புத்தாண்டு அறிவிப்பு
போற்றும் வரலாறு
இவ்வாண்டு ஆளுநர் உரை, சில இனிப்பான அறிவிப்புகளைத் தந்துள்ளது. தை முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு, ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோரான அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, அரவாணிகளுக்குத் தனி நல வாரியம், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் என்று பல்வேறு வகையிலும், பல்வேறு துறையினருக்கும் உவப்பளிக்கக் கூடிய செய்திகளை அரசு அறிவித்துள்ளது.
1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலையடிகளாரின் தலைமையில் கூடிய குழு எடுத்த முடிவுப்படிதான் திருவள்ளுவர் ஆண்டு இன்றும் கணக்கிடப்படுகிறது. இயேசு நாதர் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பிறந்தவர் வள்ளுவர் என்பது அக்குழுவின் முடிவு. அதனால்தான் இப்போது நடப்பது திருவள்ளுவர் ஆண்டு 2039 என்று நாம் கூறுகிறோம். அதே குழுதான் தை மாதம் முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தது.
மேலே கூறப்பெற்றுள்ள இரண்டு முடிவுகளையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது, கலைஞர் தலைமையிலான அரசுதான். திருவள்ளுவர் ஆண்டை அரசு ஏற்றுக் கொள்வதாக 1971ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போதும் கலைஞர்தான் முதல்வர். தை முதல் நாளைத் தமிழர் புத்தாண்டு என அறிவிக்கும் சட்டமுன்வடிவம் நடப்பு சட்டமன்றத்தில் வந்துள்ளது. இப்போதும் கலைஞர்தான் முதல்வர்.
புத்தாண்டு அறிவிப்பென்பது, பண்பாட்டு உலகில் ஒரு புதிய மைல்கல் என்றுதான் கூறவேண்டும். சித்திரைதான் புத்தாண்டு என்று ஆண்டுகள் பலவாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு சமுகத்தில், இப்புதிய அறிவிப்பு ஒரு புரட்சிக் குரலாகத்தான் வெளிவந்துள்ளது.
இப்போதெல்லாம் தமிழர்கள் உட்பட, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள், சனவரி முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். சித்திரை முதல் நாளன்றும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளத் தயங்குவதில்லை. ஓராண்டில் இரண்டு புத்தாண்டா என்று கேட்டால், அது ஆங்கிலப்புத்தாண்டு, இது தமிழ்ப் புத்தாண்டு என்று கூறுகின்றனர். வேடிக்கை என்னவென்றால், அது ஆங்கிலப் புத்தாண்டுமில்லை, இது தமிழ்ப் புத்தாண்டுமில்லை. இயேசு நாதர் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி பிறந்தார். அதுதான் கிறிஸ்மஸ். அவர் பிறந்த 8ஆம் நாள் அவருக்குப் பெயர் சூட்டினார்கள். அதுதான் சனவரி 1. எனவே அந்நாள் ஒரு மதத்தோடு தொடர்புடையதே தவிர, புத்தாண்டோடு எந்தத் தொடர்பும் உடையது அன்று. எனினும் தாங்கள் உலகம் முழுவதும் பெற்றிருந்த ஆட்சி அதிகாரத்தால் அதனைப் புத்தாண்டாக அவர்கள் ஆக்கிவிட்டனர். அறிந்தோ அறியாமலோ, இந்துக் கோயில்களிலும் இப்போது அந்த நாளில் அர்ச்சனைகள் நடக்கின்றன.
தமிழ்ப்புத்தாண்டு என்று கருதப்பட்ட சித்திரை முதல் நாளின் கதையோ, இன்னும் வேடிக்கையானது. ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த 60 குழந்தைகள்தான் அந்தத் தமிழ் வருடங்கள் என்று ஒரு புராணக்கதை சொல்லும். அதை நம்பித்தான் நாம் அதனைப் புத்தாண்டாய்க் கொண்டாடுகிறோம். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படும் அவற்றுள் ஒன்றுகூட தமிழ்ப்பெயர் தாங்கி நிற்கவில்லை. அனைத்தும் வடமொழிப் பெயர்கள். ஆனால் இப்போது அந்த ஆண்டுகளுக்கான புதிய புதிய அறிவியல் காரணங்களைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். கதிரவனைச் சுற்றி வர வியாழனுக்கு 12 ஆண்டுகளும், சனிக்கு 30 ஆண்டுகளும் ஆகின்றன. இவ்விரு கோள்களும் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஓர் இடத்தில் சந்திக்கின்றன. அதைக்குறிக்கும் வகையிலேயே 60 சுழற்சி ஆண்டுகள் தமிழ் ஆண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளன என்று இப்போது கூறுகின்றனர். இரு கோள்கள் ஒரு கோட்டில் சந்திப்பதற்கும், நம்முடைய புத்தாண்டு தொடங்குவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சிந்துவெளி நாகரிகம் தொட்டு, மண்ணை வணங்குவதே தமிழர்களின் மரபாக இருக்கிறது. நெருப்பை வணங்குவதும், விண் எனப்படும் வெளி அல்லது சூனியத்தைக் கண்டு தம் வாழ்நெறிகளை அமைத்துக் கொள்வதும் நம் மரபன்று. இடையில் வந்தது. விளைத்துக் கொடுக்கும் மண்ணுக்கும், உழைத்து கொடுக்கும் மக்களுக்கும் நன்றி செலுத்தும் நாளே நாம் கொண்டாடும் பொங்கல் திருநாள். அறுவடையாகி நெல் வீட்டிற்கு வரும் நாளே, நம் புதுக்கணக்குத் தொடங்கும் நாள். அதனை அடிப்படையாகக் கொண்டு, தை முதல் நாளை புத்தாண்டு என்று வழங்குவதே பொருத்தமாகும்.
