தமிழ்ப்பாடம் மராத்தி மொழியில்
- சமீரா மீரான்
‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்!' என்பதை எப்படி எவரும் மறுக்க முடியாதோ, அதே போல் ‘சென்ற இடத்தையெல்லாம் செழிப்பாக்குபவன் தமிழன்' என்பதையும் எவரும் மறுக்க முடியாது. தங்களது அறிவால், ஆற்றலால், உழைப்பால், உணர்வால், தாங்கள் புலம் பெயர்ந்து வாழும் இடங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருப்பவர்கள் தமிழர்கள். மும்பைத் தமிழர்களும் இதற்கு விதிவிலக்கில்லை.
ஆனால், சென்ற இடத்தைச் செழிப்பாக்குகிற தமிழனுக்கு அந்த இடத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால், இல்லை. எல்லா இடங்களிலும் உரிமைகள் மறுக்கப்பட்டுத் தமிழன் அலட்சியப்படுத்தப்படுகிறான் அல்லது அவமானப்படுத்தப்படுகிறான் என்பதுதான் வேதனைக்குரியது. மும்பையிலும் அதுதான் நிலைமை.
மும்பை மாநகராட்சித் தமிழ்வழிக் கல்விக்குத் தொண்ணூற்றைத் தொடுகின்ற வயது. வெளிமாநிலம் ஒன்றில் சுமார் தொண்ணூறு ஆண்டுகளாகத் தமிழ்வழிக் கல்வி நடைபெறுகிறது என்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிக்குரிய செய்திதான். ஆனால், நாம் அறிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், இந்தத் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழில் இதுவரை பாடநூல்கள் வழங்கப்படவில்லை என்பதுதான்.
மும்பை மாநகரில் மட்டும் ஏழாம் வகுப்பு வரையிலான 49 மாநகராட்சித் தமிழ்ப் பள்ளிகள் இப்போது இருக்கின்றன. 400 தமிழர்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இந்தக் கல்வி ஆண்டில், சுமார் 15000 மாணவர்கள் இப்பள்ளிகளில் பயிலுகிறார்கள்.
மும்பை மாநகராட்சியில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்ட காலம் முதலே, அம் மாணவர்களுக்குத் தமிழில் பாட நூல்கள் வழங்கப்படவில்லை. ஏழாம் வகுப்பு வரையிலான எல்லாப் பாடங்களையும் மராத்தி மொழியில் உள்ள பாட நூல்களைக் கொண்டு, தமிழ் வழி மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வேறு வழி தெரியாமல், ஆசிரியர்கள் பாடநூல்களை மராத்தியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்துப் பாடங்களை நடத்துகிறார்கள். ஒரு சில ஆண்டுகள் தமிழ் நாட்டுப் பாடநூல்களைக் கொண்டு சில பாடங்களையும், மராத்திய வழிப் பாடநூல்களைக் கொண்டு சில பாடங்களையும் நடத்த முயற்சித்தனர். தமிழ் மொழிப் பாடம் தவிர பிற அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் அனைத்தும் மராத்திய மாநிலப் பாடத்திட்டத்தின்படி நடத்தப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. உரிய பாட நூல்கள் இல்லாததால் பாடம் நடத்துவதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் மைய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் உதவியோடு பாட நூல்களைத் தமிழில் தயாரிக்கும் தற்காலிக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் அந்தப் பாட நூல்கள் மாநகராட்சித் தமிழ்ப் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டன. தமிழ் மொழிப் பாடம் நடத்துவதற்குத் தமிழ்நாட்டுப் பாடநூல்களே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மொழிப் பாடநூல்களையும் இங்கேயே தயாரித்து வெளியிடும் முயற்சியிலும் இப்பள்ளி ஆசிரியர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு மும்பை மாநகராட்சிக் கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு வழங்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிடும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
கலைஞர் மு.கருணாநிதியின் தலைமையிலான இன்றைய தமிழக அரசு, மும்பைத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் மொழிப் பாடநூல்களைத் தொடர்ந்து இலவசமாக வழங்க ஆணை பிறப்பித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கி வருகிறது. செல்வி ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக் காலத்திலும் இருமுறை இலவசப் பாடநூல்கள் வழங்கப்பட்டன. தமிழ் மொழிப் பாடநூல்களை வேண்டுமானால் தமிழக அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். மராத்திய மாநில அரசின் பாடத்திட்டத்தில் உள்ள அறிவியல், கணிதம் போன்ற பாடநூல்களுக்கு மாணவர்கள் எங்கே போவார்கள்?
மராத்திய மாநில பாடநூல் கழகம் தமிழ்ப் பள்ளிகளுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிட்டு வெளியிட்டால் மட்டுமே, இந்தப் பாடநூல் சிக்கலுக்கான முழுமையான, நிலையான தீர்வு கிடைக்கும். ஆனால், மராத்திய மாநில அரசோ, மும்பை மாநகராட்சியோ, மராத்திய மாநிலப் பாடநூல் கழகமோ இது பற்றிக் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மராத்தி, ஆங்கிலம் தவிர, குஜராத்தி, உருது, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடநூல்களை அச்சிட்டு வெளியிடுகிற மராத்திய மாநிலப் பாடநூல் கழகம், தமிழில் மட்டும் அச்சிட்டு வெளியிட முன்வராமல் இருப்பது ஏன்?
இது மட்டுமன்று, கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வுகளை (ஸ்காலர்சிப் எக்ஸாம்ஸ்) மராத்திய மாநில அரசு தமிழ் மொழி தவிர, மேலே குறிப்பிட்டுள்ள எல்லா மொழிகளிலும் நடத்துகிறது. மும்பை மாநகராட்சியில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். அதே வேளையில் பெரும்பாலான மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறக்கூடியவர்கள். தகுதியுள்ள தமிழ் அரும்புகளைத் தளிர்க்கவிடாமல் ஏன் செய்கிறார்கள்? தமிழ் இனத்தை அழிக்கும் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்றா?
பிற மொழியினரைப் போலவே தமிழர்களும் மும்பை மாநகராட்சி, மராத்திய மாநில அரசு, மைய அரசு ஆகியவற்றுக்கு செலுத்த வேண்டிய எல்லா வரிகளையும் செலுத்தி வருகிறார்கள். எந்த மொழிப்பாகுபாடும் பார்க்காமல் வேற்று மொழியினருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்கிறார்கள். தேர்தல் என்று வருகிற போது தமிழர்களின் வாக்கு வங்கியை எல்லா கட்சியினரும் குறி வைக்கிறார்கள். ஆனால் பிறமொழியினருக்குக் கிடைக்கும் அனைத்து உரிமைகளும் தமிழர்களுக்கு மட்டும் ஏன் கிடைப்பதில்லை? பிறமொழிக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் எல்லா வசதிகளும் தமிழர்களின் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதுதானே நியாயம். ஆனால், தமிழர்களுக்கு மட்டும் ஏன் எங்கும், எப்போதும் நியாயங்கள் மறுக்கப்படுகின்றன?
மும்பை மாநகராட்சியும், மராத்திய மாநில அரசும் தமிழ் மாணவர்களுக்குத் தேவையான பாடநூல்களை, மராத்திய மாநிலப் பாடநூல் கழகத்தின் மூலமாக அச்சிட்டு வெளியிட உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மும்பைத் தமிழர் கூட்டமைப்பு சார்பாக மராத்திய மாநில முதல்வர், மராத்திய மாநிலக் கல்வி அமைச்சர், மும்பை மாநகராட்சி ஆணையர் அனைவருக்கும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கும் மும்பைத் தமிழ் மாணவர்களின் அவலநிலை குறித்து எழுதப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள் மாராத்திய மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கை நேரில் சந்தித்து பாடநூல் கோரிக்கையை வலியுறுத்தினர். இதுவரை மராத்திய மாநில அரசு தமிழ் மாணவர்களின் கல்வி நலனுக்காக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
மும்பை மாநகராட்சித் தமிழ்ப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2000 மாணவர்கள் ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர். ஏழாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க அப்பள்ளிகளில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் சுமார் 1700 மாணவர்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் தங்களது படிப்பைத் தொடர முடியாமலும், தனியார் பள்ளிகளில் படிக்க வசதி இல்லாமலும் எங்காவது கூலி வேலைகளுக்குச் சென்று விடுகின்றனர். சுமார் 300 மாணவர்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து தனியார் தமிழ்ப் பள்ளிகளில் தங்களது படிப்பைத் தொடர்கின்றனர். சிலர் ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்ந்து தோல்விகளைத் தழுவுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்று கணக்குப் பார்த்தால், கடந்த இத்தனை ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் இடைநிலைக் கல்வி பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர முடியும்.
மாநகராட்சிப் பள்ளிகளிலேயே எட்டாம் வகுப்பு தொடங்கப்பட்டுத் தமிழ் மாணவர்கள் இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (எஸ்.எஸ்.சி) தேர்வைத் தமிழில் எழுதுவதற்கான வாய்ப்பை மராத்திய மாநில அரசு ஏற்படுத்தித்தராதா என்ற ஏக்கம் தமிழ்பெற்றோர்களுக்குப் பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. அந்த ஏக்கம் தீரும் காலம் வந்து விட்டது என்று ஏழைத் தமிழ் பெற்றோர்கள் மகிழும் வகையில், இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மும்பை மாநகராட்சி நிர்வாகத்தில் நான்கு தமிழ்ப் பள்ளிகளில் எட்டாம் வகுப்புகளைத் தொடங்க 10.05.07 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, 2007, சூன் முதல் தமிழ் வழி எட்டாம் வகுப்பு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மும்பை மாநகராட்சி துணை ஆணையர் திரு எஸ்.எஸ்.சிண்டேவுக்கு யாரோ சிலர் நெருக்கடி தர, தமிழ் வழியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில்தான் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்தச் செய்தியை நாளிதழ்களில் பார்த்ததும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மும்பைத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இது மனித உரிமை மறுப்பு மட்டுமல்லாமல், தமிழும் தமிழர்களும் அவமானப்படுத்தப்படும் போக்காகும் என்று கொதித்துப் போனார்கள். மும்பையில் தனியார் தமிழ்ப் பள்ளிகளை நடத்தும் சில தமிழர்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியின் அளவை அதிகரிக்கும் செய்தியாகும்.
தமிழ் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அநீதி குறித்து கவலை தெரிவித்து, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் தேர்வு எழுத வைக்கும் கொடூரமான திட்டத்தை மும்பை மாநகராட்சி கைவிட வேண்டும் எனக் கேட்டு மும்பைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பாக மும்பை மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.எஸ்.சிண்டேவுக்கு 31.10.07 அன்று கடிதம் எழுதப்பட்டது. இக்கடிதம் கிடைத்த சில நாட்களிலேயே, தொடங்கி ஆறுமாதம் ஆகியுள்ள தமிழ்வழி எட்டாம் வகுப்புகளை உடனே மூட வேண்டுத் எனத் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வாய்வழி ஆணை வழங்கப்பட்டது. தமிழ் வழி எட்டாம் வகுப்பு தொடரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆசிரியர்கள் மறைமுகமாக மிரட்டப்படுகிறார்கள் என்பதும் மிகுந்த கவலை தரும் செய்தியாகும். இந்த விவகாரத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும், மும்பைத் தமிழர்களும் ஒன்றுபட்டு நிற்கவில்லை என்பது இன்னொரு வேதனை. ஆனால் பாதிக்கப்படுவது ஏழைத் தமிழ்ப் பிஞ்சுகள் அல்லவா?
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம், தமிழ் காப்போம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் 12.12.07 அன்று மும்பை மாநகராட்சி துணை ஆணையர் திரு எஸ்.எஸ்.சிண்டேவை நேரில் சந்தித்து தமிழ்வழி எட்டாம் வகுப்பைத் தொடரவேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆனால், ‘மராத்திய மாநில மேல்நிலை மற்றும் இடைநிலைத் தேர்வுக் கழகம் (எச்.எஸ்.சி மற்றும் எஸ்.எஸ்.சி. போர்டு) இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (எஸ்.எஸ்.சி.) தேர்வை தமிழில் நடத்த முன் வராமல் போனால் இந்த மாணவர்களின் நிலை என்னவாகும்? அதனால்தான், நாங்கள் தமிழ்வழி எட்டாம் வகுப்பை மூடலாம் என்றிருக்கிறோம்' என்று நேரடியாகவே கூறிவிட்டார்.
அந்த வகுப்புகளைத் தொடர என்னதான் வழி என்று கேட்டபோது, ‘அதைத் தேர்வுக்கழகம்தான் முடிவு செய்யவேண்டும்' என்று கூறிவிட்டார். மும்பைத் தேர்வுக் கழகத் தலைவரை ஏற்கனவே சந்தித்த விபரத்தைத் தமிழ் அமைப்பு நிர்வாகிகள் கூறியபோது, ‘புனேவில் உள்ள மாநில தேர்வுக் கழகத்திற்குத்தான் இது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது' என்று கூறிவிட்டார்.
மாராத்திய மாநில முதலமைச்சர், கல்வி அமைச்சர், மாநகராட்சி ஆணையர், மாநகராட்சித் துணை ஆணையர், மும்பைத் தேர்வுக்கழகத் தலைவர் என்று பலருடைய கவனத்திற்குத் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் சிக்கலைக் கொண்டு சென்ற பிறகும், மும்பைத் தமிழ் மாணவர்களுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. அமைச்சர்களும் அதிகாரிகளும் எழுத்து மூலம் பதில் எதுவும் தராமல் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.
மும்பை மாநகராட்சித் தமிழ்ப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தொடர்ந்து நடைபெறுமா?
இந்த மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வித் (எஸ்.எஸ்.சி.) தேர்வு தமிழில் நடத்தப்படுமா?
ஒன்று முதல் எட்டுவரை தமிழில் பயிலும் இம்மாணவர்களுக்குத் தமிழில் பாடநூல் கிடைக்குமா?
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படுமா?
இந்தக் கேள்விக்குரிய சாதகமான பதிலை தமிழக முதல்வர்தான் மராத்திய மாநில அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்.
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.
தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,
சென்னை - 600 024. பேசி - 044-24732713.
1 comment:
மும்பை வந்திருந்த போது தமிழ்வழிப் பள்ளிகளைப் பார்த்து மகிழ்ந்திருந்தேன். ஆனால், அங்கு பாடநூல்கள் தமிழில் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது :( கேரளத்தில் தமிழ் வழியப் பள்ளிகள், தமிழ்ப் பாட நூல்கள் உள்ளன. ஆனால், அங்கும் சில (அல்லது எல்லா?) தமிழ் வழியப் பள்ளிகளை மூடப் போவதாக அறிந்தேன். கர்நாடக-தமிழக எல்லைப் பகுதிகளிலும் இதே நிலை :(
Post a Comment