Monday, December 07, 2015

சவுதியில் கை வெட்டப்பட்ட கஸ்தூரி சென்னை திரும்பினார்

சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்குச் சென்று, உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட வேலூரைச் சேர்ந்த கஸ்தூரி தாயகம் திரும்பினார். வேலூர் மாவட்டம் மூங்கிலேறி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் சவுதியில் வீட்டு வேலைக்கு சென்றிருந்தார். ரியாத் நகரில் பணிபுரிந்த அவர், அங்கு வீட்டு உரிமையாளரின் சித்ரவதைக்கு உள்ளானதுடன், அவரது வலது கையும் துண்டிக்கப்பட்டது. 

மேலும், இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டது. இந்நிலையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டின் பேரில், விமானம் மூலம் தாயகம் திரும்பினார். அவரை, சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். தமிழக அரசு அதிகாரிகள் விமான நிலையத்திற்குச் சென்று கஸ்தூரியை வரவேற்று, தேவையான உயர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

கஸ்தூரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிதி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து பெறப்படும் மாத வட்டியான 8,330 ரூபாய் கஸ்தூரிக்கு மாதந்தோறும் அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல் திருநங்கை எஸ்ஐ பிரித்திகா யாஷினி

தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா. மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம். 

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார். 

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு நவம்பர் 5-ம் தேதிவிசாரணைக்கு வந்தது. 

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார். எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம்

ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அந்த பதவியை பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் வகிப்பார் என்று கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) தலைவராக என்.சீனிவாசன் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்டார். அவரின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங், பெட்டிங்கில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய(பிசிசிஐ) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை உச்ச நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அதன் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியும் பறிபோயுள்ளது. 
அவரை அந்த பதவியில் இருந்து நீக்கும் முடிவு இன்று மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதையடுத்து சீனிவாசனை ஐசிசி தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்தது. வரும் ஜூன் மாதம் வரை ஐசிசி தலைவர் பதவியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சஷாங்க் மனோகர் நீடிப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடத்தும் இடங்களை தேர்வு செய்வதில் சீனிவாசனுக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய மூத்த தலைவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இந்த முடிவு என்று தெரிகிறது.