இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையை கண்டித்து தென்னாபிரிக்காவில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். |
பிரிட்டோரியா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக அங்கு வாழும் தமிழர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இக்கண்டன கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தினர். இந்நிகழ்வில் பல அமைப்புக்கள் சார்பாக அவற்றின் பொறுப்பளர்களும் உறுப்பினர்களும் பங்கேற்றனர். சிறிலங்கா இனவாத அரசு மேற்கொள்ளும் இனவெறிப் போரில் அப்பாவித் தமிழ் மக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்படுவது தொடர்பில் தென்னாபிரிக்க அரசாங்கம் அமைதிப் போக்கினைக் கையாள்வதைக் கண்டித்தும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மௌனப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றமையைக் கண்டித்துமே இக்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. 'ஐக்கிய நாடுகள் சபையே உனது மௌனத்தைக் கலை" 'ஐநா உடனடியாகச் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவளி" போன்ற முழக்கங்களை கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்றோர் எழுப்பினர். நிகழ்வின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்திய அதிகாரி டேவிட் ஜோன்சனிடம் மனு கையளிக்கப்பட்டது. இரண்டாவது மனுவினை தென்னாபிரிக்க அரசாங்கத்தின் சார்பாக, வெளிவிவகாரத்துறையின் பிரதி இயக்குநர் சூஸ் இம்ரில்வாவும் வெளிவிகாரத்துறையின் தென் கிழக்காசியப் பிராந்தியத்திற்கான இணை இயக்குனர் காரி சிமித்தும் பெற்றுக்கொண்டனர். அங்கு கையளிக்கப்பட்ட மனுவில் கீழ் குறிப்பிட்ட நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. - ஈழத் தமிழர்களின் தாயகத்தில் றுவாண்டா போன்ற நிலைமையை உருவாகாமல் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - உடனடியான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் - பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்க அணுசரணை வழங்க வேண்டும் - சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள கண்மூடித்தனமான இனப்படுகொலையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பவேண்டும் மனிதநேயப் பணியாளர்கள் உடடினடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, தங்குமிட வசதி உணவு வசதி இல்லாமல் அல்லலுறும் மக்களுக்கு உதவி மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் |
Saturday, October 25, 2008
தென்னாபிரிக்காவில் ஈழத்தமிழர் ஆதரவு பேரணி
கொட்டும் மழையில் லட்சக்கணக்கில் திரண்ட தமிழக உறவுகளின் "மனித சங்கிலி அணிவகுப்பு"
சிங்களப் பேரினவாதத்தால் இலங்கைத் தீவில் தமிழ் உறவுகள் இனப் படுகொலைக்குள்ளாக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான தமிழக உறவுகள் மனித சங்கிலியாக அணிதிரண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். |
வடசென்னை பகுதியில் தமிழ்நாடு நிதியமைச்சரும் தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தொடங்கிய இந்த மனித சங்கிலி அணிவகுப்பு முழுமையாக சென்னை நகரைக் கடந்து புறநகர் சென்னைப் பகுதிகளையும் கடந்து செங்கல்பட்டு மாவட்டத்தைத் தொட்டு நின்றது. மனித சங்கிலி அணிவகுப்பு தொடங்கிய நேரத்தில் கனமழை கொட்டியது. இயற்கையும் வடித்த கண்ணீரை தம் தேகங்களில் தாங்கிய தமிழ்நாட்டு உறவுகள்- 'இந்திய அரசே! ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடு"! 'ஈழத் தமிழர்களைக் காப்பாற்று" என்பது உள்ளிட்ட முழக்கங்களையும் ஈழத் தமிழர்கள் மீதான சிங்களத்தின் இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் வகையிலான புகைப்படங்கள்- பதாகைகளை ஏந்தியும் கொட்டும் மழையில் உணர்வெழுச்சியாகத் திரண்டிருந்தனர். தமிழ்நாடு முதல்வர் கலைஞரின் குடும்பத்தினரும் இந்த உணர்வெழுச்சியான அணிவகுப்பில் பங்கேற்றிருந்தனர். பாட்டாளி மக்கள் கட்சி- இடதுசாரிக் கட்சிகள்- விடுதலைச் சிறுத்தைகள்- திராவிடர் கழகம்- தமிழ்த் திரை உலகத்தினர் மற்றும் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள்- பொதுமக்கள் இந்த அணிவகுப்பில் திரண்டனர். நன்றி / புதினம் மனித சங்கிலி அணிவகுப்பை முதுமையும் பாராது கொட்டும் மழையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி பார்வையிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டே சென்றார். |