Monday, December 31, 2007

பிரதமர் இலங்கை செல்ல எதிர்ப்பு

பிரதமர் இலங்கை செல்ல திருமாவளவன் எதிர்ப்பு

இலங்கையில் சிங்கள ராணுவம் நடத்துகின்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்ளக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈழத் தமிழர்களைக் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வரும் சிங்கள ராணுவத்துக்கு இந்திய அரசு உதவி செய்து வருவதுடன் அந்த ராணுவம் நடத்துகின்ற விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்வதாகச் செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு அவர் அந்த விழாவில் கலந்துகொண்டால் இத்தனைக் காலமும் சிங்கள ராணுவம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தது சரிதான் என்று நியாயப்படுத்துவதாகவும் மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் அமையும். அத்துடன் தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு பொருட்படுத்தாமல் கொச்சைப்படுத்துவதாகவும் அமையும். எனவே பிரதமர் அந்த விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 31-ம் தேதி திராவிடர்க்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் கலந்து கொள்கிறோம். இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி மத்திய அரசை வற்புறுத்தி பிரதமர் இலங்கை செல்வதைத் தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று திருமாவளவன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.