Monday, February 08, 2016

14 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிக்கிய சிறுத்தை

பெங்களூருவில் பள்ளி ஒன்றில் புகுந்த சிறுத்தையை 14 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர், வனத்துறையினர் பிடித்தனர்.


பெங்களூருவில் ஒயிட் ஃபீல்டு Whitefield அருகே காடுகுடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், சிறுத்தை ஒன்று புகுந்ததைக் கண்ட காவலாளி, இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார்.  இதையடுத்து பள்ளியின் சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டதில், அதில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து, சிறுத்தை புகுந்தது பற்றி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்துவந்த வனத்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பள்ளி வளாகத்திலிருந்து, ஓடிய சிறுத்தை சுவர் மீது எகிறிகுதித்து, அருகிலிருந்த புதருக்குள் சென்று ஒளிந்துகொண்டது. சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். பள்ளியிலிருந்து தப்பிச்சென்றபோது, சிறுத்தை தாக்கியதில் 9 பேர் காயமடைந்தனர். பீதியின் காரணமாக அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இரவு நேரம் ஆகியதால், சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம்காட்டினர். இறுதியில், 14 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தி, சிறுத்தையைப் பிடித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்

இருவிதமான விலையில் இணைய சேவை: டிராய் மறுப்பு - பேஸ்புக்கிற்கு பின்னடைவு..

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், புதிய கட்டணங்களை அறிவிக்கும் முன் டிராயிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு வழிகாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் சேவைக்கு நிர்ணயம் செய்யும் கட்டணங்கள் குறித்து தொலைத்தொடர்பு வழிகாட்டு ஆணையமான டிராய் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி, பயன்படுத்தப்படும் இணையதளங்களுக்கு தகுந்தாற் போல், மாறுபட்ட கட்டணங்களை வசூலிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

FREE BASICS என்ற அடிப்படையில், சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் FACEBOOK  இணையதளத்தை இலவசமாக பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்தது. இது போன்ற பாரபட்சம் இருக்க கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறையை டிராய் அறிவித்துள்ளது.