Tuesday, August 26, 2008

மாவீரன் பண்டாரவன்னியன் ஆங்கிலேயரின் கோட்டையினை தாக்கியழித்த 205 ஆவது வெற்றிவிழா



தமிழீழத் தேசியத் தலைவரினால் 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு சிறிலங்காப் படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டு, மீட்கப்பட்ட முல்லைத்தீவு மண்ணில் 1803 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் முல்லைத்தீவு ஆங்கிலேயப் படையினரின் கோட்டையினை மாவீரன் பண்டாரவன்னியன் தாக்கியழித்ததன் 205 ஆவது வெற்றிவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை முல்லைத்தீவு மாவட்ட தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்பாளர் சர்வன், புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், முள்ளியவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மு.உமைநேசன், ஒட்டிசுட்டான், நெடுங்கேணிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் ஆகியோர் ஏற்றினர்.

தமிழீழத் தேசியக் கொடியினை கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் ஏற்றினார்.

பண்டாரவன்னியன் கொடியினை பண்டாரவன்னியன் அறங்காவலர் கழகச் செயலாளர் சி.வேதவனம் ஏற்றினார்.

பண்டாரவன்னியன் நினைவுக்கல்லுக்கான சுடரினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் ஏற்றினார்.

நினைவுக்கல்லினை தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் திரைநீக்கம் செய்தார்.

நினைவுக்கல்லுக்கான மலர்மாலையினை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.பார்த்தீபன் சூட்டினார்.

நிகழ்வரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பண்டாரவன்னியனின் திருவுருவப்படத்திற்கு ச.கனகரத்தினம் சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார்.

பண்டாரவன்னியனின் திருவுருவப்படத்திற்கு பண்டாரவன்னியன் அறங்காவல் கழக உபதலைவர் க.சரவணபவன் மலர்மாலை சூட்டினார்.

தலைமையுரையினை ஒட்டிசுட்டான் உதவி அரசாங்க அதிபர் சுபாஜினி மதியழகன் நிகழ்த்தினார்.

விழாவுரையினை க.பார்த்தீபன் நிகழ்த்தினார்.

சிறப்புரையினை தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஆற்றினார்.

சிறப்புரையினைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவருக்கான மாவீரன் பண்டாரவன்னியனின் 205 ஆவது ஆண்டு வெற்றிவிழா மலர் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது.

மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றிவிழாவை முன்னிட்டு சான்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமாரின் துணைவியார் அம்பிகா நந்தகுமார், கலைஞர் பொன்னையா சேதுபதி, கலைஞர் சு.கணபதிப்பிள்ளை, கலைஞர் நடேசு செல்லத்தம்பி, கலைஞர் மாணிக்கம் ரூபமூர்த்தி ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

அத்துடன் மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றி விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

பேச்சுப் போட்டியில் கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய மாணவி ந.சாமந்தி, கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி த.அனோஜா, அ.சகாயராணி, கற்சிலைமடு அரசினர்த் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி யோ.தீபனா, கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவி க.சுரேந்தினி ஆகியோர் பரிசில்களைப் பெற்றனர்.

கட்டுரைப் போட்டியில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவி ப.தனோஜிகா, கற்சிலைமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி த.கீதா, கிளிநொச்சி தமிழ்ச்சோலை வித்தியாலய மாணவி சு.மணிமேகலை ஆகியோர் பரிசில்களைப் பெற்றனர்.

கவிதைக்கான பரிசினை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன் வே.சுதன் பெற்றார்.

No comments: