அரியலூர் மாவட்டம் குருவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், நெல் அறுவடைப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், 40 கிலோ நெல் ஒரு மூட்டையாக கணக்கிடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.
நாளொன்றுக்கு 700 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், கடந்த 20 நாட்களாக சாலையோரத்திலேயே நெல்லைக் கொட்டி விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். பாதுகாப்பு இல்லாத நிலையில், இரவு பகலாக நெல்லை பாதுகாத்து வருவதாகக் கூறும் விவசாயிகள், நெல் கொள்முதல் பணம் கிடைத்தால்தான் கடனைத் திருப்பித் தரமுடியும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நெல் மணிகள் அதிக நாட்கள் வெயிலில் காய்ந்தால் எடை குறையும் என்பதால், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நாளொன்றுக்கு அதிக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அரசு நிர்ணயித்த விலையில் பிடித்தம் செய்யாமல் நெல்லுக்கு பணம் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜிடம் கேட்ட போது, விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.