Tuesday, February 05, 2008

என்ன?

புத்தக கண்காட்சியில் இந்த ஆண்டு விற்பனை குறைவு என்று சொல்லப்படுகிறதே காரணம் என்ன?

- வைகறை, சாளரம் வெளியீட்டகம்.

புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்தோர் எண்ணிக்கை குறைந்தது ஏன்? தீவிர வாசகர்கள், வேடிக்கை பார்ப்போர் என்ற இருபெரும் பிரிவினர் புத்தகக் கண்காட்சிக்கு வருகின்றனர். இவர்களில் வேடிக்கை பார்க்க வருவோர்தான் இலட்சக்கணக்கான பேர். புத்தகக் கண்காட்சி நடைபெற்ற அதே நேரத்திலேயே வேடிக்கைப் பார்ப்போரின் கண்களையும் காதுகளையும் கவரும் வண்ணம் சென்னை சங்கமம் நடைபெற்றது. எனவே இந்நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் சென்றதில் வியப்பில்லை.

தீவர வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்த முதலில் பேருந்து போக்குவரத்து வசதி மிகவும் தேவை. இந்த வசதி செய்து தரப்படவில்லை. மேலும் தீவிர வாசகர்களைத் தேடி அவர்களைப் பேரியக்கமாக்கி வரவழைக்க தென்னந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்திடம் தொடர் செயற்திட்டம் இல்லை.

பதிப்புத்துறை என்பது பல்வேறு போக்குகள் நிறைந்தது. பல்வேறு கருத்துகள் நிறைந்தது. பல்வேறு வசதி வாய்ப்புகள் நிறைந்தது. இருந்தாலும் ஒன்றுபட்ட பொது நோக்கும் பொதுப் போக்கும் வேண்டும்.

அனுபவங்களையும் அறிவுசார் செய்திகளையும் பதிவு செய்கிற பதிப்புத்துறை சந்தைப் போட்டியில் இறங்கி வசதிபடைத்தவர்கள் செய்யும் செயலே சரி என்பது போல நடை பெற்று வருகின்றது. இதனால் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கின்ற பதிப்பு முயற்சிகள் தோல்வி அடைகின்றன. வசதி படைத்தவர்கள் பல்வேறு பெயர்களில் பல கடைகளை எடுத்து ஒரே புத்தகங்களைக் காட்சிக்கு வைக்கின்றனர். இந்தப் போக்கு வாசகர்களைச் சலிப்படையச் செய்கிறது.

பதிப்பாளர்களிடையே சுயக் கட்டுப்பாடு இல்லை. ஒரே நூலைப் பல பதிப்பகத்தாரும் பதிப்பித்துச் சந்தைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதனால் இந்த ஆண்டு கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள் விற்பனையாகவில்லை என்ற உண்மை சரியான பாடமாகும்.

வெளிநாட்டு இந்தியர் முதலீட்டால் நடைபெறும் ஒரு பதிப்பகமும், பெரிய வணிக இதழ்கள் நிறுவனப் பதிப்பகமும் தாங்கள் வெளியிட்ட நூல்களை சிறு பதிப்பாளர் கடைகளில் திணித்து விற்கச் செய்தனர். எங்கு பார்த்தாலும் இவர்கள் புத்தகங்களே காணக் கிடைத்தன. எனவே பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்குகின்றன.

தமிழ்ப் பதிப்பாளர்கள் வாசகர்களுக்கு உண்மையாக இருந்தால் வாசகர் வருகை மிகுதியாகும். பதிப்பாளர்கள் ஏமாற்றினால் வாசகர்களும் ஏமாற்றுவார்கள்.

இராமேஸ்வரத்தில் உள்ள கோயிலுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட பசுக்கள் பராமரிப்பு இன்றி இறந்துள்ளன, பராமரிக்க முடியாத அரசு விலக வேண்டும் என ஜெயலலிதா கூறக் காரணம் என்ன?

எழில். இளங்கோவன்

ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம். பசுமாடுகள் இறந்து விட்டதாம், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டுமாம் கலைஞர், பாவம், கவலைப்படுகிறார் செல்வி செயலலிதா அம்மையார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் ஆயிரக்கணக்கான அல்ல, இலட்சக்கணக்கான பசுமாடுகள் இறைச்சிக் கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பது அவருக்குத் தெரியாதா? அப்படியானால் யார் யாரைப் பதவி விலகச் சொல்லப் போகிறார் அந்த அம்மையார்? முதலில் குசராத் முதல்வர் நரேந்திர மோடியை பதவி விலகச் சொல்வாரா? அம்மையார் ஆட்சிக்காலத்தில் யானைகளுக்கு முதுமலையில் ஓய்வு தரப்போகிறேன் என்று சொல்லி அவைகளை முதுமலைக்கு அனுப்ப சரக்குந்துகளில் ஏற்றும்போது, சிறிய குன்றைப் போன்ற உடல் பருமன் கொண்ட யானைகள் சரக்குந்துகளில் ஏற முடியாமல், ஏற்றப்பட்ட போது அவைகள் பட்ட கொடுமையான துன்பத்தைத் தொலைக்காட்சிகள் காட்டினவே! அப்போது, குறைந்த பட்சம் அவைகளைத் துன்புறுத்தாமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூடக் கூற முன்வராத அம்மையார் பசுமாடுகளின் இறப்பைப் பற்றிப் பேசுகிறார்.

அது மட்டுமல்ல இந்த அம்மையார் ஆட்சிக்காலத்தில் திருச்செந்தூர் ஆலயத்தில் 15 மாடுகள் இறந்தனவே! அப்போது இவர் பதவி விலகினாரா?

கலைஞர் சுட்டிக் காட்டியது போல மகாமகம் குளத்தில் நிகழ்ந்த மனித உயிர்ச் சாவுகளுக்கு பதவி விலகினாரா செல்வி ஜெயலலிதா? மாடுகளை விட மனித உயிர்கள் என்ன மலினமானாதா? அவ்வளவு ஏன்? குசராத்தில் நிகழ்ந்த மனிதப் படுகொலைகளின் போது அங்கே முதல்வராக இருந்த நரேந்திர மோடியைப் பதவி விலக வேண்டும் என்று அப்போது இந்த அம்மையார் சொன்னாரா? அவருக்குப் போயஸ் தோட்டத்தில் 45 வகைக் கறிகளுடன் விருந்து, முதல்வராக பதவி ஏற்றமைக்குப் பாராட்டு! வேடிக்கையாக இருக்கிறது.

உண்மையில் பசுமாடுகள் இறந்ததற்காக கவலைப்படவில்லை செயலலிதா. மாறாக, கலைஞரைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு, தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்று எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் அவருக்கு இப்போது பசுமாடுகள் அறிக்கைவிட உதவி செய்திருக்கின்றன. “பசு” மாடுகள் என்று சொல்லும் அவரின் கவலையில், அவருடைய சனாதன இந்துத்துவச் சிந்தனை நெடி வெளிப்படுவதை தமிழர்கள் அறியாமலில்லை என்பதை அவர் அறியவில்லையே என்பதுதான் நம்முடைய கவலை.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

No comments: