Sunday, August 04, 2013

நதியோடும் பாதையில்...(6) - இடது சாரிகளும் ஈழச்சிக்கலும்



 அண்மையில் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த ஒரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன்.  எங்கள் பேச்சு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துத் திரும்பியது. அவர் சொன்ன ஒரு செய்தி, ஓரளவு நாம் அறிந்ததுதான் என்றாலும், கம்யூனிஸ்ட்களின் மீது இருந்த கடைசி நம்பிக்கையையும் போக்கி விடுவதாக இருந்தது.

எத்தனை அவமானங்களுக்கு உள்ளானாலும், வரும் தேர்தலிலும் அ,தி.மு.க.வை ஆதரிப்பதுதான் அவர்களின் மேலிட முடிவாம். காங்கிரஸ், பா.ஜ.க., மம்தா தவிர்த்த மூன்றாவது அணியை ஏற்படுத்துவதும், வெற்றி பெற்றால்(?), முலாயம் சிங் அல்லது ஜெயாவை உயர் பதவிக்கு முன்மொழிவதும் அவர்கள் திட்டமாம். தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. எதிர்ப்புக் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பார்களாம்.


 தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம் ஆகியன ஈழச் சிக்கலை, தேர்தல் வரும் நேரத்தில் முழு மூச்சுடன் முன்னெடுக்கப் போகின்றனராம்.  தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை ஈழத்தைச் சொல்லிச் சொல்லியே ஒழித்துக் கட்டிவிடுவது அவர்களின் நோக்கமாம்.

சரி, ஈழப் பிரச்சினையில் உங்கள் நிலை என்ன என்று கேட்டேன். எங்கள் நிலை எப்போதும் போலத்தான் என்றார் நண்பர். 'எப்போதும் போல' என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்தானே? இதோ அவர்களின் கட்சி ஆவணங்களிலிருந்து சில செய்திகளைப் பார்ப்போம்.

2012 ஏப்ரலில் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற சி.பி.எம். கட்சியின் பேரவைக் கூட்டத் தீர்மானம்:
"The CPI(M) stands for a united Sri Lanka in which the Tamil minorities can live in peace and harmony with the majority Sinhala community"

(பெரும்பான்மையான சிங்கள சமூகத்தோடு, சிறுபான்மையினரான தமிழர்கள் அமைதியாகவும், இணக்கமாகவும் சேர்ந்து வாழக் கூடிய ஒன்றுபட்ட ஸ்ரீ லங்கா என்பதே சி.பி.எம். கட்சியின் நிலைபாடு ஆகும்.")

இன்றுவரை, சி.பி.எம். கட்சி அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. தனித் தமிழ் ஈழம் என்னும் கோட்பாட்டை அவர்கள் ஒருநாளும் ஏற்பதில்லை.  அது மட்டுமின்றி, ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணை, பொது வாக்கெடுப்பு போன்றனவற்றைக் கூட அவர்கள் மறுக்கின்றனர். 27.03.2013 அன்று வெளியான, தமிழ் மாநில சி.பி.எம். கட்சியின் அறிக்கை கீழ் வருமாறு கூறுகின்றது.

            "Demanding referendum on the demand for a separate eelam or announcing that Sri Lanka is not to be regarded as a friendly country will not only not help solve the Sri Lankan Tamil issue. It will in fact complicate the issue further."

             "The immediate task before us today is not to demand an international inquiry into the war crimes committed by the Sri Lankan forces." 

(தனித் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பைக் கோருவதோ, ஸ்ரீ லங்காவை நம் நட்பு நாடு இல்லை என்று அறிவிப்பதோ அவர்களின் சிக்கலைத் தீர்க்க உதவாது. உண்மையில், அது மென்மேலும் சிக்கலைக் கூட்டும்.)

(ஸ்ரீ லங்கா ராணுவம் இழைத்த போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையைக் கோருவது, நம் முன் உள்ள உடனடிப் பிரச்சினை அன்று.) 


கட்சியின் அறிக்கை மூன்று செய்திகளைத் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றது.
(1) பொது வாக்கெடுப்பு தேவையில்லை
(2) ஸ்ரீ லங்கா நம்முடைய நட்பு நாடுதான்
(3) போர்க் குற்றங்களை விசாரிப்பது உடனடித் தேவை இல்லை.

போர்க் குற்றங்கள் பற்றிக் குறிப்பிடும்போது கூட, அரசு இழைத்த போர்க் குற்றங்கள் என்று கூறாமல், ராணுவம் இழைத்த போர்க் குற்றங்கள் என்று குறிப்பிடும் சி.பி.எம்.மின் 'நேர்மையை' என்னென்பது! (அண்ணன் வைகோ அவர்கள் கூட, தி.மு.க. ஆட்சியில் ஏதேனும் தடை விதிக்கப்பட்டால், அரசைக் கண்டிப்பார்.  அ.தி.மு.க. ஆட்சி தடை விதித்தால், காவல் துறையைக் கண்டிப்பார்.)

இலங்கை நம் நட்பு நாடு என்றும், ஒன்றுபட்ட இலங்கையே எங்கள் நிலைப்பாடு என்றும், பொது வாக்கெடுப்பு கூடத் தேவையில்லை என்றும், சர்வதேச வாக்கெடுப்புக்கு இப்போதென்ன அவசியம் என்றும் அறிக்கை விடும் சி.பி.எம். கட்சியுடன், தமிழ் நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களால் இணக்கமாகச் செல்ல முடிகிறது.அவர்களுக்கு எதிராகவோ, அவர்கள் சார்ந்திருக்கும் கூட்டணிக்கு எதிராகவோ எந்தச் சீமானும் இடி முழக்கம் செய்வதில்லை. 

 1983 தொடங்கி, தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று மாற்றமில்லாமல் ஒரே குரலில் ஒலித்துவரும் தி.மு.க.வும், போர்க் குற்றங்களின் மீது அனைத்துலக நாடுகளின் புலனாய்வைக் கோரும், பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று உரத்த குரலில் கூறும் டெசோவும் மட்டுமே இங்கு எதிரிகளாகக் காட்டப்படுகின்றனர்.

இங்குள்ள தமிழ்த் தேசியத் தலைவர்கள்,  செந்தமிழன்கள் மட்டுமல்ல, புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் சி.பி.எம்.மை எதிர்ப்பதில்லை. என்ன நியாயம் இது?    

 இந்தியப் பொதுவுடமைக் கட்சின் (சி.பி.ஐ) நிலைப்பாடும் ஏறத்தாழ அதேதான். அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா, சென்னையில் நடைபெற்ற மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தின்போது மிக ஆவேசமாகப் பேசினார். தனி ஈழம் என்றெல்லாம் முழங்கினார். ஆனால் அது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு இல்லை. கட்சிக்கு வேறு, மாணவர்கள் முன்னால்  வேறு என்று 'தந்திர உத்தி' (tactics) எல்லாம் தெரிந்தவர்கள் அவர்கள். அதனை இரட்டை நிலை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது.  கோபப்படுவார்கள் - அது தந்திர உத்தி அவ்வளவுதான்.



அதே இந்தியப் பொதுவுடமைக் கட்சியினர்,  20.03.2013 அன்று புது தில்லியில், நாடாளுமன்ற அவைத் தலைவர் மீரா குமார் கூட்டிய கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஈழப் பிரச்சினைக்காகவே கூட்டப்பட்ட கூட்டம் அது. எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் என்ன சொன்னாரோ அதனையே அவர்களும் வழிமொழிந்தார்கள்!  இதோ அந்தச் செய்தி:

 "Leader of opposition Sushma Swaraj, however questioned why all parties had been called for the meeting to discuss an issue which strictly is between the Government and the DMK. Communist Party of india leader gurudas dasgupta was of the similar view." 

(அரசுக்கும் , தி.மு.க.விற்கும் மட்டுமே உரிய ஒரு சிக்கலைப் பற்றிப் பேசுவதற்கு ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவும் அதே கருத்தைக் கொண்டிருந்தார்.)

தில்லிக்குப் போனவுடன், ஈழப்  பிரச்சினை, தி.மு.க.வின் பிரச்சினை ஆகிவிடுகிறது. மாணவர்களின் முன்பு பேசும் வேளையில், அது தங்கள் பிரச்சினையாக மாறிவிடுகிறது. 

என்ன ஒரு வேடிக்கை என்றால், காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள் மூவரும் நேர் எதிரிகளைப் போல் பலமுறை மோதிக் கொள்வார்கள்.  ஆனால் பல பிரச்சினைகளில் மூவரின் கருத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்.ஈழச் சிக்கலில் மட்டுமன்று, காஷ்மீர், இட ஒதுக்கீடு, கூடங்குளம்  எனப் பலவற்றிலும் ஒரே கருத்துடைய மூன்று  கட்சிகள் இங்கே அடிக்கடி மோதி கொள்வதுதான் நமக்குப் புரியாத புதிராக உள்ளது! 


நதியோடும் பாதையில்...(7)


தாங்கள் உண்டு, தங்கள் படிப்பு உண்டு என்று இருந்து விடாமல், நம் மாணவர்கள் சமூக அக்கறையோடு தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஈழ மக்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தெருக்களில் இறங்கினர். இப்போது இரண்டு தளங்களில் தங்கள் ஈடுபாட்டை அவர்கள் காட்டத் தொடங்கியுள்ளனர்.

மதுரை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த நந்தினி என்னும் மாணவி, முழுமையான மதுவிலக்கைக் கோரி, காலவரையற்ற பட்டினிப் போரைத் தொடங்கி, ஐந்தாவது நாள் கைது செய்யப்பட்டுள்ளார். 29.07.2013 அன்று, 'சாதியத்திற்கு எதிரான மாணவர்கள்' என்னும் பெயரில், மாணவர்கள் சென்னையில் ஒரு கருத்தரங்கினை நடத்தியுள்ளனர்.


அறிவியல், தொழில்நுட்ப அறிவில் முன்னேறியுள்ள நம் பிள்ளைகள்  அதற்கு இணையாகச் சமூகப் பார்வையும் உடையவர்களாக இல்லையோ என்ற கவலை இருக்கவே செய்கிறது. அந்த ஆதங்கத்தை முறியடிக்கும் வகையில், ஈழ ஆதரவு, மது எதிர்ப்பு, சாதி ஒழிப்பு முதலான சமூகச் சிக்கல்களில் தங்கள் பங்கினை மாணவர்கள் ஆற்ற முன்வந்திருப்பது மிகுந்த ஊக்கம் தருவதாக உள்ளது. அதே வேளையில் இப்போராட்டங்கள் குறித்த நம் பார்வைகள் சிலவற்றையும் நாம் பதிவு செய்வதில் தவறில்லை.

எந்தப் போராட்டத்திற்குப் பின்னும் சில பின்புலங்கள் இருக்கவே செய்யும். 1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பின்புலத்தில் தி.மு.க. ஊட்டிய உணர்வும், காட்டிய ஆதரவும் இருந்தன. அதனைப் போல இன்றைய மாணவர்களின் போராட்டத்திற்குப் பின்னாலும் சில அரசியல் கட்சிகள் இருக்கலாம். அதில் ஒன்றும் பெரிய பிழையில்லை. ஆனால் அவ்வாறு பின்னால் நின்று மாணவர்களை இயக்கும் சக்திகளின் நோக்கம், போராட்டக் காரணத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். அவ்வாறன்றி வேறு மறைக்கப்பட்ட உள்  நோக்கங்களுக்காக அச்செயல் அமைந்துவிடக் கூடாது.

மாணவர்கள் நடத்திய ஈழ ஆதரவுப் போராட்டத்தின் பின்புலத்தில் இருந்த கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், மறைக்கப்பட்ட ஓர் உள்நோக்கம் இருந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை. தி.மு.கவைச் சேர்ந்த அல்லது தி.மு.க.வை ஆதரிக்கக் கூடிய எவரும் மாணவர்களை நெருங்கிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாக இருந்தனர்.

அதன் காரணமாக, ஈழ ஆதரவுப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் பெரும் ஆர்வத்தைக் காட்டவில்லை. மாணவர்கள் ஒருங்கிணைக்கப்  படவில்லை. ஈழ வரலாறு குறித்தோ, உலக நாடுகளின் அழுத்தத்தை எவ்வாறு கொண்டுவர வேண்டும் என்பது குறித்தோ எல்லாம் விளக்கமாக எடுத்துச் சொல்லப்படவில்லை.

பின்னால் நின்று இயக்கியவர்களின் உண்மையான நோக்கம் ஈழ ஆதரவு என்பதாக அல்லாமல், தி.மு.க. எதிர்ப்பு என்பதாக இருந்தது என்பதுதான் அதற்கான காரணம்.  இவ்வாறு உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்கின்றவர்கள் ஈழத்திற்கும் நல்லது செய்யவில்லை, மாணவர்களுக்கும் நல்லது செய்யவில்லை என்பதைக் காலம் உணர்த்தும்.

இன்று, மாணவி நந்தினி, மதுவிலக்கிற்காகப்   போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளையிலும் சில எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.    

எந்த ஒரு போராட்டமானாலும், அதன் நோக்கம், வழிமுறை ஆகிய இரண்டும் கவனிக்கப்பட வேண்டும். நந்தினியின் போராட்ட நோக்கம் சரியானதே. குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் பல இங்கே சீரழிந்து போகின்றன. எனவே அத்தீமையை  எதிர்த்து மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் அதற்காக அம்மாணவி தேர்ந்தெடுத்துள்ள வழிமுறை நடைமுறைக்கு உகந்ததாகத் தோன்றவில்லை.

அறவழிப் போர் என்பது சரிதான். ஒருநாள் பட்டினிப்போர் என்பது கூட, கவன ஈர்ப்பு என்ற முறையில் தவறில்லை. ஆனால் வாழ வேண்டிய பிள்ளைகள் காலவரையற்ற பட்டினிப்போரை மேற்கொள்ள வேண்டியதில்லை. இப்படிச் சொன்னவுடன், போராட்டத்தை மழுங்கடிக்கின்றோம் என விமர்சனம் எழும் என்பதை அறிந்தே இதனை எழுதுகின்றேன்.

ராஜீவ் கொலை வழக்கில், தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் தமிழர்கள் மூவர் உயிர்களைக் காக்க அன்று நடைபெற்ற காலவரையற்ற பட்டினிப் போரை நாம் அனைவரும் ஆதரிக்கவே செய்தோம். ஈழத்தில் ஓர் இன அழிப்பு நடைபெறவிருந்த நேரத்தில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மேற்கொண்ட காலவரையற்ற பட்டினிப்போரையும் ஏற்கவே செய்தோம். அவையெல்லாம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை என்ற காரணத்திற்காக அப்படி ஒரு போராட்டம் தேவைப்பட்டிருக்கலாம்.

மதுவிற்கு எதிரான போராட்டத்தை அப்படிச் சொல்ல முடியாது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு உள்ள ஒரு தீய பழக்கத்தை இரண்டு மூன்று நாள்களில் நிறுத்திவிட முடியாது. நீண்ட தொடர் இயக்கங்களின் மூலம், மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திச் சிறிது சிறிதாக மாற்றவேண்டிய பழக்கம் இது.நெடுநாள் சிக்கல்களுக்கு எல்லாம் இப்போராட்ட முறை பயன் தராது. இவற்றை எதிர்த்து நாம் வாழ்ந்து போராட வேண்டுமே அல்லாமல், மாண்டு மடிந்துவிடக் கூடாது.

இந்த உண்மைகளை எல்லாம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லாமல், போராட்டப் பந்தலில் நின்று நாங்கள் இப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றோம் என்று தலைவர்கள் பேசுவது ஏற்புடையது அன்று. காலவரையற்ற பட்டினிப் போரில் ஈடுபட்டுள்ள 20 வயது மாணவியை ஊக்கப்படுத்தும் எந்தத் தலைவரும், அதுபோன்ற ஒரு போராட்டத்தை அதே காரணத்திற்காக மேற்கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.


பெரியவர் சசி பெருமாள் அத்தகைய போராட்டத்தில் ஈடுபட்ட போதும் கூட, பூரண மதுவிலக்கைத் தன் கோரிக்கையாக வைக்கவில்லை என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. பூரண மதுவிலக்கு உடனடியான நடைமுறைச் சாத்தியம் அற்றது.

இவையெல்லாம் எல்லோருக்கும் தெரியும். எனினும் இங்கே ஒரு திசை திருப்பும் நாடகம் நடந்து கொண்டுள்ளது. அரசியலற்ற போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அரசியல் போராட்டங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட முடியும். இன்று தமிழ்நாட்டில் சாதி வெறி திட்டமிட்டு வளர்க்கப் படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுக்கிடக்கின்றது. விலைவாசி விண்ணைத் தொடுகின்றது. இவைகளுக்கு எதிரான போராட்டத்தில் மக்களும், மாணவர்களும் இறங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதற்கும் மதுவிலக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைப்பது நல்ல வாய்ப்பாக அமையும். இந்த உள் அரசியலை எல்லாம் புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் உணர்ச்சி வயப்பட்டு போராட்டங்களில் இறங்கிவிடக் கூடாது என்பதே நம் வேண்டுகோள்!

சாதியத்திற்கு எதிரான மாணவர்கள் என்னும் அமைப்பு இன்றைய காலத்தின் தேவை. இந்த அமைப்பிற்குப் பின்னும் ஒரு கட்சி - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - இருப்பதை உணர முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான ஒரு மனநிலையும் அக்கருத்தரங்கில் இருந்தது. இந்த உண்மைகளை நாம் மறைக்க வேண்டியதில்லை. ஆனால் அது தனி ஒரு கட்சிக்கு எதிரானது இல்லை. அக்கட்சி ஊட்டிவரும் சாதி வெறிக்கு மட்டுமே எதிரானது. எனவே அந்த அமைப்பு தேவையான ஒன்று என்றே நான் கருதுகின்றேன்.

எனினும் அவ்வமைப்பின் பொறுப்பாளர்களாக இருக்கும் மாணவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தலித்துகளுக்கும், வன்னியர்களுக்கும் மோதலை உருவாக்கும் ஓர் அமைப்பாக அது ஆகி விடாமல், ஜனநாயக வாதிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும் இடைப்பட்ட முரண்பாட்டை வெளிப்படுத்தும் அமைப்பாக அதனை வளர்த்திட வேண்டும். அப்படிச் செய்தால், சரியான காலகட்டத்தில், மாணவர்கள் செய்திருக்கும் சரியான செயலாக அது வரலாற்றில் நிலைக்கும்.
ஈழத்தில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு திக்கற்று நின்ற ஈழத் தமிழர்கள், இப்போது மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உச்சரிக்கும் பெயர்... 'ஃபாதர் இமானுவேல்’. 


கிறிஸ்துவ மத போதகரான இவர், ஈழத் தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதி கேட்டுப் போராடும் அறிவாயுதப் போராளி. தன் வலி மிகுந்த‌ எழுத்தினால், ராஜதந்திர‌ப் பேச்சினால், உலக நாடுகளிடையே இவர் மேற்கொள்ளும் 'டிப்ளமேட்டிக்’ வேலைகளால், ராஜபக்ஷேவுக்கு சிம்மசொப்பனமாக மாறி இருக்கிறார் ஃபாதர் இமானுவேல். 80 வயதைத் தொட்டிருக்கும் இமானுவேல், இப் போது ஜெர்மனியில் குருமடம் ஒன்றில் வசித்து வருகிறார்... 

''எப்படி இருக்கிறீர்கள்... உங்களைக் கண்டுபிடிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறதே!'' 

''ஏதோ இருக்கிறேன்! எம்முடைய புலம்பெயர் வாழ்வும், பாதுகாப்பின்மையும், நீதிக்கான போராட்டமும், தொடர் செயல்பாடுகளும் பெரும்பாலும் எம‌து இருப்பை மறைத்தே வைக்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கி விட்டது. நான் கிறிஸ்துவ மதத்தில் ரோமிலும் கிழக்காசிய நாடுகளிலும் முக்கிய‌ப் பதவிகளை வகித்தவன். கிழக்காசிய நாடுகளின் கிறிஸ்துவ மதப் பொறுப்பாளராக இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். 

'இலங்கை’ எமது தாய்நாடு என்றால், 'இந்தியா’ எமது தந்தை நாடு. ஆனால், ராஜ பக்ஷேவின் அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் என்னைப் 'புலி ஃபாதர்’ எனத் தொடர்ந்து தவறான பரப்புரை செய்து வருகிறார்கள். இதனால் இலங்கை, இந்தியாவுக்குள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனாலேயே எனது நடமாட்டங்கள் சுருங்கிவிட்டன. உடல் மூப்பு காரணமாக, சுகவீனமும் அவ்வப்போது என்னை முடக்கிப் போட்டு விடுகிறது!'' 

'''புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் அமைப்புகளும் தங்கள் நலனில் அக்கறைக் காட்டுவது இல்லை’ என்ற குரல்கள் ஈழத்திலிருந்து ஒலிக்கின்றனவே?'' 

''புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தமிழ் மக்களும் அரசியல் பேசுவது மட்டுமல்ல; தாயகத்தில் வாடும் மக்களுக்கு உதவி செய்யவும் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. செல்வாக்கு உள்ளவர்கள், அங்கு உள்ள நமது உறவுகளைக் குடும்பம் குடும்பமாகத் தத்து எடுக்க வேண்டும். சர்வ சாதாரணமாக செலவழிக்கும் ஐந்து அல்லது பத்து பவுண்ட்களைக் கூட ஈழத்துக்கு அனுப்பலாம். 'ஈழம்’ எனும் வேருக்கு நம்முடைய சிறு உதவிகள்தான் நீர் வார்க்கும் என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் உணர வேண்டும்!'' 

''இந்த இக்கட்டான சூழலில், ஈழத்தில் சாதி பிரச்னைகள் முட்டி முளைப்பதாகக் கிளம்பும் தகவல்கள் உண்மையா?'' 

''உண்மைதான். வருத்தமாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி என எதன் பேரிலும் மனிதனை மனிதன் அடக்குதலை என்னால் ஏற்க முடியாது. பிரபாகரன், சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினார். 1960-களில், தமிழகத்தில் தந்தை பெரியார் என்கிற தீர்க்கதரிசி தோன்றி இன சுத்திகரிப்பு செய்தார். அவர் கடவுள் மறுப்பு பேசினாலும், நான் அவரை பெரிதும் மதிக்கிறேன். 

இந்தியாவில் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்களும் சாதிக்கு எதிராக தீவிரமானப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இலங்கையில் அப்படியான தலைவர்கள் தோன்றவில்லை. இன்றைய நிலையில், ஈழத் தமிழர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மிடையே இருக்கும் சின்னச் சின்னப் பிளவுகள் கூட ஈழத்தைச் சின்னா பின்னமாக்கி விடும் என்பதை எந்த நொடியும் மறந்து விடாதீர்கள்!'' 

''தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் ஆரம்பித்த அஹிம்சைப் போராட்டம், அதன் பிறகு 30 ஆண்டு கால‌ஆயுதப் போராட்டம் ஆகிய அனைத்தும் முள்ளிவாய்க்காலில் ஒரு தேக்கத்தை அடைந்தது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டு களாக உங்களைப் போன்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கொள்ளும் டிப்ளமேட் லாபி, பொலிட்டிகல் நெட்வொர்க்கிங் ஆகியவை ஈழப் போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லுமா?'' 

''சிங்களப் பேரினவாதத்தின் முன் தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டமும், புலிகளின் ஆயுதப் போராட்டமும் கை கொடுக்கவில்லை. இது, அநீதிகள் நிறைந்த உலகம். அதுவும் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, புரட்சிப் போராட்டங்களின் மீது சர்வதேசத்தின் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. எனவே, இனி அரசியல் போராட்டமே எமக்கான விடுதலையைப் பெற்றுத் தரும் என நம்புகிறோம். 

எங்களுடைய டிப்ளமேட் செயல் பாடுகளின் சோதனை முயற்சிகள், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நல்ல பலன் அளித்தது. அதன் வெளிப்பாடே அமெரிக்காவின் இரண்டு தீர்மானங்களும். கடந்த காலங்களில் நாங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, முன்னேற விரும்புகிறோம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களில் இருந்து எம்மைத் திருத்திக்கொள்கிறோம்; மன்னிப்பும் கேட்க விரும்புகிறோம். 

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நார்வே எனப் பல நாடுகள் எங்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றன. எங்களின் இந்தச் செயல்பாடுகளுக்கான விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்!'' 

''இலங்கையின் வட பகுதிகளில் நடைபெறவிருக்கும் மாகாணத் தேர்தலில், ஈழ அரசாங்கத்தின் அதிகார அழுத்தத்தை மீறி தமிழர்கள் வெற்றி பெறுவார்களா?'' 

''தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இந்தத் தேர்தலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் அனைவருக்கும் வாக்குரிமை, முறையான வாக்குப் பதிவு எனத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டால், தமிழர்கள் வெற்றி பெறுவார்கள். ராஜபக்ஷே அரசின் மீதான கோபத்தையும், தமிழர்களின் தாகத்தையும் மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்!'' 

''இந்தியா முன்மொழிந்த 13-வது சட்டத்திருத்த மசோதாவை இலங்கை ஏற்க மறுக்கிறது. அதேவேளையில் ஈழத் தமிழர்களும் அதிருப்தி வெளிப்படுத்துகிறார்கள். 13-வது சட்டத் திருத்தத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' 

''கடந்த சில தசாப்தங்களாக‌ தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப் புலிகளையும் அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்த பிறகு, பான் கீ மூனுக்கும் மன்மோகன்சிங்குக்கும் ராஜபக்ஷே பல வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால், அவை எவையுமே செயல்வடிவம் எடுக்கவில்லை. லேண்ட் பவர், போலீஸ் பவர் என எதனையும் இன்று வரை வழங்கவும் இல்லை. 

இந்த நிலையில் எங்களைப் பொறுத்தவரை 13-வது சட்ட திருத்தம் முடிவும் அல்ல; தொடக்கமும் அல்ல. அது எங்களுக்கு எந்த வகையிலும் உதவாது. இலங்கை அரசின் நரித்தந்திர வேலைகளால் இந்தியாவுக்குப் பெரும் சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. சிங்களப் பேரினவாதிகள் தமிழ்மக்களுக்குக் குறைந்தபட்ச நீதியைக்கூட வழங்க மாட்டார்கள்!'' 

''நவம்பர் மாதம் இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடைபெற இருக்கிறது. 'மாநாட்டின் முடிவில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே காமன்வெல்த் நாடுகளின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக’ வதந்திகள் உலவுகின்றன... அது உண்மையா?'' 

''அந்த நிலைமை மட்டும் ஒருபோதும் நேர்ந்துவிடக் கூடாது. அது இப்போதைய ஈழத் தமிழர்களின் நிலையை முற்றிலும் மோசமாக்கி விடும். இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை அதன் உறுப்பு நாடுகள் புறக்கணிக்க வேண்டும். இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது. 'ஒருவேளை நீங்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றால், முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் நீங்களும் பங்கேற்றதற்கு ஒப்பாகும்’ என கனடாவிடம் விளக்கினோம். 

எங்கள் வார்த்தைகளை செவிமடுத்து, 'கனடா அந்த மாநாட்டில் பங்கேற்காது’ எனச் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்களும் எமக்குச் சாதகமான முடிவை எடுப்பார்கள் என நம்புகிறோம்!'' 

''நீங்கள் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாக தகவல்கள் உண்டு. பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது எந்த அளவுக்கு உண்மை?'' 

''1986-ல் நான் யாழ்ப்பாண குருமடத்தில் பேராசிரியராக இருந்தபோது ஒருமுறை பிரபாகரனைச் சந்தித்தேன். அதன் பிறகு 1991-ம் ஆண்டு என்னை அவர் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போதும் சந்தித்தேன். அந்த இரண்டு சந்திப்புகளுமே எமது தாயகம் குறித்தும், மக்களின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதிலேயே மையம் கொண்டது. அதன் பிறகு, நான் இலங்கையில் இருந்து வெளியேறி விட்டேன். 

'பிரபாகரன் இருக்கிறாரா?’ என்ற கேள்வி எமக்கு இப்போது முக்கியமானதாகத் தெரியவில்லை. அவர் பெயரைச் சொல்லி சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். பிரபாகரனைக் காட்டிலும், அவரின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்போது முக்கியம்!'' 

- இரா.வினோத் 
- நன்றி - ஆனந்த விகடன் (07 Aug, 2013)