Thursday, January 10, 2008

போலிச் சாமியார்களிடம் பெண்கள் தொடர்ந்து ஏமாறுவதற்குப் பெண்களின் அறியாமைதான் காரணம் என்பது உண்மையா?

போலிச் சாமியார்களிடம் பெண்கள் தொடர்ந்து ஏமாறுவதற்குப் பெண்களின் அறியாமைதான் காரணம் என்பது உண்மையா?
- தோழர் ஓவியா

ஒரு தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் விவேக்கும் விஜய்யும் நடிக்கும் ஒரு நகைச்சுவைக் காட்சி. நடிகர் விவேக் ஒரு நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டும். நடிகர் விஜய் தனது இருசக்கர வண்டியில் அவரை அழைத்துச் செல்வார். சென்னையிலுள்ள ஓர் இடம் அவர்கள் போக வேண்டியது. வழியெங்கும் பொதுப் பணித்துறையினரின் கைங்கர்யத்தால் பாதை அடைக்கப்பட்டிருக்கும். வேறு பாதையில் செல்லச் சொல்லி அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருக்கும். அதன்படி பாதை மாறி மாறிக் கடைசியில் விஜய் விவேக்கைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்று கையில் ஒரு லட்டை வாங்கிக் கொடுத்து விடுவார். ஆக நேர்முகத் தேர்வு கோவிந்தா என்று முடியும் அந்த நகைச்சுவைக் காட்சி.

நமது சமூகத்தில் படித்து வேலைவாய்ப்புப் பெற்ற பெண்களின் கதையும் இப்படித்தான் ஆகிவிடும் போலிருக்கிறது. சமீபத்தில் ஒரு சாமியாரின் மூன்றாவது மனைவியாக ஒரு பெண் மருத்துவர்... என்ற செய்தியைப் படித்த போது வேதனையாக இருந்தது. சரி காதலிப்பது அந்த அம்மையாரின் உரிமைதான். அதை விட்டு விடலாம்தான். ஆனால் மதங்களுக்கும் பெண்களுக்குமான உறவை நாம் ஆய்வு செய்யாமல் விட்டு விட முடியாது.

பாலியல் தேவைகள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகள் என்பது இயற்கையின்பாற்பட்டது. எந்த மிருகமும் இதற்குத் தனது சமூகத்தின் அங்கீகாரத்தைக் கோரி நிற்பதில்லை. இதனால் நமது மனிதர்கள் கற்பனை செய்வது போல், வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடத்திலும் பாலியல் தேவைக்காகவே எந்த மிருகமும் அலைந்து கொண்டிருப்பதுமில்லை. மனித சமூகம் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வது என்ற செயற்பாட்டில் முதலில் கை வைத்தது பாலியல் உரிமையில்தான்.

குழுக்களாகவும், கூட்டங்களாகவும் அலைந்து திரிந்த போது ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகள். நாகரிக மனித சமுகத்தில் இந்தப் பாலியல் உறவுகளை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிறுவனம் மதம். இதில் இந்து மதம் சிறப்புப் பங்களிப்புச் செய்துள்ளது. சாதி அமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பப் பையையும், அதன் வாசலையும் காவல் காக்க வேண்டிய பொறுப்பை அது கணவன்மார்கள் என்ற தனித்தனி ஆண்களின் கையில் கொடுத்து விட்டது. இப்படிக் கணவன்மார்களை முன்வாசலில் நிறுத்திவிட்டு, சிறைப்படுத்தப்பட்ட பெண்களின் காமத்தோடு கள்ள உறவை மதம் கொல்லைப்புற வாசல் வழியாக வைத்துக் கொண்டது. கோயில் திருவிழா என்று தொடங்கி, சாயிபாபாக்கள், சங்கரமடங்கள் வரை இந்தக் கொல்லைப் புற வாசலின் வேறு வேறு வடிவங்கள்தான்.

பெண்ணின் காமத்துக்கு இங்கு என்ன சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது? அவள் கணவன் மீது கூட காமம் கொள்ள முடியாதே? அவள் கணவனின் காமத்துக்குப் பசித்த போது பரிமாறப்பட வேண்டிய உணவுதானே தவிர வேறொன்றுமில்லையே? ஆனால் காவி உடையை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டால், ஆயிரம் பேர் கூடியிருக்கும் போது கூட என்ன செய்தாலும் கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள், வாயில் போட்டுக் கொள்வார்கள். சாமி என்பார்கள். மாதா என்பார்கள். நமது சமூகத்தில் அம்பலப்படுத்தப்படும் வரை இவர்கள் பெயர் சாமியார். அம்பலப்பட்ட பிறகு போலி சாமியார்.

மனிதன் சமூக விலங்கு என்றால், அதில் பெண் இல்லையா? குரங்காக இருக்கும் வரை சேர்ந்துதானே அனைத்து இடங்களிலும் சுற்றிக் கொண்டிருந்தோம்! ஏன் நாடோடி சமூகம் வரையிலும் அதுதானே? இப்போது மட்டும் பெண்ணின் இடம் வீடு என்று வரையறுத்தால் பெண்ணின் அடக்கப்பட்ட சமூக உணர்வுக்கு என்ன வடிகால்? அந்த வடிகாலைத்தான் மதம் தனது பண்டிகைகள், சடங்குகள், கோவில்கள் திருவிழாக்கள் வாயிலாகக் காலங்காலமாக வழங்கி வருகிறது. வன்முறை தோற்குமிடத்திலும் வெல்லக் கூடிய ஆயுதங்களை மதம் வைத்திருக்கிறது.

பெண் ஒடுக்குமுறை என்பது பெண்ணை சமூக மனுசியாகப் பார்ப்பதை அடிப்படையிலேயே மறுதலிக்கிறது. போன தலைமுறை பெண்ணுக்கு இந்தக் கல்வியும் வேலைவாய்ப்பும் இந்த மதத்தின் பெயரால்தான் மறுக்கப்பட்டிருந்தது. இந்த மத அமைப்புடன் போராடித்தான் பெண்கள் அதனைப் பெற முடிந்தது. ஆனால் இன்று படித்த பெண்கள் அந்த மதத்தின் புதிய கிளைகளான மேல்மருவத்தூர் துவங்கி, வாழ்க வளமுடன் வரையிலுள்ள அமைப்புகளில் அதிகமாகச் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்று ஓரளவு சுதந்திர வெளிச்சமும கிடைக்கப் பெற்றிருக்கின்ற இன்றைய பெண்களை முழுமையாக ஆண்களின் நிழல்களுக்குள் சிறை வைக்க முடியாது என்ற அறிவு இவர்களுக்கு இருக்கறிது. எனவே இவர்கள் பெண்களும் பங்கு பெறும் விதமாகவும், அவர்களுக்குத் தனி முக்கியத்துவம் அளிப்பது போலவுமானதாகத் தங்களது பூசை மற்றும் தியான மண்டபங்களை மாற்றியமைத்து வருகிறார்கள். எழுதப் படிக்கத் தெரிந்து, வெளி உலகத்தையும் பார்க்க முடிந்த பெண்கள் தொகையில் பெரும்பாலானோர் இன்று அவர்களின் கூடாரங்களில்தான் தென்படுகிறார்கள். ஒரு மாபெரும் சமூக எழுச்சி மூலமாகக் கடந்த தலைமுறை பெற்றுத் தந்த உரிமைகளை சுவாசித்தே தோற்றம் கொண்ட இந்தப் பெண்கள், அந்தப் பாதையின் தொடர்ச்சியாய் சமூகத்தில் இயங்காமல் இந்த வழியாகத் திருப்பிவிடப்படுகிறார்கள்.

காரணம் பெண்களுக்கான உரிமை இயக்கம் என்பது வெறும் பெண் கல்வி வேலைவாய்ப்பு என்ற கோரிக்கைகளோடு இன்று நின்றுவிட முடியாது. அதன் அடுத்த கட்டங்களை நோக்கி வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இந்த வெளியை முற்போக்கு இயக்கங்கள் தங்களது ஆரோக்கியமான அரசியல் செயல்பாடுகள் மூலமாக உருவாக்கித் தரவேண்டும்.

அன்று பெரியாருக்குப் பின் பெண்கள் அணி திரண்டார்கள். காரணம் பெரியார் பெண்களுக்கான சமூக வெளி குறித்து அதிகம் கவலைப்பட்டார். அதற்கான செயல்பாடுகளைத் திட்டமிட்டார். ஆனால் இன்றைய முற்போக்கு இயக்கங்கள் பெண்களைப் பற்றி மிகக் மிகக் குறைவாகச் சிந்திக்கின்றன. மிக மிகக் குறைவாகக் கவலைப்படுகின்றன. பெண்களுக்குத் தேவைப்படும் சமூக வெளியை முற்போக்கு இயக்கங்கள் வழங்க மறுக்கும் போது மதங்கள் மீண்டும் வெற்றி பெறுகின்றன.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713

No comments: