Tuesday, February 05, 2008

சமூகநீதியா, அநீதியா?

சமூகநீதியா, அநீதியா?

பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையில் ஒரு புதிய சிக்கலை இப்போது மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. எல்லோருக்குமாக வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை, இனிமேல் பனிரெண்டாம் வகுப்பில் 60 மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரியது என ஒரு சுற்றறிக்கை வெளிவந்துள்ளது. மத்திய அரசின் சமூகநீதித் துறையிலிருந்து இதுபோன்ற சமூக அநீதி ஒன்று வெளிப்பட்டுள்ளது நம்மை வேதனைக்குள்ளாக்குகிறது.

பனிரெண்டாம் வகுப்பில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே உயர்கல்வியில் இடம்பெற முடியும் என்னும்போது, உதவித்தொகை பெறுவதற்கு மட்டும் எதற்காக 60 விழுக்காடு இருக்க வேண்டும் என்பதற்கான எந்த விளக்கமும் அந்த ஆணையில் இல்லை. ஆண்டுகள் பல போராடிப் பெற்ற உரிமைகளை, அங்கே உள்ள அதிகாரிகள் சிலர் ஓர் ஆணை போட்டுத் தடுத்துவிட முடிகிறது என்பது இன்றைய அமைப்பில் உள்ள பெரும் குறைபாடே ஆகும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் அல்லது குறைத்துவிட வேண்டும் என்று கருதுகிற மேல்தட்டு அதிகாரிகள் ஓசைப்படாமல் இப்படிச் சில ஆணைகளைப் பிறப்பித்து விடுகின்றனர். அவர்களை நம்பி அமைச்சர்களும் கையெழுத்துப் போட்டுவிடுகின்றனர். அதன் விளைவாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மதிப்பெண் எல்லை ஒன்று வைப்பதன் மூலம், மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்ற கணக்கில்தான் அவ்வாறு செய்யப்படுவதாக நொண்டிச் சமாதானம் ஒன்று கூறப்படுகிறது. இதன்மூலம் அச்சத்திறகும், நம்பிக்கை இழப்பிற்கும்தான் மாணவர்கள் ஆளாவார்களே அல்லாமல், படிப்பின் பக்கம் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நினைப்பது சரியன்று. அதுதான் சேலத்திலும் நடந்திருக்கிறது. இந்த ஆணை வெளிவந்தவுடன் சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மதில்களின் மீதேறி நின்று கீழே குதித்துவிடுகிற நிலைக்கும் வந்துள்ளனர். ஒரு மாணவன் தீக்குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு, பிறகு காப்பாற்றப்பட்டிருக்கிறான்.

இனிமேல் உதவித்தொகை நிறுத்தப்படும் என்றுகூட அல்லாமல், ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொகைகளும் கூட திரும்பப் பெறப்படும் என்னும் அறிவிப்புத்தான் அவர்களை அந்தளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஒடுக்கப்பட்டோர் என்பவர்கள், சமூக நிலையிலே மட்டுமல்லாமல், பொருளாதார நிலையிலும் ஒடுக்கப்பட்டவர்களாகவே இங்கு உள்ளனர். வர்க்கமும் சாதியும் இங்கு மிக நெருக்கமாக ஒன்றோடொன்று ஊடாடியும், சில வேளைகளில் இணைந்தும் செல்கின்றன. எனவே உதவித்தொகையை முடக்குவதென்பதும், ஏற்கனவே கொடுத்த தொகையைத் திருப்பிக் கேட்பதென்பதும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் கைவைப்பது போலாகும்.

இந்நிலையில் கடந்த சனவரி 8ஆம் நாள், விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் முதலமைச்சரைச் சந்தித்து, இதுகுறித்த அவர் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக மத்திய அரசிடமிருந்து வருகின்றன எந்த ஒரு ஆணையையும், மாநில அரசுகள் அப்படியே சுற்றுக்கு விட்டுவிடுவதுதான் இயல்பு. அதைப் போன்றே இந்த ஆணையும் சுற்றுக்கு அனுப்பப்பட்டு விட்டது. அதன் பின்பே சிறுத்தைகள் முதல்வரைக் கண்டு நிலைமையை விளக்கி உள்ளனர். அடுத்த நாளே, அந்த ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு இதில் தன் நிலைப்பாட்டை மறுஆய்வு செய்து ஆணையை விலக்கிக்கொள்வதோடு, இதுபோன்ற தவறான அறிக்கைகளை அனுப்புகின்ற அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

No comments: