Friday, November 13, 2015

பீகார் தேர்தல் - மதச்சார்பின்மைக்கு வெற்றி, சகிப்புத்தன்மைக்கு தோல்வி

பீகார் தேர்தல் - மதச்சார்பின்மைக்கு வெற்றி, சகிப்புத்தன்மைக்கு தோல்வி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் லாலு பிரசாத் - நிதிஷ்குமார் கூட்டணிமிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. இந்த தேர்தல் பீகார் மாநிலத்தில் நடைபெற்றிருந்தாலும் ஒட்டுமொத்த தேசமும் இந்த தேர்தல் முடிவுகளை மிக ஆவலோடு எதிர்நோக்கி இருந்ததது. பாஜக தலைமையிலான மதவெறி கூட்டணி இந்த தேர்தலில் தோல்வியடைந்திருப்பது நாட்டு மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நிதிஷும் லாலுவும் அரசியல் எதிரிகளாக இருந்தவர்கள், தங்களுக்கென்று வாக்கு வங்கிகளை வைத்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என அரசியல் களத்தில் நின்றவர்கள். 


ஆனால், நடந்து முடிந்த பீகார் தேர்தலில் அவர்கள் கூட்டணி அமைத்தது மிகவும் பாராட்டுக்குரியது. தங்களது மனமாச்சரியங்களை, கருத்து முரண்களை அரசியல் எதிர்ப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, நிதிஷ்குமாரும், லாலுவும்  மதவெறி சக்திகளை வீழ்த்த வேண்டும் - நாட்டின் மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்கிற உன்னத லட்சியத்தை தேர்தல் நிலைப்பாடாகக் கொண்டு மக்களை சந்தித்தனர். இந்த நிலைப்பாட்டை பீகார் மக்கள் வரவேற்று, வெற்றியும் தந்துள்ளனர். நாட்டில் மதவாதத்தை, வெறுப்பு அரசியலை, சகிப்பின்மையை விதைப்பவர்களை 
மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற யதார்த்த உண்மையை இந்தத் 
தேர்தல் மூலம் நாட்டுக்கு பீகார் மக்கள் உணர்த்தியிருக்கின்றனர். 

பீகார் மக்களின் தீர்ப்பு என்பது மதவாத சக்திகளுக்கு மட்டுமான சமிக்ஞை அல்ல; வெற்றி பெற்ற லாலு-நிதிஷ் கூட்டணிக்கும் இதில் படிப்பினை இருக்கிறது. மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்தால் இதுதான் நிலை என்பதையும் சேர்த்தே பீகார் மக்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணி உணர்ந்து செயல்பட வேண்டும். 

No comments: