எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி பூரணைத் தினத்துடன் ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலத்தை முன்னிட்டு சிவனொளிபாதலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நல்லதண்ணியில் அமைந்துள்ள கிராம சேவகர் அலுவலுகத்தில் நடைபெற்றது.
இவ்வருடத்திற்கான சிவனொளி பாதமலை யாத்திரைப் பருவக் காலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனியாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி காலை சுபவேளையில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த பவனி பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தினை அன்றையதினம் இரவு வந்தடையவுள்ளது.
அத்துடன், சமன்தேவ விக்கிரமும் பூஜைப் பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்னர், 24 ஆம் திகதி அதிகாலை விசேட பூஜைகள் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 2015, 2016 ஆம் வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டது.
சிவனொளிபாத மலைப்பிரதேசத்தில் பொலித்தீன் பாவனை, மதுபாவனை என்பன இம்முறையும் தடைசெய்யப்பட்டுள்ளதெனவும் அறிவிக்கப்பட்டது.மேலும், சிவனொளிபாத மலைக்கு வருகை தரவுள்ள யாத்திரிகர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குவதற்கு ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த யாத்திரிகர்களுக்காக ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து விசேட போக்குவரத்துச் சேவைகளை நல்லத்தண்ணி நகர் வரை நடத்துவதற்கு ஹட்டன் பஸ் டிப்போ நடவடிக்கை எடுக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.