தமிழினத்தின் தொன்மை, பண்பாடு ஆகியனவற்றின் தனித்துவம் வெளிப்பட்டுவிடக் கூடாது என்று கருதும் பார்ப்பன ஏடுகள் சில, இப்புத்தாண்டு அறிவிப்பிற்கு எதிராக கருத்தை உருவாக்குவதில் முனைப்போடு இயங்குகின்றன. இவ்வறிவிப்பு நடைமுறைக்கு ஒத்துவராது என்பதுபோல ஒரு கருத்தை, தமிழ்ப்பேராசிரியர்களிடமிருந்தே கொண்டுவர ஒரு ஏடு முயல்கிறது. அவர்களும் துணை போகிறார்கள். ஏன் ஒத்துவராது என்பதற்கு எந்த அறிவியல்பூர்வமான காரணமும் சொல்லப்படவில்லை. முன்பெல்லாம் ஓர் ஆங்கில ஆண்டில் பத்து மாதங்களே இருந்தன. ஜுல¤யஸி சீசர், அகஸ்டஸ் சீசர் ஆகியோரின் புகழ் நிலைப்பதற்காக ஜுலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்கள் பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அதனால் அது நடைமுறைக்கு ஒத்துவராமலா போய்விட்டது? எந்த ஒன்றும் தொடக்கத்தில் சற்றுக் கடினமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும். இதுதான் நடைமுறை உண்மை. அரசின் முறையான அறிவிப்பு வந்ததற்குப் பின்னரும், சில ஆண்டுகளுக்கு சித்திரை மாதத்தையும் புத்தாண்டாய்க் கொண்டாடும் பழக்கம் இருக்கவே செய்யும். ஆனால் அடுத்தத் தலைமுறைக்கு அப்படி ஒன்று இருந்ததே தெரியாமல் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது. காலம் எல்லாவற்றையும் உள்வாங்கிச் செரிக்கும். லை, னை போன்ற எழுத்துகளை முன்பு இப்படியா எழுதினோம்? கொம்பு போட்டு எழுதிய காலம் இன்று இல்லாமல் போய், இப்புதிய எழுத்து வடிவங்கள் இன்று நடைமுறைக்கு ஒத்துவரவில்லையா என்ன?
எனவே காலத்திற்கும், தமிழ்ப்பண்பாட்டிற்கும் ஏற்ற நல்லதொரு அறிவிப்பை தமிழக அரசு செய்திருக்கிறது. இதனை வருங்காலம் ஏற்கும், வரலாறு போற்றும்.
இந்நிலையில் இன்னுமொரு கூடுதல் வேண்டுகோளையும், தமிழறிஞர் தலைவர் கலைஞரின் முன்னால் தமிழ்ச் சமுகம் வைக்க விரும்புகிறது. பொருளாதாரமே இவ்வுலகில் பலவற்றைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது என்பது வெளிப்படை. பொங்கல் திருநாளைப் புத்தாண்டு என்று ஏற்றுக்கொண்ட பின்னும், அதைக் கொண்டாடக் கையில் காசு இருக்க வேண்டுமல்லவா. தீபாவளி நேரத்தில் எல்லோர் கைகளிலும் பணம் புழங்குகிறது. அதற்கான அடிப்படைக் காரணம், ஊக்க ஊதியம் (போனஸ்) அந்த நேரத்தில் வழங்கப்படுவதுதான். கேரளாவில் இன்று ஓணம் திருநாளை ஒட்டியே ஊக்க ஊதியம் வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். அவ்வாறே தமிழகத்திலும் புத்தாண்டுக்கு, அதாவது தை முதல் நாளையொட்டி ஊக்க ஊதியம் வழங்குவதுதானே சரியாக இருக்கும்!
புத்தாண்டைச் சரியாக அறிவித்த கலைஞர், அடுத்த ஆண்டிற்குள் இந்த அறிவிப்பையும் வெளியிட்டு தமிழ்ப்பண்பாடு தலைதூக்க உதவ வேண்டும்.
- இளைய சுப்பு.
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.
தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,
சென்னை - 600 024. பேசி - 044-24732713.