Saturday, October 18, 2008

i

ஜெயலலிதாவை வரலாறு மன்னிக்காது! சுப.வீரபாண்டியன் கண்டனம்

சிங்கள இனவெறி அரசுக்குத் துணை போகும்
ஜெயலலிதாவை வரலாறு மன்னிக்காது!
சுப.வீரபாண்டியன் கண்டனம்

தமிழீழ மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் விடுதலைப் போராட்டக் கோரிக்கையைப் புரிந்து ஏற்றுக் கொள்வதாகவும் சில நாள்களுக்கு முன்பு அறிக்கை விடுத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இப்போது அதற்கு நேர் எதிராகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


தன் ஆட்சியில் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்களை விரட்டி விரட்டி வேட்டையாடிப் பொடாச் சிறையில் தள்ளிய அவர், திடீரென்று தமிழீழ மக்களுக்காகப் பொய் ஒப்பாரி வைத்து ஓலமிட்ட போதே நமக்கு ஐயம் எழுந்தது. இப்போது மீண்டும் தன் கோர முகத்தை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.

"இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப்புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம், கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்" என்கிறார் ஜெயலலிதா. போரில் செத்து மடியும் ஆயிரக்கணக்கான மக்களும், அகதிகளாய்த் தெருவில் நிற்கும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும் அவர் கண்ணில் படவே இல்லை. தமிழினத்தில் பிறந்திருந்தால் அந்தக் கொடுந்துயரம் அவர் நெஞ்சைச் சுட்டிருக்கும். இப்போது அவரிடம் சிங்கள இனவெறிப் பாசமே மேலோங்கி நிற்கிறது.

சில நாட்களுக்குள் இப்படி ஒரு முரண்பட்ட அறிக்கையை அவர் ஏன் வெளியிட நேர்ந்தது? அக்டோபர் 6ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற தி.மு.கழகக் கூட்டத்திற்குப் பிறகே, தமிழகமெங்கும் ஒரு புத்தெழுச்சி புறப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தத் தலைவன் குரல் கேட்டுத்தான் தமிழகம் எழுந்தது. அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டம் நடந்த அக்டோபர் 14க்குப் பிறகு, அந்த எழுச்சி இன்னும் பன்மடங்காகப் பெருகியது. உலகத் தமிழர்களெல்லாம் ஒவ்வொரு நாளும் தலைவர் கலைஞருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். இவை அனைத்தையும் கண்டு பொறுக்க முடியாத ஆற்றாமைதான் இப்படி அறிக்கையாய் வந்து விழுகிறது.

கலைஞருக்கு எதிராக அரசியல் நடத்துவதாய் நினைத்துக்கொண்டு, தமிழினத்திற்கு எதிராக அரசியல் நடத்தும் ஜெயலலிதாவை வரலாறும், வருங்காலமும் மன்னிக்காது.

(சுப.வீரபாண்டியன்)