புலிகளின் வானூர்தி தாக்குதலில் காயமடைந்த இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு கொழும்பில் தொடர்ந்து சிகிச்சை |
வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தின் மீது நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மும்முனைத் தாக்குதலில் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ந்தும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. |
சிறிலங்கா வான்படையின் ராடர் பிரிவில் பணிபுரிந்த இந்த இந்த இருவரும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்து உடனடியாகவே கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர். இருந்தபோதிலும், வவுனியா முகாமில் வெளிநாட்டவர்கள் எவரும் பணிபுரியவில்லை என சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல நேற்று முன்நாள் தெரிவித்திருந்தார். "இவ்வாறான நிலைமைகளைக் கையாள்வதற்கு எம்மிடம் போதியளவு ஆட்கள் உள்ளார்கள். வெளிநாட்டவர்கள் எமது படைகளுடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள் எனக்கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை" எனவும் அமைச்சர் நேற்று முன்நாள் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்திருந்தார். காயமடைந்த இரண்டு இந்திய தொழில்நுட்ப நிபுணர்களான ஏ.கே.தாகூர், சிந்தமாணி ராவுட் ஆகிய இருவரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து வவுனியா முகாமில் வைக்கப்பட்டுள்ள இந்திய ராடர் சாதனத்தை பராமரிப்பதற்காகவும், அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் வந்து தங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் இந்த ராடர் சாதனம் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகள் தமது முதலாவது வான் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து இதன் தரம் மேம்படுத்தப்பட்டது. இதற்கான உதவிகளையும் இந்தியாவே வழங்கியது. வவுனியா முகாமில் இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றியதை ஏற்றுக்கொள்ளும் இந்திய தூதரக அதிகாரி ஒருவர், "காயமடைந்த இருவரும் தொழில்நுட்ப நிபுணர்களாகப் பணிபுரிந்தவர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ராடர் சாதனத்தைப் பராமரிப்பதற்காக இவர்கள் காலத்துக்குக் காலம் கிரமமான முறையில் சிறிலங்காவுக்கு வந்து செல்கின்றார்கள்" எனவும் குறிப்பிட்டார். காயமடைந்த இந்த இருவரும் தீவிரமான மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வன்னி கூட்டுப் படைத் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகளில் தரை மற்றும் வான் வழியாக நேற்று முன்நாள் தொடுத்த கடுமையான தாக்குதலில் படையினர் குறைந்தபட்சம் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமிலிருந்த இந்தியா வழங்கிய ராடர் சாதனம் தாக்கியழிக்கப்பட்ட போது அதற்கான தொழில்நுட்பவியலாளர்களாகப் பணிபுரிந்த இரண்டு இந்தியர்கள் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமை தெரிந்ததே. நன்றி புதினம் |
Thursday, September 11, 2008
அன்பளிப்பு ராடார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment