Thursday, January 10, 2008

மோடிக்கு ஆதரவு திருமாவளவனுக்கு எதிர்ப்பா?

மோடிக்கு ஆதரவு திருமாவளவனுக்கு எதிர்ப்பா?
-பைந்தமிழ்

‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’ என்று கூறி ஏற்கனவே ஒருமுறை ஒளிபரப்பப்பட்ட திரைப்படத்திற்குத் தமிழகத் தொலைக்காட்சிகளில் விளம்பரம் வருவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல்தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் ஏற்கனவே பலமுறை எழுப்பப்பட்டு, எடுபடாத சிக்கல் ஒன்றை மீண்டும் எழுப்பி மக்களிடம் விளம்பரம் தேடிக்கொள்ள முயல்கிறார்.

செல்வி ஜெயலலிதா அம்மையார் எழுப்ப முயலும் அந்த சிக்கல் வேறு ஒன்றுமல்ல... ‘‘தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கை அதிகரித்துவிட்டது. விடுதலைப் புலிகளுக்கும் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள சிலகட்சிகளின் தலைவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவதோ, நிகழ்ச்சிகளை நடத்துவதோ சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பதுதான் செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் அம்மையார் ஜெயலலிதா அண்மைக்காலமாக வலியுறுத்திவரும் விவகாரம் ஆகும்.

சிங்களப் படைகளின் கொடூரத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் கலைஞர் கவிதை எழுதியதற்காக கண்டனம் தெரிவித்த ஜெயலலிதா, அதன்பின் தமிழ்ச்செல்வனுக்காகத் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் சென்னையில் இரங்கல் ஊர்வலம் நடத்த முயன்றதையும் கடுமையாக விமர்சித்தார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

ஜெயலலிதா மட்டுமின்றி காங்கிரஸ் கோஷ்டிகளின் பல்வேறு தலைவர்களும் விடுதலைப்புலிகளை திருமாவளவன் ஆதரிப்பதாகக் கூறி, அவர் மீது சராமாரியாக கண்டனக் கனைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ‘‘விடுதலைப்புலிகளுக்கு தார்மீக ஆதரவு தருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகிறார். இப்படிக் கூறுவதன் மூலம் தமிழக அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்’’ என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் கிருட்டிணசாமி அன்புடன் வேண்டுகோள் வைக்கிறார். ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவனோ, ‘‘திருமாவளவனாக இருந்தாலும் சரி; பெருமாவளவனாக இருந்தாலும் சரி. விடுதலைப்புலிகளை ஆதரித்து கருத்துக் கூறுவதை அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்துக் கருத்துக் கூறுவோர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’’ என சூடாகப் பொறிகிறார்.

சரி அப்படி என்னதான் சொல்லிவிட்டார் திருமாவளவன்....
விடுதலைப்புலிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உதவுவதாக ஜெயலலிதா சுமத்திய குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய திருமாவளவன்.
‘‘இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடிவருபவர்கள் விடுதலைப்புலிகள்தான். அவர்களால் மட்டும்தான் இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர முடியும். எனவே நாங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறோம். நாங்கள் விடுதலைப்புலிகளுக்கு அளிப்பது தார்மீக ஆதரவுதானே தவிர வேறு எதுவும் இல்லை. விடுதலைப்புலிகளுக்கு நாங்கள் ஆயுத உதவியோ வேறு எந்த உதவியோ செய்யவில்லை. ஆனால் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த வன்னியரசு என்பவர் விடுதலைப்புலிகளுக்கு இயந்திரப்படகு வாங்கித் தந்ததாகவும், பிரபாகரனோடு வன்னியரசுக்கு தொடர்பு இருப்பதாகவும் உளவுத்துறை கதை கட்டிவிடுகிறது. விடுதலைப்புலிகளுக்குத் தார்மீக ஆதரவு தருவது தவறு என்றால் அந்தத் தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்வதில் நாங்கள் பெருமை அடைகிறோம்’’ என்று சூடாக பதிலடி தந்தார். அதை வைத்துக் கொண்டுதான் ஜெயலலிதா முதல் காங்கிரஸ் தலைவர்கள் வரை அனைவரும் திருமாவளவனுக்கு எதிராக நஞ்சு கக்கிக் கொண்டிருக்கின்றனர்.

சரி... திருமாவளவன் இப்படிப் பேசியது தவறா?...
இந்த வினாவுக்கு நாம் விடையளிப்பதை விட, இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்...
இந்திய மக்களுக்குப் பேச்சுரிமையை வழங்குவது அரசியல் சட்டத்தின் 19ஆவது பிரிவுதான். அரசியல் சட்டத்தின் 19(1)(அ) பிரிவு சொல்வது இதுதான்.
‘‘இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் தங்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் வெளியிட உரிமை உள்ளது. கருத்துகளையும், உணர்வுகளையும் வெளியிடும் உரிமை என்பது, எவர் ஒருவரும் தங்களின் கருத்துகளையும் முடிவுகளையும் உரையாகவோ, எழுத்தாகவோ, அச்சுமூலமாகவோ, படங்களின் வாயிலாகவோ அல்லது வேறு ஏதேனும் வழிகளிலோ வெளியிடலாம். ஒருவரின் கருத்துகளை சைகை, அடையாளம் போன்றவற்றின் மூலமாகத் தெரிவிப்பதும் இதில் அடங்கும். கருத்துகளை நூலாக அச்சிட்டு வெளியிடுவதும் குடிமகனின் அடிப்படை உரிமைதான். அதேபோல் மற்றொருவரின் கருத்துகளை அச்சிட்டு வினியோகிப்பதும் கருத்துச் சுதந்திரத்தில் அடங்கும்’’.
இந்தியாவிலுள்ள அனைவரும் தங்களின் கருத்துகளை சுதந்திரமாகத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய தலைவர்களுக்கு இருந்துள்ளது. அதனால்தான் அதை அடிப்படை உரிமையாக்கியுள்ளனர்.

அது மட்டுமல்ல... அரசியல் சட்ட வல்லுனர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ‘கருத்துரிமை’யின் முக்கியத்துவத்தை திரும்பத்திரும்ப வலியுறுத்தி வருகின்றனர். ‘‘பேச்சு என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரம். பேச்சின் மூலம் மனிதர்கள் தங்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் தெரிவிக்க முடியும். பேச்சுரிமையும், கருத்துரிமையும் மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு கிடைத்துவிடுகிறது. எனவேதான் அவை இரண்டும் மனிதனின் பிறப்புரிமை என அழைக்கப்படுகிறது. எனவே கருத்துகளையும், உணர்வுகளையும் சுதந்திரமாகத் தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு’’ என 1948ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காகவே அந்த உரிமையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா? என்ற கேள்வி எவருக்கேனும் எழுந்தால் அது சரியானதுதான். அரசியல் சட்டத்தின்படி இந்த உரிமையை வழங்கியவர்களே, இந்த உரிமையை எப்போதெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.
அரசியல் சட்டத்தின் 19(2)வது பிரிவின்படி, ‘‘தேசத்தின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு நியாயமான முறையில் தடைகளை விதிக்க முடியும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள சூழ்நிலைகளில் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்கக் கூடாது என்பது இதன் பொருளாகும். தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழல்கள் என்ன என்பதும் அரசியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான புரட்சி, அரசுக்கு எதிராகப் போர் நடத்துதல், சட்டவிரோதமாகக் கூடி வன்முறையில் ஈடுபடுதல், கலவரம் செய்தல் போன்றவைதான் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராகப் புரட்சியோ, போரோ நடத்துவதற்காக, விடுதலைப்புலிகளுக்குத் தார்மீக ஆதரவளிக்கிறேன் என்று திருமாவளவன் கூறவில்லை. கலவரத்தைத் தூண்டும் நோக்குடனோ, வன்முறையில் ஈடுபடும் நோக்குடனோ இப்படி ஒரு கருத்தை திருமாவளவன் முன்வைக்கவில்லை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் படி, இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடும் ஓர் அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது எப்படிக் குற்றமாகும் என்பது அரசியல் சட்டம் தெரிந்த எவருக்கும் விளங்கவில்லை.
ஆனால் விடுதலைப்புலிகளுக்குத் தார்மீக ஆதரவு தருவோரைக் கைது செய்யவேண்டும் என்பதற்குப் பெரியார் பேரன் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தொடங்கி, அவரால் கோமளவல்லி என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா வரை அனைவரும் கூறும் காரணம் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதால், அந்த இயக்கத்தை ஆதரிக்கக்கூடாது என்பதுதான.¢ அவர்களின் கருத்துப்படியே பார்த்தாலும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு தார்மீக ஆதரவளிப்பது குற்றமா?

‘‘இலங்கையில் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர விடுதலைப்புலிகளால் மட்டும் தான் முடியும். எனவேதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை நேற்று ஆதரித்தேன்... இன்று ஆதரிக்கிறேன்... நாளையும் ஆதரிப்பேன்’’ என்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 28.06.2002இல் நடைபெற்ற மதிமுக பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 11 பேரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பொடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தது குற்றம் என்பதுதான்.
ஆனால், தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து வைகோ தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்குத் தார்மீக அடிப்படையில் ஆதரவு தருவது மட்டுமே குற்றமாகிவிடாது என்று நெத்தியடி தீர்ப்பு வந்தது.

கருத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இராஜேந்திர பாபு, ஜி.பி.மாத்தூர் ஆகியோர் 2003ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அளித்த அந்த அதிரடித் தீர்ப்பு.

‘‘பொடா சட்டத்தின் 21ஆவது பிரிவுதான் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசுவதை விளக்குகிறது. 21ஆவது பிரிவின்படி, இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலோ, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையிலோ, பயங்கரவாதத்திற்கு துணைபோகும் வகையிலோ, பயங்கரவாதத்தை தொடங்கும் வகையிலோ அல்லாத பேச்சுக்கள் எதுவும் குற்றமாக கருதப்படாது. மேலும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தார்மீக ஆதரவு அளித்து பேசுவதோ, ஆதரவுக் கூட்டங்கள் நடத்துவதோ பொடா சட்டத்தின் 21ஆவது பிரிவின்படி தவறாகக் கருதப்படாது’’ என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, பொடா சட்டம் பற்றி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் அளித்த அப்போதைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சோலி சோரப்ஜியும் கருத்துரிமையையோ, பேச்சுரிமையையோ எந்தச் சட்டத்தாலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அதை ஏற்றுக் கொண்டுதான் தடை செய்யப்பட்ட அமைப்புகளை ஆதரித்து பேசுவதோ, கருத்துக் கூறுவதோ தவறு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துரிமையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கும் நிலையில், இந்திய அரசும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தைத் தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பல்வேறு அமைப்புகள் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றன. அவற்றில் முதன்மையானது ஐசக் முய்வா தலைமையிலான நாகாலாந்து தேசிய சமுதாய மையம ஆகும். அந்த அமைப்பை இந்திய அரசு தடைசெய்திருந்தாலும், அதற்கு ஆதரவாக நாகாலாந்து மக்களில் ஒரு பிரிவினர் கருத்துக் கூறிவருவதை நாகாலாந்து அரசும், நடுவண் அரசும் இன்றுவரை அனுமதித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, நாகாலாந்து சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக நாகாலாந்து தேசிய சமுதாய மையத்தின் தலைவர்கள் ஐசக் முய்வா ஆகியோருடன் இந்திய அரசு தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. அவ்வளவு ஏன்?... விடுதலைப்புலிகள் இயக்கம் செயல்பட்டு வரும் இலங்கையில் கூட, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு விலக்கிக் கொண்டு பேச்சு நடத்தியது.

வரலாறு கூறும் உண்மைகள் இவ்வாறு இருக்கும் நிலையில், விடுதலைப்புலிகள் இயக்க்ததிற்கு தார்மீக ஆதரவு தருவது கூடத் தவறு என்பதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தார்மீக ஆதரவு தருவதை எதிர்ப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.
இதைத்தான், ‘‘ஒருவரின் கருத்தை சுதந்திரமாக கூற அனுமதிப்பதுதான் ஜனநாயகத்தின் உயிர் நாடியாகும். அதை ஒடுக்கவோ, நசுக்கவோ, மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் ஜனநாயகத்திற்குச் சாவு மணியடித்துவிடும். இத்தகைய முயற்சிகள் சர்வதிகாரம் ஏற்படுவதற்குதான் வழிவகுக்கும்’’ என்று ஜோத்பூரில் உள்ள தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அரசியல் சட்ட வல்லுனருமான சுரபிசிங்கி வர்ணித்துள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் கருத்துரிமை நசுக்கப்படுவதை எதிர்க்கவும், கருத்துரிமையை பாதுகாக்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக வரும் 25ஆம் தேதி கருத்துரிமை மீட்பு மாநாட்டை அவர் நடத்த உள்ளார். இந்த முயற்சியின் பயனாகத் தமிழகத்தில் கருத்துரிமை பாதுகாக்கப்படும்; குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்ல¦ம்களை கொன்று குவித்துவிட்டு அதை நியாயப்படுத்தும் நரேந்திர மோடி போன்றவர்களை ஒருபுறம் வாழ்த்திவிட்டு, மறுபுறம் தமிழர்களுக்கு ஆதரவு தருவதை தவறு என்று கூறும் ஜெயலலிதா போன்ற ‘கருத்துரிமைக் காவலர்களின்’ முகமூடி கிழிக்கப்படும் என்பது உறுதி.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713

No comments: