Thursday, January 10, 2008
மரண தண்டனை கூடாது
மரண தண்டனை கூடாது
எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன.... தருமபுரிக்கு அருகே மூன்று கல்லூரி மாணவிகள், பேருந்தில் வைத்துக் கொளுத்தப்பட்ட கொடூரம், நெஞ்சை இன்றும் நெருப்பாய்ச் சுடுகிறது.
எந்தக் குற்றமும் செய்யாத, எதற்காகக் கொல்லப்படுகிறோம் என்று கூட அறியாத அந்தப் பிள்ளைகள் அன்று அரம்பர்களால் எரிக்கப்பட்டனர். கொடிய மனம், குடிபோதை இப்படியெல்லாம் செய்தால் தங்கள் கட்சித் தலைமையிலிருந்து பாராட்டும், பதவியும் கிடைக்குமென்ற தன்னலம் எல்லாம் சேர்ந்து இளம்பிள்ளைகள் மூவரை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது. அந்தப் பெண்களின் பெற்றோர் எப்படி அழுது அரற்றிப் புரண்டு கதறியிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
அன்று அந்தக் காட்டு விலங்காண்டித்தனத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றங்கள் மிகக் கடுமையான தண்டனையை விதித்துள்ளன. பணபலம், அரசியல் செல்வாக்கு முதலானவைகளால் முடங்கி விடாமல், நீதி தன் பணியை நேர்மையாய்ச் செய்துள்ளது.
எனினும், வழங்கப்பட்டிருப்பது மரண தண்டனை என்னும் போதுதான், நமக்கு ஒரு தயக்கம் ஏற்படுகின்றது. அந்தக் கொடியவர்களுக்கு மரணதண்டனைதான் சரியானது என்று பெற்றோர் மட்டுமின்றி, பொதுமக்கள் பலரும் கருதுவது நமக்குப் புரிகின்றது. தம் பிள்ளைகளை இழந்த சோகத்திலும், கடுமையான தண்டனைகளே எதிர்காலத்தில் குற்றங்கள், கொலைகள் குறையும் என்ற நம்பிக்கையிலும் அவர்கள் அவ்வாறு எண்ணுகின்றனர்.
கொலைக்கு இன்னொரு கொலைதான் தீர்வு என்பது சரியானதில்லை. மரண தண்டனை என்பது பழிக்குப்பழி வாங்குவதேயல்லாமல், அது ஒரு தண்டனை ஆகாது என்பதால், எச்சூழலிலும் மரண தண்டனை கூடாது என்னும் நிலைப்பாட்டில் நாம் உறுதிகாட்ட விரும்புகின்றோம். மேலும், வாழ்நாள் (ஆயுள்) தண்டனை என்பதும் மிகப் பெரிய தண்டனைதான் என்பதை நாம் உணர வேண்டும். 15. 20 ஆண்டுகள், பூட்டப்பட்ட ஒரு சிறைக்குள் கிடப்பது, சாவைக் காட்டிலும் கடுமையானது என்பதோடு, செய்த தவற்றை உணர்வதற்கும் வாய்ப்புத் தரக்கூடியது.
தமிழக முதலமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கருத்துக் கேட்ட போது, ‘எதிர்கட்சியினர்தானே, அவர்களைத் தூக்கில் போடட்டும்’ என்று கருதாமல் ‘‘நான் ஒவ்வொரு தூக்குத் தண்டனைக்கும் தனித்தனியாகக் கருத்து சொல்ல முடியாது. பொதுவாக யாருக்குமே மரண தண்டனை கூடாது என்பதே என் கருத்து’’ என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அது மரணதண்டனை போன்ற, பழிக்குப் பழி வாங்கலாக இருக்கக்கூடாது. உலக நாடுகள் பலவற்றைப் பின்பற்றி, இந்தியாவும் மரண தண்டனையைச் சட்டப்படியே நீக்கிவிட வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment