புலம்பெயர் தமிழர்களின் பொங்கு தமிழ் எழுச்சிக்கு தேசியத் தலைவர் வாழ்த்து
புலம்பெயர் தமிழ் மக்கள், தாயக விடுதலையை பலப்படுத்துவதற்காக பெரும் எழுச்சிகொண்டு நிகழ்த்தி வருகின்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழ் மக்களின் பொங்கு தமிழ் எழுச்சி குறித்து கருத்து தெரிவிக்கும் போது தேசியத் தலைவரின் வாழ்த்துக்களை குறிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகின்ற அதேவேளை பெரும் பொய்களை உலகளவில் பரப்புரை செய்து வருகின்றது.
தமிழ் மக்களை கொன்றொழித்துக்கொண்டு உலகையும் ஏமாற்றி வருகின்ற சிறிலங்கா அரசு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக உலகளவில் சித்தரித்து வருகின்றது.
சிறிலங்காவின் இந்தப் பொய்ப் பரப்புரையை தகர்த்து எறிந்து உலகம் முழுமைக்கும் தமிழ்மக்கள் பொங்கு தமிழாக தமது அரசியல் அபிலாசைகளை பேரெழுச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
இது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்ற அதேவேளை களத்தில் போராடும் போராளிகளுக்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளுக்கு அவர்களின் விருப்ப மொழியில் தமிழ் மக்கள் தாயக விடுதலையின் நியாயத்தையும் தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகளுக்கு தமிழ் மக்கள் உரித்துடையவர்கள் என்பதையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
உரிமைக்கானதுதான் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதை அவர்கள் வலுவாக எடுத்துரைக்கின்றனர். அதிலும் கனடாவில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு லட்சம் தமிழ்மக்கள் திரண்டு எழுந்திருப்பதும் நியூசிலாந்து- அவுஸ்திரேலியா- இத்தாலி-ஜேர்மனி- பிரான்ஸ்- நெதர்லாந்து- பெல்ஜியம்- நோர்வே- சுவீடன்- டென்மார்க்- அவுஸ்திரேலியா- தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதுவரை பொங்கு தமிழாக எங்களின் புலம்பெயர் உறவுகள் தாயகத்தின் போராட்டத்தை வலுப்படுத்துவதில் பேரெழுச்சியை காட்டியுள்ளனர்.
அடுத்து லண்டனில் பொங்கு தமிழ் நடைபெறவுள்ளது. தாயக தாகத்துடன் புலம்பெயர்ந்த தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இந்த எழுச்சிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதேவேளை பெருமிதமும் கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்ட பா.நடேசன், விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் இத்தகைய செயற்பாடுகள் தொடரவேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment