Thursday, January 10, 2008

பொங்கல் - தமிழரின் மே தினம்- பேராசிரியர் கா. சிவத்தம்பி

இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றிலிருந்து - உண்மையில் திராவிட முன்னேற்றக் கழகத் தோற்றுகை காலம் முதல், தைப்பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடும் வழக்கம் வளர்ந்து வருகின்றது.


இந்திய, தென்னிந்தியத் தமிழகச் சூழலில் தீபாவளியையே வருடத்தின் பிரதானமான விழாக் காலமாகக் கொள்ளும் ஒரு மரபு நிலவி வந்தது. இந்து மதச் சடங்கு ஐதீகப் பாரம்பரியங்களுடன் தொடர்பு கொண்டிருந்த தீபாவளியின் சனரஞசகத் தன்மை திராவிடக் கருத்து நிலையின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்குவதாகக் கொள்ள வேண்டும்.

தீபாவளியின் தோற்றம் பற்றி ஆராய்ந்தவர்கள் பின்னர் அதற்கு ஒரு இந்தோ ஆரியச் சார்பின்மை உண்டு என்று கூறியது கூட அந்த ஜனரஞ்சகத் தன்மையைக் குறைக்க முடியவில்லை.

இந்தச் சூழலிலே தமிழகத்துக்கு மாத்திரமே உரிய அதிலும் பார்க்க முக்கியமான இந்தோ ஆரிய பிராமணியச் சார்பற்ற ஒரு வைபவத்தை முன்னிறுத்துவது அரசியல் பண்பாட்டுத் தேவையாக அமைந்தது எனலாம். இந்த பின்புலத்திலே தான் சி.என்.அண்ணாதுரை அவர்கள் பொங்கலைத் தமிழர் கொண்டாட வேண்டிய தினமாக முன்வைத்தார். அவர்கள் தைப்பொங்கலின் சிறப்பு தமிழ்நாடு நிலைப்பட்டதும் அதிலும் பார்க்க பிராமணியச் சடங்குச் சார்பற்றதுமாகும்.
இந்தப் பண்பாட்டரசியல் உந்துதலொன்று இருந்தது உண்மையெனினும், தமிழக நிலையில் பிராமணரல்லாதார் இடையேயும் குறிப்பாகத் தமிழ் விவசாயிகளிடையே உண்மையில் தைப்பொங்கல் நாள் மிக முக்கியமுடைய ஒரு நாளாகக் கருதப்பட்டது “பொங்கல்”. பொங்குதலென்பது வைபவ கொண்டாட்டங்களின் பொழுது மேற்கொள்ளப்படும் ஒரு பிரதான சடங்காக தமிழ்ப் பண்பாட்டு நடைமுறையிலிருந்து வருகின்ற நன்னாள் எனினும், (வருஷப்பிறப்பு, பொங்கல், ஆகமஞ்சரா கோயில்களில் நேர்த்திக்காக பொங்கல் என) இந்நடைமுறை ஜனரஞ்சகமாகவே இருந்து வருகிறது. ஆனால், தமிழ்ச் சமூக அடிநிலையில் பொங்கல் விழாவினை மக்கள் சூரியனுக்குப் பொங்குதல் என்றே கூறிவந்துள்ளனர். சில கிராமங்களில் ஆதித்யனுக்குப் (சூரியனுக்கு) பொங்கல் என்ற கருத்தில் ஆயித்தியனுக்கு பொங்கல் என்று சொல்லும் வழக்கம் இன்று வரை உண்டு. இலங்கை வடமராட்சியில் இந்த வழக்கு இன்றும் காணப்படுகிறது. தைப்பொங்கல் பற்றிய உண்மையான முக்கியத்துவம் இதுவே.
சூரியனுக்குப் பொங்கல் என்ற அழுத்தத்தின் பின்புலத்தில் தமிழக இலங்கை புவியியலின் பின்புலமாக அமையும் காலநிலை முக்கியமாகின்றது. தமிழ்நாட்டில் பாரம்பரியமாக ஆவணியுடன் மழைக்காலம் தொடர்வதாகச் சொல்வார்கள். சங்க இலக்கியப் பாரம்பரியத்தில் தலைவன் வீட்டுக்குத் திரும்பல் மழைக்காலம் பற்றிய குறிப்புகளில் இருந்து இவ்வுண்மை புலனாகின்றது.


தமிழ்நாட்டில் ஆவணி, புரட்டாசி, மார்கழி காலத்தில் மழைக்காலம் அல்லது மாரிக்காலம் என்பர். மாரி என்பது மழை தாரை தாரையாக விழுவதைக் குறிக்கு‹ தமிழ்நாட்டின் வெப்பத்தை நீக்குவதற்கு மாரி அவசியமாகும். இதனாலேயே அம்மன் வணக்கத்தில் மாரியம்மன் வணக்கம் முக்கியமாகின்றது. மாரியைத் தருகின்ற அம்மன் என்றே இதன் பொருள் கொள்ள வேண்டும். இந்த மாரியில் உச்சகட்டம் மார்கழியாகும்.
அந்த உச்சக்கட்டத்திலிருந்து மாறி சூரியனது கதிர்கள் வடக்கு நோக்கியவையாக திரும்புவது தையிலேயாகும். இதனாலேயே தை மாதத் தொடக்கத்தினை உத்தராயணம் என்று சொல்வர். மற்ற மாற்றம் சூரியனின் கதிர்கள் தெற்கு திசை வழிபடல் ஆடி மாதம் 1ஆம் திகதியாகும். இதனாலேயே தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் ஆடிப்பிறப்பைத் தமிழர்கள் விசேடமாகக் கொண்டாடுவார்கள். ஆடி மாதத்திலிருந்து காற்றின் திசைமாறும் என்பது கடலோடி, மீன்பிடி மக்களின் அனுபவ அறிவாகும். விவசாயிகளைப் பொறுத்தவரையில், “ஆடிக் காற்றில் தேடி உழு” எனும் பழமொழி உண்டு. எனவே, தமிழ்நாட்டின் தை மாதம் 1ஆம் திகதி முக்கியமான நாளாகும். தமிழ்நாட்டின் பாரம்பரிய விவசாய நடைமுறையை அவதானிப்பின் மார்கழியோடு மழை முடிய தையிலே புதிர் எடுக்கும் வழக்கம் உண்டு. உண்மையில் கோவில்களில் தைப்பொங்கல் அன்று புதிர் நெல்லை அழகுறக் கட்டி கோயில் வாசலில் தொங்கவிடுவர். தைப்பொங்கல் அன்று கோயில் வாசல்களில் நடக்கும் பொங்கலை புதிர்ப் பொங்கல் எனும் மரபு இன்று வரை உண்டு.

தமிழ்நாட்டுக் கிராம வாழ்க்கையின் பாரம்பரியங்களை நன்குணர்ந்திருந்த அண்ணாத்துரை அவர்கள், தமிழ்த் தேசிய இன எழுச்சியில் ஓர் குறிப்பாக தைப்பொங்கலைக் கொண்டது மிகப் பொருத்தமான ஒன்றாகும். பிராமணியத்தின் ஐதீகப் பின்புலங்கள் எதுவும் இல்லாத விழா தைப்பொங்கல் ஆகும். எனவே தான் அதனை உழவர் தினமாகக் கொண்டாடுகின்ற ஒரு பாரம்பரியம் ஏறப்டுத்தப்பட்டது. உண்மையில், இந்தச் சமகால அடையாளப்படுத்துகை நிறைந்த பொருளுடையதாகும். ஏனெனில், தைப்பிறப்புக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் செய்யப் பெறும்.
வயல் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட காளை மாடுகளை அலங்கரித்து மாட்டுத் தொழுவத்தடியினை நன்கு செய்து ஓர் புதிய தொடக்கத்தினை ஏற்படுத்துவர். மாட்டுப் பொங்கலும் தொழுவத்திற்கு அருகாமையிலேயே நடைபெறும். இந்த அம்சம் தைப்பொங்கலை நிச்சயமாக ஒரு விவசாய விழாவாகவே காட்டுகின்றது.

தை முதல் நாளும், 2ஆம் நாளும் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சிகள் அளவு இன்றுமொரு முக்கிய நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடைபெறுவதுண்டு. பொங்கலுக்கு முதல் நாள் இரவு வீட்டில் உள்ள பழம் பாய்கள், குப்பை கூளங்களை பெரு நெருப்பாக எரிப்பர். அதாவது, மழையினால் பாதிக்கப்பட்ட எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு புதிய நடைமுறை தொடங்குவதென்பதற்கு இது ஓர் நல்ல குறிப்பாகும். பண்டைய நாட்களில் மாரி காலத்தில் மாடுகள் கட்டப்பட்டிருந்த தொழுவத்தை குறிப்பாகச் சாணத்தை கொழுத்தி விடும் ஓர் வழக்கம் இருந்தது. இந்த சாண எருப்பிலிருந்தே ‘திரு நீறு’ எனும் மதச் சின்னமும் இந்து தமிழ்ப் பாரம்பரியத்தில் வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. பொங்கலின் முதல் நாள் இரவு அது காலவரை பாவித்து, எறியப்படவேண்டிய பொருள் பண்டங்களை எரிக்கும் வழக்கம் இன்று வரை தமிழ்நாட்டில் உண்டு. சென்னை நகரச் சேரிகளில் பொங்கல் விழா இதனுடனேயே ஆரம்பிக்கிறது.

பொங்கல் பற்றிய அண்மைக்கால வளர்ச்சிகளை நோக்கும்போது சென்னையில் ஏற்பட்டு வரும் ஒரு புதுவளர்ச்சியினைக் குறிப்பிடல் வேண்டும். பொங்கலை அடுத்து வரும் ஞாயிறன்று சேரி வாழ் மக்கள் மெரினாக் கடற்கரை ஓரமாக வந்து பொங்கி உண்டு மகிழ்வர். கடற் பெருக்கால் ஏற்படும் அலைகள் இந்த பொங்கல் இடங்களின் அடையாளங்களைத் தெரியாமலே அழித்து விடுவதும் வழக்கம். இந்நாள் அன்று கடற்கரையில் மக்கள் ஆடிப்பாடி மகிழ்வர். இதனைக் ‘காளைப் பொங்கல்’ என்றழைக்கும் மரபும் உண்டு.
இப்பொங்கல்கள் பொழுது பாடப்படும் பாடல்கள் பற்றி சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவர் வீ.அரசு ஆய்வினை செய்துள்ளார். தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் வசிக்காத சென்னை நகரப்புற அடிநிலை மக்களின் இவ்வழக்கம், பொங்கல் விழாவானது தமிழ் மக்களது பண்பாட்டுப் பிரக்ஞையினுள் எத்துணை ஆழமாகச் சென்றுள்ளது என்பதைக் காட்டுகின்றது.
இப்பிரதேசத்தில் பிரதான தொழிலான விவசாயத்துடன், விவசாயிகளுடன் தொடர்புற்ற இந்த விழாவினை உலகப் பொதுநிலைப்படுத்திக் கூறவேண்டுமானால் இது தமிழரின் மே தினம் எனக் கொள்ளப்படத்தக்கதாகும். அதாவது, தமிழ் உழைப்பாளியின் தினம் தைப்பொங்கல் ஆகும். அது மாத்திரமல்ல, இந்த உழைப்பாளி தன் விவசாயத்திற்கு வேண்டிய மாடுகளையும் கௌரவிக்கும் விழா இதுவாகும். உண்மையில் தமிழ் மக்களின் பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங்களின் புவியியலோடும் பொருளியலோடும் தொடர்புற்ற பண்பாட்டுத் திருவிழா தைப்பொங்கலாகும்.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008.
தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713


No comments: