Tuesday, February 05, 2008

ஜல்லிக்கட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்


ஜல்லிக்கட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்

- இனியன்

தொன்மையும், போர்க்குணமும் நிறைந்த சமூகங்களுக்கென்று சில தனித்த மரபுகள் இருப்பது இயல்பு.

‘ஏறு தழுவுதல்' என்பது அத்தகைய மரபுகளுள் ஒன்று. முல்லைத் திணைப் பாடல்களில் காணப்படும் அம்மரபின்படி, வீறு கொண்ட காளைகளை அடக்கிவிடும் ஆற்றல் கொண்ட தமிழ் ஏறுகளைக் கன்னியர் விரும்பி மணம் புரிவர். ஏறுதழுவுதல், இளவட்டக்கல் தூக்குதல் போன்ற மரபுகள், திருமணத்திற்கு முன் நிபந்தனையாக இன்றைய உலகில் இல்லை. எனினும், ஏறுதழுவுதலின் ஒரு வடிவமாகவே ‘ஜல்லிக்கட்டு' என்னும் வீர விளையாட்டு, இன்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்குடன் திகழ்கிறது.

அண்மையில் அந்த விளையாட்டுக்குத் தடை விதித்த உச்சநீதிமன்றம், பிறகு அதை நீக்கிக் கொண்டுள்ளது.

தடைவிதிக்கும்போது, இது போன்ற விளையாட்டுகள், ‘காட்டுமிராண்டி காலத்தவை' என ஒரு தொடரைக் குறித்துள்ளது. இவ்விமர்சனம், தமிழ் மக்களையும், தமிழ்ப் பண்பாட்டையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. மிகுந்த வேதனைக்குரிய அந்தத் தொடரைச் சில ஏடுகளும் பயன்படுத்தி மகிழ்ந்துள்ளன. ஜல்லிக்கட்டு விளையாட்டுக் குறித்து மறுஆய்வு செய்யலாமா, கூடாதா என்பது வேறு. அதை இழிவுபடுத்துவது வேறு.

எந்த ஒரு மரபும் மறு ஆய்வுக்கு உரியதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நம்முடைய பழம் மரபுகள் அனைத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும். மரபு அறியாத சமூகம் புதுமை படைத்திட இயலாது. கிளைகளின் உயரத்தை, வேர்களின் ஆழமே முடிவு செய்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும் மரபுகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை.

எந்த ஓர் இனமும், மரபுகளைப் பொறுத்தமட்டில், அறிதல், ஆராய்தல், பின்பற்றல் என்னும் மூன்று நிலைகளை மேற்கொள்ள வேண்டும்.


நம் மரபுகளை அறிந்த பின்னர், அவற்றை ஆராய்ந்திட வேண்டும். அந்த ஆய்வு, இரண்டு கோணங்களிலே அமையலாம். பழம் மரபுகளுக்குள் அந்நிய நாகரிகம் உட்புகுந்து, அவற்றைச் சிதைத்துள்ளதா என்ற கோணத்திலும், சிதைக்காத நிலையிலும் கூட அவை இன்றைய நிலைக்குப் பொருத்தமானதாகவும், தேவையானதாகவும் உள்ளதா என்ற கோணத்திலும் நம் ஆய்வுப் பார்வை அமைய வேண்டும்.

நம் பழைய விழாக்கள், கொண்டாட்டங்களில் கூடப் பார்ப்பனீயம் ஊடுருவிச் சிதைத்து வருவதை நாம் அறிவோம். தமிழர் விழாவான பொங்கலையே ‘சங்கராந்தி' ஆக்க முயல்வதை நாம் அறிந்துதானே வைத்துள்ளோம். இப்படிப் பல அந்நிய ஊடுருவல்கள்.

அவ்வாறு இல்லையெனினும், சில மரபுகள், கால வளர்ச்சியோடு ஒட்டாமல் நிற்பதை நாம் காண முடியும். அவற்றுள் ஒன்றுதான் ‘ஜல்லிக்கட்டு'.

இவ்விளையாட்டில் காளைமாடு என்னும் விலங்கு வதை செய்யப்படுவதாகக் கூறிச் சிலர் வருந்துகின்றனர். ஆனால் இதனைவிடக் கூடுதலாகப் பொதி சுமக்கும் மாடுகளும், வண்டி இழுக்கும் மாடுகளும் துன்புறுத்தப்படுகின்றன. எல்லா வதைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையில், இதற்கும் இடமுள்ளது என்னும் அளவில்தான் அதை ஏற்க முடியும்.

அதனைக் காட்டிலும், விலை மதிப்பற்ற மானுட உயிர்கள் இவ்விளையாட்டில் பலியாகின்றனவே என்பதுதான் நம் கவலை. எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் உயிருக்கு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு விபத்துகள் நடந்து கொண்டுதானே உள்ளன என்று நாம் எண்ணலாம். அந்த ஒப்பீடு சரியானதாகாது. எதிர்பாராமல் விபத்து நடப்பதற்கும், விபத்தை நாமே விரும்பி அழைப்பதற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது.

சென்ற ஆண்டு, மதுரை மாவட்ட ஆட்சியர், எந்த உயிர்ப்பலியும் இல்லாமல் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்திக் காட்டுவதாக உறுதியளித்தார். அவ்வாறு செய்தும் காட்டினார். ஆனால், எப்போதும் உயிர்ப்பலிகள் ஏற்படாது என்று எவராலும் உறுதி சொல்ல முடியாது. எனவே, உயிரைப் பணயம் வைத்து ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டுமா என்ற வினா எழவே செய்கிறது.

இத்தகைய விளையாட்டுகள் போர்க்குணத்தைப் போற்றி வளர்ப்பன. இவற்றையெல்லாம் தடுப்பதன் மூலம், இளைய தலைமுறையை நாம் மழுங்கடிக்கின்றோம் என்ற ஆதங்கமும் சிலரிடம் உள்ளது.

போர்க்கலைப் பயிற்சிகள் கூட, இன்று புதிய மாற்றம் பெற்று வருகின்றன. போர்க்களம் செல்பவனுக்கு உடல் வலிமை வேண்டும் என்பது பழங்கணக்கு. இன்று அந்நிலை மாறிவிட்டது. ஜார்ஜ் புஷ் உலகப் பெரும் பயில்வானாகவா உள்ளார்? பொறிகளின் மூலம்தான் இன்றையப் போர்கள் நடக்கின்றன. எனவே, உளவறிதல், பொறிகளை இயக்குதல் போன்றவையே இன்று போர் முறைகள் ஆகிவிட்டன.

அடுத்ததாக, நம் இளைய தலைமுறையினர் அறிவியல் வளர்ச்சி பெறவேண்டியவர்களாக உள்ளனர். அக்கிரகாரத்துப் பிள்ளைகள் கணிப்பொறி பிடிக்க, அலங்காநல்லூர்ப் பிள்ளைகள் மட்டும் காளை மாடு பிடித்துக் கொண்டிருப்பதா? எனவே, இது குறித்து மறு ஆய்வு இன்று மிகத் தேவையாக உள்ளது.

இன்னும் 15, 20 ஆண்டுகளில், தானாகவே இது போன்ற வீர விளையாட்டுகள், மிக அருகிப் போய்விடும் என்பது உண்மை.

எனவே, ‘ஏறு தழுவுதல்' என்பதையொத்த ஜல்லிக்கட்டு விளையாட்டை, நம் பழைய மரபு என்று ஏற்றிப் போற்றலாம். தவறில்லை. ஆனால் தொடர்ந்து அதனைப் பின்பற்றி, உயிர்களைப் பலி கொடுக்க வேண்டுமா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அடக்கியே தீர வேண்டிய சாதி மோதல்களும், மத வெறியும் நம் கண்முன்னே தறிகெட்டு ஓடுகின்றன. அவற்றை அடக்க முடியாமல், காளை மாடுகளை மட்டுமே நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு அடக்கிக் கொண்டிருக்கப் போகின்றோம்?

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

No comments: