விளங்கட்டும்
உனது ஆசை நிறைவேற,
வர்க்கம் வாழ
என்றென்றும் உழைப்போம்
என உறுதி கூறுகிறோம்.

(உழவுச் செல்வம் சனவரி 15, 1969)

வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.

மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு

“ Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’

“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.

‘இந்து பத்திரிகை’


44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.

விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை.

என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.

தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.

கிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக திரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து, எளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

வலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை மேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்.

வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்

1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)