| கனடாவில் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டம்- பரபரப்பை ஏற்படுத்திய வானூர்தி பதாகை |
கனடாவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நான்கு நாடுகள் பங்குபற்றும் 20 ஓவர்கள் அடங்கிய துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. |
நேற்றய நாள் மிகவும் சிறப்பான முறையில் தமிழ் மகளிர் அமைப்பினராலும் மாணவர் அமைப்பினராலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. City இல் Dufferin & Blumington சந்திப்பிற்கு அருகில் உள்ள திடலிலேயே இந்த துடுப்பாட்டப் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை முதல் நடைபெறும் இந்தப் போட்டியின் போது கனடா வாழ் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றினர். துடுப்பாட்ட வீரரும் சிறிலங்கா படையின் பீரங்கி படையைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசுக்கு எதிரான முழக்கங்களை கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் குறிப்பாக கனடிய தமிழ் இளைஞர்களும், யுவதிகளும், உணர்வாளர்களும் எழுப்பினர். வீதியால் சென்று கொண்டிருந்த கனடிய மக்களுக்கு ஆங்கில மொழியிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.
தமிழ் மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு கனடிய காவல்துறையினர் தமது ஒத்தாசையை வழங்கியிருந்ததோடு முதலுதவி காப்புப் பணியினரையும் அழைத்திருந்தனர். காவல்துறையினருக்கு ஒத்தாசை புரியும் வகையில் நிகழ்வின் ஏற்ப்பாட்டாளர்கள் மக்களை கட்டுப்படுத்தி வீதியின் ஒருபுறமாக மக்களை வழிநடத்தி ஒழுங்கமைப்பினை செய்திருந்தனர் தமிழர்களை சிறிலங்கா அரசு கொல்வதை நிறுத்தவேண்டும் என்ற அங்கில மொழிப்பதாதை தாங்கியவாறு வானூர்தி ஒன்று ஒன்றரை மணிநேரத்தக்கு மேலாக மைதானத்தைச் சுற்றி பறப்பில் ஈடுபட்டு துடுப்பாட்டத்தினை பார்வையிட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனை அவதானித்த காவல்துறையினர் அவர்களில் இருவரை கைது செய்து கொண்டு சென்றனர்.
|
Tuesday, October 14, 2008
கனடாவில் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டம்
Saturday, October 11, 2008
லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு
| உக்கிரமான மோதல் நடைபெறும் பகுதியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு |
சிறிலங்கா படையினரின் உக்கிரமான தாக்குதல்கள் நடைபெற்று வரும் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைமடுச் சந்தியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. |
கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம்அண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது. பாரதிபுரம் வட்டப் பொறுப்பாளர் திருமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி பேசியதாவது: மாலதியின் திருவுருவச்சிலை 2004 ஆம் ஆண்டு இதே நாளில் மகளிர் படையணிகளின் அணிவகுப்புடன் பேரெழுச்சியான நிகழ்வுடன் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மண்ணை கைப்பற்றி விடுவோம் என்று சிங்களப் பேரினவாதிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்வை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றோம். தமிழீழ பெண்களுக்கு நம்பிக்கை என்ற பெரும் ஆயுதத்தை மாலதி விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்தியப் படைகளுடன் மோதல்கள் தொடங்கிய போது எம்மிடம் கனரக போர்க்கலங்கள் இல்லை. இருந்தவையெல்லாம் நம்பிக்கை மட்டுமே. போராளிகளிடம் இருந்த நம்பிக்கையும், மன உறுதியும், ஓர்மமும் அர்ப்பணிப்புமே பெரும் வல்லரசை வெல்லக் கூடிய நிலையை உருவாக்கியது. மாலதி முதல் பெண் மாவீரராக வித்தாகியுள்ளமையால் மாலதியின் வழியில் தமிழீழப் பெண்கள் அணிவகுத்துள்ளனர் என்றார் தமிழினி.
முன்னதாக பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை ராதா வான்காப்புப் படையணியின் அரசியல் பொறுப்பாளர் விழியன் ஏற்றினார். 2 ஆம் லெப். மாலதியின் திருவுருவச்சிலைக்கான ஈகைச்சுடரினை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான நாவேந்தன் ஏற்றி மலர்மாலை சூட்டினார். புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான கானகன் கிளிநொச்சிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் மாவீரர் பணிமனை நிர்வாகப் பொறுப்பாளர் இனியவன் மாவீவரர்; பணிமனை மகளிர் பொறுப்பாளர் ஆவர்த்தனா உதயநகர் வட்டப் பொறுப்பாளர் ஜூட் தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி ஆகியோர் மலர்மாலைகளை சூட்டினர்.
|
Friday, September 26, 2008
தியாகி திலீபன் நினைவு தினம்
திலீபன் வெள்ளையனே வெளியேறு என்பது போல இந்தியனே வெளியேறு என ஒரு போதும் கேட்டதில்லை. எதற்காக ஈழத்திற்கு வந்தீர்களோ ? என்ன உறுதிமொழிகளை தந்தீர்களோ அவற்றை அமுல்ப் படுத்துங்கள் என்று மட்டுமே கேட்டான். பசி மறந்து கிடந்த பிள்ளையின் போருக்கு பாரதம் சாவினைப் பரிசளித்துப் பல்லிளித்தது.
திலிபன் நினைவுகள்
தியாகி திலீபன்
உலக வரலாற்றிலே ஓர் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் மட்டுமல்ல... தமிழீழ மக்கள் புரட்சியின் திறவுகோல். ஈழ விடுதலைப் போராட்டத்தின் அகிம்சைத் தீ. அணையா விளக்கு, அகிம்சையால் எழுந்த பாரதமெனும் நாட்டுக்கு, அகிம்சையின் அர்த்தம் கற்பித்த புலிவீரன்.இந்திய-சிறீலங்கா ஒப்பந்தமெனும் சூழ்ச்சிப் பொறியோடு, தமிழீழ மக்களின் துன்பங்களையும், வேதனைகளையும் வெட்டி வீழ்த்தி விடுவோமென்று கூறிக்கொண்டு பாரதப் படைகள் எம் மண்ணில் காலூன்றியபோது தமிழீழ மக்களின் மகிழ்ச்சி உச்சிமேவிப் பிரவாகித்தது.
ஆனால் இந்திய அரசின் கபடம் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியபோது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்கள் தண்ணீருமின்றி உண்ணாநோன்பிருந்த தமிழீழ விடிவிற்காய் உயிர்த்தியாகம் செய்தான் தியாகி திலீபன்.1963.11.27 இல் ஊரேழு என்னும் கிராமத்தில் பிறந்த இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன் கல்வியில் சிறந்துவிளங்கி பல்கலைக்கழக மருத்துவபீட அனுமதியைப் பெற்றான்.
தமிழீழ மக்களின் இன்னல்கண்டு தனது கல்வியை உதறித்தள்ளி 1983 காலப் பகுதியில் லெப். கேணல் பொன்னம்மான் அவர்களின் தொடர்பு மூலமாக தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டான். ஆரம்ப காலங்களில் இயக்க அரசியல் வேலைகளில் ஈடுபட்ட திலீபன், பின்னர் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான்.
இக்காலப்பகுதியில் சிறீலங்காப் படைகளுடனான நேரடி மோதல்களிலும் தனது திறமையினை வெளிப்படுத்தி வந்தார். மக்கள் மத்தியில் மிக அன்பாகப் பழகியதுடன் அவர்களது முன்னேற்றத்துக்காக பல அமைப்புகளையும் நிறுவினான். விடுதலைப் புலிகள் அமைப்பையும் பல புதிய பரிணாமங்களிற்கு இட்டுச் செல்ல வழிவகுத்துச் செயற்பட்டார். களத்தில், சுதந்திரப் பறவைகள் உட்பட பல பத்திரிகைகளை ஆரம்பித்து செயற்படுத்தினான். விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பு, மகளிர் அமைப்பு, சுதந்திர பறவைகள் அமைப்பு, தேச பக்தர் அமைப்பு என்பவற்றுடன் தமிழீழ கிராமிய நீதி மன்றங்கள், விழிப்புக் குழுக்கள், சர்வதேச உற்பத்திக் குழுக்கள், தமிழீழ ஒலி ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, தமிழர் கலாசார அவை என இவன் ஆரம்பித்து நெறிப்படுத்திய பலவற்றைஅடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு விடுதலைக்காய் தீவிரமாய் உழைத்துவந்த லெப். கேணல் திலீபன் இந்திய-சிறீலங்கா ஒப்பந்தத்தை சிறீலங்கா அரசு மீறுவது கண்டு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலிலும், சிறைகளிலும் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும், புனர்வாழ்வு என்னும் பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ‘புனர்வாழ்வு’ என்னும் சகல வேலைகளையும் நிறுத்த வேண்டும். வடக்கு கிழக்கில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் உள்ள ஊர்காவற் படையினரின் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் என்பவற்றில் குடியிருக்கும் இராணுவ பொலீஸ் நிலையங்கள் அகற்றப்பட வேண்டும் என ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள் முன் தண்ணீருமின்றி தன் பட்டினிப்போராட்டத்தை ஆரம்பித்தான் திலீபன்.
பன்னிரு நாட்கள் தன்பாராமுகத் தன்மையினால் திலீபன் என்னும் தியாக வீரனை சாவின் வாய்க்குத் தீனியாக்கியது பாரத அரசு.
‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்று கூறி மரணித்த அந்த மாவீரனின் 21ஆம் ஆண்டு நினைவுடன் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாய் எழுந்து நின்று, தினம் தினம் தீக்குளித்து போராடி நிற்கிறது எம்மினம்.
Monday, September 22, 2008
கனடா தமிழர்களின் கவன ஈர்ப்பு நிகழ்வு
உக்கிரமடைந்து வரும் போரினால் பெரும் சரிவைச் சந்தித்துள்ள சிறிலங்காவின் உல்லாசப்பயணத்துறை மற்றும் ஏற்றுமதித்துறைகளை வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் முகமாக, கனடா ரொறன்ரோவில் உள்ள "ஹாபர் ஃபுரொன்ட் சென்டரில்" (Harbour Front Centre) இல் "சிறிலங்கா நாள்" என்னும் நிகழ்வு இந்த வார இறுதி நாட்களில் (20-21.09.08) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இங்கு இலங்கையின் உண்மை நிலையினை மறைத்து உல்லாசத்துறை மற்றும் தேயிலை போன்ற ஏற்றுமதித்துறைகளை ஊக்குவிக்கும் முகமாக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


ஆனால், அங்கு எமது தமிழர்கள் படும் அவலங்களை வெளி உலகுக்கு எடுத்துக்கூறி சிறிலங்காவின் உண்மை முகத்தை தெரிவிக்கும் வகையில் தமிழ் மகளிர் அமைப்பினராலும் கனடிய தமிழ் இளையோர்களாலும் எதிர்ப்பு நிகழ்வு ஒன்று "சிறிலங்கா நாள்" நடைபெற்ற மண்டபத்துக்கு முன்பாக நடைபெற்றது.
இதில் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளைச் சித்தரிக்கும் படங்கள் மற்றும் வாசகங்கள் என்பனவற்றை தாங்கியவாறு வீதிக்கு இரு புறங்களிலும் திரண்டிருந்த மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
அத்துடன் இது மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதும், உல்லாசப் பயணிகள் பெருமளவில் பார்வையிடும் நகரின் மத்திய பகுதி என்பதனால், இங்கு வழங்கப்பட்ட சிறிலங்காவின் முகத்திரையைக் கிழித்துக்காட்டும் ஆதாரங்களுடன் கூடிய சிறு பிரசுரங்களை வேற்றின மக்கள் படித்துவிட்டு தம்முடன் கொண்டு சென்றதையும், அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன் தமது ஆதரவினையும் கவனயீர்ப்பு நிகழ்விற்கு தெரிவித்துக் கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.


இந்நிகழ்வினை கனடிய ஊடகங்களும் பதிவு செய்தன.
நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் "சிறிலங்காவே, தமிழர்களைக் கொலை செய்யாதே" (Sri Lanka, Stop Killing Tamils) என்ற வாசகத்தினைக் கட்டியிழுத்தபடி வானூர்தி ஒன்று சுமார் இரண்டு மணித்தியாலங்களாக ரொறன்ரோ நகர் முழுவதினையும் வலம் வந்ததாகும்.
ரொறன்ரோ நகரின் பெரும்பாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்து பார்க்கக்கூடியதாகப் பறந்த இந்த வானூர்தியின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகம் அனைத்து மக்களுக்கும் ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கும்.


அதாவது, நடக்கும் உண்மைகளை வெளித்தெரிய விடாது தடுத்து தனது போலி முகத்தினை வெளிக்காட்டும் சிறிலங்காவின் உண்மை முகத்தினை தோலுரித்துக் காட்டுவதாக இச்செய்தி அமைந்திருந்தது.
இதேவேளை, அங்கு வருகை தந்திருந்த வேற்றினச் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு அந்த வானூர்தி அந்த வாசகத்துடன் சுற்றி வந்ததன் காரணம் பற்றி சுற்றுலாப் பிரயாண வழிகாட்டிகள் எடுத்துக்கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் இந்த அமைதி வழியிலான எதிர்ப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமையும் இதே இடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்
Wednesday, September 17, 2008
பெரியார் 130

பெரியார்
130 ஆவது பிறந்த நாள்
விளக்கை ஏற்றி
வெளிச்சம் தந்தவர்கள் உண்டு
நீயோ
உன்னையே எரித்து
வெளிச்சம் தந்தாய்
எங்களுக்கு நீதான்
எழுதவும் படிக்கவும்
அடித்தளமிட்டாய்
நாங்களோ இன்னும்
நன்றி சொல்லவே
கற்றுக்கொள்ளவில்லை
எங்களுக்காகவே
நீ வாழ்ந்தாய்
மன்னித்துவிடு
தந்தையே
நாங்களும்
எங்களுக்காகவே வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
- சுபவீ.
(தென்செய்தி 1/15 அக்டோபர் 2004
Thursday, September 11, 2008
அன்பளிப்பு ராடார்
| புலிகளின் வானூர்தி தாக்குதலில் காயமடைந்த இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு கொழும்பில் தொடர்ந்து சிகிச்சை |
| வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தின் மீது நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மும்முனைத் தாக்குதலில் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ந்தும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. |
சிறிலங்கா வான்படையின் ராடர் பிரிவில் பணிபுரிந்த இந்த இந்த இருவரும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்து உடனடியாகவே கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர். இருந்தபோதிலும், வவுனியா முகாமில் வெளிநாட்டவர்கள் எவரும் பணிபுரியவில்லை என சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல நேற்று முன்நாள் தெரிவித்திருந்தார். "இவ்வாறான நிலைமைகளைக் கையாள்வதற்கு எம்மிடம் போதியளவு ஆட்கள் உள்ளார்கள். வெளிநாட்டவர்கள் எமது படைகளுடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள் எனக்கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை" எனவும் அமைச்சர் நேற்று முன்நாள் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்திருந்தார். காயமடைந்த இரண்டு இந்திய தொழில்நுட்ப நிபுணர்களான ஏ.கே.தாகூர், சிந்தமாணி ராவுட் ஆகிய இருவரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து வவுனியா முகாமில் வைக்கப்பட்டுள்ள இந்திய ராடர் சாதனத்தை பராமரிப்பதற்காகவும், அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் வந்து தங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் இந்த ராடர் சாதனம் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகள் தமது முதலாவது வான் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து இதன் தரம் மேம்படுத்தப்பட்டது. இதற்கான உதவிகளையும் இந்தியாவே வழங்கியது. வவுனியா முகாமில் இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றியதை ஏற்றுக்கொள்ளும் இந்திய தூதரக அதிகாரி ஒருவர், "காயமடைந்த இருவரும் தொழில்நுட்ப நிபுணர்களாகப் பணிபுரிந்தவர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ராடர் சாதனத்தைப் பராமரிப்பதற்காக இவர்கள் காலத்துக்குக் காலம் கிரமமான முறையில் சிறிலங்காவுக்கு வந்து செல்கின்றார்கள்" எனவும் குறிப்பிட்டார். காயமடைந்த இந்த இருவரும் தீவிரமான மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வன்னி கூட்டுப் படைத் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகளில் தரை மற்றும் வான் வழியாக நேற்று முன்நாள் தொடுத்த கடுமையான தாக்குதலில் படையினர் குறைந்தபட்சம் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமிலிருந்த இந்தியா வழங்கிய ராடர் சாதனம் தாக்கியழிக்கப்பட்ட போது அதற்கான தொழில்நுட்பவியலாளர்களாகப் பணிபுரிந்த இரண்டு இந்தியர்கள் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமை தெரிந்ததே. நன்றி புதினம் |
முகமூடியை கிழித்துள்ள வவுனியா ரா அதிகாரி பாராட்டு
| சிறிலங்கா இராணுவத்தின் பிரசார முகமூடியை கிழித்துள்ள வவுனியா தாக்குதல்: பி.இராமன் |
சிறிலங்கா படையினரின் வவுனியா தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்த்தியாக திட்டமிட்டு நடத்திய தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தின் பொய்ப்பிரசார முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றது என்று இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான றோவின் முன்னாள் பிரதிச்செயலரும் அனைத்துலக விவகார ஆய்வாளருமான பி.இராமன் தெரிவித்துள்ளார். |
வவுனியா தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து அவர் எழுதியுள்ள பத்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா இராணுவத்தினர், தமது தாக்குதல்களால் புலிகளின் ஒட்டுமொத்த மன உறுதியையும் சிதைத்துவிட்டதாக பிரசாரம் செய்து வருகிறாரகள். ஆனால், வவுனியா தாக்குதலை பார்க்கப்போனால் புலிகளின் மூத்த தளபதிகளோ போராளிகளோ எள்ளளவும் தமது உறுதியில் குலைந்துவிட்டதாக கணிப்பிடமுடியாது என்று அடித்துக்கூறவேண்டியுள்ளது. புலிகளது மனஉறுதி தொடர்ந்து உச்ச நிலையிலேயே காணப்படுகிறது. அவர்களின் தளபதிகளின் நேர்த்தியான திட்டமிடலும் குறைந்த ஆள்பலத்துடனும் ஆயுத பலத்துடனும் படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் வியூகங்களும் அவர்களின் வீரத்தின் வீச்சை வெளிப்படுத்தியிருக்கின்றன. விடுதலைப் புலிகளின் மரபுரீதியான போராட்ட வலுவை முற்றாக அழித்து போராளிகளின் மனஉறுதியை சிதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அண்மையில் கூறியிருந்தது. இராணுவம் கூறியதைப்போல உண்மையிலேயே நடைபெற்றிருந்தால், புலிகளின் தளபதிகளினதும் போராளிகளதும் ஓர்மம் குறைந்திருக்கும். புலிகள் அமைப்பு பல பிரிவுகளாக உடைந்து அதன் உறுப்பினர்கள் அந்த அமைப்பிலிருந்து தப்பியோடியிருப்பர். அவ்வாறு ஏதாவது நடைபெற்றதா? அதற்குரிய எந்த அறிகுறியும் புலிகள் அமைப்பிலிருந்து தென்படவில்லை. பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகியவற்றிடமிருந்து தொடர்ந்து ஆயுதங்களை பெற்று ஓயாது சண்டையிடும் சிறிலங்கா படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் சளைக்காது சமரிட்டு வருகின்றனர். வன்னி மீது எத்தனை தடவைகள் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் சென்று தாக்குதல்களை நடத்தினாலும் அங்கிருந்து புலிகள் தொடர்ந்தும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். புலிகளின் இந்த தாக்குதல்களினால் - சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட - இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றது. ஈரானிடமிருந்து பெறும் பணத்தினால் பெருந்தொகையான ஆயுதங்களை தனது நேச நாடுகளிடம் பெற்று அவற்றை போரில் பயன்படுத்துவதில் மட்டும்தான் சிறிலங்கா படைகள் ஆசுவாசப்பட்டுக்கொள்கின்றன். இந்த வசதி புலிகளுக்கு இல்லை என்பது உண்மை. விடுதலைப் புலிகளினது நேர்த்தியான திட்டமிடலையும் அரச படையினருக்கு எதிரான அவர்களது ஓர்மத்தையும் அண்மையில் இடம்பெற்ற வவுனியா தாக்குதல் தெளிவாக காண்பித்திருக்கின்றது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் அனுராதபுரம் படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்று - ஒரு படி மேலே சென்று - வான் வழியாகவும் தரை வழியாகவும் - ஆட்லறி மூலமும் மிகவும் கவனமாக திட்டமிட்டு வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருக்கின்றனர். தாக்குதல் மேற்கொண்ட புலிகளின் வானூர்திகளை கொழும்பிலிருந்து சென்ற தமது சிறப்பு தாக்குதல் வானூர்திகள் சுட்டு வீழ்த்தியதாக சிறிலங்கா வான்படை தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்குரிய ஒளிப்பட ஆவணம் தம்மிடம் இல்லை என்று வான்படை பேச்சாளர் கூறியுள்ளார். அனுராதபுர படைத்தளம் மீதான புலிகளின் வான் தாக்குதலின்போதும் அது ஒரு கண்துடைப்பு தாக்குதல் என்றும் புலிகள் தமது இலக்கை அடையவில்லை என்றும் சிறிலங்கா அரசு முதலில் கூறியிருந்தது. ஆனால், பின்னர் வெளிவந்த சுயாதீன அறிக்கைகள் இராணுவத்துக்கு ஏற்பட்ட பாரிய இழப்பை வெளிக்கொண்டு வந்தது. வவுனியா படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் வானூர்திகள் ஆறு நிமிடங்கள் மாத்திரமே வவுனியா வான் பரப்பின் மேல் பறப்பில் ஈடுபட்டிருக்கின்றன. ஆகவே, அவ்வளவு நேரத்திற்குள் கொழும்புக்கு தகவல் போய், அங்கிருந்து வந்து புலிகளின் வானூர்தியை தாக்கியழிக்க வல்ல வேகமான வானூர்திகள் எவையும் சிறிலங்காவிடம் இல்லை. சிறிலங்கா இராணுவம் தாம் ஈட்டிய வெற்றிகளை பூதாகாரப்படுத்தி வெளியிட்டுவிட்டு தமது தரப்பு இழப்புக்களை மூடி மறைத்துவரும் வேளையில், விடுதலைப் புலிகள் ஆதாரங்களுடன் இழப்பு விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். தாம் போரில் பாரிய இழப்புக்களை சந்தித்தாலும் கூட அதனை புலிகள் ஒருபோதும் மூடிமறைக்க முயற்சிப்பதில்லை. இதனால்தான், விடுதலைப் புலிகளின் அறிக்கைகளை போராளிகளும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் நம்பகத்தன்மை உடையவையாக பார்க்கின்றனர். வவுனியா தாக்குதலை பொறுத்த வரையில் விடுதலைப் புலிகள் விடுத்த அறிக்கை, சிறிலங்கா அரசு விடுத்த அறிக்கையிலும் பார்க்க கூடுதல் நம்பகத்தன்மை உடையது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி புதினம் |
Tuesday, August 26, 2008
மாவீரன் பண்டாரவன்னியன் ஆங்கிலேயரின் கோட்டையினை தாக்கியழித்த 205 ஆவது வெற்றிவிழா
| தமிழீழத் தேசியத் தலைவரினால் 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு சிறிலங்காப் படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டு, மீட்கப்பட்ட முல்லைத்தீவு மண்ணில் 1803 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் முல்லைத்தீவு ஆங்கிலேயப் படையினரின் கோட்டையினை மாவீரன் பண்டாரவன்னியன் தாக்கியழித்ததன் 205 ஆவது வெற்றிவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. |
நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை முல்லைத்தீவு மாவட்ட தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்பாளர் சர்வன், புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், முள்ளியவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மு.உமைநேசன், ஒட்டிசுட்டான், நெடுங்கேணிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் ஆகியோர் ஏற்றினர். தமிழீழத் தேசியக் கொடியினை கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் ஏற்றினார். பண்டாரவன்னியன் கொடியினை பண்டாரவன்னியன் அறங்காவலர் கழகச் செயலாளர் சி.வேதவனம் ஏற்றினார். பண்டாரவன்னியன் நினைவுக்கல்லுக்கான சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் ஏற்றினார். நினைவுக்கல்லினை தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் திரைநீக்கம் செய்தார். நினைவுக்கல்லுக்கான மலர்மாலையினை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.பார்த்தீபன் சூட்டினார். நிகழ்வரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பண்டாரவன்னியனின் திருவுருவப்படத்திற்கு ச.கனகரத்தினம் சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார். பண்டாரவன்னியனின் திருவுருவப்படத்திற்கு பண்டாரவன்னியன் அறங்காவல் கழக உபதலைவர் க.சரவணபவன் மலர்மாலை சூட்டினார். தலைமையுரையினை ஒட்டிசுட்டான் உதவி அரசாங்க அதிபர் சுபாஜினி மதியழகன் நிகழ்த்தினார். விழாவுரையினை க.பார்த்தீபன் நிகழ்த்தினார். சிறப்புரையினை தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஆற்றினார். சிறப்புரையினைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவருக்கான மாவீரன் பண்டாரவன்னியனின் 205 ஆவது ஆண்டு வெற்றிவிழா மலர் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது. மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றிவிழாவை முன்னிட்டு சான்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமாரின் துணைவியார் அம்பிகா நந்தகுமார், கலைஞர் பொன்னையா சேதுபதி, கலைஞர் சு.கணபதிப்பிள்ளை, கலைஞர் நடேசு செல்லத்தம்பி, கலைஞர் மாணிக்கம் ரூபமூர்த்தி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர். அத்துடன் மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றி விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. பேச்சுப் போட்டியில் கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய மாணவி ந.சாமந்தி, கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி த.அனோஜா, அ.சகாயராணி, கற்சிலைமடு அரசினர்த் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி யோ.தீபனா, கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவி க.சுரேந்தினி ஆகியோர் பரிசில்களைப் பெற்றனர். கட்டுரைப் போட்டியில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவி ப.தனோஜிகா, கற்சிலைமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி த.கீதா, கிளிநொச்சி தமிழ்ச்சோலை வித்தியாலய மாணவி சு.மணிமேகலை ஆகியோர் பரிசில்களைப் பெற்றனர். கவிதைக்கான பரிசினை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் வே.சுதன் பெற்றார். |
தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது: பா.நடேசன்
| தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது: பா.நடேசன் |
தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். |
வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் 205 ஆவது ஆண்டு சிறப்பு மலருக்கு வழங்கிய வாழ்த்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன். செவிவழிக் கதைகளுடன் கலந்து சொல்லப்பட்டு வந்த பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை ஆவண நிரூபணங்கள் கொண்ட உண்மை வரலாறாக ஆக்கும் முயற்சி என்பது காலத்தின் தேவையாகும். இந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் பணியினை முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவல் கழகம் தனது கடமையாக எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. வரலாறு என்பது ஒரு இனத்தின் உயிரைப் போன்றது. வரலாறு ஆவணப்படுத்தாவிடின் குறித்த இனம் அடையாளம் தெரியாதபடி கால ஓட்டத்தில் அழிந்துவிடும். இதனால்தான் ஆக்கிரமித்த இனத்தின் வரலாற்றை அழித்து விடுவதில் ஆக்கிரமிப்பாளர்கள் கவனம் எடுக்கின்றனர். தமிழரின் வரலாற்றை அழித்து விடுவதில் சிங்களப் பேரினவாதிகள் பகீரத முயற்சிகள் எடுப்பதும் நாம் அறிந்தே தமிழரின் வாழ்விடங்களின் தொன்மைப் பெயர்களை அழித்து சிங்களப் பெயர்கள் சூட்டுவதும், தமிழரின் ஆவணக் காப்பகங்கள், நூலகங்களை எரித்து அழிப்பதும் தமிழரின் வரலாற்றை தமிழ் மாணவர்களின் பாடநூல்களில் இருந்து விலக்குவதும் என்று தமிழரின் வரலாற்றை அழிக்க சிங்களப் பேரினவாதிகள் முயற்சித்தபடியுள்ளனர். இதனை முறியடித்து தமிழரின் வரலாற்றை எமது சந்ததியினர் அறியும் வகையில் நூலுருவாக்கிப் பரப்புவது தமிழ் அறிஞர்களின் வரலாற்றக் கடமையாகும். ஆங்கிலேயரின் ஆயுத பலத்திற்கு அஞ்சாமல் விடுதலை உணர்வுடன் போரிட்டவன்தான் மாவீரன் பண்டாரவன்னியன். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வீரத்துடன் அந்நியரை எதிர்த்துப் போராடிய அந்த மாவீரனது கதைகள் எம்மைப் பெருமை கொள்ள வைக்கின்றன. அந்தப்போர்கள் நடந்த ஊர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது மனதில் உணர்வெழுச்சி பொங்குகின்றது. இதற்கெல்லாம் வரலாற்று உணர்வுதான் காரணம். வரலாற்று உணர்வென்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு இனம் தனது மண்ணின் பெருமைகளை உயர்விலை கொடுத்துக் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் இந்த வரலாற்று உணர்வுதான் காரணமாக இருக்கின்றது. பண்டாரவன்னியன் போன்று இந்த மண்ணின் வீரப்புதல்வர்களது, வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அந்த வீரவரலாறுகள் எமது எதிர்காலச் சந்ததிக்கு விடுதலையுணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும் என்றார் அவர். |
Tuesday, August 19, 2008
மக்கள் போர்க்குழு பயிற்சி
தமிழர் தாயக நிலங்களை வல்வளைப்புச் செய்து தமிழ் மக்களை துயரநிலைக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கும் சிறிலங்காப் படைகளிடமிருந்து தாய்நிலத்தை காக்கவும் மீட்கவும் மக்கள் படை தயாராகி கொண்டிருக்கின்றது.
இதன் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் கட்டுமானப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.


இதில் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், வணிகர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பெருமளவான மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் போராளிகள் தாய் மண்ணை காக்கும் பணிக்காக வந்து இணையுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பெருமளவானவர்கள் தம்மை மீள இணைத்து வருகின்றனர்.
சிறிலங்காப் படையினரின் வல்வளைப்பிலிருந்து தாய் மண்ணை காக்கவும் மீட்கவுமாக முன்னாள் போராளிகளை மீள வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அவசரமான வேண்டுகோளினை விடுத்திருந்தது.


இந்த வேண்டுகோளுக்கு இணங்க பெருமளவான முன்னாள் போராளிகள் வட்ட கோட்டச் செயலகங்களில் தம்மை இணைத்து வருகின்றனர்.
இன்றைய நிகழ்வின் தொடக்கத்தில், தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ நீதி நிர்வாகத்துறைப்
பொறுப்பாளர் பரா ஏற்றி வைக்க, தொடர்ந்து மக்களுக்கன மக்கள் கட்டுமானப் பயிற்சிகள் நடைபெற்றன.
நிகழ்வில் சிறப்புரையினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் நிகழ்த்தினார்.
நன்றி - புதினம்.
Friday, August 01, 2008
சென்னையில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு 02.08.2008
நூல் பெற்றுக் கருத்துரை
பொள்ளாச்சி மா.உமாபதி
போர்க்குரல்கள்
சி.மகேந்திரன்
கொளத்தூர் மணி
திரைப்பட இயக்குநர் சீமான்
தியாகு
தமிழச்சி
சாவல்பூண்டி சுந்தரேசன்
வழக்குரைஞர் அஜிதா
மருத்துவர் வேலாயுதம்
கவிதை முழக்கம்
கவிஞர் தணிகைச்செல்வன்
கவிஞர் ஜெயபாஸ்கரன்
கவிஞர் பச்சியப்பன்
நன்றியுரை மு. மாறன்
ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு - பா.நடேசன் நன்றி
| "விகடன்" கருத்துக்கணிப்பில் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி: பா.நடேசன் |
தமிழீழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயம் என்று தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" நடத்திய கருத்துக்கணிப்பில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நன்றி தெரிவித்துள்ளார். |
| "ஆனந்த விகடன்" (06.08.08 பதிப்பு) ஏட்டில் வெளியாகியுள்ள பா.நடேசனின் பேட்டி வருமாறு: இலங்கையில் இப்போதைய நிலவரம் என்ன? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிலங்கா அரசு, தனது இராணுவத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தேசத்தின் மீதும் மோசமான இனப் படுகொலையை மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் வாழ்விடங்கள் மீது வான்குண்டு வீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தாக்கி வருகிறது. தினமும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமே இங்கே இப்போது பெரும் தட்டுப்பாடு. மக்களைப் பட்டினி போட்டுக் கொன்றொழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என சிறிலங்கா அரசு எண்ணுகிறது. அண்மைக்காலத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தமது வாழ்விடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக விடுதலைப் புலிகள் வீராவேசத்துடன் போராடி வருகின்றனர்! ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு புலிகளின் போராட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் குறிப்பாக, தமிழக மக்களின் ஆதரவை எந்த வகையில் எதிர்பார்க்கிறீர்கள்? இதைப் புலிகளின் போராட்டம் என்று குறிப்பிடுவதைவிட தமிழ் மக்களின் போராட்டம் என்று சொல்வதுதான் பொருத்தமானதாகும். எமது விடுதலைப் போராட்டத்துக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. இதனைப் பிழையாக மதிப்பிட வேண்டாம். வரலாற்று ரீதியாக, இன, கலாசார ரீதியாக தமிழக மக்களுக்கும் எமக்கும் தொப்புள் கொடி உறவு இருந்து வருகின்றது. அவர்களின் ஆதரவு எமக்கு எப்போதும் இருந்தே வரும். தனி ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயமென்று கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எங்கள் நிருபர்களிடமும் எங்கள் இணையத்தளத்திலும் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுபற்றி தங்கள் கருத்து என்ன? உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இவர்கள், எமது தலைவர் தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தவறானவையாகும். வெகுவிரைவில் இவர்களது கருத்துக்களில் மாற்றம் ஏற்படும் என உறுதியாகச் சொல்கின்றேன். இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப் போராட்டம்? விடுதலைப் போராட்டங்களுக்கு கால எல்லைகள் வகுத்துப் போராடுவதில்லை. ஆனால், முழுமக்கள் பலத்தோடு எமது விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்! அனைத்துலக சமூகம் உங்களையும் சிறிலங்கா அரசையும் எப்படிப் பார்க்கிறது? அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசு பற்றி நன்றாகவே புரிந்தித்திருக்கிறது. அண்மையில்கூட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையிலிருந்து சிறிலங்கா நீக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தொடர்ந்து நிகழும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. அனைத்துலக சமூகம் எமது போராட்டத்தைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள். எமது விடுதலைப் போராட்டம் அதர்மத்தை எதிர்த்து, தர்மத்துக்காக நடத்தும் போராட்டம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்! இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறியிருக்கிறதா? சிறிலங்கா அரசின் இராஜதந்திர நகர்வுகள் எப்போதுமே இந்திய வெளியுறவுக் கொள்கைக்குப் பாதகமாகவே இருந்து வந்துள்ளன. இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனேயே அவர்கள் வரலாற்று ரீதியான உறவுகளையும் தொடர்புகளையும் பேணி வருகின்றனர். சிங்களக் கட்சிகளின் இந்தியா தொடர்பான அரசியல் கொள்கைகள் என்பன எப்போதுமே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானவையே. தற்போதைய போர்ச்சூழ்நிலையில் அது உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்பதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம். |
விடுதலைப்புலிகளை என்றும் ஆதரிப்போம் - தமிழ்நாட்டுத் தமிழர்கள் - ஆனந்தவிகடன் கருத்துகணிப்பு முடிவு
நன்றி ஆனந்த விகடன், புதினம்
| ஆனந்த விகடன் இதழில் (06.08.08) இது தொடர்பில் இடம்பெற்றுள்ள கருத்துக் கணிப்பு விவரம்:
|
Thursday, July 17, 2008
Saturday, July 12, 2008
இலங்கை மீண்டும் வெறி - துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் பலி!
இலங்கை மீண்டும் வெறி - துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் பலி!
இலங்கை கடற்படையின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் நாகை மாவட்ட மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.தமிழக மீனவர்களை குருவி சுடுவதை போல கொன்று குவிக்கும் அக்கிரமச் செயலில் இலங்கை கடற்படை பல வருடங்களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களை அவ்வப்போது மாநில அரசுகள் கண்டிப்பதும், மத்திய அரசு வாய் மூடி மெளனமாக இருப்பதும், இலங்கை கடற்படை தனது வெறிச்செயலை தொடருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.சமீபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பெரும் அதிர்ச்சி அளித்தது இலங்கை கடற்படை. பின்னர் அவர்களில் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கையின் இந்த வெறிச்செயலைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இன்று இரண்டு நாகை மாவட்ட மீனவர்களை கொன்று குவித்துள்ளது இலங்கை கடற்படை.நாகை மாவட்டம் ஆற்காடு துறை பகுதியைச் ேசர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படை வந்தது.வந்த வேகத்தில் கண் மூடித்தனமாக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுத் தள்ளினர். இதில் வாசகன், நாராயணசாமி ஆகிய இரு மீனவர்களும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.முரளி என்கிற இன்னொரு மீனவர் குண்டுக் காயம் பட்டு உயிருக்குப் போராடினார். பின்னர் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் உறவினர்களைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தார்.இதையடுத்து 3 படகுகளில் முரளியின் உறவினர்கள் விரைந்து வந்தனர். பலியான இரு மீனவர்களின் உடல்கள் மற்றும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முரளியை மீட்டு கரைக்கு திரும்பினர்.முரளி உடனடியாக நாகப்பட்டனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இலங்கை கடற்படையின் இந்த வெறிச்செயலால் நாகை மாவட்ட மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்களின் பொங்கு தமிழ் எழுச்சிக்கு தேசியத் தலைவர் வாழ்த்து

புலம்பெயர் தமிழர்களின் பொங்கு தமிழ் எழுச்சிக்கு தேசியத் தலைவர் வாழ்த்து
புலம்பெயர் தமிழ் மக்கள், தாயக விடுதலையை பலப்படுத்துவதற்காக பெரும் எழுச்சிகொண்டு நிகழ்த்தி வருகின்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் மக்களின் பொங்கு தமிழ் எழுச்சி குறித்து கருத்து தெரிவிக்கும் போது தேசியத் தலைவரின் வாழ்த்துக்களை குறிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகின்ற அதேவேளை பெரும் பொய்களை உலகளவில் பரப்புரை செய்து வருகின்றது.
தமிழ் மக்களை கொன்றொழித்துக்கொண்டு உலகையும் ஏமாற்றி வருகின்ற சிறிலங்கா அரசு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக உலகளவில் சித்தரித்து வருகின்றது.
சிறிலங்காவின் இந்தப் பொய்ப் பரப்புரையை தகர்த்து எறிந்து உலகம் முழுமைக்கும் தமிழ்மக்கள் பொங்கு தமிழாக தமது அரசியல் அபிலாசைகளை பேரெழுச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
இது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்ற அதேவேளை களத்தில் போராடும் போராளிகளுக்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளுக்கு அவர்களின் விருப்ப மொழியில் தமிழ் மக்கள் தாயக விடுதலையின் நியாயத்தையும் தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகளுக்கு தமிழ் மக்கள் உரித்துடையவர்கள் என்பதையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
உரிமைக்கானதுதான் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதை அவர்கள் வலுவாக எடுத்துரைக்கின்றனர். அதிலும் கனடாவில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு லட்சம் தமிழ்மக்கள் திரண்டு எழுந்திருப்பதும் நியூசிலாந்து- அவுஸ்திரேலியா- இத்தாலி-ஜேர்மனி- பிரான்ஸ்- நெதர்லாந்து- பெல்ஜியம்- நோர்வே- சுவீடன்- டென்மார்க்- அவுஸ்திரேலியா- தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதுவரை பொங்கு தமிழாக எங்களின் புலம்பெயர் உறவுகள் தாயகத்தின் போராட்டத்தை வலுப்படுத்துவதில் பேரெழுச்சியை காட்டியுள்ளனர்.
அடுத்து லண்டனில் பொங்கு தமிழ் நடைபெறவுள்ளது. தாயக தாகத்துடன் புலம்பெயர்ந்த தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இந்த எழுச்சிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதேவேளை பெருமிதமும் கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்ட பா.நடேசன், விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் இத்தகைய செயற்பாடுகள் தொடரவேண்டும் என்றார் அவர்.
Friday, June 27, 2008
தமிழின உணர்வாளர்கள் இடையே ஒற்றுமை அவசியம்: சுப.வீரபாண்டியன் வலியுறுத்தல்
ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழின உணர்வாளர்கள் இடையே ஒற்றுமை அவசியம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருக்கும் அவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை (24.06.08) வழங்கிய நேர்காணல்:
Tuesday, February 05, 2008
புத்தாண்டு அறிவிப்பு போற்றும் வரலாறு
புத்தாண்டு அறிவிப்பு
போற்றும் வரலாறு
இவ்வாண்டு ஆளுநர் உரை, சில இனிப்பான அறிவிப்புகளைத் தந்துள்ளது. தை முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு, ஒடுக்கப்பட்டோரிலும் ஒடுக்கப்பட்டோரான அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு, அரவாணிகளுக்குத் தனி நல வாரியம், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் என்று பல்வேறு வகையிலும், பல்வேறு துறையினருக்கும் உவப்பளிக்கக் கூடிய செய்திகளை அரசு அறிவித்துள்ளது.
1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலையடிகளாரின் தலைமையில் கூடிய குழு எடுத்த முடிவுப்படிதான் திருவள்ளுவர் ஆண்டு இன்றும் கணக்கிடப்படுகிறது. இயேசு நாதர் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பிறந்தவர் வள்ளுவர் என்பது அக்குழுவின் முடிவு. அதனால்தான் இப்போது நடப்பது திருவள்ளுவர் ஆண்டு 2039 என்று நாம் கூறுகிறோம். அதே குழுதான் தை மாதம் முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தது.
மேலே கூறப்பெற்றுள்ள இரண்டு முடிவுகளையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது, கலைஞர் தலைமையிலான அரசுதான். திருவள்ளுவர் ஆண்டை அரசு ஏற்றுக் கொள்வதாக 1971ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போதும் கலைஞர்தான் முதல்வர். தை முதல் நாளைத் தமிழர் புத்தாண்டு என அறிவிக்கும் சட்டமுன்வடிவம் நடப்பு சட்டமன்றத்தில் வந்துள்ளது. இப்போதும் கலைஞர்தான் முதல்வர்.
புத்தாண்டு அறிவிப்பென்பது, பண்பாட்டு உலகில் ஒரு புதிய மைல்கல் என்றுதான் கூறவேண்டும். சித்திரைதான் புத்தாண்டு என்று ஆண்டுகள் பலவாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு சமுகத்தில், இப்புதிய அறிவிப்பு ஒரு புரட்சிக் குரலாகத்தான் வெளிவந்துள்ளது.
இப்போதெல்லாம் தமிழர்கள் உட்பட, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள், சனவரி முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். சித்திரை முதல் நாளன்றும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளத் தயங்குவதில்லை. ஓராண்டில் இரண்டு புத்தாண்டா என்று கேட்டால், அது ஆங்கிலப்புத்தாண்டு, இது தமிழ்ப் புத்தாண்டு என்று கூறுகின்றனர். வேடிக்கை என்னவென்றால், அது ஆங்கிலப் புத்தாண்டுமில்லை, இது தமிழ்ப் புத்தாண்டுமில்லை. இயேசு நாதர் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி பிறந்தார். அதுதான் கிறிஸ்மஸ். அவர் பிறந்த 8ஆம் நாள் அவருக்குப் பெயர் சூட்டினார்கள். அதுதான் சனவரி 1. எனவே அந்நாள் ஒரு மதத்தோடு தொடர்புடையதே தவிர, புத்தாண்டோடு எந்தத் தொடர்பும் உடையது அன்று. எனினும் தாங்கள் உலகம் முழுவதும் பெற்றிருந்த ஆட்சி அதிகாரத்தால் அதனைப் புத்தாண்டாக அவர்கள் ஆக்கிவிட்டனர். அறிந்தோ அறியாமலோ, இந்துக் கோயில்களிலும் இப்போது அந்த நாளில் அர்ச்சனைகள் நடக்கின்றன.
தமிழ்ப்புத்தாண்டு என்று கருதப்பட்ட சித்திரை முதல் நாளின் கதையோ, இன்னும் வேடிக்கையானது. ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த 60 குழந்தைகள்தான் அந்தத் தமிழ் வருடங்கள் என்று ஒரு புராணக்கதை சொல்லும். அதை நம்பித்தான் நாம் அதனைப் புத்தாண்டாய்க் கொண்டாடுகிறோம். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படும் அவற்றுள் ஒன்றுகூட தமிழ்ப்பெயர் தாங்கி நிற்கவில்லை. அனைத்தும் வடமொழிப் பெயர்கள். ஆனால் இப்போது அந்த ஆண்டுகளுக்கான புதிய புதிய அறிவியல் காரணங்களைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். கதிரவனைச் சுற்றி வர வியாழனுக்கு 12 ஆண்டுகளும், சனிக்கு 30 ஆண்டுகளும் ஆகின்றன. இவ்விரு கோள்களும் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஓர் இடத்தில் சந்திக்கின்றன. அதைக்குறிக்கும் வகையிலேயே 60 சுழற்சி ஆண்டுகள் தமிழ் ஆண்டுகளாக ஆக்கப்பட்டுள்ளன என்று இப்போது கூறுகின்றனர். இரு கோள்கள் ஒரு கோட்டில் சந்திப்பதற்கும், நம்முடைய புத்தாண்டு தொடங்குவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சிந்துவெளி நாகரிகம் தொட்டு, மண்ணை வணங்குவதே தமிழர்களின் மரபாக இருக்கிறது. நெருப்பை வணங்குவதும், விண் எனப்படும் வெளி அல்லது சூனியத்தைக் கண்டு தம் வாழ்நெறிகளை அமைத்துக் கொள்வதும் நம் மரபன்று. இடையில் வந்தது. விளைத்துக் கொடுக்கும் மண்ணுக்கும், உழைத்து கொடுக்கும் மக்களுக்கும் நன்றி செலுத்தும் நாளே நாம் கொண்டாடும் பொங்கல் திருநாள். அறுவடையாகி நெல் வீட்டிற்கு வரும் நாளே, நம் புதுக்கணக்குத் தொடங்கும் நாள். அதனை அடிப்படையாகக் கொண்டு, தை முதல் நாளை புத்தாண்டு என்று வழங்குவதே பொருத்தமாகும்.
தமிழினத்தின் தொன்மை, பண்பாடு ஆகியனவற்றின் தனித்துவம் வெளிப்பட்டுவிடக் கூடாது என்று கருதும் பார்ப்பன ஏடுகள் சில, இப்புத்தாண்டு அறிவிப்பிற்கு எதிராக கருத்தை உருவாக்குவதில் முனைப்போடு இயங்குகின்றன. இவ்வறிவிப்பு நடைமுறைக்கு ஒத்துவராது என்பதுபோல ஒரு கருத்தை, தமிழ்ப்பேராசிரியர்களிடமிருந்தே கொண்டுவர ஒரு ஏடு முயல்கிறது. அவர்களும் துணை போகிறார்கள். ஏன் ஒத்துவராது என்பதற்கு எந்த அறிவியல்பூர்வமான காரணமும் சொல்லப்படவில்லை. முன்பெல்லாம் ஓர் ஆங்கில ஆண்டில் பத்து மாதங்களே இருந்தன. ஜுல¤யஸி சீசர், அகஸ்டஸ் சீசர் ஆகியோரின் புகழ் நிலைப்பதற்காக ஜுலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்கள் பின்னர் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அதனால் அது நடைமுறைக்கு ஒத்துவராமலா போய்விட்டது? எந்த ஒன்றும் தொடக்கத்தில் சற்றுக் கடினமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும். இதுதான் நடைமுறை உண்மை. அரசின் முறையான அறிவிப்பு வந்ததற்குப் பின்னரும், சில ஆண்டுகளுக்கு சித்திரை மாதத்தையும் புத்தாண்டாய்க் கொண்டாடும் பழக்கம் இருக்கவே செய்யும். ஆனால் அடுத்தத் தலைமுறைக்கு அப்படி ஒன்று இருந்ததே தெரியாமல் போய்விடவும் வாய்ப்பிருக்கிறது. காலம் எல்லாவற்றையும் உள்வாங்கிச் செரிக்கும். லை, னை போன்ற எழுத்துகளை முன்பு இப்படியா எழுதினோம்? கொம்பு போட்டு எழுதிய காலம் இன்று இல்லாமல் போய், இப்புதிய எழுத்து வடிவங்கள் இன்று நடைமுறைக்கு ஒத்துவரவில்லையா என்ன?
எனவே காலத்திற்கும், தமிழ்ப்பண்பாட்டிற்கும் ஏற்ற நல்லதொரு அறிவிப்பை தமிழக அரசு செய்திருக்கிறது. இதனை வருங்காலம் ஏற்கும், வரலாறு போற்றும்.
இந்நிலையில் இன்னுமொரு கூடுதல் வேண்டுகோளையும், தமிழறிஞர் தலைவர் கலைஞரின் முன்னால் தமிழ்ச் சமுகம் வைக்க விரும்புகிறது. பொருளாதாரமே இவ்வுலகில் பலவற்றைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது என்பது வெளிப்படை. பொங்கல் திருநாளைப் புத்தாண்டு என்று ஏற்றுக்கொண்ட பின்னும், அதைக் கொண்டாடக் கையில் காசு இருக்க வேண்டுமல்லவா. தீபாவளி நேரத்தில் எல்லோர் கைகளிலும் பணம் புழங்குகிறது. அதற்கான அடிப்படைக் காரணம், ஊக்க ஊதியம் (போனஸ்) அந்த நேரத்தில் வழங்கப்படுவதுதான். கேரளாவில் இன்று ஓணம் திருநாளை ஒட்டியே ஊக்க ஊதியம் வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். அவ்வாறே தமிழகத்திலும் புத்தாண்டுக்கு, அதாவது தை முதல் நாளையொட்டி ஊக்க ஊதியம் வழங்குவதுதானே சரியாக இருக்கும்!
புத்தாண்டைச் சரியாக அறிவித்த கலைஞர், அடுத்த ஆண்டிற்குள் இந்த அறிவிப்பையும் வெளியிட்டு தமிழ்ப்பண்பாடு தலைதூக்க உதவ வேண்டும்.
- இளைய சுப்பு.
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.
தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,
சென்னை - 600 024. பேசி - 044-24732713.
ஈழம் தொடர்பான அவதூறுகளைத் தடை செய்க
ஈழம் தொடர்பான
அவதூறுகளைத் தடை செய்க
சனவரி 21 -
தமிழீழ மக்களைப் படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து, சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களிலும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் கவிஞர் மேத்தாவும், மதுரையில் தலித் விடுதலை இயக்க அமைப்பாளர் இ.பாக்கியராசுவும் போராட்டத்தைத் தொடக்கிவைத்தனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் முடித்து வைத்தார். வழக்கறிஞர் தமிழ்ச் சங்கத்தலைவர் இரா.மனோகரன் மதுரைப் போராட்டத்தை நிறைவடையச் செய்தார். பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையிலும், வடக்கு மாவட்டங்களின் செயலர் அன்புத் தென்னரசன், மாநில இளைஞரணிச் செயலர் ஆ.சிங்கராயர் ஆகியோர் முன்னிலையிலும் சென்னையில் போராட்டம் நடைபெற்றது, மதுரையில், தென் மாவட்டங்களின் செயலர் நா.இராசா தலைமை வகிக்க, மதுரை மாவட்டச் செயலர் இரா.ஜெயபால் சண்முகம், முகவை மாவட்டச் செயலர் மறவர்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழீழம் பற்றிய சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்துமே இங்கு குற்றச்செயல்களாக ஒருசிலரால் ஆக்கப்படுகின்றன. தமிழீழம் என்றாலே விடுதலைப்புலிகள் என்றும், அவ்வியக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதால் அதுகுறித்துப் பேசுவதே தேச விரோதம் என்றும் சிலர் இங்கே வினோதமான மொழிபெயர்ப்புகளைச் செய்கின்றனர். அன்றாடம் தமிழ் மக்களின் மீது குண்டுகளை வீசும் இலங்கை அரசு, இந்தியாவிடமிருந்து நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பல உதவிகளைப் பெறுகின்றது. பத்து நாட்களுக்கு முன்பு வன்னியில் ஒரு பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசப்பட்டிருக்கின்றது. அங்கு 790 பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு பிள்ளைகள் இல்லாத காரணத்தால் அவர்கள் உயிர்தப்பிவிட்டனர். இல்லையேல் எல்லாப் பிஞ்சுகளும் மாண்டிருக்கும். இவ்வளவு கொடுமையான அரச பயங்கரவாதம் பற்றி, இந்தியாவும் சரி, உலக நாடுகளும் சரி இன்றுவரை வாய்த்திறக்கவில்லை. இந்நிலையில் பிப்ரவரி நான்காம் தேதி கொழும்பில் நடைபெறவிருக்கும் அவர்களின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று, இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கிற்கு அழைப்பு.
நெருப்பில் நின்று மாலை சூட்டிக்கொள்வதா என்னும் கேள்வியோடு, இருபது நாட்களுக்கு முன்பு திராவிடர் கழகம் சென்னையில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியது. கொழும்பு விழாவில் மன்மோகன்சிங் கலந்துகொள்ளக் கூடாது என்னும் கோரிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட அவ்வார்ப்பாட்டத்திற்கு கி.வீரமணி தலைமை ஏற்றார். வேறு கட்சிகளும், அமைப்புகளும் கூட அக்கோரிக்கையை முன் வைத்தனர். இறுதியாக, ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் மன்மோகன்சிங் தன் பயணத்தைத் தள்ளிவைத்துவிட்டார்.
அந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு பேரவையின் பட்டினிப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து மிகப் பெரிய அளவில் விடுதலைச் சிறுத்தைகளால் கூட்டப்பட்ட கருத்துரிமை மீட்பு மாநாடும் தமிழகத்தில் ஓர் அசைவை ஏற்படுத்தியுள்ளன. அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் இன்று விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்றும், திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்புகின்றனர்.
சட்டமன்றத்திலேயே, உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, வாய்மொழி ஆதரவிற்காக யாரையும் கைது செய்ய முடியாது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். எனினும் காங்கிரஸ் கட்சியின் துணையோடு இன்றைய ஆட்சி நடந்து கொண்டிருப்பதால், அவ்வாறு ஆதரிப்பவர்களைக் கைது செய்வது குறித்துத் தனிச்சட்டம் கொண்டுவருவது பற்றி ஆராயப்படும் என்றும் கூறியுள்ளார். ஒரு நெருக்கடியான நிலைக்குத் தமிழக அரசைக் கொண்டு போவதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் சிறு வெற்றியைப் பெற்றுள்ளனர் என்பது உண்மைதான்.
காங்கிரஸ் கட்சியின் தலைவியாக இருக்கிற சோனியா காந்தி அம்மையார் பல நேரங்களில் நிதானமாகச் செயல்படுகிறார். ஆனால் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம்' காட்டுவதற்காக தவறான பாதையில் தொடர்ந்து பயணம் செய்கின்றனர். ஒரு கருத்தை வெளியிடுவது எப்படிக் குற்றமாகும் என்று அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. குசராத்தின் நரேந்திர மோடியை மரண வியாபாரி என்று விமர்சனம் செய்தார் சோனியா காந்தி. அந்த மரண வியாபாரியை மலர் தூவி வரவேற்கும், உள்ளுர் காங்கிரஸ் நண்பர்கள், தமிழீழ மக்களை மட்டும் தடிகொண்டு விரட்ட முயல்வது எந்த வகையில் நியாயம்?
அன்றாடம் விடுதலைப்புலிகளைப் பற்றி அவதூறுகளும், வதந்திகளும் பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதுவும் ஒருவிதமான பயங்கரவாதம்தான். ஆனால் அந்தக் கூற்றுகளில் உள்ள பொய்மையை யாராவது எடுத்துச் சொன்னால், அவர்களைப் பயங்கரவாதிகள் என்கின்றனர் காங்கிரசார்.
தமிழ்நாட்டிலிருந்து புலிகளுக்கு ஆயுதம் கடத்தப்படுவதாக அடிக்கடி சொல்லப்படுகிறது. அவர்கள் உலகிலேயே மிக நவீனமான கருவிகளைத் தங்கள் இனத்தின் தற்காப்புக்காக இன்று பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களிடம் இல்லாத எந்த நவீனமான ஆயுதம் இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. அதைப்போலவே, லண்டனில் இருந்து கொண்டு திருப்பூருக்கு ஆங்கிலத்திலும் தமிழிலுமாய்த் தொலைபேசி புலிகள் பணம் கேட்கின்றனர் என்று ஒரு பச்சைப் பொய்யும் இங்கு கட்டவிழ்த்து விடப்படுகிறது. நல்ல தமிழ் பேசும் அவர்கள், பணத்திற்காய்க் கூட அரைகுறை ஆங்கிலம் பேசியிருக்க வாய்ப்பில்லை. அது மட்டுமில்லாமல், திருப்பூரிலிருந்து பணம் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை என்பதையும், இன்றைக்கும் திருப்பூரையே வாங்கக்கூடிய நிலையில்தான் உள்ளனர் என்றும் அவர்களின் எதிரிகளே குறிப்பிடுகின்றனர். யார் ஒருவர் ஈழத்தமிழில் பேசினாலும், உடனே அவர்களை விடுதலைப்புலிகள் என்று முத்திரை குத்திவிடும் ஒரு விபரீதப் போக்கு இங்கு எப்போதும் உள்ளது.
இன்று சிறீலங்காவில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா மீது இன்றைக்கும் பல வழக்குகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஒரு குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. பல கொலை வழக்குகளும் உள்ளன. புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து போன கருணா கடவூச்சீட்டு மோசடிக்காக லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் போன்றவைகளில் பழகிப்போன சில துரோகக் கும்பல்கள் ஈடுபடக்கூடிய செயல்களில் எல்லாம் ஒரு விடுதலை இயக்கத்தைத் தொடர்புபடுத்திக் கொச்சைப்படுத்துவது மிக மோசமான செயலாகும்.
இந்தச் சூழலில் ஆர்ப்பாட்டமாய், பட்டினிப்போராய், மாபெரும் மாநாடாய்க் கருத்துரிமை மீட்புக் களத்தில் இன்னும் நம் பணி நிறையவே இருக்கிறது.
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.
தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,
சென்னை - 600 024. பேசி - 044-24732713.
தமிழ்தான் நம்மை இணைக்கிறது
தமிழ்தான் நம்மை இணைக்கிறது
(மெட்ராஸ் ஸ்டேட் என்றிருந்த பெயரைத் தமிழ்நாடு என மாற்றுவதற்கான சட்டத்தை 1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் முன்மொழிந்து ஆற்றிய உரை, அவருடைய நினைவு நாளான பிப்ரவரி 3ஐ ஒட்டி இங்கு மீண்டும் நினைவுகூரப்படுகிறது)
தமிழ்நாடு என்ற பெயர் ஏன் முன்னாலே வைக்கவில்லை? இப்போதுதான் அமைந்திருக்கின்றது, இதற்கு யார் காரணம் என்பதையெல்லாம் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிற நேரத்திலே நாம் விவாதித்துக்கொண்டிருப்பது அவ்வளவு தேவையல்ல என்று நான் கருதுகிறேன். உண்மையிலேயே நாம் ஒன்றுபட்டு நிறைவேற்றக் கூடிய தீர்மானங்கள் இப்படி ஒன்று இரண்டாகிலும் வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கிடைக்குமானால் உண்மையிலேயே ஜனநாயகப் பண்புகளை வளர்ப்பதற்கு அவை உறுதுணையாக இருக்கும்.
தமிழ் ஒன்றுதான் இப்படி நம்மை இணைத்து வைத்து இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் திரு. தியாகராஜன் அவர்கள் இவ்வளவு தமிழ் செய்யுட்களைச் சொல்லி இதுவரை நான் கேட்டதில்லை. சட்டசபையில் நானும் அவர்களும் ஒன்றாக இருந்தபோது நம்முடைய மாண்புமிகு கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் திருவாய்மொழியில் செய்யுட்களைச் சொல்லுவார்கள். நம்முடைய திரு. தியாகராஜன் அவர்களுடைய தமிழ், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கும். இன்றைய தினம் தமிழ் என்ற உணர்ச்சி அவரை சங்க இலக்கியத்திலிருந்து, தொல்காப்பியம், லெமூரியா கண்டம் வரைக்கும் கொண்டுபோய்க் கடைசியாக அவர் தமிழ்நாட்டிற்குத் திரும்பிவந்து இது ஏற்றதுதான் என்று சொன்னார். தமிழ் என்பது எல்லாருடைய உள்ளத்திலேயும் உள்ளது.
இத்தகைய அரிய உணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்ற உண்மையை இது எடுத்துக்காட்டுகிறது. அதிலிருந்து தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்கு பெயர் வைப்பதும் ஒரு நல்ல உணர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது. அது சோறு போடுமா, துணி கொடுக்குமா என்றெல்லாம்அவர் சொன்னது வேடிக்கைக்காக என்று நான் கருதுகிறேன்.
பெயர் மாற்றத்திலேயே நிலை மாறிவிடும் என்று யாரும் கருதுவதில்லை. திடீரென்று ஒருவர் தன்னுடைய பெயரை மஹாராஜா என்று மாற்றிக் கொள்வதாலேயே அவர் மஹாராஜாவாக ஆகிவிடமாட்டார். அதனாலேயே திரு. தியாகராஜன் அவர்கள் பெயரில் தியாகம் என்று இருப்பதால் அவர் தியாகம் செய்யவில்லை என்று பொருள் அல்ல. அவர் இந்த நாட்டின் விடுதலைக்காக உழைத்தவர், தியாகம் செய்தவர் என்று எல்லோருக்கும் தெரியும், புரியும். ஆனால் அவர் பெற்றோர்கள் இந்த பெயர் சாமி பெயராக இருக்கின்றதே என்று வைத்திருப்பார்கள். அவர் தம்முடைய செய்கையால் அந்தப் பெயருக்குப் பொருத்தமாகத் தம்மை ஆக்கிக்கொண்டார்கள். அதைப் போல நம்முடைய இடத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைப்பதன் மூலம் நாம் அந்தத் தமிழுக்கு ஏற்றவர்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டுக்குள்ள பண்புகளை நாம் பெற்றக்கொள்ள வேண்டுமென்ற எதிர்கால உணர்ச்சிக்குக்கூட நாம் எடுக்கும் முடிவு துணை செய்யும் என்று கருதுகிறேன். ஏற்கனவே தமிழ்நாடு என்ற பெயரை எந்த அரசியல் கட்சியும் உபயோகிக்கத் தவறவில்லை.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு சோஷலிஸ்ட் கட்சி, தமிழ்நாடு சுதந்திராக் கட்சி என்றுதான் அழைத்து வந்தார்கள். ஆனால் அதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் தமிழ்நாடு என்ற பெயர் பட்டியலில் அமையும் நிலைமையை உண்டாக்கி உறுதி அளிக்கப்படவில்லை. இந்த அரசு வந்தபின் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இந்தியப் பேரரசு பெரிய மனதுவைத்து அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மாண்புமிகு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள், முன்னால் இருந்த தொழில் அமைச்சர் இதற்கு ஒப்புதல் அளித்து ஆதரித்துப் பேசியதாகச் சொன்னார்கள். அவர்கள் நினைவு சரியாக இல்லாமல் அப்படிச் சொன்னார்கள் என்று கருதுகிறேன். அந்த தொழில் அமைச்சர்தான் மெட்றாஸ் என்றுதான் இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு என்றிருந்தால் சர்வதேச ஒப்பந்தங்கள் எல்லாம் திருத்தி எழுதவேண்டியதிருக்கும் என்றும், ஜெர்மனியை ஜெர்மனி என்றுதான் அழைப்பார்கள் என்றும் கூறினார். ஆகையால் நாம் தமிழ்நாடு என்று அழைக்கலாம், வெளியே உள்ளவர்கள் மெட்ராஸ் என்றே அழைக்கட்டும் என்று சொன்னார். ஆனால் இன்றைய தினம் எல்லாக்கட்சியினராலும் தமிழ்நாடு என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது காலத்தின் மாறுதல் என்று கருதுகிறேனே தவிர வேறு ஒன்றுமில்லை.
நாங்கள் வந்திருக்கும் நேரத்தில் அது நிறைவேற்றப்பட்டிருப்பதை வைதீக பாஷையில் குறிப்பிட வேண்டுமென்றால் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அந்தப் பெயர் எனக்கு வரவேண்டுமென்பதற்காக முன்பிருந்தவர்கள் அதைவிட்டுக் கொடுத்திருக்கலாம் என்று கருதுகிறேன். அவர்கள் பல விஷயங்களில் நல்ல பெயர் எடுத்த காரணத்தால் இந்தப் பெயர் வைப்பதை விட்டுவிட்டார்கள் என்று கருதுகிறேன். இந்த அரசு நடத்துகின்ற நேரத்தில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் எல்லாக் கட்சியினரும் இதில் ஒத்துழைத்தது வரவேற்கத்தக்க நிகழ்ச்சியாகும். அதற்காக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உறுப்பினர்கள் முழுமனதோடு தமிழ்நாடு என்ற பெயரை இந்த இராஜ்ஜியத்திற்கு ஏற்றுக்கொள்வதில் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை இந்தியப்பேரரசுக்குத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். ‘ழ' கரம் பற்றி குறிப்பிட்டார்கள். ‘ழ' கரத்தை ஆங்கிலத்தில் எழுதும் போது ஏற்படும் சிக்கல்களை அறிந்தவர்களோடு பழகுகிறவர்களும் ஆங்கிலம் பேசுகிற நாட்டிற்குச் சென்றவர்களும் நன்றாக உணருவார்கள். ‘ழ' என்பதற்கு ஆங்கிலத்தில் எந்த எழுத்துக்களைப் போட்டாலும் அதை ‘ழ' என்று உச்சரிக்க முடியவில்லை பலருக்கு. நான் டெல்லி சென்றிருந்த போது அங்குள்ள பல தலைவர்களிடத்தில் ‘ழ' எப்படி உச்சரிக்க வேண்டுமென்பதற்காக அது எப்படிவரும், நாக்கை உள்பக்கம் தொட்டும், விட்டும் உச்சரிக்க வேண்டுமென்றும் அப்போதுதான் ‘ழ' உச்சரிப்பு வருமென்றும் சொல்லிப் பார்த்தேன். அது வரவில்லை முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அவர்கள் சொல்லும்போது ‘கழகம்' என்று சொல்லாமல் எப்போதும் ‘கழுகம்' ‘கழுகம்' என்றுதான் சொல்லுகிறார்களே தவிர கழகம் என்று வரவில்லை. வெளியே உள்ளவர்களுக்கும் அந்த நிலையிருக்கிறது. வெளியே உள்ளவர்களின் உச்சரிக்கமுடியாத காரணத்தால்தான் ‘ழ' வராமல் போனது.
இப்போது நாம் அடைந்திருக்கிற வெற்றி இதுவரையில் சென்னை ராஜ்ஜியம் என்றும் மெட்றாஸ் ஸ்டேட் என்றும் இருந்தது, இப்போது தமிழ்நாடு என்ற சிறப்புப் பெயரை, அரசியல் சட்ட ரீதியாகப் பெறுவதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இந்த மகிழ்ச்சியில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கு கொள்ளுவார்கள். அதில் எல்லாக் கட்சியினரும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுக்கும், நல்லவற்றிற்கு இவர்கள் ஒன்றுகூடுவார்கள் போலிருக்கிறதே என்ற நம்பிக்கை ஏற்படும் ஆகவே நல்ல காரியங்களில் இந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டுமென்ற வேண்டுகோளை இணைத்து இந்தத் தீர்மானத்தை முழு அளவில் ஏற்றுக்கொண்டு முழுமனதோடு ஏற்று நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.
தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,
சென்னை - 600 024. பேசி - 044-24732713.
கனடாவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நான்கு நாடுகள் பங்குபற்றும் 20 ஓவர்கள் அடங்கிய துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.











சிறிலங்கா படையினரின் உக்கிரமான தாக்குதல்கள் நடைபெற்று வரும் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைமடுச் சந்தியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது.








சிறிலங்கா படையினரின் வவுனியா தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்த்தியாக திட்டமிட்டு நடத்திய தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தின் பொய்ப்பிரசார முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றது என்று இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான றோவின் முன்னாள் பிரதிச்செயலரும் அனைத்துலக விவகார ஆய்வாளருமான பி.இராமன் தெரிவித்துள்ளார்.
தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழீழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயம் என்று தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" நடத்திய கருத்துக்கணிப்பில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.




