Monday, November 30, 2015

அசோக் சிங்கால் காலமானார்

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் மறைந்த அசோக் சிங்கால் உடலுக்கு பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் 89 வயதான அசோக் சிங்காலுக்கு கடந்த 14-ந் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 2.24 மணிக்கு அசோக் சிங்கால் உயிர் பிரிந்தது. 
பின்னர் அசோக் சிங்கால் உடல் டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அசோக் சிங்காலின் உடலுக்கு இன்று பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்யவர்தன் ரத்தோர் மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத் காட் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி - பிரகாஷ் ஜவடேகர் உறுதி

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விரைவில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றானது ஜல்லிக்கட்டு, தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் பொங்கல் மற்றும் கோயில் திருவிழாக்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இந்த போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

இதனிடையே கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தடையை அகற்ற வேண்டும் என தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நவம்பர் 6ஆம் தேதி அன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு இந்திய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். ஜல்லிக்கட்டை அனுமதிக்க விரைவில் சட்டதிருத்தம் கொண்டு வரப்படும். மேலும் மாட்டுவண்டி பந்தயத்தையும் மீண்டும் நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்ட ரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும். பாரம்பரியமான விளையாட்டுகளை தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுவதும் அதையடுத்து உச்ச நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குவதும் வழக்கமாக இருக்கிறது. எனவே இந்தாண்டு போட்டிகள் நடத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்பது ஜல்லிக்கட்டு நடத்தும் போட்டியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

சாதியை அடையாளப்படுத்தும் மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் தங்கள் சாதியை அடையாளப்படுத்திக்கொள்ளும் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அவரவர் சாதியை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக, கைகளில் வண்ண கயிறுகளை கட்டுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, செய்திகளும் ஓரிரு வாரங்களுக்கு முன்பு வெளியாயின.  மாணவர்கள் மத்தியில் சாதீய உணர்வு மேலோங்கி வருவதால், பள்ளிகளில் மோதல் சம்பவங்கள் உருவாகும் நிலை உருவாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, இந்த பிரச்சினையை, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தமிழ்நாடு சமூக நீதித்துறை மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. 

விஜயகாந்த் - கோவன் சந்திப்பு

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவன் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் 28.11.2015 அன்று சந்தித்தார். 

அப்பொழுது அவர் பாடிய பாடல்கள் கொண்ட குறுந்தகடுகள் மற்றும் புத்தகங்களை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது தேமுதிக இளைஞர் அணி செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ், மக்கள் அதிகார மையம்த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.வழக்கறிஞர் ராஜூ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வெற்றிவேல் செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தப்பிய இளம் குற்றவாளிகள்

பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 12 பேர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கீழரண் சாலை பாபு ரோட்டில் சமூக பாதுகாப்புத்துறையின் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு, குற்றவழக்கில் கைது செய்யப்படும் 21 வயதிற்கு உட்பட்டவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இதன்படி, 31 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில், மரியவசந்துரு, தர்மா, முருகன், கதிரவன், ஹரிகரசுதன், திவாகர், முத்துமணி, மணிகண்டன், நாகராஜ், ஆகாஷ், தினேஷ், சதீஸ்குமார்  ஆகிய  12 பேர், குளியலறையின் சன்னல் கம்பிகளை அறுத்து, அகற்றி,  போர்வைகளை கயிறு போல் கட்டி, அதன் வழியாக இறங்கி  நவம்பர் 28 அதிகாலை 3 மணியளவில் தப்பி ஓடியுள்ளனர்.

தப்பியோடியவர்கள், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள்.

இது குறித்து கூர் நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் மன்னர் கொடுத்த புகாரின் பேரில், மாநகர துணை ஆணையர் சசிமோகன், உதவி ஆணையர் ரமேஷ்பாபு மற்றும் கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு குறைபாடுகளா? அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயல்களை செய்ய திட்டமிட்ட தப்ப வைக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் முதல் முறையாக ஒரே நேரத்தில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 பேர் தப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாவீரர் நாள் - டென்மார்க்

டென்மார்கில்  நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு தாயக விடுதலைக்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு டென்மார்க்  நட்டில் இரண்டு இடங்களில் எழுச்சியாக நடைபெற்றது Herning  மற்றும் Holbæk ல் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றறது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றலுடன்  தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழீழ மண்ணுக்காகவும் தமிழரின் விடிவுக்காகவும் வித்தாகிப் போன மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்தனர்.