Saturday, July 18, 2015

ஒரு லட்சம் கோடி நஷ்டத்திற்கு அமைச்சரின் பதில் என்ன?

மின் வாரியத்தில் ஒரு லட்சம் கோடி நஷ்டத்திற்கு அமைச்சரின் பதில் என்ன?
திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி





தமிழகம் ஒளிருகிறது என்று அ.தி.மு.க. நினைக்கலாம். ஆனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்பது தான் உண்மை. அனலடிக்கும் கோடையில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். சமீபத்தில் மின் நிலைமை பற்றி அடுத்தடுத்து மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். முதல் அறிக்கையிலும் சரி, தற்போது தலைவர் கலைஞருக்கு பதில் அளிக்கிறேன் என்று அநாகரீகமாக வெளியிட்டுள்ள இரண்டாவது அறிக்கையிலும் “2011ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி, அ.தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட புதிய மின்திட்டங்கள் பற்றியோ, அதன் மூலம் எத்தனை மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பது பற்றியோ ஏதும் குறிப்பிடவும் இல்லை. அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதையும் அமைச்சர் மறுக்கவில்லை. கழக அரசு துவங்கிய உடன்குடி மின்திட்டத்திலும் அ.தி.மு.க. அரசு ஏகப்பட்ட டெண்டர் குளறுபடிகளைச் செய்துள்ளதையும் மறுக்கவில்லை. அந்தத் திட்ட விவகாரம் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை ஏனோ அமைச்சர் தன் அறிக்கையில் மூடி மறைத்துள்ளார். அதே நேரத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் ஏன் புதிய மின் திட்டங்கள் துவங்கப்படவில்லை என்றோ, கழக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட மின்திட்டங்கள் ஏன் விரைந்து முடிக்கப்படவில்லை என்பது பற்றியே அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எந்த விளக்கமும் கூறவில்லை

. தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் மின் மீட்டர்களை ஏன் வாங்கியது அ.தி.மு.க. அரசு என்பதற்கும் விளக்கம் ஏதுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக என்ன விலை கொடுத்து, எவ்வளவு புதிய மின் மீட்டர்கள் வாங்கப்பட்டன என்பதைக் குறிப்பிடாமல், எத்தனை எலெக்ட்ரோ மெக்கானிக் மீட்டர்கள் இதுவரை மாற்றப்பட்டுள்ளன என்பதை மட்டுமே மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே தி.மு.க தலைவர் வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு அறிக்கை என்ற போர்வையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதன் ஒப்புதல் வாக்குமூலம் தான் அமைச்சரின் இரு அறிக்கைகள்! சூரிய ஒளி மின்சாரம் ஒரு யூனிட் 3.50 ரூபாய்க்கும், மின்சாரம் ஒரு யூனிட் 4 ரூபாய்க்கும் கிடைக்கும் போது அதானி குழுமத்திடமிருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை 7.01 ரூபாய் கொடுத்து வாங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏன் திட்டமிடுகிறது என்ற கேள்விக்கும் அமைச்சரிடமிருந்து
பதில் இல்லை. “ஏன் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்தீர்கள்” என்று தலைவர் கலைஞர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் “வெற்று அறிக்கை”களை விட்டு மின்துறை அமைச்சர் தன் பொறுப்பினை தட்டிக் கழிக்க முடியாது என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். "கரெப்ஷன்" "கமிஷன்" கலாச்சாரத்திற்கு விடை கொடுத்து விட்டு அமைச்சர் பணியாற்றியிருந்தாலே, இந்த மின்திட்டங்கள் எல்லாம் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பதே மின்துறை அமைச்சர் ஏனோ இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறாரா அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போல் நடிக்கிறாரா என்று தான் கேள்வி எழுப்ப வேண்டியதிருக்கிறது. ஆகவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில் எழுப்பப்பட்டுள்ள முறைகேடு புகார்களுக்கும், ஏன் அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது அ.தி.மு.க. அரசு என்பதற்கும் அமைச்சர் பொறுப்பேற்றுத்தான் ஆக வேண்டும். மோசமான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளால் கடந்த நான்கு வருடங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது அ.தி.மு.க. அரசு. இந்நிலையில் நான் மின் துறை அமைச்சரைப் பார்த்து மூன்றே மூன்று கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

1) புதிய மின்திட்டங்கள் மற்றும் ஏற்கனவே கழக ஆட்சியில் துவங்கப்பட்ட மின் திட்டங்களை விரைந்து முடிப்பது பற்றி எத்தனை முறை மின்வாரியப் பொறியாளர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் என்ற முறையில் ஆலோசனை நடத்தியிருக்கிறீர்கள்? அல்லது அதிகாரிகளுடன் ஆய்வு செய்திருக்கிறீர்கள்?
2) தன் பதவிக்காலத்தில் இதுவரை எத்தனை முறை அதிமுக அரசின் புதிய மின்திட்டங்கள் நடைபெறுவதாக சொல்லப்படும் இடத்திற்கோ, அல்லது ஏற்கனவே கழக ஆட்சியில் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் மின்திட்டங்கள் உள்ள இடத்திற்கோ அமைச்சர் என்ற முறையில் சென்று ஆய்வு நடத்தியிருக்கிறீர்கள்?
3) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் மூழ்க விட்டது ஏன்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் அமைச்சர் பதில் சொல்கிறாரோ இல்லையோ அ.தி.மு.க. ஆட்சியின் கையாலாகாத தனத்தாலும், நிர்வாக திறமையின்மையாலும் தமிழகம் மின் பற்றாக்குறையிலும், மின்வெட்டிலும் சிக்கித் தவிக்கிறது என்பது தான் உண்மை. ஆகவே தமிழக மக்கள் காதுகளில் "பூ சுற்று" முயற்சிக்காமல், கழக அரசில் துவங்கப்பட்ட மின் திட்டங்களை விரைவுபடுத்தி, ஏற்கனவே முடிக்கப்பட்ட மின் திட்டங்களில் இருந்து மின்சார உற்பத்தியைத் தொடங்கி தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை மற்றும் மின்
வெட்டை உடனே நீக்குவதற்கு மின் துறை அமைச்சர் பணியாற்ற வேண்டும், அதனை "மக்களுக்காகவே நான்" என்று கூறும் முதலமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments: