Sunday, August 04, 2013

நதியோடும் பாதையில்...(6) - இடது சாரிகளும் ஈழச்சிக்கலும்



 அண்மையில் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த ஒரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன்.  எங்கள் பேச்சு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துத் திரும்பியது. அவர் சொன்ன ஒரு செய்தி, ஓரளவு நாம் அறிந்ததுதான் என்றாலும், கம்யூனிஸ்ட்களின் மீது இருந்த கடைசி நம்பிக்கையையும் போக்கி விடுவதாக இருந்தது.

எத்தனை அவமானங்களுக்கு உள்ளானாலும், வரும் தேர்தலிலும் அ,தி.மு.க.வை ஆதரிப்பதுதான் அவர்களின் மேலிட முடிவாம். காங்கிரஸ், பா.ஜ.க., மம்தா தவிர்த்த மூன்றாவது அணியை ஏற்படுத்துவதும், வெற்றி பெற்றால்(?), முலாயம் சிங் அல்லது ஜெயாவை உயர் பதவிக்கு முன்மொழிவதும் அவர்கள் திட்டமாம். தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. எதிர்ப்புக் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பார்களாம்.


 தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம் ஆகியன ஈழச் சிக்கலை, தேர்தல் வரும் நேரத்தில் முழு மூச்சுடன் முன்னெடுக்கப் போகின்றனராம்.  தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை ஈழத்தைச் சொல்லிச் சொல்லியே ஒழித்துக் கட்டிவிடுவது அவர்களின் நோக்கமாம்.

சரி, ஈழப் பிரச்சினையில் உங்கள் நிலை என்ன என்று கேட்டேன். எங்கள் நிலை எப்போதும் போலத்தான் என்றார் நண்பர். 'எப்போதும் போல' என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்தானே? இதோ அவர்களின் கட்சி ஆவணங்களிலிருந்து சில செய்திகளைப் பார்ப்போம்.

2012 ஏப்ரலில் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற சி.பி.எம். கட்சியின் பேரவைக் கூட்டத் தீர்மானம்:
"The CPI(M) stands for a united Sri Lanka in which the Tamil minorities can live in peace and harmony with the majority Sinhala community"

(பெரும்பான்மையான சிங்கள சமூகத்தோடு, சிறுபான்மையினரான தமிழர்கள் அமைதியாகவும், இணக்கமாகவும் சேர்ந்து வாழக் கூடிய ஒன்றுபட்ட ஸ்ரீ லங்கா என்பதே சி.பி.எம். கட்சியின் நிலைபாடு ஆகும்.")

இன்றுவரை, சி.பி.எம். கட்சி அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. தனித் தமிழ் ஈழம் என்னும் கோட்பாட்டை அவர்கள் ஒருநாளும் ஏற்பதில்லை.  அது மட்டுமின்றி, ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணை, பொது வாக்கெடுப்பு போன்றனவற்றைக் கூட அவர்கள் மறுக்கின்றனர். 27.03.2013 அன்று வெளியான, தமிழ் மாநில சி.பி.எம். கட்சியின் அறிக்கை கீழ் வருமாறு கூறுகின்றது.

            "Demanding referendum on the demand for a separate eelam or announcing that Sri Lanka is not to be regarded as a friendly country will not only not help solve the Sri Lankan Tamil issue. It will in fact complicate the issue further."

             "The immediate task before us today is not to demand an international inquiry into the war crimes committed by the Sri Lankan forces." 

(தனித் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பைக் கோருவதோ, ஸ்ரீ லங்காவை நம் நட்பு நாடு இல்லை என்று அறிவிப்பதோ அவர்களின் சிக்கலைத் தீர்க்க உதவாது. உண்மையில், அது மென்மேலும் சிக்கலைக் கூட்டும்.)

(ஸ்ரீ லங்கா ராணுவம் இழைத்த போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையைக் கோருவது, நம் முன் உள்ள உடனடிப் பிரச்சினை அன்று.) 


கட்சியின் அறிக்கை மூன்று செய்திகளைத் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றது.
(1) பொது வாக்கெடுப்பு தேவையில்லை
(2) ஸ்ரீ லங்கா நம்முடைய நட்பு நாடுதான்
(3) போர்க் குற்றங்களை விசாரிப்பது உடனடித் தேவை இல்லை.

போர்க் குற்றங்கள் பற்றிக் குறிப்பிடும்போது கூட, அரசு இழைத்த போர்க் குற்றங்கள் என்று கூறாமல், ராணுவம் இழைத்த போர்க் குற்றங்கள் என்று குறிப்பிடும் சி.பி.எம்.மின் 'நேர்மையை' என்னென்பது! (அண்ணன் வைகோ அவர்கள் கூட, தி.மு.க. ஆட்சியில் ஏதேனும் தடை விதிக்கப்பட்டால், அரசைக் கண்டிப்பார்.  அ.தி.மு.க. ஆட்சி தடை விதித்தால், காவல் துறையைக் கண்டிப்பார்.)

இலங்கை நம் நட்பு நாடு என்றும், ஒன்றுபட்ட இலங்கையே எங்கள் நிலைப்பாடு என்றும், பொது வாக்கெடுப்பு கூடத் தேவையில்லை என்றும், சர்வதேச வாக்கெடுப்புக்கு இப்போதென்ன அவசியம் என்றும் அறிக்கை விடும் சி.பி.எம். கட்சியுடன், தமிழ் நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களால் இணக்கமாகச் செல்ல முடிகிறது.அவர்களுக்கு எதிராகவோ, அவர்கள் சார்ந்திருக்கும் கூட்டணிக்கு எதிராகவோ எந்தச் சீமானும் இடி முழக்கம் செய்வதில்லை. 

 1983 தொடங்கி, தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று மாற்றமில்லாமல் ஒரே குரலில் ஒலித்துவரும் தி.மு.க.வும், போர்க் குற்றங்களின் மீது அனைத்துலக நாடுகளின் புலனாய்வைக் கோரும், பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று உரத்த குரலில் கூறும் டெசோவும் மட்டுமே இங்கு எதிரிகளாகக் காட்டப்படுகின்றனர்.

இங்குள்ள தமிழ்த் தேசியத் தலைவர்கள்,  செந்தமிழன்கள் மட்டுமல்ல, புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் சி.பி.எம்.மை எதிர்ப்பதில்லை. என்ன நியாயம் இது?    

 இந்தியப் பொதுவுடமைக் கட்சின் (சி.பி.ஐ) நிலைப்பாடும் ஏறத்தாழ அதேதான். அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா, சென்னையில் நடைபெற்ற மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தின்போது மிக ஆவேசமாகப் பேசினார். தனி ஈழம் என்றெல்லாம் முழங்கினார். ஆனால் அது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு இல்லை. கட்சிக்கு வேறு, மாணவர்கள் முன்னால்  வேறு என்று 'தந்திர உத்தி' (tactics) எல்லாம் தெரிந்தவர்கள் அவர்கள். அதனை இரட்டை நிலை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது.  கோபப்படுவார்கள் - அது தந்திர உத்தி அவ்வளவுதான்.



அதே இந்தியப் பொதுவுடமைக் கட்சியினர்,  20.03.2013 அன்று புது தில்லியில், நாடாளுமன்ற அவைத் தலைவர் மீரா குமார் கூட்டிய கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஈழப் பிரச்சினைக்காகவே கூட்டப்பட்ட கூட்டம் அது. எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் என்ன சொன்னாரோ அதனையே அவர்களும் வழிமொழிந்தார்கள்!  இதோ அந்தச் செய்தி:

 "Leader of opposition Sushma Swaraj, however questioned why all parties had been called for the meeting to discuss an issue which strictly is between the Government and the DMK. Communist Party of india leader gurudas dasgupta was of the similar view." 

(அரசுக்கும் , தி.மு.க.விற்கும் மட்டுமே உரிய ஒரு சிக்கலைப் பற்றிப் பேசுவதற்கு ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவும் அதே கருத்தைக் கொண்டிருந்தார்.)

தில்லிக்குப் போனவுடன், ஈழப்  பிரச்சினை, தி.மு.க.வின் பிரச்சினை ஆகிவிடுகிறது. மாணவர்களின் முன்பு பேசும் வேளையில், அது தங்கள் பிரச்சினையாக மாறிவிடுகிறது. 

என்ன ஒரு வேடிக்கை என்றால், காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள் மூவரும் நேர் எதிரிகளைப் போல் பலமுறை மோதிக் கொள்வார்கள்.  ஆனால் பல பிரச்சினைகளில் மூவரின் கருத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்.ஈழச் சிக்கலில் மட்டுமன்று, காஷ்மீர், இட ஒதுக்கீடு, கூடங்குளம்  எனப் பலவற்றிலும் ஒரே கருத்துடைய மூன்று  கட்சிகள் இங்கே அடிக்கடி மோதி கொள்வதுதான் நமக்குப் புரியாத புதிராக உள்ளது! 


No comments: