1987 செப்டெம்பர் 15 அன்று திலீபன் தனது உண்ணா நோன்பினை ஆரம்பித்து நீராகாரம் கூட அருந்தாது 12 நாட்கள் பட்டினி கிடந்து அவனது கோரிக்கைகளை (காந்தி உண்ணா நோன்பிருந்து பெற்றுக் கொடுத்ததாக சொல்லப்படும்) இந்திய அரசு செவி சாய்க்காத நிலையில் செப்டெம்பர் 26 சாவினைத் தழுவிக் கொண்டான்.
திலீபன் வெள்ளையனே வெளியேறு என்பது போல இந்தியனே வெளியேறு என ஒரு போதும் கேட்டதில்லை. எதற்காக ஈழத்திற்கு வந்தீர்களோ ? என்ன உறுதிமொழிகளை தந்தீர்களோ அவற்றை அமுல்ப் படுத்துங்கள் என்று மட்டுமே கேட்டான். பசி மறந்து கிடந்த பிள்ளையின் போருக்கு பாரதம் சாவினைப் பரிசளித்துப் பல்லிளித்தது.
திலிபன் நினைவுகள்
தியாகி திலீபன்
உலக வரலாற்றிலே ஓர் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் மட்டுமல்ல... தமிழீழ மக்கள் புரட்சியின் திறவுகோல். ஈழ விடுதலைப் போராட்டத்தின் அகிம்சைத் தீ. அணையா விளக்கு, அகிம்சையால் எழுந்த பாரதமெனும் நாட்டுக்கு, அகிம்சையின் அர்த்தம் கற்பித்த புலிவீரன்.இந்திய-சிறீலங்கா ஒப்பந்தமெனும் சூழ்ச்சிப் பொறியோடு, தமிழீழ மக்களின் துன்பங்களையும், வேதனைகளையும் வெட்டி வீழ்த்தி விடுவோமென்று கூறிக்கொண்டு பாரதப் படைகள் எம் மண்ணில் காலூன்றியபோது தமிழீழ மக்களின் மகிழ்ச்சி உச்சிமேவிப் பிரவாகித்தது.
ஆனால் இந்திய அரசின் கபடம் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியபோது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்கள் தண்ணீருமின்றி உண்ணாநோன்பிருந்த தமிழீழ விடிவிற்காய் உயிர்த்தியாகம் செய்தான் தியாகி திலீபன்.1963.11.27 இல் ஊரேழு என்னும் கிராமத்தில் பிறந்த இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன் கல்வியில் சிறந்துவிளங்கி பல்கலைக்கழக மருத்துவபீட அனுமதியைப் பெற்றான்.
தமிழீழ மக்களின் இன்னல்கண்டு தனது கல்வியை உதறித்தள்ளி 1983 காலப் பகுதியில் லெப். கேணல் பொன்னம்மான் அவர்களின் தொடர்பு மூலமாக தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டான். ஆரம்ப காலங்களில் இயக்க அரசியல் வேலைகளில் ஈடுபட்ட திலீபன், பின்னர் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான்.
இக்காலப்பகுதியில் சிறீலங்காப் படைகளுடனான நேரடி மோதல்களிலும் தனது திறமையினை வெளிப்படுத்தி வந்தார். மக்கள் மத்தியில் மிக அன்பாகப் பழகியதுடன் அவர்களது முன்னேற்றத்துக்காக பல அமைப்புகளையும் நிறுவினான். விடுதலைப் புலிகள் அமைப்பையும் பல புதிய பரிணாமங்களிற்கு இட்டுச் செல்ல வழிவகுத்துச் செயற்பட்டார். களத்தில், சுதந்திரப் பறவைகள் உட்பட பல பத்திரிகைகளை ஆரம்பித்து செயற்படுத்தினான். விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பு, மகளிர் அமைப்பு, சுதந்திர பறவைகள் அமைப்பு, தேச பக்தர் அமைப்பு என்பவற்றுடன் தமிழீழ கிராமிய நீதி மன்றங்கள், விழிப்புக் குழுக்கள், சர்வதேச உற்பத்திக் குழுக்கள், தமிழீழ ஒலி ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, தமிழர் கலாசார அவை என இவன் ஆரம்பித்து நெறிப்படுத்திய பலவற்றைஅடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு விடுதலைக்காய் தீவிரமாய் உழைத்துவந்த லெப். கேணல் திலீபன் இந்திய-சிறீலங்கா ஒப்பந்தத்தை சிறீலங்கா அரசு மீறுவது கண்டு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலிலும், சிறைகளிலும் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும், புனர்வாழ்வு என்னும் பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ‘புனர்வாழ்வு’ என்னும் சகல வேலைகளையும் நிறுத்த வேண்டும். வடக்கு கிழக்கில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் உள்ள ஊர்காவற் படையினரின் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் என்பவற்றில் குடியிருக்கும் இராணுவ பொலீஸ் நிலையங்கள் அகற்றப்பட வேண்டும் என ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள் முன் தண்ணீருமின்றி தன் பட்டினிப்போராட்டத்தை ஆரம்பித்தான் திலீபன்.
பன்னிரு நாட்கள் தன்பாராமுகத் தன்மையினால் திலீபன் என்னும் தியாக வீரனை சாவின் வாய்க்குத் தீனியாக்கியது பாரத அரசு.
‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்று கூறி மரணித்த அந்த மாவீரனின் 21ஆம் ஆண்டு நினைவுடன் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாய் எழுந்து நின்று, தினம் தினம் தீக்குளித்து போராடி நிற்கிறது எம்மினம்.