ஈழம் தொடர்பான
அவதூறுகளைத் தடை செய்க
சனவரி 21 -
தமிழீழ மக்களைப் படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து, சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களிலும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் கவிஞர் மேத்தாவும், மதுரையில் தலித் விடுதலை இயக்க அமைப்பாளர் இ.பாக்கியராசுவும் போராட்டத்தைத் தொடக்கிவைத்தனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் முடித்து வைத்தார். வழக்கறிஞர் தமிழ்ச் சங்கத்தலைவர் இரா.மனோகரன் மதுரைப் போராட்டத்தை நிறைவடையச் செய்தார். பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையிலும், வடக்கு மாவட்டங்களின் செயலர் அன்புத் தென்னரசன், மாநில இளைஞரணிச் செயலர் ஆ.சிங்கராயர் ஆகியோர் முன்னிலையிலும் சென்னையில் போராட்டம் நடைபெற்றது, மதுரையில், தென் மாவட்டங்களின் செயலர் நா.இராசா தலைமை வகிக்க, மதுரை மாவட்டச் செயலர் இரா.ஜெயபால் சண்முகம், முகவை மாவட்டச் செயலர் மறவர்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழீழம் பற்றிய சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்துமே இங்கு குற்றச்செயல்களாக ஒருசிலரால் ஆக்கப்படுகின்றன. தமிழீழம் என்றாலே விடுதலைப்புலிகள் என்றும், அவ்வியக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதால் அதுகுறித்துப் பேசுவதே தேச விரோதம் என்றும் சிலர் இங்கே வினோதமான மொழிபெயர்ப்புகளைச் செய்கின்றனர். அன்றாடம் தமிழ் மக்களின் மீது குண்டுகளை வீசும் இலங்கை அரசு, இந்தியாவிடமிருந்து நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பல உதவிகளைப் பெறுகின்றது. பத்து நாட்களுக்கு முன்பு வன்னியில் ஒரு பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசப்பட்டிருக்கின்றது. அங்கு 790 பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு பிள்ளைகள் இல்லாத காரணத்தால் அவர்கள் உயிர்தப்பிவிட்டனர். இல்லையேல் எல்லாப் பிஞ்சுகளும் மாண்டிருக்கும். இவ்வளவு கொடுமையான அரச பயங்கரவாதம் பற்றி, இந்தியாவும் சரி, உலக நாடுகளும் சரி இன்றுவரை வாய்த்திறக்கவில்லை. இந்நிலையில் பிப்ரவரி நான்காம் தேதி கொழும்பில் நடைபெறவிருக்கும் அவர்களின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று, இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கிற்கு அழைப்பு.
நெருப்பில் நின்று மாலை சூட்டிக்கொள்வதா என்னும் கேள்வியோடு, இருபது நாட்களுக்கு முன்பு திராவிடர் கழகம் சென்னையில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தியது. கொழும்பு விழாவில் மன்மோகன்சிங் கலந்துகொள்ளக் கூடாது என்னும் கோரிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட அவ்வார்ப்பாட்டத்திற்கு கி.வீரமணி தலைமை ஏற்றார். வேறு கட்சிகளும், அமைப்புகளும் கூட அக்கோரிக்கையை முன் வைத்தனர். இறுதியாக, ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் மன்மோகன்சிங் தன் பயணத்தைத் தள்ளிவைத்துவிட்டார்.
அந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு பேரவையின் பட்டினிப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து மிகப் பெரிய அளவில் விடுதலைச் சிறுத்தைகளால் கூட்டப்பட்ட கருத்துரிமை மீட்பு மாநாடும் தமிழகத்தில் ஓர் அசைவை ஏற்படுத்தியுள்ளன. அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் இன்று விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்றும், திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்புகின்றனர்.
சட்டமன்றத்திலேயே, உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, வாய்மொழி ஆதரவிற்காக யாரையும் கைது செய்ய முடியாது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். எனினும் காங்கிரஸ் கட்சியின் துணையோடு இன்றைய ஆட்சி நடந்து கொண்டிருப்பதால், அவ்வாறு ஆதரிப்பவர்களைக் கைது செய்வது குறித்துத் தனிச்சட்டம் கொண்டுவருவது பற்றி ஆராயப்படும் என்றும் கூறியுள்ளார். ஒரு நெருக்கடியான நிலைக்குத் தமிழக அரசைக் கொண்டு போவதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் சிறு வெற்றியைப் பெற்றுள்ளனர் என்பது உண்மைதான்.
காங்கிரஸ் கட்சியின் தலைவியாக இருக்கிற சோனியா காந்தி அம்மையார் பல நேரங்களில் நிதானமாகச் செயல்படுகிறார். ஆனால் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம்' காட்டுவதற்காக தவறான பாதையில் தொடர்ந்து பயணம் செய்கின்றனர். ஒரு கருத்தை வெளியிடுவது எப்படிக் குற்றமாகும் என்று அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. குசராத்தின் நரேந்திர மோடியை மரண வியாபாரி என்று விமர்சனம் செய்தார் சோனியா காந்தி. அந்த மரண வியாபாரியை மலர் தூவி வரவேற்கும், உள்ளுர் காங்கிரஸ் நண்பர்கள், தமிழீழ மக்களை மட்டும் தடிகொண்டு விரட்ட முயல்வது எந்த வகையில் நியாயம்?
அன்றாடம் விடுதலைப்புலிகளைப் பற்றி அவதூறுகளும், வதந்திகளும் பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதுவும் ஒருவிதமான பயங்கரவாதம்தான். ஆனால் அந்தக் கூற்றுகளில் உள்ள பொய்மையை யாராவது எடுத்துச் சொன்னால், அவர்களைப் பயங்கரவாதிகள் என்கின்றனர் காங்கிரசார்.
தமிழ்நாட்டிலிருந்து புலிகளுக்கு ஆயுதம் கடத்தப்படுவதாக அடிக்கடி சொல்லப்படுகிறது. அவர்கள் உலகிலேயே மிக நவீனமான கருவிகளைத் தங்கள் இனத்தின் தற்காப்புக்காக இன்று பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களிடம் இல்லாத எந்த நவீனமான ஆயுதம் இன்று தமிழ்நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. அதைப்போலவே, லண்டனில் இருந்து கொண்டு திருப்பூருக்கு ஆங்கிலத்திலும் தமிழிலுமாய்த் தொலைபேசி புலிகள் பணம் கேட்கின்றனர் என்று ஒரு பச்சைப் பொய்யும் இங்கு கட்டவிழ்த்து விடப்படுகிறது. நல்ல தமிழ் பேசும் அவர்கள், பணத்திற்காய்க் கூட அரைகுறை ஆங்கிலம் பேசியிருக்க வாய்ப்பில்லை. அது மட்டுமில்லாமல், திருப்பூரிலிருந்து பணம் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை என்பதையும், இன்றைக்கும் திருப்பூரையே வாங்கக்கூடிய நிலையில்தான் உள்ளனர் என்றும் அவர்களின் எதிரிகளே குறிப்பிடுகின்றனர். யார் ஒருவர் ஈழத்தமிழில் பேசினாலும், உடனே அவர்களை விடுதலைப்புலிகள் என்று முத்திரை குத்திவிடும் ஒரு விபரீதப் போக்கு இங்கு எப்போதும் உள்ளது.
இன்று சிறீலங்காவில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா மீது இன்றைக்கும் பல வழக்குகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஒரு குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. பல கொலை வழக்குகளும் உள்ளன. புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து போன கருணா கடவூச்சீட்டு மோசடிக்காக லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் போன்றவைகளில் பழகிப்போன சில துரோகக் கும்பல்கள் ஈடுபடக்கூடிய செயல்களில் எல்லாம் ஒரு விடுதலை இயக்கத்தைத் தொடர்புபடுத்திக் கொச்சைப்படுத்துவது மிக மோசமான செயலாகும்.
இந்தச் சூழலில் ஆர்ப்பாட்டமாய், பட்டினிப்போராய், மாபெரும் மாநாடாய்க் கருத்துரிமை மீட்புக் களத்தில் இன்னும் நம் பணி நிறையவே இருக்கிறது.
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.
தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,
சென்னை - 600 024. பேசி - 044-24732713.
1 comment:
Thank you for re-publishing this one.
Post a Comment