Friday, November 13, 2015

ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்போம்!

தமிழுக்கு நன்கொடை அளிப்போம்!
ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்போம்!


அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 376 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. உலகத் தர வரிசையில் அது முதன்மையான இடத்தை பெற்றுள்ளது.  உலகின் பிற செம்மொழிகளுக்கு அங்கு இருக்கைகள் உள்ளன. அவற்றில் சிறந்த ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன.  ஆனால் செம்மொழியான ஆதி தமிழுக்கு இது வரையில் அங்கு இருக்கை உருவாகவில்லை.  இது நாள் வரை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இரண்டு சமூகங்கள் தான் தம் மக்களின் முயற்சியால் இருக்கைகள் நிறுவியுள்ளன.  நூற்றுக்கணக்கான பிற இருக்கைகள் எல்லாம் பெரும் செல்வந்தர்களாலும், அரசாங்கங்களாலும் ஏற்படுத்தப்பட்டவை.  தமிழுக்காக ஓர் இருக்கை  நிறுவும் மூன்றாவது மக்கள் தொகையாக  நாம் தலை நிமிர்ந்து நிற்கலாம்.  


ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை உலகத்தின் அறிவு  மையம் என்று
சொல்வார்கள். அறிவும் ஆற்றலும் உள்ள முதல்தரமான பேராசிரியர்களை
ஹார்வார்ட் ஈர்க்கும். அதேசமயம் உலகத்து பல நாடுகளிலிருந்தும் ஆர்வமான, தரமான மாணவர்கள் தமிழை கற்பதற்கும்  ஆராய்வதற்குமாக ஹார்வார்ட்டை  நாடுவார்கள்; உலகத் தரத்தில் ஆராய்ச்சிகளும் பயிற்றுவித்தலும் நிகழும். இங்கே நிறுவப்பட்ட ஆய்வு முறைகளும் ஒப்பியல் முறைகளும் உலக அங்கீகாரம் பெற்றவை; மதிப்பு வாய்ந்தவை. அதனால் தமிழ் ஆராய்ச்சிகளின் பயன் பலரையும் சென்றடையும் என்று கூறப்படுகிறது.

தமிழ் இருக்கை தொடங்குவதற்கு ஆறு மில்லியன் டாலர்கள் (சுமார் 40 கோடி 
ரூபாய்) தேவைப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் திரு 
ஜானகிராமனும் திரு திருஞானசம்பந்தமும் கூட்டாக ஒரு மில்லியன் டாலர்கள் செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்கள். மீதி ஐந்து மில்லியன் டாலர்களை உலகத்து தமிழ் மக்களிடமிருந்து திரட்டி இருக்கை உருவாக வழி செய்யவேண்டும். இந்த இருக்கையின் உருவாக்கத்தில் தமிழ் நாடு அரசின் உதவி பெரிதும்  எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பல்கலைக்கழகங்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை  நழுவவிடாமல் உதவலாம். அவைகளுக்கு எதிர்காலத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துடன்  ஏற்படப்போகும் தொடர்பு இரு பல்கலைக்கழகங்களின்  வளர்ச்சிக்கும் உதவும். தமிழ் நிறுவனங்கள்,  தொழிலதிபர்கள், கல்வியாளர்கள்,  தமிழ் பற்றாளர்கள் என அனைத்து மக்களிடமிருந்தும் உதவி எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க 5000 தமிழர்கள் ஒன்றுபட்டாலே போதும்,  ஒரு வருட கால அவகாசத்துக்குள் வேண்டிய நிதியை திரட்டிவிடலாம்.

மூன்று விதங்களில் நிதி வழங்கலாம்:

1) உங்கள் காசோலையை “Tamil Chair Inc.” என்ற பெயருக்கு எழுதி
கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புதல்.


Tamil Chair Inc.
Attn: Dr. Sornam Sankar,
4113 Tiber Falls Dr,
Ellicott City, MD 21043,
USA

2) உங்கள் காசோலையை “Harvard University” என்ற பெயருக்கு எழுதி  கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புதல்.மறக்காமல் காசோலையில் Memo என்றிருக்கும் கோடிட்ட இடத்தில் Tamil Chair என்று குறிப்பிடுவது அவசியம். இல்லையெனில் அது பிற செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

Office of the Recording Secretary
Harvard University
124 Mount Auburn Street
Cambridge, MA 02138
USA

3) வங்கி மூலம் நேரடியாக பணம் செலுத்துதல்.

Bank of America
100 Federal Street,
Boston, MA 02110
President & Fellows of Harvard College,
RSO account
Account #: 9429263621
ACH ABA: 011000138
Wire ABA: 026009593
Swift Code: BOFAUS3N
Donor: (To be provided by donor)
Purpose: Sangam Professorship in Tamil

தமிழில் ஆர்வமான இளம் தலைமுறையினர் இன்று வெளிநாடுகளில்  பல  துறைகளில் கல்வி கற்கின்றனர். அவர்களும் பிற நாட்டினரும்  தமிழின்  பழமையான இலக்கியங்களைப் படித்து ஆராய இந்த இருக்கை உதவும்.   
உன்னதமான சான்றோர்களால் பல ஆயிரம் ஆண்டுகளாக பேணி வளர்க்கப்பட்ட சுவையான செம்மொழி நம்முடைய தமிழ். அதற்கு உரிய மரியாதையைக் கொடுத்து நாம் சிறப்பிக்க வேண்டும். 1.5 மில்லியன் மக்கள் மட்டுமே பேசும் செல்டிக் மொழிக்கு இரண்டு இருக்கைகள் ஹார்வார்டில் இருக்கின்றன. 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்கு ஓர்  இருக்கையாவது நிறுவவேண்டியது எத்தனை அவசியம்? இந்த இருக்கை அமைய 
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு நிதி வழங்கி ஆதரவு 
தரவேண்டும். இதனால் தமிழுக்கு பெருமை. எங்கள் வருங்காலச் சந்ததியினருக்கு நாம் விட்டுப் போகும் அரிய செல்வமாக இது விளங்கும்.

இது தொடர்பான
இணைய முகவரி http://harvardtamilchair.com/

No comments: