Thursday, January 10, 2008
குழந்தைதான் தூண்டில்- அருள்மொழி
குழந்தைதான் தூண்டில்
- அருள்மொழி
ஒரு குழந்தையைச் சுமந்து, பெற்று, வளர்த்து, ஆளாக்குவது என்ற நான்கு நிலைகளில் அந்தக் குழந்தையின் தாய், தந்தை இருவருக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது? யாருக்கு அதிகச் சுமை என்று யோசித்தால், முதல் மூன்று கட்டங்களும் தாயின் தனிச் சுமையாகவே இருக்கிறது. கடைசி கட்டமான ‘ஆளாக்குதல்’ என்ற நிலையில்தான் தந்தையின் அதிகாரமும், திட்டமிட்டுச் செயலாற்றும் உரிமையும் நிறுவப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஆணோ, பெண்ணோ சில பிரச்சனைகளை உருவாக்கினால், தாயின் வளர்ப்பு சரியில்லை என்று ஆகிவிடுகிறது. அதே பிள்ளை சிறப்பாக வளர்ந்து விட்டால், தந்தைக்குப் பெருமை சேர்கிறது. பெருமை பொங்க, “யார் பெற்ற பிள்ளை இது? சோடை போகுமா?” என்று கேட்கும் உரிமையும் இடமும் தந்தைக்குத்தான் இருக்கிறது. நம் பெயரின் முதல் எழுத்தில் இருந்து, கடைசிவரை அடையாளமாகத் தொடர்வது தந்தை வழிச் சின்னங்கள் மட்டுமே. ஆனால் இப்படி ஒரு ஆணின் பாரம்பரியத் தொடர்ச்சியாக மட்டுமே வளர்க்கப்படும் குழந்தை உணர்வுபூர்வமாகத் தாயுடன் ஏன் பிணைக்கப்பட்டிருக்கிறது?.
நான் வாழ்வதே இந்தப் பிள்ளைகளுக்காகத்தான் என்று புலம்புவதோடு, தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முடிவை எடுக்கும்போது, தனக்குப் பிறகு தன் குழந்தையை இந்த உலகில் விட்டுச் செல்வது நல்லதல்ல என்று நினைத்து, அந்தக் குழந்தையையும் சேர்த்துத் தூக்கிலிட்டுக் கொல்ல நினைக்கும் துடிப்பும் ஏன் அந்தத் தாய்க்கு ஏற்படுகிறது? ஒரு பெண்ணை உணர்ச்சிகளின் போராட்டத்திலேயே வாழ்ந்து, சாகும்படி செய்வதுதான் ஆணாதிக்கச் சமூகத்தின் வெற்றி. இந்த உணர்வுகள் இயற்கையானவையோ, வெல்ல முடியாதவையோ அல்ல. ஆனால் எத்தனையோ மூடநம்பிக்கைகளுக்கு அடிமைப்பட்டு அசிங்கப்படுவதற்கு தயங்காததைப் போலவே, குழந்தைகளோடு இணைக்கப்படும் ஒரு செயற்கையான சிக்கலில் விரும்பியே மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறார்கள் கோடிக்கணக்கான பெண்கள்.
எந்தவிதமான பண்பாட்டு மிரட்டலையும் வெல்லமுடியும். தன் பிள்ளையைப் பிரிந்துவிடுவோம் என்ற அச்சத்தை மட்டும் அவ்வளவு எளிதாகப் பெண்களால் ஒதுக்கவிட முடியாது. அதையும் வென்றுவிட்டால் அந்தப் பெண்ணை எதைக்காட்டியும் அச்சுறுத்த முடியாது. அதற்கு துணிவு மட்டும் போதாது. தெளிவும் திடமும் வேண்டும். அந்த இரண்டு பண்புகளையும் பெற்றுவிட்ட பெண்ணை எதிர்கொள்ள முடியாமல் சமூகத்தின் கண்கள் கூசும். ஆனால் அப்படிப்பட்ட பெண்கள் நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்களில், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்க்கை இது.
அவர் பெயர் கல்யாணி. எம்.காம் படித்தவர். தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை செய்தார். ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்த அந்தக் கல்லூரியில்தான் அவரது கணவரைச் சந்தித்து, காதலித்துப் பெற்றோரின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்டார். இயல்பாகவே சற்று வசதியான குடும்பத்தில், நல்ல வேலையில் இருக்கும் அண்ணன் தம்பிகளோடு பிறந்து வளர்ந்த கல்யாணிக்கு வீட்டைப் பராமரிப்பது, சமைப்பது எதுவுமே கடினமான வேலை இல்லை. எப்பொழுதும் நிதானமாக இருப்பது அவரது தனி அடையாளம். யார், யாரைப் பற்றிக் குறை பேசினாலும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு குறை சொல்லப்பட்டவருக்கு இருக்கும் சில நல்ல பண்புகளை எடுத்துச் சொல்லி சமாதானம் செய்வார். கல்யாணிக்கு கோபமே வராது என்று பெருமையாகச் சிலரும், நடிக்கிறாள் பார் என்று பொறாமையாகச் சிலரும், அவருக்கு முன்னும், பின்னும் பேசுவதும் உண்டு. இப்படிப்பட்ட கல்யாணிக்கு, தங்கசாமி மீது காதல் வந்தது பற்றிக் கல்லூரி முழுக்கப் பேச்சு. ஏனென்றால் தங்கசாமியும் பேராசிரியர்தான் என்றாலும், கிராமத்து மனிதர். நகர நாகரிகத்தை கேலியாகப் பார்க்கக்கூடியவர். பொது இடத்திற்காக மாற்றிக் கொள்ள வேண்டிய சில பழக்கங்களைக் கூட, தனது குடும்ப அடையாளம் என்று பெருமையோடு பேசுவார். குறிப்பாக தான் ஆண் என்பதில் அவருக்கு இருந்த செருக்கு ஆண்களுக்கே கொஞ்சம் எரிச்சல் மூட்டச் செய்யும்.
தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் வேடிக்கையாக வீட்டு நிகழ்ச்சிகளைப் பேசும்போது கூட அவரது ‘ஆண்-அகங்காரம்’ கூர்மையாக வெளிப்படும். மனைவியைத் தேவையில்லாமல் திட்டிவிட்டு வந்ததாகச் சொல்லி வருத்தப்பட்ட ஒரு நண்பரை, ‘சரி இனிமே என்ன செய்யப் போறீங்க?’ என்று தங்கசாமி கேட்க, “வேறென்ன செய்யறது சாயங்காலம் போயி கால்ல விழுந்துற வேண்டியதுதான்” என்று சொல்ல, மற்றவர்கள் அதைக் கேட்டு மகிழ்ச்சியாக சிரிக்க, தங்கசாமிக்கு கோபம் வெடித்தது. ‘அட பொட்டப்பயலே’ என்று அந்த நண்பரைத் திட்டி, அவர் தங்கசாமியை அடிக்கப் பாய்ந்து, ரகளையாகி விட்டது என்பதைத் தங்கசாமியின் ஆண் திமிருக்குச் சான்றாகச் சொல்லலாம்.
இந்த தங்கசாமிக்கும், கல்யாணிக்கும் காதலும் திருமணமும் நடந்தது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது வியப்பைத் தரவில்லை. கல்யாணியின் சுத்தமும், நிதானமும் எப்போதும் தங்கசாமியால் கேலி செய்யப்பட்டன. அவரது தாழ்வு மனப்பான்மைதான் இதற்குக் காரணம் என்று கல்யாணி தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். ‘நான் பொம்பளைய அடிக்கக்கூடாதுன்னு பார்க்கிறேன்’ என்று தங்கசாமி அடிக்கடி சொல்லிக் கொண்டதைவிட ‘அடிப்பதே பரவாயில்லை’ என்பது கல்யாணியின் கருத்து.
இந்தப் பிரச்சினைகளுக்கிடையில் ஆனொன்றும், பெண்னொன்றுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. பிறந்து சில ஆண்டுகள் தாயின் சிறகில் வாழ்ந்தவரை அன்பும் அறிவுமாக வளர்ந்த குழந்தைகள், விவரம் தெரிய ஆரம்பித்தவுடன் அம்மாவை மிரட்டத் தொடங்கினார்கள். அப்பாவைப் போலவே விரட்டினார்கள். வேலை வாங்கினார்கள். கொட்டிக் கவிழ்த்த பொருட்களை எடுத்து வைக்கச் சொன்னால், ‘ஏன் நீயே எடுத்து வையேன்’ என்று ஒருமையில் பேசினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நடை, உடை, செயல்கள் என அனைத்திலும் மூன்று தங்கசாமிகளோடு போராடுவதாக இருந்தது கல்யாணிக்கு.
கடைசியில் தங்கசாமியை விட்டுப் சட்டப்படி பிரிவதுதான் தனக்கும் குழந்தைகளுக்கும் நல்லது என்று நினைத்தார் கல்யாணி. இல்லாவிட்டால் குழந்தைகளும் மோசமான முன்மாதிரியாக தங்கசாமியைக் கொண்டே வளர்வார்கள் என்று கல்யாணிக்குக் கவலையாக இருந்தது. பல்வேறு மனப்போராட்டத்திற்கிடையில் ஒரு வழக்கறிஞரை சந்தித்து தனது நிலையையும் முடிவையும் கூறினார் கல்யாணி. வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் தனிவீடு பார்த்துக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்ற கல்யாணிக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளம். கல்யாணியின் பெற்றோரே அவரது முடிவை தவறு என்று வாதிட்டார்கள். “நீதானே தேடிக் கொண்டாய்?” என்றும் “ஆயிரம் காலத்துப் பயிர் இல்லையா?” என்றும் “ஏன் இப்படி புத்தி கெட்டுப் போய்விட்டது உனக்கு?” என்றும் பலப்பல கேள்விகள். அறிவுரைகள். உடன் வேலை பார்க்கும் பெண்கள், பேராசிரியர்கள் என்ற பதவியில் இருப்பவர்களே தவிர, கல்வி மட்டுமே பண்பை வளர்க்காது என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டாக வாழ்பவர்கள் அவர்களது கேலியும், குத்தலும், முருகன் சார்தான் வீடு பார்த்துக் கொடுத்தாராமே? என்பது போன்ற கேள்விகளும் கல்யாணியை மேலும் மேலும் மன இறுக்கத்திற்கு ஆளாக்கின.
இறுதியாக, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்பு, சமரசம் செய்து வைக்க முயற்சி செய்த நீதிபதியும் கல்யாணியைப் பார்த்துக் கேட்டார். கணவர் சரிஇல்லை என்றால் பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனியாக வாழ்வதுதானே. அவர் விரும்பும்போது வந்து பிள்ளைகளைப் பார்த்துவிட்டுப் போகட்டுமே என்று, “அவருடைய வசதிக்கும், வந்து போவதற்கும் ஏற்ற ஆலமரம் போல என் வீட்டை நான் ஏன் வைத்திருக்க வேண்டும்” என்று கல்யாணி திருப்பிக் கேட்டவுடன் நீதிபதிக்கே கோபம் வந்துவிட்டது. “ஏன்! வேற கல்யாணம் பண்ணிக்கப் போறிங்களா?” என்று நீதிபதி கேட்க, “ஏன் பண்ணிக்கக் கூடாதா?” என்று கல்யாணி திருப்பிக் கேட்க, மூவாயிரம் ஆண்டு ஆதிக்கத்திற்கும், அதை எதிர்க்கும் ஒரு சிறு பறவைக்கும் நடக்கும் விவாதம் போல் இருந்தது அந்தக் காட்சி. அப்படியானால், என் பிள்ளைகளை என்னோடு அனுப்பிவிடுங்கள் என்று அடுத்த ஆயுதத்தை எடுத்தார் தங்கசாமி. ‘என்னம்மா சொல்கிறீர்கள்’ என்றார் நீதிபதி. “பிள்ளைகளைக் கூப்பிட்டு கேளுங்கள். அவர்கள் விருப்பம் என்னவோ அப்படியே செய்யலாம்” என்றார் கல்யாணி.
நீதிமன்றத்திற்கு வந்த குழந்தைகளை தனியே அழைத்து நீதிபதி கேட்டபோது எங்களுக்கு அப்பா, அம்மா இரண்டு பேரும்தான் வேண்டும் என்றார்கள். மீண்டும் பெற்றவர்கள் முன்னாலும் அதையே சொல்ல தங்கசாமிக்கு ஒரே மகிழ்ச்சி. வழக்கையே வென்றுவிட்ட தோற்றம். கல்யாணி, தன் பிள்ளைகளைப் பார்த்துத் தெளிவாகக் கூறினார். இதோ பாருங்க, அப்பாவும், அம்மாவும் இனிமே தனித்தனியாதான் இருப்போம். நீங்க யார் கூட இருக்கப் போறீங்க அதை மட்டும் சொல்லுங்க என்றார். குழந்தைகள் சிறிது நேரம் தயங்கிப் பிறகு சொன்னார்கள். ‘நாங்கள் அம்மாவுடன் இருக்கிறோம்’ அதைக் கேட்ட தங்கசாமி அழுது முறையிட, கல்யாணி மீண்டும் கூறினார். “அம்மாவோட இருந்தா, அம்மா பேச்ச கேட்கனும். சொல்ற மாதிரி நடக்கனும். எதிர்த்துப் பேசற மாதிரி இருந்தா இப்பவே அப்பாவோட போயிடலாம்”. பிள்ளைகள் அடங்கி ஒடுங்கி அம்மாவுடன் சென்றார்கள்.
சில காலம் பிள்ளைகளைப் பார்க்க வந்து போகிறேன் என்று தங்கசாமி செய்த தகராறுகளால் பிள்ளைகளுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்பட்டது. மேலும் அம்மாதான் தமக்குப் பாதுகாப்பு என்ற எண்ணமும் ஏற்பட்டது. அவரோடு ஒன்றி நல்லமுறையில் வளர்ந்தார்கள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு இடத்தில் வேலைக்குச் சேர்ந்த கல்யாணியை மணந்து கொள்ள ஒரு நண்பர் விரும்பினார். அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துத் தன் பிள்ளைகளுடன் அவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டு நெருக்கமும் உண்டான பின்பு அவரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு பிள்ளைகளைத் திரும்பக் கேட்டு தங்கசாமி செய்த எந்தத் தகராறும் பிள்ளைகளிடமும் எடுபடவில்லை. அதே நேரத்தில் திருமணமாகி, இரண்டு பிள்ளைகளோடு விவகாரத்து பெற்ற கல்யாணி, மறுதிருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வது அவரது உறவு வட்டாரத்திலேயே பலருக்கும் எரிச்சலையும், புகைச்சலையும் உண்டாக்கியது. ஆனாலும் ஆயிரம் அவதூறுகளுக்கு நடுவில் மகிழ்ச்சியாக வாழ்கிறார் கல்யாணி.
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment