Saturday, July 12, 2008

இலங்கை மீண்டும் வெறி - துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் பலி!

இலங்கை மீண்டும் வெறி - துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் பலி!


இலங்கை கடற்படையின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.தமிழக மீனவர்களை குருவி சுடுவதை போல கொன்று குவிக்கும் அக்கிரமச் செயலில் இலங்கை கடற்படை பல வருடங்களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களை அவ்வப்போது மாநில அரசுகள் கண்டிப்பதும், மத்திய அரசு வாய் மூடி மெளனமாக இருப்பதும், இலங்கை கடற்படை தனது வெறிச்செயலை தொடருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.சமீபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பெரும் அதிர்ச்சி அளித்தது இலங்கை கடற்படை. பின்னர் அவர்களில் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையின் இந்த வெறிச்செயலைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இன்று இரண்டு நாகை மாவட்ட மீனவர்களை கொன்று குவித்துள்ளது இலங்கை கடற்படை.நாகை மாவட்டம் ஆற்காடு துறை பகுதியைச் ேசர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படை வந்தது.வந்த வேகத்தில் கண் மூடித்தனமாக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுத் தள்ளினர். இதில் வாசகன், நாராயணசாமி ஆகிய இரு மீனவர்களும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.முரளி என்கிற இன்னொரு மீனவர் குண்டுக் காயம் பட்டு உயிருக்குப் போராடினார். பின்னர் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் உறவினர்களைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தார்.இதையடுத்து 3 படகுகளில் முரளியின் உறவினர்கள் விரைந்து வந்தனர். பலியான இரு மீனவர்களின் உடல்கள் மற்றும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முரளியை மீட்டு கரைக்கு திரும்பினர்.முரளி உடனடியாக நாகப்பட்டனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இலங்கை கடற்படையின் இந்த வெறிச்செயலால் நாகை மாவட்ட மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் பொங்கு தமிழ் எழுச்சிக்கு தேசியத் தலைவர் வாழ்த்து



புலம்பெயர் தமிழர்களின் பொங்கு தமிழ் எழுச்சிக்கு தேசியத் தலைவர் வாழ்த்து


புலம்பெயர் தமிழ் மக்கள், தாயக விடுதலையை பலப்படுத்துவதற்காக பெரும் எழுச்சிகொண்டு நிகழ்த்தி வருகின்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.




புலம்பெயர் தமிழ் மக்களின் பொங்கு தமிழ் எழுச்சி குறித்து கருத்து தெரிவிக்கும் போது தேசியத் தலைவரின் வாழ்த்துக்களை குறிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:



தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகின்ற அதேவேளை பெரும் பொய்களை உலகளவில் பரப்புரை செய்து வருகின்றது.



தமிழ் மக்களை கொன்றொழித்துக்கொண்டு உலகையும் ஏமாற்றி வருகின்ற சிறிலங்கா அரசு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக உலகளவில் சித்தரித்து வருகின்றது.



சிறிலங்காவின் இந்தப் பொய்ப் பரப்புரையை தகர்த்து எறிந்து உலகம் முழுமைக்கும் தமிழ்மக்கள் பொங்கு தமிழாக தமது அரசியல் அபிலாசைகளை பேரெழுச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.



இது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்ற அதேவேளை களத்தில் போராடும் போராளிகளுக்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



உலக நாடுகளுக்கு அவர்களின் விருப்ப மொழியில் தமிழ் மக்கள் தாயக விடுதலையின் நியாயத்தையும் தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகளுக்கு தமிழ் மக்கள் உரித்துடையவர்கள் என்பதையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
உரிமைக்கானதுதான் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதை அவர்கள் வலுவாக எடுத்துரைக்கின்றனர். அதிலும் கனடாவில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு லட்சம் தமிழ்மக்கள் திரண்டு எழுந்திருப்பதும் நியூசிலாந்து- அவுஸ்திரேலியா- இத்தாலி-ஜேர்மனி- பிரான்ஸ்- நெதர்லாந்து- பெல்ஜியம்- நோர்வே- சுவீடன்- டென்மார்க்- அவுஸ்திரேலியா- தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதுவரை பொங்கு தமிழாக எங்களின் புலம்பெயர் உறவுகள் தாயகத்தின் போராட்டத்தை வலுப்படுத்துவதில் பேரெழுச்சியை காட்டியுள்ளனர்.



அடுத்து லண்டனில் பொங்கு தமிழ் நடைபெறவுள்ளது. தாயக தாகத்துடன் புலம்பெயர்ந்த தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இந்த எழுச்சிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதேவேளை பெருமிதமும் கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்ட பா.நடேசன், விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் இத்தகைய செயற்பாடுகள் தொடரவேண்டும் என்றார் அவர்.