Tuesday, February 05, 2008

தமிழ்தான் நம்மை இணைக்கிறது

தமிழ்தான் நம்மை இணைக்கிறது

(மெட்ராஸ் ஸ்டேட் என்றிருந்த பெயரைத் தமிழ்நாடு என மாற்றுவதற்கான சட்டத்தை 1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் முன்மொழிந்து ஆற்றிய உரை, அவருடைய நினைவு நாளான பிப்ரவரி 3ஐ ஒட்டி இங்கு மீண்டும் நினைவுகூரப்படுகிறது)

தமிழ்நாடு என்ற பெயர் ஏன் முன்னாலே வைக்கவில்லை? இப்போதுதான் அமைந்திருக்கின்றது, இதற்கு யார் காரணம் என்பதையெல்லாம் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிற நேரத்திலே நாம் விவாதித்துக்கொண்டிருப்பது அவ்வளவு தேவையல்ல என்று நான் கருதுகிறேன். உண்மையிலேயே நாம் ஒன்றுபட்டு நிறைவேற்றக் கூடிய தீர்மானங்கள் இப்படி ஒன்று இரண்டாகிலும் வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கிடைக்குமானால் உண்மையிலேயே ஜனநாயகப் பண்புகளை வளர்ப்பதற்கு அவை உறுதுணையாக இருக்கும்.

தமிழ் ஒன்றுதான் இப்படி நம்மை இணைத்து வைத்து இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் திரு. தியாகராஜன் அவர்கள் இவ்வளவு தமிழ் செய்யுட்களைச் சொல்லி இதுவரை நான் கேட்டதில்லை. சட்டசபையில் நானும் அவர்களும் ஒன்றாக இருந்தபோது நம்முடைய மாண்புமிகு கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் திருவாய்மொழியில் செய்யுட்களைச் சொல்லுவார்கள். நம்முடைய திரு. தியாகராஜன் அவர்களுடைய தமிழ், வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்கும். இன்றைய தினம் தமிழ் என்ற உணர்ச்சி அவரை சங்க இலக்கியத்திலிருந்து, தொல்காப்பியம், லெமூரியா கண்டம் வரைக்கும் கொண்டுபோய்க் கடைசியாக அவர் தமிழ்நாட்டிற்குத் திரும்பிவந்து இது ஏற்றதுதான் என்று சொன்னார். தமிழ் என்பது எல்லாருடைய உள்ளத்திலேயும் உள்ளது.

இத்தகைய அரிய உணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்ற உண்மையை இது எடுத்துக்காட்டுகிறது. அதிலிருந்து தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்கு பெயர் வைப்பதும் ஒரு நல்ல உணர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது. அது சோறு போடுமா, துணி கொடுக்குமா என்றெல்லாம்அவர் சொன்னது வேடிக்கைக்காக என்று நான் கருதுகிறேன்.

பெயர் மாற்றத்திலேயே நிலை மாறிவிடும் என்று யாரும் கருதுவதில்லை. திடீரென்று ஒருவர் தன்னுடைய பெயரை மஹாராஜா என்று மாற்றிக் கொள்வதாலேயே அவர் மஹாராஜாவாக ஆகிவிடமாட்டார். அதனாலேயே திரு. தியாகராஜன் அவர்கள் பெயரில் தியாகம் என்று இருப்பதால் அவர் தியாகம் செய்யவில்லை என்று பொருள் அல்ல. அவர் இந்த நாட்டின் விடுதலைக்காக உழைத்தவர், தியாகம் செய்தவர் என்று எல்லோருக்கும் தெரியும், புரியும். ஆனால் அவர் பெற்றோர்கள் இந்த பெயர் சாமி பெயராக இருக்கின்றதே என்று வைத்திருப்பார்கள். அவர் தம்முடைய செய்கையால் அந்தப் பெயருக்குப் பொருத்தமாகத் தம்மை ஆக்கிக்கொண்டார்கள். அதைப் போல நம்முடைய இடத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைப்பதன் மூலம் நாம் அந்தத் தமிழுக்கு ஏற்றவர்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டுக்குள்ள பண்புகளை நாம் பெற்றக்கொள்ள வேண்டுமென்ற எதிர்கால உணர்ச்சிக்குக்கூட நாம் எடுக்கும் முடிவு துணை செய்யும் என்று கருதுகிறேன். ஏற்கனவே தமிழ்நாடு என்ற பெயரை எந்த அரசியல் கட்சியும் உபயோகிக்கத் தவறவில்லை.

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு சோஷலிஸ்ட் கட்சி, தமிழ்நாடு சுதந்திராக் கட்சி என்றுதான் அழைத்து வந்தார்கள். ஆனால் அதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் தமிழ்நாடு என்ற பெயர் பட்டியலில் அமையும் நிலைமையை உண்டாக்கி உறுதி அளிக்கப்படவில்லை. இந்த அரசு வந்தபின் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதும் இந்தியப் பேரரசு பெரிய மனதுவைத்து அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மாண்புமிகு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள், முன்னால் இருந்த தொழில் அமைச்சர் இதற்கு ஒப்புதல் அளித்து ஆதரித்துப் பேசியதாகச் சொன்னார்கள். அவர்கள் நினைவு சரியாக இல்லாமல் அப்படிச் சொன்னார்கள் என்று கருதுகிறேன். அந்த தொழில் அமைச்சர்தான் மெட்றாஸ் என்றுதான் இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு என்றிருந்தால் சர்வதேச ஒப்பந்தங்கள் எல்லாம் திருத்தி எழுதவேண்டியதிருக்கும் என்றும், ஜெர்மனியை ஜெர்மனி என்றுதான் அழைப்பார்கள் என்றும் கூறினார். ஆகையால் நாம் தமிழ்நாடு என்று அழைக்கலாம், வெளியே உள்ளவர்கள் மெட்ராஸ் என்றே அழைக்கட்டும் என்று சொன்னார். ஆனால் இன்றைய தினம் எல்லாக்கட்சியினராலும் தமிழ்நாடு என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது காலத்தின் மாறுதல் என்று கருதுகிறேனே தவிர வேறு ஒன்றுமில்லை.

நாங்கள் வந்திருக்கும் நேரத்தில் அது நிறைவேற்றப்பட்டிருப்பதை வைதீக பாஷையில் குறிப்பிட வேண்டுமென்றால் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அந்தப் பெயர் எனக்கு வரவேண்டுமென்பதற்காக முன்பிருந்தவர்கள் அதைவிட்டுக் கொடுத்திருக்கலாம் என்று கருதுகிறேன். அவர்கள் பல விஷயங்களில் நல்ல பெயர் எடுத்த காரணத்தால் இந்தப் பெயர் வைப்பதை விட்டுவிட்டார்கள் என்று கருதுகிறேன். இந்த அரசு நடத்துகின்ற நேரத்தில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் எல்லாக் கட்சியினரும் இதில் ஒத்துழைத்தது வரவேற்கத்தக்க நிகழ்ச்சியாகும். அதற்காக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர்கள் முழுமனதோடு தமிழ்நாடு என்ற பெயரை இந்த இராஜ்ஜியத்திற்கு ஏற்றுக்கொள்வதில் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை இந்தியப்பேரரசுக்குத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். ‘ழ' கரம் பற்றி குறிப்பிட்டார்கள். ‘ழ' கரத்தை ஆங்கிலத்தில் எழுதும் போது ஏற்படும் சிக்கல்களை அறிந்தவர்களோடு பழகுகிறவர்களும் ஆங்கிலம் பேசுகிற நாட்டிற்குச் சென்றவர்களும் நன்றாக உணருவார்கள். ‘ழ' என்பதற்கு ஆங்கிலத்தில் எந்த எழுத்துக்களைப் போட்டாலும் அதை ‘ழ' என்று உச்சரிக்க முடியவில்லை பலருக்கு. நான் டெல்லி சென்றிருந்த போது அங்குள்ள பல தலைவர்களிடத்தில் ‘ழ' எப்படி உச்சரிக்க வேண்டுமென்பதற்காக அது எப்படிவரும், நாக்கை உள்பக்கம் தொட்டும், விட்டும் உச்சரிக்க வேண்டுமென்றும் அப்போதுதான் ‘ழ' உச்சரிப்பு வருமென்றும் சொல்லிப் பார்த்தேன். அது வரவில்லை முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அவர்கள் சொல்லும்போது ‘கழகம்' என்று சொல்லாமல் எப்போதும் ‘கழுகம்' ‘கழுகம்' என்றுதான் சொல்லுகிறார்களே தவிர கழகம் என்று வரவில்லை. வெளியே உள்ளவர்களுக்கும் அந்த நிலையிருக்கிறது. வெளியே உள்ளவர்களின் உச்சரிக்கமுடியாத காரணத்தால்தான் ‘ழ' வராமல் போனது.

இப்போது நாம் அடைந்திருக்கிற வெற்றி இதுவரையில் சென்னை ராஜ்ஜியம் என்றும் மெட்றாஸ் ஸ்டேட் என்றும் இருந்தது, இப்போது தமிழ்நாடு என்ற சிறப்புப் பெயரை, அரசியல் சட்ட ரீதியாகப் பெறுவதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இந்த மகிழ்ச்சியில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கு கொள்ளுவார்கள். அதில் எல்லாக் கட்சியினரும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுக்கும், நல்லவற்றிற்கு இவர்கள் ஒன்றுகூடுவார்கள் போலிருக்கிறதே என்ற நம்பிக்கை ஏற்படும் ஆகவே நல்ல காரியங்களில் இந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டுமென்ற வேண்டுகோளை இணைத்து இந்தத் தீர்மானத்தை முழு அளவில் ஏற்றுக்கொண்டு முழுமனதோடு ஏற்று நிறைவேற்றிக் கொடுக்க வேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

No comments: