Tuesday, August 26, 2008

தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது: பா.நடேசன்

தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது: பா.நடேசன்

தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் 205 ஆவது ஆண்டு சிறப்பு மலருக்கு வழங்கிய வாழ்த்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன்.

செவிவழிக் கதைகளுடன் கலந்து சொல்லப்பட்டு வந்த பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை ஆவண நிரூபணங்கள் கொண்ட உண்மை வரலாறாக ஆக்கும் முயற்சி என்பது காலத்தின் தேவையாகும்.

இந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் பணியினை முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவல் கழகம் தனது கடமையாக எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.

வரலாறு என்பது ஒரு இனத்தின் உயிரைப் போன்றது. வரலாறு ஆவணப்படுத்தாவிடின் குறித்த இனம் அடையாளம் தெரியாதபடி கால ஓட்டத்தில் அழிந்துவிடும். இதனால்தான் ஆக்கிரமித்த இனத்தின் வரலாற்றை அழித்து விடுவதில் ஆக்கிரமிப்பாளர்கள் கவனம் எடுக்கின்றனர்.

தமிழரின் வரலாற்றை அழித்து விடுவதில் சிங்களப் பேரினவாதிகள் பகீரத முயற்சிகள் எடுப்பதும் நாம் அறிந்தே தமிழரின் வாழ்விடங்களின் தொன்மைப் பெயர்களை அழித்து சிங்களப் பெயர்கள் சூட்டுவதும், தமிழரின் ஆவணக் காப்பகங்கள், நூலகங்களை எரித்து அழிப்பதும் தமிழரின் வரலாற்றை தமிழ் மாணவர்களின் பாடநூல்களில் இருந்து விலக்குவதும் என்று தமிழரின் வரலாற்றை அழிக்க சிங்களப் பேரினவாதிகள் முயற்சித்தபடியுள்ளனர்.

இதனை முறியடித்து தமிழரின் வரலாற்றை எமது சந்ததியினர் அறியும் வகையில் நூலுருவாக்கிப் பரப்புவது தமிழ் அறிஞர்களின் வரலாற்றக் கடமையாகும். ஆங்கிலேயரின் ஆயுத பலத்திற்கு அஞ்சாமல் விடுதலை உணர்வுடன் போரிட்டவன்தான் மாவீரன் பண்டாரவன்னியன்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வீரத்துடன் அந்நியரை எதிர்த்துப் போராடிய அந்த மாவீரனது கதைகள் எம்மைப் பெருமை கொள்ள வைக்கின்றன. அந்தப்போர்கள் நடந்த ஊர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது மனதில் உணர்வெழுச்சி பொங்குகின்றது.

இதற்கெல்லாம் வரலாற்று உணர்வுதான் காரணம். வரலாற்று உணர்வென்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு இனம் தனது மண்ணின் பெருமைகளை உயர்விலை கொடுத்துக் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் இந்த வரலாற்று உணர்வுதான் காரணமாக இருக்கின்றது.

பண்டாரவன்னியன் போன்று இந்த மண்ணின் வீரப்புதல்வர்களது, வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அந்த வீரவரலாறுகள் எமது எதிர்காலச் சந்ததிக்கு விடுதலையுணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும் என்றார் அவர்.

No comments: