Tuesday, February 05, 2008

உலகுக்கு ஓர் அகல் விளக்கு

உலகுக்கு ஓர் அகல் விளக்கு

(க.சமுத்திரம்)

கியூபாவில் மக்களாட்சி இல்லை என்று இன்னும் அமெரிக்கா சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆம் அமெரிக்கா சொல்படி நடக்கும் மக்களாட்சி கியூபாவில் இல்லைதான். உண்மையான மக்கள் ஆட்சி அங்கு நடக்கிறது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்றத் தேர்தலும், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 14 மாநிலங்களின் தேர்தல்களும் நடைபெறுகின்றன. 16 வயது முடிந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளில் நடப்பதைப்போல் தேர்தல் திருவிழாவாக நடப்பதில்லை.

கியூபாவில் வேட்பாளர்களை ஆய்வு செய்வது அந்தந்தப் பகுதியிலுள்ள மக்கள்தான், முனிசிபல் தேர்தலுக்கும் மற்ற தேர்தலுக்கும் அந்தந்த தொகுதியிலுள்ள மக்கள் யாரைப் வேட்பாளராக நிற்க வைப்பது என்பதைத் தெரிவிக்கிறார்கள். பத்திரிக்கைகளில் விளம்பரம், கண்கவரும் சுவரொட்டிகள், மேடைகளில் மேசையைக் குத்திப் பேசுகிற அனல் பறக்கும் பேச்சு, பாத யாத்திரைகள் இப்படி எதுவுமே அரங்கேறுவதில்லை. மாறாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்களின் குடியிருப்புக் கட்டிடத்தின் முன்பக்கத்தில் வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் ஆகிய அனைத்தையும் ஒட்டிவிடுகிறார்கள். மக்களே தங்களின் வேட்பாளர்களைத் தேர்வு செய்திருப்பதால் அந்த வேட்பாளர்களின் நடத்தை, ஒழுக்கம், குணங்கள் அனைத்தும் வெளிப்படையாகவே மக்கள் அறிந்திருப்பார்கள். இப்படிப்பட்ட வேட்பாளர்களில் ஒருவரை தங்களின் பிரதிநிதியாக மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு வேட்பாளரும் 2.5 கோடி டாலர் செலவழிக்கிறார்கள். 1992 தேர்தலில் அமெரிக்காவின் மொத்த செலவு 5040 கோடி டாலர். கியூபாவில் 25 டாலர்கள் கூட வேட்பாளர்கள் செலவழிப்பதில்லை. தேர்வு செய்யப்பட்ட பிறகு கார், பங்களா, சுவிஸ் சேமிப்பு என்று மாறுவதில்லை. மக்களோடு மக்களாக வாழ்கின்றனர், தொழிலாளர்களோடு, விவசாயிகளோடு சேர்ந்து வேலைக்குச் செல்கின்றனர். வேலை முடிந்த பின்னால் தங்கள் தொகுதி மக்களின் தேவை அறிந்து சேவை செய்கின்றனர். இந்தியாவைப்போல் தேர்தல் முடிந்தவுடன் வாக்காளர்களின் கடமை முடிந்துவிடவில்லை. தவறு செய்யும் உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும் அதிகாரம் அங்கு உண்டு. பாராளுமன்ற உறுப்பினர்களில் 22.8% பெண்கள். ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் முழு ஈடுபாட்டோடு 99% வாக்களிக்கின்றனர்.

1959 ஜனவரியில் பாடிஸ்டா அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. காஸ்ட்ரோ தலைமையில் புரட்சி அரசு ஆட்சியில் அமர்ந்தது. இன்று காஸ்ட்ரோவுக்கு வயது 83. கியூபா அரசுக்கு வயது 49. அடுத்த ஆண்டு 50வது பொன்விழா கொண்டாட உள்ளது.

இதற்கிடையில் 2007 ஜுன் 28ஆம் தேதி சிஐஏ உளவு அமைப்பு ஒரு ஆவணம் வெளியிட்டது. அதில் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய 700 தடவைக்கு மேல் முயற்சி செய்ததை ஒத்துக் கொண்டுள்ளது. அத்தனை முயற்சிகளையும் முறியடித்து, நோயோடும் போராடி வென்று உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார். ஆட்சிப் பொறுப்பைத் தற்காலிகமாக ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு ஆட்சிக்குத் துணையாக நிமிர்ந்து நிற்கிறார் காஸ்ட்ரோ.

காஸ்ட்ரோவைக் கொலை செய்ய முயற்சித்ததைப் போலவே, கியூபாவை வீழ்த்த அமெரிக்கா புதுப் புதுச் சட்டங்கள் மூலம் பொருளாதாரத் தடை விதித்தது. தன் தூதுவர் உறவை முறித்துக் கொண்டது. எதிர்ப் புரட்சியாளர்களை தயார் செய்து, நாடு முழுவதும் குண்டுகள் வெடிக்கச் செய்தது. விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. நோய்க் கிருமிகளையும், இரசாயனப் பொடிகளையும் தூவின.

சோவியத் உதவி செய்ய முன் வந்தது. கியூபாவின் மொத்தச் சர்க்கரையையும் சோவியத் வாங்கிக் கொண்டது. அதற்குரிய விலையில் 80 சதத்தைக் கியூபாவுக்குத் தேவையான பொருள்களாகவும், 20 சதம் டாலராகவும் கொடுத்தது. 100 கோடி டாலர் கடன் கொடுத்து உதவியது. சீனா போன்ற நாடுகள் உதவிக்கரம் நீட்டின.

கியூபா மக்களும் கடும் உழைப்புக்குத் தயாரானார்கள். மக்கள் துணையோடு, நட்பு நாடுகளின் உதவியோடு தடைகளை எதிர்த்துக் கியூபா எழுந்து கொண்டிருக்கும்போது, அமெரிக்கா நேரடிப் போர் அறிவித்தது. பே-ஆப்-பாக்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்தப் போரில், அமெரிக்கா 40 ஆயிரம் வீரர்களையும், குண்டுகள் தாங்கிய விமானங்களையும், அணு ஆயுதம் சுமந்த நீர்மூழ்கிக் கப்பல்களையும் பயன்படுத்தியது. இந்தப் போர் 73 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா புறமுதுகுகாட்டி ஓடியது. உலக நாடுகள் முழுவதும் அமெரிக்காவைக் கண்டனம் செய்தன.

இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் கியூபா தன் பயணத்தைத் தொடர்ந்தது.

புரட்சி அரசாங்கம் முதலில் கல்வியில் தனது சீர்திருத்தத்தைத் தொடங்கியது. கல்வி முழுவதுமே இலவசமாக்கியது. 9ஆம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி. தன் பட்ஜெட்டில் 11 சதம் கல்விக்கு ஒதுக்கும் ஓரே நாடு கியூபா தான்.

“நிதி மூலதனத்தை விட, மனித மூலதனம் சக்தியானது, மதிப்பானது” என்ற புதிய தத்துவத்தைக் கியூபா மக்களுக்கு போதித்தது.

1960 செப்டம்பர் 6ஆம் நாள் தன் எழுத்தறிவு இயக்கத்தைத் தொடங்கியது. உங்களுக்குத் தெரிந்தால் கற்றுக் கொடுங்கள், இல்லையேல் கற்றுக் கொள்ளுங்கள் என்ற முழக்கம் நாடு முழுவதும் பரவியது. மாணவர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள் என இரண்டு லட்சம் பேர் எழுத்தறிவு இயக்கத்தில் இணைந்தனர். இதில் பாதிப் பேர் பெண்கள். இதையும் சீர்குலைக்க அமெரிக்கா பள்ளிக்கூடங்களில் குண்டு வீசியது. 1961 ஜனவரி 5இல் எழுத்தறிவுத் தொண்டர் கான்ரேடே பெனிசிட்டீஸ்-ஐக் படுகொலை செய்தது அமெரிக்கா. சிறிதும் தளரவில்லை கியூபா. எழுத்தறிவு இயக்கத்திற்கு கான்ரேடே பெனிசிட்டீஸின் பெயரைச் சூட்டி முன்னேறியது.

கியூபாவில் மொத்த மக்களும் எழுத்தறிவு உள்ளவர்கள். 170 மக்களுக்கு ஒரு மருத்துவர் வீதம் 68,000 மருத்துவர்கள். ஆசிரியர்கள், அரசு அதிகாரிகளில் 68% பெண்கள், விஞ்ஞானிகளில் 60% பெண்கள்.

பார்சிலோனா ஒலிம்பிக் பந்தயத்தில் அந்த சின்னஞ்சிறு கியூபா 31 தங்கப் பதக்கங்கள் உள்பட, 140 பதக்கங்களை வென்று, தரவரிசையில் 5வது இடத்தைப் பிடித்தது. விளையாட்டின் மூலம் கிடைத்த பெரும் பணத்தை கியூப விளையாட்டு வீரார்கள், விளையாட்டுத் துறைக்கு அளித்தனர். ஆனால் இந்தியாவின் கோடிஸ்வர்களின் வரிசையில் டெண்டுல்கர் உள்ளார்.

இன்றும் தடை தொடர்கிறது. தடை என்றால் தலைவலிக்கு ஆஸ்பிரின் மாத்திரை கிடைக்காத அளவுக்குத் தடை. உலக உணவு மாநாட்டில் காஸ்ட்ரோ பின்வருமாறு பேசினார், “எங்கள் சந்தைகளில் மக்கள் வரிசை இல்லை, நெருக்கடியும் இல்லை. ஏன் என்றால் சந்தையில் வாங்குவதற்குப் பொருட்கள் இல்லை. எங்கள் நாட்டுச் சாலைகளில் எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடி கிடையாது. ஏன் என்றால் வாகனங்கள் ஒட்ட எங்களிடம் பெட்ரோல் இல்லை. எங்கள் மக்கள் அனைவரும் பால் கலந்த தேனீர் அருந்த மாட்டார்கள். ஏன் என்றால் எங்களிடம் போதிய பால் இல்லை” என்றார்.

ஆம் கியூபாவில் பால் இல்லாத கருப்புத் தேனீர்தான் குடிக்கின்றனர். குழந்தைகளுக்கு மட்டும் பால் வழங்கப்படுகிறது.

1 கோடியே 10 லட்சம் மக்கள் கொண்ட கியூபாவில் 3 லட்சம் மிதிவண்டிகள் உள்ளன.

கியூபாவில் கோடிஸ்வரர்கள் கிடையாது. பட்டினிகிடப்பவர்களும் கிடையாது. ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கையின்படி லத்தின் அமெரிக்காவில், மொத்த மக்களுக்கும் சரிவிகித சத்துணவு வழங்கும் ஒரே நாடு கியூபா. எல்லோருக்கும் 3130 கலோரி உணவு வழங்கப்படுகிறது. ஆனால் உலக கோடீஸ்வரர்கள் வாழும் அமெரிக்காவில் இன்றும் 3 கோடிப் பேர் அரைப்பட்டினி. கியூபாவின் சராசரி வயது புரட்சிக்கு முன் 55, புரட்சிக்கு பின் ஆண்கள் சராசரி வயது 75, பெண்கள் சராசரி வயது 79, குழந்தைகள் நோயில் இறக்கும் விகிதாச்சாரம் கியூபாவில் தான் மிகக் குறைவு.

கியூபா மருத்துவர்கள் 70 ஏழை நாடுகளை விரும்பித் தேர்வு செய்து பணியாற்றுகின்றனர். வருமானத்தின் ஒரு பகுதியை நாட்டின் மருவத்துவத்துறைக்கு கொடுக்கின்றனர். 120 மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் 25,000 பேருக்குக் கியூபா பல்கலைகழகம் இலவச மருத்துவக்கல்வி தருகிறது.

அமெரிக்காவின் தடைகளையும், சோதனைகளையும் பற்றி காஸ்ட்ரோ, ‘வானில் மேகம் மறைத்து இருப்பதால் சூரியன் இல்லை என்று பொருளில்லை. மேகம் உடைந்து துகள்களாக நிலத்தில் விழும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூரியன்' என்றார்.

பெட்டிச் செய்தி

20.01.2008 அன்று நடந்து முடிந்துள்ள கியூபாவின் தேசியப் பேரவைத் தேர்தலில் பிடல் கேஸ்ட்ரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். குடலிறக்க நோயில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் காஸ்ட்ரோ தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் தற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். அதே நேரத்தில், தேசியப் பேரவையின் நிரந்தர அமைப்பான ஸ்டேட் கவுன்சிலின் தலைவர் பொறுப்புகளைத் தானே கவனித்து வந்தார். கடந்த 50 ஆண்டுகளாக கியூபாவின் ஒப்பற்ற அதிபராக விளங்கியவர் காஸ்ட்ரோ. அவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அமையவிருக்கின்ற புதிய நாடாளுமன்றம் அவருக்கு ஓய்வளிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

பிப்.24 அன்று கூடும் தேசியப் பேரவை மீண்டும் ஸ்டேட் கவுன்சில் தலைவராகக் காஸ்ட்ரோவை தேர்ந்தெடுக்குமா என்பது தெரியவில்லை.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.

தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,

சென்னை - 600 024. பேசி - 044-24732713.

No comments: