Tuesday, October 14, 2008

கனடாவில் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டம்

கனடாவில் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டம்- பரபரப்பை ஏற்படுத்திய வானூர்தி பதாகை

கனடாவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நான்கு நாடுகள் பங்குபற்றும் 20 ஓவர்கள் அடங்கிய துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

நேற்றய நாள் மிகவும் சிறப்பான முறையில் தமிழ் மகளிர் அமைப்பினராலும் மாணவர் அமைப்பினராலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

City இல் Dufferin & Blumington சந்திப்பிற்கு அருகில் உள்ள திடலிலேயே இந்த துடுப்பாட்டப் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.





கடந்த சனிக்கிழமை முதல் நடைபெறும் இந்தப் போட்டியின் போது கனடா வாழ் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றினர்.

துடுப்பாட்ட வீரரும் சிறிலங்கா படையின் பீரங்கி படையைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசுக்கு எதிரான முழக்கங்களை கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் குறிப்பாக கனடிய தமிழ் இளைஞர்களும், யுவதிகளும், உணர்வாளர்களும் எழுப்பினர்.

வீதியால் சென்று கொண்டிருந்த கனடிய மக்களுக்கு ஆங்கில மொழியிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.





தமிழ் மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு கனடிய காவல்துறையினர் தமது ஒத்தாசையை வழங்கியிருந்ததோடு முதலுதவி காப்புப் பணியினரையும் அழைத்திருந்தனர்.

காவல்துறையினருக்கு ஒத்தாசை புரியும் வகையில் நிகழ்வின் ஏற்ப்பாட்டாளர்கள் மக்களை கட்டுப்படுத்தி வீதியின் ஒருபுறமாக மக்களை வழிநடத்தி ஒழுங்கமைப்பினை செய்திருந்தனர்

தமிழர்களை சிறிலங்கா அரசு கொல்வதை நிறுத்தவேண்டும் என்ற அங்கில மொழிப்பதாதை தாங்கியவாறு வானூர்தி ஒன்று ஒன்றரை மணிநேரத்தக்கு மேலாக மைதானத்தைச் சுற்றி பறப்பில் ஈடுபட்டு துடுப்பாட்டத்தினை பார்வையிட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த இளைஞர்களும், யுவதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டோரை கேலி செய்ததுடன் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு முனைந்தனர்.

இதனை அவதானித்த காவல்துறையினர் அவர்களில் இருவரை கைது செய்து கொண்டு சென்றனர்.