Friday, December 11, 2015

வண்ண தாள்களில் அழகிய மோட்டார் சைக்கிள்

கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் சாதாரண விவசாயியான 32 வயதுடைய சந்திக அருண சாந்த என்ற இளைஞர் மக்களை வியக்கவைக்கும் அளவில் பத்தாயிரம் ஏ4 வர்ண தாள்களை கொண்டு அழகான மோட்டார் சைக்கிள் ஒன்றை உருவமைத்துள்ளார்.

இவர் செய்துள்ள கைப்பணி வேலைகளை தினமும் இப்பகுதி மக்கள் பார்வையிடுகின்றனர். அத்துடன் இவற்றை விலை கொடுத்தும் கொள்வனவு செய்கின்றனர்.

நவீன உலகில் நாமும் ஆக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினை கொண்டு இவ்வாறான வேலைப்பாடுகளை செய்து வருவதாக சந்திக அருண சாந்த கூறினார். 

மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி அபார வெற்றி

நான்கு நாட்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்த மியான்மர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி யுள்ளது. அதிக இடங் களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் கீழ்சபையில் அக்கட்சிக்கு அளித்துள்ள 21 இடங்களையும் சேர்த்து மொத்தம் 348 இடங்களில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி புதிய ஆட்சியை அமைக்கின்றது.

சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும்கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

440 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. அந்நாட்டின் அரசியல மைப்பு சட்டத்தின்படி, மீதமுள்ள 25 சதவீத இடங்களை ராணுவமே நிரப்பிக்கொள்ளும்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்த மூன்று கோடி மக்களில் 80 சதவீதம் பேர் தங்களது ஜனநாயகக் கடமையை பதிவு செய்தனர். வாக்குப் பதிவு முடிந்த ஞாயிற்றுக்கிழமை மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. பல்வேறு காரணங்களால் முழுமையான தேர்தல் முடிவு அறிவிப்பதில் கடந்த நான்கு நாட்களாக தாமதம் ஏற்பட்டது. ஆங் சான் சூகி தான் போட்டியிட்ட காஹ்மூ தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. முன்பு அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த ராணுவ ஆட்சியாளர்கள் தற்போது புதிய ஆட்சியை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 348 தொகுதிகளில் ஆங் சான் சூகி தலைமை யிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்ற தாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் 13.11.2015 முறைப்படி அறிவித்துள்ளது. அந்த கட்சி வெற்றிபெற்ற இடங்களின் அடிப்படை யில் நாடாளுமன்ற கீழ் சபையில் 21 இடங்களை தேர்தல் ஆணையம் இக் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. எனவே, முழு மெஜாரிட்டி யுடன் ஆங் சான் சூகி-யின் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி அதிபராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மியான்மரில் வெளி நாட்டவரை மணந்தவர்கள் அதிபர் பதவி வகிக்க முடியாது என்ற ராணுவ ஆட்சியின்போது தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இதனால் ஆங்கிலேயரான மைக்கேல் ஆரிசை மணந்த ஆங் சான் சூகியால் அதிபர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி அவரிடம் கேட்ட போது, ஆளும் கட்சி தலைவர் என்ற முறையில் அரசின் முடிவு களை தானே எடுக்க இருப்பதாகவும், அதிபருக் கும் மேலான தலைமை பொறுப்பை வகிக்க இருப்பதாகவும் ஆங் சான் சூகி சமீபத்தில் தெரிவித்தி ருந்தது நினைவிருக்கலாம்.

ராணுவத்தின் சார்பில் போட்டியிட்ட மேம்பாட்டு கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி கண்டாலும் நாட்டின் அதிகாரம் முழுவதும் ராணுவ தளபதி மின் ஆங் ஹெலாங், அதிபர் தெய்ன்சீன் ஆகியோரிடம்தான் இன்னும் இருக்கிறது. எனவே, அமையவிருக்கும் புதிய அரசாங்கத்துக்கு அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாக ஆங் சான் சூகி அதிபர் தெய்ன் சீனை நேற்று சந்தித்து பேசினார். 

புதிய அரசாங்கம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி

கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் 19 எம்.பி.க்கள் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் பியேர் ட்ரூடோவின் மகனும், லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ புதிய பிரதமராகப் பதவியேற்கிறார். தேர்தலில், மொத்தமுள்ள 338 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி 184 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, பிற கட்சிகளின் ஆதரவு இல்லாமலே அவர் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சி 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரு கட்சிகளில் லிபரல் கட்சிக்கு 39.5 சதவீத வாக்குகளும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைத்தன. புதிய ஜனநாயகக் கட்சி 19.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. 

இதையடுத்து, கனடா வரலாற்றில் மிக நீண்ட காலமாக 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஸ்டீஃபன் ஹார்ப்பரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றத் தேர்தலில் லிபரல் கட்சி மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.

அந்தத் தேர்தலில் வெறும் 34 இடங்களை மட்டுமே கைப்பற்றிய அக்கட்சி, வலிமையற்ற புதிய ஜனநாயகக் கட்சிக்கும் அடுத்தபடியாக 3-ஆவது இடத்தைக் கைப்பற்றியது. இந்த நிலையில், அந்தக் கட்சிக்கு ஜஸ்டின் ட்ரூடோ புத்துயிர் அளித்து, இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவுக்கு சாதகமான நிலைப்பாடுகளை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 பேர் வெற்றியடைந்துள்ளனர்.

தற்போது ஆட்சியமைக்கவிருக்கும் லிபரல் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரும், கன்சர்வேடிவ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வேட்பாளரும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கனடா மக்கள் தொகையில் 3 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் கனடாவில் வசிக்கும் 19 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 18 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இது கடந்த தேர்தலை காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஏனெனில் கடந்த தேர்தலில் 8 இந்தியர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். 

இந்நிலையில், லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் திருதியோ கனடாவின் 23-ஆவது பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அக்கட்சியை சேர்ந்த 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அதில், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்தோ கனடியரான ஹர்ஜித் சஜ்ஜன் என்ற சீக்கியர் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார். 
இந்தியாவில் பிறந்த சஜ்ஜன் 5 வயதாக இருக்கும் போது தனது குடும்பத்துடன் கனடா சென்று அங்கு வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகையில் 456,090 உள்ள சீக்கியர்களில் 18 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 138,675 உள்ள தமிழர்களின் பிரதிநிதியாக லிபரல் கட்சியை சேர்ந்த கேரி அனந்தசங்கரி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏன் இந்த நிலை? கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இலங்கை தமிழரான ராதிகா சிற்சபேசன் இந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

செந்தூரன் உயிர் அர்ப்பணிப்பு

கல்வியிலும், பழக்க வழக்கங்களிலும் ஆசிரியர்களே போற்றும் நல்ல மாணவனாக திகழ்ந்த ராஜேஸ்வரன் செந்தூரன் அவர்களின் அகால மரணச் செய்தி எம்மை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அமைதியான குணாதிசயமுடைய செந்தூரன் அவர்கள், திடீரென ஒரு அரசியல் கோரிக்கையை முன்வைத்து தற்கொலை செய்திருப்பதை எண்ணிப்பார்க்கும்போது, பெருமையாக தமிழ் மக்கள் கருதுவார்கள்.

ஆனால் ஒரு கோரிக்கைக்காக உயிரை பலியிடும் முடிவானது அவரது பெற்றோருக்கும், கல்விச் சமூகத்திற்கும், நண்பர்களுக்கும், மக்களை நேசிக்கும் எமக்கும் பேரிழப்பையே ஏற்படுத்தியுள்ளது.


செந்தூரனுக்காக கவலை கொள்ளும் அதேவேளை அதை ஒரு முன்னுதாரணமாக எதிர்காலத்தில் எவரும் பின்பற்றி, எமது இனம் இழந்த இழப்புக்களை தொடர்கதையாக்கிவிடக் கூடாது. தமிழர்களாகிய நாம் இழந்த உயிர்கள் போதும். இனியும் நாம் உயிர்களை இழக்கத் தயாரில்லை. எமது உரிமையையும், விடுதலையையும், நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் வென்றெடுக்க உறுதியெடுத்து செந்தூரனுக்கு இறுதி மரியாதை செய்வோம்.