எல் அண்ட் டி நிறுவனத்திடமிருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்கியது அதானி குழுமம் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் நிர்வகிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழும நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2,500 கோடி
ரூபாய்க்கு இது கையகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி துறைமுகம் நிறுவனம் தமிழகத்தில் லார்சன் அண்ட் டூப்ரோ நிர்வகிக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய துறைமுகங்களை இணைப்பதன் மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் உத்தியாக அதானி குழுமம் எடுத்துள்ள நடவடிக்கை இது என்று கருதப் படுகிறது.
அதானி குழும நிறுவனமான அதானிபோர்ட்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல
நிறுவனம் (ஏபிஎஸ்இஇஸட்) நிறுவனம் ஏற்கெனவே கேரள மாநில அரசுடன்
ஒப்பந்தம் செய்துள்ளது. கேரள மாநிலத்தில் விழிஞ்சியம் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. ரூ. 4,089 கோடிக்கான
இந்த சர்வதேச ஆழ்கடல் பன்முக துறைமுகத்தை பிபிபி அடிப்படையில் அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி ஷிப் பில்டிங்
லிமிடெட் நிறுவனம் (எல்டிஎஸ்பி) நிறுவனம் காட்டுப் பள்ளியில் துறைமுகத்தை நிர்வகித்து வருகிறது. இதை அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஆனால் எவ்வளவு தொகைக்கு இந்தத் துறைமுகம் வாங்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ரூ.2,500 கோடி இருக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. காட்டுப்பள்ளி துறைமுகமானது எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்தை உருவாக்கும் பணியில் அதானி குழும நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த விற்பனைக்கு மாநில மற்றும்
மத்திய அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கான அனுமதிக்காக காத்திருக்கும் அதேவேளையில் இந்நிறுவன செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனம் செய்து கொண்டுள்ளது.காட்டுப்பள்ளி துறைமுகம் சென்னையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஆழ்கடல் துறைமுகமாகும். இங்குள்ள சரக்குப் பெட்டக முனையம் 2013-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இதில் இரண்டு பெர்த்கள் உள்ளன. இதன் நீளம் 710 மீட்டராகும். இந்த பெர்த்களில் 6 கிரேன்கள் உள்ளன. இவை சரக்குப் பெட்டகங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றவை. இந்தத் துறைமுகம் ஆண்டுக்கு 12 லட்சம் டியுஇ சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் திறன் கொண்டது.
நாட்டின் கட்டமைப்பு மேம்பாட்டில் காட்டுப்பள்ளி துறை முகத்தைக் கையகப்படுத்தியது மிகவும் முக்கியமான நடவடிக்கை என்று அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி குறிப்பிட்டுள்ளார். அதானி குழுமம் 7 துறைமுகங்கள் அதாவது முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விசாகப்பட்டினம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.