பதிவுகள்
விடுதலைச் சிறுத்தைகள்
கடலெனத் திரண்ட
கருத்துரிமை மாநாடு
-சுப.வீரபாண்டியன்
“வங்க தேச விடுதலை நியாயம்
பாலஸ்தீனப் போர்க்களம் நியாயம்
கிழக்குத் தீமோர் விடுதலை நியாயம்
எரித்திரியாவின் எழுச்சி நியாயம்
ஈராக் மக்களின் யுத்தம் நியாயம்
அயர்லாந்தில் நீ வைத்திடும் நியாயம்
ஐ.நா. சபையில் வாதிடும் நியாயம்
இத்தனை நியாயமும் இந்திய நியாயம்
ஈழத்துக் கில்லையே இதென்ன நியாயம்?”
என்று கேட்பார் கவிஞர் தணிகைச்செல்வன் இந்திய அரசு ஈழ மக்களுக்கு நியாயம் செய்யவில்லை என்பது ஒரு புறமிருக்க, ஈழ மக்களுக்காக நாம் குரல் கொடுப்பதைக் கூட பயங்கரவாதம் என்று பறைசாற்றும் சிலருக்கு துணைபோகும் அநியாயமும் இங்கு நடக்கிறது.
17 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற துன்பியல் நிகழ்வான இராசீவ் காந்தி கொலையை மட்டுமே மய்யப்படுத்தி, ஈழ ஆதரவையே பயங்கரவாதமாகக் காட்டமுயலும் போக்கு இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பார்ப்பனியக் கும்பல் ஒருபுறமும், உள்ளூர்க் காங்கிரஸ்காரர்கள் மறுபுறமுமாக இந்தப் பல்லவியைத் தொடர்ந்து பாடி வருகின்றனர்.
பொடா வழக்கில் எங்களுக்குப் பிணை வழங்கித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குறிப்பை இங்கு நினைவுகூர்வது பொருத்தமானது. 16.12.2003 அன்று நீதிபதிகள் இராஜேந்திர பாபுவும், ஜி.பி. மாத்தூரும், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு வாய்மொழி ஆதரவு வழங்குவது குற்றமாகாது என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். அன்றைய மத்திய அரசின் கருத்தும் அதுவாகவே இருந்தது. எனினும் இதனையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், விடுதலைப் புலிகளைப் பற்றி மட்டுமன்று, தமிழீழத்தைப் பற்றிப் பேசுவதே குற்றச் செயல் என்பது போல இங்கு திட்டமிட்டு கருத்துகள் பரப்பப்படுகின்றன.
இச்சூழலில், விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில், கருத்துரிமை மீட்பு மாநாடு ஒன்று, சென்னையில், மொழிப்போர் வீரர்கள் நாளான 25.01.2008 அன்று நடத்தப்பட்டது. திரும்பிய பக்கமெல்லாம் தலைகள். எள் விழ இடமில்லாத மக்கள் கூட்டம். ‘பல்லாயிரக்கணக்கில்' என்பது எவ்விதத்திலும் மிகைப்படுத்தப்படாத சொல். அந்த மக்கள் வெள்ளத்தின் நடுவில், ‘கண்டனமும், இரங்கலும் பயங்கரவாதமா' என்ற கேள்வியோடு மாநாடு தொடங்கியது.
சரியான தருணத்தில் சரியான மாநாட்டைக் கூட்டியுள்ள சிறுத்தைகள் கண்டிப்பாய்ப் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவ்வமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு தமிழினம் என்றும் நன்றி சொல்லும்.
மாநாட்டில் முன்வைக்கப்பட்ட செய்தி ஒன்றே ஒன்றுதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று எவரும் வலியுறுத்தவில்லை. அப்படி வலியுறுத்தவும் முடியாது. எந்த ஒன்றையும் ஏற்பதும், மறுப்பதும் அவரவர் உரிமை. ஆனால் அவ்வியக்கத்தை எதிர்ப்பவர்கள் மட்டும், எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை வெளியிடலாம், ஆதரிப்பவர்கள் வாய்திறக்கவே கூடாது என்பது கருத்துரிமையைக் காலில் போட்டு மிதிப்பதாகாதா என்பதே அங்கு வைக்கப்பட்ட வாதம். அதைப்போலவே தடையை நீக்கவேண்டும் என்று கோருவதும், எந்த ஒரு குடிமகனுக்கும் உரிய அடிப்படை உரிமையாகும். அதனையும் இங்கு சிலர் மறுப்பது, முற்றுமுழுதான ஜனநாயக மறுப்பாகும்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்தியாவில் மூன்று முறை அரசினால் தடை செய்யப்பட்டிருந்தது. அண்ணல் காந்தியடிகள் கொலை செய்யப்பட்டதையடுத்து 1948ஆம் ஆண்டும், 1975இல் நெருக்கடி நிலைக் காலத்திலும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு 1992ஆம் ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. மூன்று முறையும் அத்தடையை நீக்க வேண்டும் என்று அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்களும், ஆதரவாளர்களும் தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டுதான் இருந்தனர். 1949இல் காந்தியாரின் நெருங்கிய நண்பரான பிர்லாவே அந்த முயற்சியை முன்னெடுத்தார். வல்லபாய் படேல் அக்கருத்தை அன்றைய தலைமை அமைச்சர் நேருவிடம் கொண்டு சென்றார். அப்போது காந்தியாரைக் கொன்ற இயக்கத்திற்கா ஆதரவு என்று எவரும் கேட்கவில்லை.
பஞ்சாப் பொறிகோயிலின் உள் நுழைந்து, பிந்தரன் வாலேயை இந்திய இராணுவம் சுட்டுக் கொன்ற பிறகு சீக்கியர்கள் சிலரால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதன் விளைவாக அன்று சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்பது ஒரு கசப்பான உண்மைதான் எனினும், சீக்கிய இனமே குற்றவாளி இனம் என்று யாரும் கருதவில்லை. அந்த இனத்தைச் சார்ந்த மன்மோகன்சிங் இன்றைக்கு இந்தியாவின் தலைமை அமைச்சராகவே ஆக்கப்பட்டுள்ளார்.
காந்தியடிகளின் கொலைக்கும், இந்திரா காந்தியின் கொலைக்கும் ஒரு நியாயம், இராசீவ் காந்தியின் கொலைக்கு மட்டும் இன்னொரு நியாயமா? என்னும் வினாவை எல்லோர் நெஞ்சிலும் மாநாடு எழுப்பியது. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் உணர்ச்சி மிகுந்த உரையாற்றிய தொல்.திருமாவளவன் மிக அழுத்தமாக சில கேள்விகளை முன்வைத்தார். “ஓர் இயக்கத்தை எதிர்ப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டென்றால், அதை ஆதரிப்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. கடவுள் உண்டு என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்றால், இல்லை என்று மறுப்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு, சாதி வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்றால், சாதியை ஒழிப்போம் என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு” என்று அவர் முழக்கமிட்டபோது அரங்கம் அதிர்ந்து அடங்கியது.
சாதாரண மக்களாகிய எங்களுக்கு மட்டுமன்று, தமிழகத்தின் முதலமைச்சர், சமத்துவப் பெரியார் தலைவர் கலைஞருக்கே கூட அந்த உரிமையை இங்கு சிலர் மறுக்கின்றனர் என்று சொன்ன அவர், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு இரங்கல் கவிதை எழுதியதைக் கூட பயங்கரவாதத்திற்குத் துணை போவதென்று சிலர் கூறும் கேலிக்கூத்தைக் குறிப்பிட்டு எள்ளி நகையாடினார்.
மாநாடு தொடங்கிய போது, மாண்டுபோன நடராசன், தாளமுத்து உள்ளிட்ட மொழிப்போர் மாவீரர்களுக்காக ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. இரைச்சலோ, பேச்சோ நடமாட்டமோ இல்லாமல் அமைதி காக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டதை ஏற்று, அந்த மாபெரும் மக்கள் கூட்டம் ஒரு மௌனத் தீவாய் மாறிப் போனது. அதன்பிறகு அங்கு எழுந்த, கருத்துரிமைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டுகள், ஈழம் பற்றிப் பேசுவதற்குக் கூட அஞ்சி அடங்கிக் கிடக்கும் தமிழகத்தின் மௌனத்தை மாற்றும் தொடக்கமாய் அமைந்தது.
ஆம்... அன்று மௌனம் காத்தவர்களும் அவர்கள்! தமிழகத்தின் மௌனம் கலைத்தவர்களும் அவர்கள்.
பெட்டிச் செய்தி :
எப்போது ஈழம் பற்றிப் பேசினாலும், இராசீவ் காந்தி கொலையை மட்டுமே இங்கு சிலர் முன்வைக்கின்றனர். சோனியா காந்தி அம்மையார் கூட, யாருக்கும் தூக்குத்தண்டனை கூடாது, எனக்கு நேர்ந்த துன்பம் உலகில் வேறு எவருக்கும் நேரக்கூடாது என்று பெருந்தன்மையாகப் பேசியிருக்கிறார். ஆனால் இங்குள்ள உள்ளூர்க் காங்கிரஸ்காரர்களோ, இராசீவ் காந்தியின் மரணம் ஏற்படுத்திய துக்கத்திலிருந்து இன்னும் விடுபடாதவர்களைப் போலப் பேசுகின்றனர். என்ன செய்வது. காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 17 ஆண்டுகளாக, சாப்பிடவே இல்லையாம். இராசீவ் காந்தியை பற்றிய துக்கத்திலேயே மூழ்கிக்கிடக்கிறாராம். வேலூர் ஞானசேகரன் நிலைமையோ இன்னும் மோசம். 17 ஆண்டுகளாக பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கவில்லையாம். மனைவியும் பிள்ளைகளும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டார்களாம். இராசீவ் காந்தியே போன பிறகு இனி எனக்கு ஏன் தண்ணீர் எனக் கூறிவிட்டாராம். நம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இருக்கிறாரே, துக்கம் தொண்டையை அடைப்பதால், அவர் பல் விளக்கியே 17 ஆண்டுகள் ஆகிறதாம். போயஸ் தோட்டத்து அம்மையாரும், இராசீவ் காந்தியை எண்ணிக் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு உடம்பே மெலிந்து விட்டாராம்.
-மாநாட்டு நிறைவுரையில் தொல்.திருமாவளவன்.
பெட்டிச் செய்தி
கருத்துரிமை மாநாட்டில் உலக அளவிலான மனித உரிமைப் போராளிகள் கலந்து கொண்டனர். செருமனியில் இருந்து வந்திருந்த டாக்மர் எல்மன், கொழும்பிலிருந்து வந்திருந்த, நவ சம சமாஜ் கட்சி உறுப்பினர் குமாரதுங்க ஆகியோர் உரையாற்றினர். சிறீலங்காவில் நடப்பது போன்ற மனித உரிமை மீறல்களும், அரசபயங்கரவாதமும் உலகின் எந்த மூலையிலும் நடைபெறுவதில்லை என்றார் எல்மன். குமாரதுங்க பேசுகையில், சிங்களராகப் பிறந்தாலும், நியாயத்திற்காக குரல் கொடுப்போர் அங்கும் இருக்கவே செய்கின்றனர் என்றும், அவர்களை இராசபக்சே அரசு ‘சிங்களக் கொட்டியா' (சிங்களப் புலி) என்று அழைப்பதாகவும், இப்போது 26 சிங்களப்புலிகள் அங்கே சிறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.
தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,
சென்னை - 600 024. பேசி - 044-24732713.
No comments:
Post a Comment