Friday, January 25, 2008

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள உரிமைகளை வலியுறுத்தவே கருத்துரிமை மீட்பு மாநாடு:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள உரிமைகளை வலியுறுத்தவே கருத்துரிமை மீட்பு மாநாடு: தொல். திருமாவளவன
[
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் உண்டா இல்லையா என்பதன் அடிப்படையில்தான் சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை (25.01.08) "கருத்துரிமை மீட்பு மாநாட்டை" நடத்துகிறோம் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு தொலைபேசியூடாக இன்று வியாழக்கிழமை (24.01.08) அவர் அளித்த நேர்காணலின் எழுத்து வடிவம்:

கேள்வி: "கண்டனமும் இரங்கலும் தேசத்துரோகமா?" என்ற தலைப்பில் கருத்துரிமை மீட்பு மாநாட்டை நாளை வெள்ளிக்கிழமை சென்னையில் நடத்த உள்ளதாக அறிகிறோம். இத்தகையதொரு மாநாட்டை நடத்த வேண்டிய அவசிய சூழல் என்ன?

பதில்: 17 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜீவ் தமிழ்நாட்டில் மரணமடைய நேரிட்டது. அந்த ஒரு சம்பவத்துக்காக தமிழ்நாட்டில் தமிழீழத்தை ஆதரித்துப் பேசுவது- அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது இந்திய அரசுக்கு எதிரான குற்றம் என்று பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டு வருகின்றனர். கருத்தைச் சொல்லுவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது அவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஏனெனில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகள்-ஆகவே தமிழீழத்தைப் பற்றியே தமிழகத்தில் பேசக்கூடாது. அப்படிப் பேசுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கே அ.தி.மு.க.. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுகவின் தலைவர் வைகோ, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலரை கைது செய்து விடுதலைப் புலிகளைப் பற்றி பேசியதே இந்திய அரசுக்கு எதிரான குற்றம் என்று பொடா சட்டத்தில் சிறைப்படுத்தினார்கள்.

பிறகு பொடாச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்கான குழு தமிழகம் வந்தது. பொதுக்கூட்டங்களில் அவர்கள் அவ்வாறு பேசியது குற்றம் இல்லை- தன்னுடைய கருத்துகளைக் கூறுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது என்று அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது கூட, திறந்தவெளி நீதிமன்றத்தில் ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதனைப் பற்றி கருத்துச் சொல்லக்கூடாது என்பது முறையல்ல. ஆதரித்தோ மறுத்தோ பேசலாம் என்று நீதிபதி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு இருக்க, தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதனை அரசியலாக்க ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகவும் இத்தகைய எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகளாக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிற இயக்கங்களாக இருந்தாலும் தமிழீழத்துக்கு அல்லது விடுதலைப் புலிகளுக்கு தார்மீகமான ஆதரவைத்தான் வழங்க முடியுமே தவிர வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு பொருளாதார உதவிகளோ ஆயுத உதவிகளோ அல்லது எரிபொருள், மருந்து பொருள், உணவுப் பொருள், உடைகள் போன்ற வகையிலான உதவிகளைச் செய்ய முடியாது. யாரும் செய்யவும் இல்லை. ஆகவே தார்மீகமான முறையிலான ஆதரவைத் தெரிவிப்பது, கருத்து தெரிவிப்பது கூட குற்றம் என்றும் தேசத்துரோகம் என்றும் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான் அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் உண்டா இல்லையா என்பதன் அடிப்படையில் இந்த மாநாட்டை கூட்டியுள்ளோம்.

கேள்வி: தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் தோழமைக் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. அப்படியான நிலையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞரிடம் இது பற்றி நீங்கள் எடுத்துக் கூறியுள்ளீர்களா?

பதில்: முதல்வரிடம் இதனைப் பற்றி நாங்கள் விரிவாகப் பேசவில்லை. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னணிப் பொறுப்பாளர் வன்னியரசு கைது செய்யப்பட்டு விடுதலை ஆன பின்னர் தமிழக முதல்வரைச் சந்தித்தோம்.

அப்போது "இந்திய அரசியல் சூழலுக்கு ஏற்ப நாம் எல்லாம் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது. தமிழர்கள் மீது- ஈழத்தின் விடுதலையின் மீது எல்லோருக்கும் ஈடுபாடு இருக்கிறது என்பதனை யாரும் மறுத்துவிட முடியாது. சூழலுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அவர் எல்லாவற்றையும் அறிந்தவர். அவருக்கு நாங்கள் எதனையும் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி: இந்த மாநாடு யாருக்கு எதிராக?

பதில்: இந்த மாநாடு தமிழக அரசுக்கு எதிராக ஒருங்கிணைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசுக்கு எதிராகவும் இந்த மாநாட்டை நாங்கள் நடத்தவில்லை. ஈழத்தைப் பற்றியோ புலிகளைப் பற்றியோ இங்கே வாயே திறக்கக்கூடாது என்று சில அரசியல் கட்சிகள், அரசியல் ஆதாயத்துக்காக திசை திருப்ப முயற்சிக்கின்றன. அதனை முறியடிப்பதற்காகவே இந்த மாநாட்டை நடத்துகின்றோம்.

கேள்வி: இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் போன்றவர்கள் புலிகள் நடமாட்டம் இல்லை என்ற கூறியபோதும் அண்மையில் புலிகள் கைது என பல்வேறு செய்திகள் தொடர்ந்து வருகின்றன. இது பற்றி?

பதில்: இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனும், தென்னக இராணுவ தளபதி நோபுள்தம்புராஜூம் தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் இல்லை என்பதனை தெளிவுபடுத்தியிருக்கின்றனர். ஆனாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருக்கக்கூடிய அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் மறுபடியும் மறுபடியும் புலிகள் நடமாட்டம் இங்கிருக்கிறது என்று அவர் அறிக்கை விடுகிற காரணத்தால், இங்கே அது அரசியலாக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டு உளவுத்துறை மட்டுமின்றி மத்திய அரசாங்கத்தின் உளவுத்துறையும் பெருமளவில் தவறான செய்திகளை- திசை திருப்பும் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறது. காரணம் எதிர்வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள விடுதலைப் புலிகள் மீதான தடையை மறுபடியும் நீட்டிக்க வேண்டும் என்ற தேவை இருப்பதால் இங்கே புலிகள் நடமாட்டம் இருப்பதாக வதந்தியைப் பரப்பி உண்மை என்று நிலைநாட்ட முயற்சிக்கின்றனர்.

அதற்காகத்தான் அப்பாவி ஈழத்து இளைஞர்களை- அகதிகளாக வந்திருப்பவர்களைப் பிடித்து அவர்கள் எல்லாம் புலிகள்தான் என்று பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: புலிகள் மீதான தடையை நீட்டித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தேவை இன்னமும் உள்ளதா?

பதில்: இதற்கு அடிப்படையான இரண்டு காரணங்கள் இருப்பதாக அறிகின்றோம்.

1. தமிழீழம் என்கிற தனிநாடு உருவாகவே கூடாது என்ற அரசியல் கொள்கை. அப்படித் தனித் தமிழீழம் உருவானால் இந்திய நாட்டில் வாழ்கிற தமிழர்களும் தனிநாடு கோரிக்கையை நகர வாய்ப்பிருக்கின்றது என்றும் அது இந்திய ஒருமைப்பாட்டு எதிரான சிக்கலை உருவாக்குவதாக அஞ்சுவதாக நாம் அறிகிறோம்.

2. விடுதலைப் புலிகளுக்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் அமெரிக்க வல்லரசு முன்னெடுத்திருக்கின்றது. அமெரிக்க வல்லரசின் விருப்பத்தை நிறைவேற்றுவதனை தனது கடமையாக இந்திய அரசு கருதுகின்றது. உலக நாடுகள் எல்லாம் அமெரிக்க அரசின் முடிவுகளை ஆதரிக்கக் கூடிய வகையில் அச்சுறுத்தப்படுகின்றனர். அந்த வகையில் இந்திய அரசும் அமெரிக்க அரசாங்கத்தின் பிடியிலே சிக்கி உள்ள காரணத்தால் அமெரிக்க அரசாங்கத்துக்கு ஒத்து ஊதக் கூடிய வகையிலே விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீட்டித்துக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி: நாளைய மாநாட்டிற்கு யேர்மனிய பேராசிரியர், சிறிலங்காவின் புதிய இடதுமுன்னணி கட்சியின் நிர்வாகி, ஈழத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் என முற்றிலும் வெளிநாட்டவரையே அழைத்துள்ளமைக்கு ஏதாவது குறிப்பிடும்படியான காரணம் உண்டா?

பதில்: தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர்களை வைத்து பல கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியிருக்கின்றோம். மறுபடியும் அவர்களை வைத்தே- எங்களுக்கு கருத்துரிமை உண்டு என்று சொல்வதனை தமிழக ஊடகங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது. வழக்கம் போல் ஆதரிப்பவர்கள் ஒன்று கூடி பேசியிருக்கிறார்கள்- கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்று உதாசீனப்படுத்திவிடுவார்கள் எனக்கருதிய காரணத்தால் உண்மையிலேயே அனைத்துலக அளவில் மனித உரிமைகள் மீதும் கருத்துரிமை மீதும் நம்பிக்கை வைத்து அதற்காக வாதாடக் கூடியவர்களை அழைத்து கருத்துரிமையை வலியுறுத்த வேண்டியது அவசியம் எனக் கருதிய காரணத்தால் அவர்களை மட்டும் அழைத்திருக்கின்றோம். ஆனாலும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

கேள்வி: தமிழ்நாடு சட்டப்பேரவை தற்போது நடைபெறுவதாக நாங்கள் அறிகின்றோம். அதில் கருத்துரிமை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகளின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவார்களா?

பதில்: கட்டாயமாக அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் பேசுவார்கள்.

கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பாக பல்வேறு பொய்ச் செய்திகளை தமிழக ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிடும் நிலையில் தமிழ்நாட்டு மக்களினது உணர்வுகள் எப்படியாக உள்ளது?

பதில்: இந்த மாதிரி பலமுறை பொய்யான செய்திகளை தமிழக ஊடகங்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 1989 இல் ஒருமுறை பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று சொன்னார்கள். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது அவர் இறந்துவிட்டார். ஆனால் மூடி மறைக்கிறார்கள் என்று சிங்களவர்கள் பரப்பிவிட்டனர். அதன் பின்னர் அடுத்தடுத்து இம் மாதிரியான பொய்ச்செய்திகள்- வதந்திகளை பரப்புகின்றனர்.

இம் மாதிரியான பொய்ச்செய்திகளை- வதந்திகளை தமிழ்நாட்டு மக்கள் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. திடீரென்று பிரபாகரன் குண்டுவீச்சில் காயம்- அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளார் என்றெல்லாம் கட்டுக்கதைகளை கட்டிவிட்டார்கள். அது ஒன்றுமே உண்மையில்ல என்பது புலிகளின் மறுப்புச் செய்திகள் மூலமாக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெல்ல வேண்டும்- தமிழீழம் வெல்லப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு- அதற்கான பேராதரவு தமிழக மக்களிடம் வலுவாக உள்ளது.

கேள்வி: எத்தனையோ இடர்களுக்கு மத்தியில் எங்கள் தாயக விடுதலைக்காக தார்மீக ஆதரவளித்து வரும் தாங்கள், தமிழீழத் தாயகம் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன?

பதில்: தமிழீழத் தாயகத்தைச் சேர்ந்த மக்கள், உலக நாடுகளில் பல்வேறு துருவங்களில் புலம்பெயர்ந்து சிதறிக் கிடக்கிறார்கள். தமிழீழம் என்றைக்கு மலரும்- மறுபடியும் தாயகம் என்றைக்கு திரும்புவோம் என்கிற ஏக்கத்தோடு எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களின் கனவு நனவாகக் கூடிய வகையில் மேதகு பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் கடுமையான விடுதலைப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மேதகு பிரபாகரனின் வேண்டுகோளை அல்லது கட்டளையை நிறைவேற்ற முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தமிழீழம் வென்றெடுக்கப்படும் என்கிற நம்பிக்கையோடு பொருளாதார அடிப்படையிலான முழுப் பங்களிப்பு அவசியம் தேவை என்றார் தொல். திருமாவளவன்.

சிங்கள அரசுக்கு இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, ஈரான், இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகள்- அதுவும் அரசுகள் உதவி செய்கின்றன.

ஆனால் சிங்கள அரசை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிற விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்கு உலகில் எந்த நாடும் அரசும் இல்லை. இருக்கிற ஒரே மூலாதார சக்தி புலம்பெயர் தமிழர்கள்தான். கடந்த 25 ஆண்டுகளாக நீங்கள் தொடர்ந்து உதவி வருவதைப் போல் தொடர்ந்து உதவ வேண்டும்- ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழீழத் தாயக மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாம் விடுக்கிற வேண்டுகோள்.

நன்றி - புதினம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.

Thursday, January 10, 2008

குழந்தைதான் தூண்டில்- அருள்மொழி


குழந்தைதான் தூண்டில்
- அருள்மொழி

ஒரு குழந்தையைச் சுமந்து, பெற்று, வளர்த்து, ஆளாக்குவது என்ற நான்கு நிலைகளில் அந்தக் குழந்தையின் தாய், தந்தை இருவருக்கும் என்ன பொறுப்பு இருக்கிறது? யாருக்கு அதிகச் சுமை என்று யோசித்தால், முதல் மூன்று கட்டங்களும் தாயின் தனிச் சுமையாகவே இருக்கிறது. கடைசி கட்டமான ‘ஆளாக்குதல்’ என்ற நிலையில்தான் தந்தையின் அதிகாரமும், திட்டமிட்டுச் செயலாற்றும் உரிமையும் நிறுவப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஆணோ, பெண்ணோ சில பிரச்சனைகளை உருவாக்கினால், தாயின் வளர்ப்பு சரியில்லை என்று ஆகிவிடுகிறது. அதே பிள்ளை சிறப்பாக வளர்ந்து விட்டால், தந்தைக்குப் பெருமை சேர்கிறது. பெருமை பொங்க, “யார் பெற்ற பிள்ளை இது? சோடை போகுமா?” என்று கேட்கும் உரிமையும் இடமும் தந்தைக்குத்தான் இருக்கிறது. நம் பெயரின் முதல் எழுத்தில் இருந்து, கடைசிவரை அடையாளமாகத் தொடர்வது தந்தை வழிச் சின்னங்கள் மட்டுமே. ஆனால் இப்படி ஒரு ஆணின் பாரம்பரியத் தொடர்ச்சியாக மட்டுமே வளர்க்கப்படும் குழந்தை உணர்வுபூர்வமாகத் தாயுடன் ஏன் பிணைக்கப்பட்டிருக்கிறது?.

நான் வாழ்வதே இந்தப் பிள்ளைகளுக்காகத்தான் என்று புலம்புவதோடு, தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முடிவை எடுக்கும்போது, தனக்குப் பிறகு தன் குழந்தையை இந்த உலகில் விட்டுச் செல்வது நல்லதல்ல என்று நினைத்து, அந்தக் குழந்தையையும் சேர்த்துத் தூக்கிலிட்டுக் கொல்ல நினைக்கும் துடிப்பும் ஏன் அந்தத் தாய்க்கு ஏற்படுகிறது? ஒரு பெண்ணை உணர்ச்சிகளின் போராட்டத்திலேயே வாழ்ந்து, சாகும்படி செய்வதுதான் ஆணாதிக்கச் சமூகத்தின் வெற்றி. இந்த உணர்வுகள் இயற்கையானவையோ, வெல்ல முடியாதவையோ அல்ல. ஆனால் எத்தனையோ மூடநம்பிக்கைகளுக்கு அடிமைப்பட்டு அசிங்கப்படுவதற்கு தயங்காததைப் போலவே, குழந்தைகளோடு இணைக்கப்படும் ஒரு செயற்கையான சிக்கலில் விரும்பியே மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறார்கள் கோடிக்கணக்கான பெண்கள்.

எந்தவிதமான பண்பாட்டு மிரட்டலையும் வெல்லமுடியும். தன் பிள்ளையைப் பிரிந்துவிடுவோம் என்ற அச்சத்தை மட்டும் அவ்வளவு எளிதாகப் பெண்களால் ஒதுக்கவிட முடியாது. அதையும் வென்றுவிட்டால் அந்தப் பெண்ணை எதைக்காட்டியும் அச்சுறுத்த முடியாது. அதற்கு துணிவு மட்டும் போதாது. தெளிவும் திடமும் வேண்டும். அந்த இரண்டு பண்புகளையும் பெற்றுவிட்ட பெண்ணை எதிர்கொள்ள முடியாமல் சமூகத்தின் கண்கள் கூசும். ஆனால் அப்படிப்பட்ட பெண்கள் நம்மிடையே வாழ்கிறார்கள். அவர்களில், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்க்கை இது.


அவர் பெயர் கல்யாணி. எம்.காம் படித்தவர். தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை செய்தார். ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்த அந்தக் கல்லூரியில்தான் அவரது கணவரைச் சந்தித்து, காதலித்துப் பெற்றோரின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்டார். இயல்பாகவே சற்று வசதியான குடும்பத்தில், நல்ல வேலையில் இருக்கும் அண்ணன் தம்பிகளோடு பிறந்து வளர்ந்த கல்யாணிக்கு வீட்டைப் பராமரிப்பது, சமைப்பது எதுவுமே கடினமான வேலை இல்லை. எப்பொழுதும் நிதானமாக இருப்பது அவரது தனி அடையாளம். யார், யாரைப் பற்றிக் குறை பேசினாலும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு குறை சொல்லப்பட்டவருக்கு இருக்கும் சில நல்ல பண்புகளை எடுத்துச் சொல்லி சமாதானம் செய்வார். கல்யாணிக்கு கோபமே வராது என்று பெருமையாகச் சிலரும், நடிக்கிறாள் பார் என்று பொறாமையாகச் சிலரும், அவருக்கு முன்னும், பின்னும் பேசுவதும் உண்டு. இப்படிப்பட்ட கல்யாணிக்கு, தங்கசாமி மீது காதல் வந்தது பற்றிக் கல்லூரி முழுக்கப் பேச்சு. ஏனென்றால் தங்கசாமியும் பேராசிரியர்தான் என்றாலும், கிராமத்து மனிதர். நகர நாகரிகத்தை கேலியாகப் பார்க்கக்கூடியவர். பொது இடத்திற்காக மாற்றிக் கொள்ள வேண்டிய சில பழக்கங்களைக் கூட, தனது குடும்ப அடையாளம் என்று பெருமையோடு பேசுவார். குறிப்பாக தான் ஆண் என்பதில் அவருக்கு இருந்த செருக்கு ஆண்களுக்கே கொஞ்சம் எரிச்சல் மூட்டச் செய்யும்.

தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் வேடிக்கையாக வீட்டு நிகழ்ச்சிகளைப் பேசும்போது கூட அவரது ‘ஆண்-அகங்காரம்’ கூர்மையாக வெளிப்படும். மனைவியைத் தேவையில்லாமல் திட்டிவிட்டு வந்ததாகச் சொல்லி வருத்தப்பட்ட ஒரு நண்பரை, ‘சரி இனிமே என்ன செய்யப் போறீங்க?’ என்று தங்கசாமி கேட்க, “வேறென்ன செய்யறது சாயங்காலம் போயி கால்ல விழுந்துற வேண்டியதுதான்” என்று சொல்ல, மற்றவர்கள் அதைக் கேட்டு மகிழ்ச்சியாக சிரிக்க, தங்கசாமிக்கு கோபம் வெடித்தது. ‘அட பொட்டப்பயலே’ என்று அந்த நண்பரைத் திட்டி, அவர் தங்கசாமியை அடிக்கப் பாய்ந்து, ரகளையாகி விட்டது என்பதைத் தங்கசாமியின் ஆண் திமிருக்குச் சான்றாகச் சொல்லலாம்.
இந்த தங்கசாமிக்கும், கல்யாணிக்கும் காதலும் திருமணமும் நடந்தது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது வியப்பைத் தரவில்லை. கல்யாணியின் சுத்தமும், நிதானமும் எப்போதும் தங்கசாமியால் கேலி செய்யப்பட்டன. அவரது தாழ்வு மனப்பான்மைதான் இதற்குக் காரணம் என்று கல்யாணி தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். ‘நான் பொம்பளைய அடிக்கக்கூடாதுன்னு பார்க்கிறேன்’ என்று தங்கசாமி அடிக்கடி சொல்லிக் கொண்டதைவிட ‘அடிப்பதே பரவாயில்லை’ என்பது கல்யாணியின் கருத்து.

இந்தப் பிரச்சினைகளுக்கிடையில் ஆனொன்றும், பெண்னொன்றுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. பிறந்து சில ஆண்டுகள் தாயின் சிறகில் வாழ்ந்தவரை அன்பும் அறிவுமாக வளர்ந்த குழந்தைகள், விவரம் தெரிய ஆரம்பித்தவுடன் அம்மாவை மிரட்டத் தொடங்கினார்கள். அப்பாவைப் போலவே விரட்டினார்கள். வேலை வாங்கினார்கள். கொட்டிக் கவிழ்த்த பொருட்களை எடுத்து வைக்கச் சொன்னால், ‘ஏன் நீயே எடுத்து வையேன்’ என்று ஒருமையில் பேசினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நடை, உடை, செயல்கள் என அனைத்திலும் மூன்று தங்கசாமிகளோடு போராடுவதாக இருந்தது கல்யாணிக்கு.

கடைசியில் தங்கசாமியை விட்டுப் சட்டப்படி பிரிவதுதான் தனக்கும் குழந்தைகளுக்கும் நல்லது என்று நினைத்தார் கல்யாணி. இல்லாவிட்டால் குழந்தைகளும் மோசமான முன்மாதிரியாக தங்கசாமியைக் கொண்டே வளர்வார்கள் என்று கல்யாணிக்குக் கவலையாக இருந்தது. பல்வேறு மனப்போராட்டத்திற்கிடையில் ஒரு வழக்கறிஞரை சந்தித்து தனது நிலையையும் முடிவையும் கூறினார் கல்யாணி. வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் தனிவீடு பார்த்துக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்ற கல்யாணிக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளம். கல்யாணியின் பெற்றோரே அவரது முடிவை தவறு என்று வாதிட்டார்கள். “நீதானே தேடிக் கொண்டாய்?” என்றும் “ஆயிரம் காலத்துப் பயிர் இல்லையா?” என்றும் “ஏன் இப்படி புத்தி கெட்டுப் போய்விட்டது உனக்கு?” என்றும் பலப்பல கேள்விகள். அறிவுரைகள். உடன் வேலை பார்க்கும் பெண்கள், பேராசிரியர்கள் என்ற பதவியில் இருப்பவர்களே தவிர, கல்வி மட்டுமே பண்பை வளர்க்காது என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டாக வாழ்பவர்கள் அவர்களது கேலியும், குத்தலும், முருகன் சார்தான் வீடு பார்த்துக் கொடுத்தாராமே? என்பது போன்ற கேள்விகளும் கல்யாணியை மேலும் மேலும் மன இறுக்கத்திற்கு ஆளாக்கின.

இறுதியாக, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்பு, சமரசம் செய்து வைக்க முயற்சி செய்த நீதிபதியும் கல்யாணியைப் பார்த்துக் கேட்டார். கணவர் சரிஇல்லை என்றால் பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனியாக வாழ்வதுதானே. அவர் விரும்பும்போது வந்து பிள்ளைகளைப் பார்த்துவிட்டுப் போகட்டுமே என்று, “அவருடைய வசதிக்கும், வந்து போவதற்கும் ஏற்ற ஆலமரம் போல என் வீட்டை நான் ஏன் வைத்திருக்க வேண்டும்” என்று கல்யாணி திருப்பிக் கேட்டவுடன் நீதிபதிக்கே கோபம் வந்துவிட்டது. “ஏன்! வேற கல்யாணம் பண்ணிக்கப் போறிங்களா?” என்று நீதிபதி கேட்க, “ஏன் பண்ணிக்கக் கூடாதா?” என்று கல்யாணி திருப்பிக் கேட்க, மூவாயிரம் ஆண்டு ஆதிக்கத்திற்கும், அதை எதிர்க்கும் ஒரு சிறு பறவைக்கும் நடக்கும் விவாதம் போல் இருந்தது அந்தக் காட்சி. அப்படியானால், என் பிள்ளைகளை என்னோடு அனுப்பிவிடுங்கள் என்று அடுத்த ஆயுதத்தை எடுத்தார் தங்கசாமி. ‘என்னம்மா சொல்கிறீர்கள்’ என்றார் நீதிபதி. “பிள்ளைகளைக் கூப்பிட்டு கேளுங்கள். அவர்கள் விருப்பம் என்னவோ அப்படியே செய்யலாம்” என்றார் கல்யாணி.

நீதிமன்றத்திற்கு வந்த குழந்தைகளை தனியே அழைத்து நீதிபதி கேட்டபோது எங்களுக்கு அப்பா, அம்மா இரண்டு பேரும்தான் வேண்டும் என்றார்கள். மீண்டும் பெற்றவர்கள் முன்னாலும் அதையே சொல்ல தங்கசாமிக்கு ஒரே மகிழ்ச்சி. வழக்கையே வென்றுவிட்ட தோற்றம். கல்யாணி, தன் பிள்ளைகளைப் பார்த்துத் தெளிவாகக் கூறினார். இதோ பாருங்க, அப்பாவும், அம்மாவும் இனிமே தனித்தனியாதான் இருப்போம். நீங்க யார் கூட இருக்கப் போறீங்க அதை மட்டும் சொல்லுங்க என்றார். குழந்தைகள் சிறிது நேரம் தயங்கிப் பிறகு சொன்னார்கள். ‘நாங்கள் அம்மாவுடன் இருக்கிறோம்’ அதைக் கேட்ட தங்கசாமி அழுது முறையிட, கல்யாணி மீண்டும் கூறினார். “அம்மாவோட இருந்தா, அம்மா பேச்ச கேட்கனும். சொல்ற மாதிரி நடக்கனும். எதிர்த்துப் பேசற மாதிரி இருந்தா இப்பவே அப்பாவோட போயிடலாம்”. பிள்ளைகள் அடங்கி ஒடுங்கி அம்மாவுடன் சென்றார்கள்.

சில காலம் பிள்ளைகளைப் பார்க்க வந்து போகிறேன் என்று தங்கசாமி செய்த தகராறுகளால் பிள்ளைகளுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்பட்டது. மேலும் அம்மாதான் தமக்குப் பாதுகாப்பு என்ற எண்ணமும் ஏற்பட்டது. அவரோடு ஒன்றி நல்லமுறையில் வளர்ந்தார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு இடத்தில் வேலைக்குச் சேர்ந்த கல்யாணியை மணந்து கொள்ள ஒரு நண்பர் விரும்பினார். அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துத் தன் பிள்ளைகளுடன் அவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டு நெருக்கமும் உண்டான பின்பு அவரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு பிள்ளைகளைத் திரும்பக் கேட்டு தங்கசாமி செய்த எந்தத் தகராறும் பிள்ளைகளிடமும் எடுபடவில்லை. அதே நேரத்தில் திருமணமாகி, இரண்டு பிள்ளைகளோடு விவகாரத்து பெற்ற கல்யாணி, மறுதிருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வது அவரது உறவு வட்டாரத்திலேயே பலருக்கும் எரிச்சலையும், புகைச்சலையும் உண்டாக்கியது. ஆனாலும் ஆயிரம் அவதூறுகளுக்கு நடுவில் மகிழ்ச்சியாக வாழ்கிறார் கல்யாணி.
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713

போலிச் சாமியார்களிடம் பெண்கள் தொடர்ந்து ஏமாறுவதற்குப் பெண்களின் அறியாமைதான் காரணம் என்பது உண்மையா?

போலிச் சாமியார்களிடம் பெண்கள் தொடர்ந்து ஏமாறுவதற்குப் பெண்களின் அறியாமைதான் காரணம் என்பது உண்மையா?
- தோழர் ஓவியா

ஒரு தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் விவேக்கும் விஜய்யும் நடிக்கும் ஒரு நகைச்சுவைக் காட்சி. நடிகர் விவேக் ஒரு நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டும். நடிகர் விஜய் தனது இருசக்கர வண்டியில் அவரை அழைத்துச் செல்வார். சென்னையிலுள்ள ஓர் இடம் அவர்கள் போக வேண்டியது. வழியெங்கும் பொதுப் பணித்துறையினரின் கைங்கர்யத்தால் பாதை அடைக்கப்பட்டிருக்கும். வேறு பாதையில் செல்லச் சொல்லி அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருக்கும். அதன்படி பாதை மாறி மாறிக் கடைசியில் விஜய் விவேக்கைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்று கையில் ஒரு லட்டை வாங்கிக் கொடுத்து விடுவார். ஆக நேர்முகத் தேர்வு கோவிந்தா என்று முடியும் அந்த நகைச்சுவைக் காட்சி.

நமது சமூகத்தில் படித்து வேலைவாய்ப்புப் பெற்ற பெண்களின் கதையும் இப்படித்தான் ஆகிவிடும் போலிருக்கிறது. சமீபத்தில் ஒரு சாமியாரின் மூன்றாவது மனைவியாக ஒரு பெண் மருத்துவர்... என்ற செய்தியைப் படித்த போது வேதனையாக இருந்தது. சரி காதலிப்பது அந்த அம்மையாரின் உரிமைதான். அதை விட்டு விடலாம்தான். ஆனால் மதங்களுக்கும் பெண்களுக்குமான உறவை நாம் ஆய்வு செய்யாமல் விட்டு விட முடியாது.

பாலியல் தேவைகள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகள் என்பது இயற்கையின்பாற்பட்டது. எந்த மிருகமும் இதற்குத் தனது சமூகத்தின் அங்கீகாரத்தைக் கோரி நிற்பதில்லை. இதனால் நமது மனிதர்கள் கற்பனை செய்வது போல், வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடத்திலும் பாலியல் தேவைக்காகவே எந்த மிருகமும் அலைந்து கொண்டிருப்பதுமில்லை. மனித சமூகம் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வது என்ற செயற்பாட்டில் முதலில் கை வைத்தது பாலியல் உரிமையில்தான்.

குழுக்களாகவும், கூட்டங்களாகவும் அலைந்து திரிந்த போது ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகள். நாகரிக மனித சமுகத்தில் இந்தப் பாலியல் உறவுகளை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிறுவனம் மதம். இதில் இந்து மதம் சிறப்புப் பங்களிப்புச் செய்துள்ளது. சாதி அமைப்பு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பெண்ணின் கர்ப்பப் பையையும், அதன் வாசலையும் காவல் காக்க வேண்டிய பொறுப்பை அது கணவன்மார்கள் என்ற தனித்தனி ஆண்களின் கையில் கொடுத்து விட்டது. இப்படிக் கணவன்மார்களை முன்வாசலில் நிறுத்திவிட்டு, சிறைப்படுத்தப்பட்ட பெண்களின் காமத்தோடு கள்ள உறவை மதம் கொல்லைப்புற வாசல் வழியாக வைத்துக் கொண்டது. கோயில் திருவிழா என்று தொடங்கி, சாயிபாபாக்கள், சங்கரமடங்கள் வரை இந்தக் கொல்லைப் புற வாசலின் வேறு வேறு வடிவங்கள்தான்.

பெண்ணின் காமத்துக்கு இங்கு என்ன சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது? அவள் கணவன் மீது கூட காமம் கொள்ள முடியாதே? அவள் கணவனின் காமத்துக்குப் பசித்த போது பரிமாறப்பட வேண்டிய உணவுதானே தவிர வேறொன்றுமில்லையே? ஆனால் காவி உடையை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டால், ஆயிரம் பேர் கூடியிருக்கும் போது கூட என்ன செய்தாலும் கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள், வாயில் போட்டுக் கொள்வார்கள். சாமி என்பார்கள். மாதா என்பார்கள். நமது சமூகத்தில் அம்பலப்படுத்தப்படும் வரை இவர்கள் பெயர் சாமியார். அம்பலப்பட்ட பிறகு போலி சாமியார்.

மனிதன் சமூக விலங்கு என்றால், அதில் பெண் இல்லையா? குரங்காக இருக்கும் வரை சேர்ந்துதானே அனைத்து இடங்களிலும் சுற்றிக் கொண்டிருந்தோம்! ஏன் நாடோடி சமூகம் வரையிலும் அதுதானே? இப்போது மட்டும் பெண்ணின் இடம் வீடு என்று வரையறுத்தால் பெண்ணின் அடக்கப்பட்ட சமூக உணர்வுக்கு என்ன வடிகால்? அந்த வடிகாலைத்தான் மதம் தனது பண்டிகைகள், சடங்குகள், கோவில்கள் திருவிழாக்கள் வாயிலாகக் காலங்காலமாக வழங்கி வருகிறது. வன்முறை தோற்குமிடத்திலும் வெல்லக் கூடிய ஆயுதங்களை மதம் வைத்திருக்கிறது.

பெண் ஒடுக்குமுறை என்பது பெண்ணை சமூக மனுசியாகப் பார்ப்பதை அடிப்படையிலேயே மறுதலிக்கிறது. போன தலைமுறை பெண்ணுக்கு இந்தக் கல்வியும் வேலைவாய்ப்பும் இந்த மதத்தின் பெயரால்தான் மறுக்கப்பட்டிருந்தது. இந்த மத அமைப்புடன் போராடித்தான் பெண்கள் அதனைப் பெற முடிந்தது. ஆனால் இன்று படித்த பெண்கள் அந்த மதத்தின் புதிய கிளைகளான மேல்மருவத்தூர் துவங்கி, வாழ்க வளமுடன் வரையிலுள்ள அமைப்புகளில் அதிகமாகச் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்வியும் வேலைவாய்ப்பும் பெற்று ஓரளவு சுதந்திர வெளிச்சமும கிடைக்கப் பெற்றிருக்கின்ற இன்றைய பெண்களை முழுமையாக ஆண்களின் நிழல்களுக்குள் சிறை வைக்க முடியாது என்ற அறிவு இவர்களுக்கு இருக்கறிது. எனவே இவர்கள் பெண்களும் பங்கு பெறும் விதமாகவும், அவர்களுக்குத் தனி முக்கியத்துவம் அளிப்பது போலவுமானதாகத் தங்களது பூசை மற்றும் தியான மண்டபங்களை மாற்றியமைத்து வருகிறார்கள். எழுதப் படிக்கத் தெரிந்து, வெளி உலகத்தையும் பார்க்க முடிந்த பெண்கள் தொகையில் பெரும்பாலானோர் இன்று அவர்களின் கூடாரங்களில்தான் தென்படுகிறார்கள். ஒரு மாபெரும் சமூக எழுச்சி மூலமாகக் கடந்த தலைமுறை பெற்றுத் தந்த உரிமைகளை சுவாசித்தே தோற்றம் கொண்ட இந்தப் பெண்கள், அந்தப் பாதையின் தொடர்ச்சியாய் சமூகத்தில் இயங்காமல் இந்த வழியாகத் திருப்பிவிடப்படுகிறார்கள்.

காரணம் பெண்களுக்கான உரிமை இயக்கம் என்பது வெறும் பெண் கல்வி வேலைவாய்ப்பு என்ற கோரிக்கைகளோடு இன்று நின்றுவிட முடியாது. அதன் அடுத்த கட்டங்களை நோக்கி வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இந்த வெளியை முற்போக்கு இயக்கங்கள் தங்களது ஆரோக்கியமான அரசியல் செயல்பாடுகள் மூலமாக உருவாக்கித் தரவேண்டும்.

அன்று பெரியாருக்குப் பின் பெண்கள் அணி திரண்டார்கள். காரணம் பெரியார் பெண்களுக்கான சமூக வெளி குறித்து அதிகம் கவலைப்பட்டார். அதற்கான செயல்பாடுகளைத் திட்டமிட்டார். ஆனால் இன்றைய முற்போக்கு இயக்கங்கள் பெண்களைப் பற்றி மிகக் மிகக் குறைவாகச் சிந்திக்கின்றன. மிக மிகக் குறைவாகக் கவலைப்படுகின்றன. பெண்களுக்குத் தேவைப்படும் சமூக வெளியை முற்போக்கு இயக்கங்கள் வழங்க மறுக்கும் போது மதங்கள் மீண்டும் வெற்றி பெறுகின்றன.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713

மோடிக்கு ஆதரவு திருமாவளவனுக்கு எதிர்ப்பா?

மோடிக்கு ஆதரவு திருமாவளவனுக்கு எதிர்ப்பா?
-பைந்தமிழ்

‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’ என்று கூறி ஏற்கனவே ஒருமுறை ஒளிபரப்பப்பட்ட திரைப்படத்திற்குத் தமிழகத் தொலைக்காட்சிகளில் விளம்பரம் வருவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல்தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் ஏற்கனவே பலமுறை எழுப்பப்பட்டு, எடுபடாத சிக்கல் ஒன்றை மீண்டும் எழுப்பி மக்களிடம் விளம்பரம் தேடிக்கொள்ள முயல்கிறார்.

செல்வி ஜெயலலிதா அம்மையார் எழுப்ப முயலும் அந்த சிக்கல் வேறு ஒன்றுமல்ல... ‘‘தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கை அதிகரித்துவிட்டது. விடுதலைப் புலிகளுக்கும் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள சிலகட்சிகளின் தலைவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவதோ, நிகழ்ச்சிகளை நடத்துவதோ சட்டப்படி குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பதுதான் செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் அம்மையார் ஜெயலலிதா அண்மைக்காலமாக வலியுறுத்திவரும் விவகாரம் ஆகும்.

சிங்களப் படைகளின் கொடூரத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் கலைஞர் கவிதை எழுதியதற்காக கண்டனம் தெரிவித்த ஜெயலலிதா, அதன்பின் தமிழ்ச்செல்வனுக்காகத் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் சென்னையில் இரங்கல் ஊர்வலம் நடத்த முயன்றதையும் கடுமையாக விமர்சித்தார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

ஜெயலலிதா மட்டுமின்றி காங்கிரஸ் கோஷ்டிகளின் பல்வேறு தலைவர்களும் விடுதலைப்புலிகளை திருமாவளவன் ஆதரிப்பதாகக் கூறி, அவர் மீது சராமாரியாக கண்டனக் கனைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ‘‘விடுதலைப்புலிகளுக்கு தார்மீக ஆதரவு தருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகிறார். இப்படிக் கூறுவதன் மூலம் தமிழக அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்’’ என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் கிருட்டிணசாமி அன்புடன் வேண்டுகோள் வைக்கிறார். ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவனோ, ‘‘திருமாவளவனாக இருந்தாலும் சரி; பெருமாவளவனாக இருந்தாலும் சரி. விடுதலைப்புலிகளை ஆதரித்து கருத்துக் கூறுவதை அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்துக் கருத்துக் கூறுவோர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’’ என சூடாகப் பொறிகிறார்.

சரி அப்படி என்னதான் சொல்லிவிட்டார் திருமாவளவன்....
விடுதலைப்புலிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உதவுவதாக ஜெயலலிதா சுமத்திய குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய திருமாவளவன்.
‘‘இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடிவருபவர்கள் விடுதலைப்புலிகள்தான். அவர்களால் மட்டும்தான் இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர முடியும். எனவே நாங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறோம். நாங்கள் விடுதலைப்புலிகளுக்கு அளிப்பது தார்மீக ஆதரவுதானே தவிர வேறு எதுவும் இல்லை. விடுதலைப்புலிகளுக்கு நாங்கள் ஆயுத உதவியோ வேறு எந்த உதவியோ செய்யவில்லை. ஆனால் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த வன்னியரசு என்பவர் விடுதலைப்புலிகளுக்கு இயந்திரப்படகு வாங்கித் தந்ததாகவும், பிரபாகரனோடு வன்னியரசுக்கு தொடர்பு இருப்பதாகவும் உளவுத்துறை கதை கட்டிவிடுகிறது. விடுதலைப்புலிகளுக்குத் தார்மீக ஆதரவு தருவது தவறு என்றால் அந்தத் தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்வதில் நாங்கள் பெருமை அடைகிறோம்’’ என்று சூடாக பதிலடி தந்தார். அதை வைத்துக் கொண்டுதான் ஜெயலலிதா முதல் காங்கிரஸ் தலைவர்கள் வரை அனைவரும் திருமாவளவனுக்கு எதிராக நஞ்சு கக்கிக் கொண்டிருக்கின்றனர்.

சரி... திருமாவளவன் இப்படிப் பேசியது தவறா?...
இந்த வினாவுக்கு நாம் விடையளிப்பதை விட, இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்...
இந்திய மக்களுக்குப் பேச்சுரிமையை வழங்குவது அரசியல் சட்டத்தின் 19ஆவது பிரிவுதான். அரசியல் சட்டத்தின் 19(1)(அ) பிரிவு சொல்வது இதுதான்.
‘‘இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் தங்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் வெளியிட உரிமை உள்ளது. கருத்துகளையும், உணர்வுகளையும் வெளியிடும் உரிமை என்பது, எவர் ஒருவரும் தங்களின் கருத்துகளையும் முடிவுகளையும் உரையாகவோ, எழுத்தாகவோ, அச்சுமூலமாகவோ, படங்களின் வாயிலாகவோ அல்லது வேறு ஏதேனும் வழிகளிலோ வெளியிடலாம். ஒருவரின் கருத்துகளை சைகை, அடையாளம் போன்றவற்றின் மூலமாகத் தெரிவிப்பதும் இதில் அடங்கும். கருத்துகளை நூலாக அச்சிட்டு வெளியிடுவதும் குடிமகனின் அடிப்படை உரிமைதான். அதேபோல் மற்றொருவரின் கருத்துகளை அச்சிட்டு வினியோகிப்பதும் கருத்துச் சுதந்திரத்தில் அடங்கும்’’.
இந்தியாவிலுள்ள அனைவரும் தங்களின் கருத்துகளை சுதந்திரமாகத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய தலைவர்களுக்கு இருந்துள்ளது. அதனால்தான் அதை அடிப்படை உரிமையாக்கியுள்ளனர்.

அது மட்டுமல்ல... அரசியல் சட்ட வல்லுனர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ‘கருத்துரிமை’யின் முக்கியத்துவத்தை திரும்பத்திரும்ப வலியுறுத்தி வருகின்றனர். ‘‘பேச்சு என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரம். பேச்சின் மூலம் மனிதர்கள் தங்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் தெரிவிக்க முடியும். பேச்சுரிமையும், கருத்துரிமையும் மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு கிடைத்துவிடுகிறது. எனவேதான் அவை இரண்டும் மனிதனின் பிறப்புரிமை என அழைக்கப்படுகிறது. எனவே கருத்துகளையும், உணர்வுகளையும் சுதந்திரமாகத் தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு’’ என 1948ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காகவே அந்த உரிமையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா? என்ற கேள்வி எவருக்கேனும் எழுந்தால் அது சரியானதுதான். அரசியல் சட்டத்தின்படி இந்த உரிமையை வழங்கியவர்களே, இந்த உரிமையை எப்போதெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.
அரசியல் சட்டத்தின் 19(2)வது பிரிவின்படி, ‘‘தேசத்தின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பேச்சுரிமை மற்றும் கருத்துரிமைக்கு நியாயமான முறையில் தடைகளை விதிக்க முடியும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள சூழ்நிலைகளில் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்கக் கூடாது என்பது இதன் பொருளாகும். தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் சூழல்கள் என்ன என்பதும் அரசியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான புரட்சி, அரசுக்கு எதிராகப் போர் நடத்துதல், சட்டவிரோதமாகக் கூடி வன்முறையில் ஈடுபடுதல், கலவரம் செய்தல் போன்றவைதான் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராகப் புரட்சியோ, போரோ நடத்துவதற்காக, விடுதலைப்புலிகளுக்குத் தார்மீக ஆதரவளிக்கிறேன் என்று திருமாவளவன் கூறவில்லை. கலவரத்தைத் தூண்டும் நோக்குடனோ, வன்முறையில் ஈடுபடும் நோக்குடனோ இப்படி ஒரு கருத்தை திருமாவளவன் முன்வைக்கவில்லை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் படி, இலங்கைத் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடும் ஓர் அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது எப்படிக் குற்றமாகும் என்பது அரசியல் சட்டம் தெரிந்த எவருக்கும் விளங்கவில்லை.
ஆனால் விடுதலைப்புலிகளுக்குத் தார்மீக ஆதரவு தருவோரைக் கைது செய்யவேண்டும் என்பதற்குப் பெரியார் பேரன் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தொடங்கி, அவரால் கோமளவல்லி என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா வரை அனைவரும் கூறும் காரணம் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதால், அந்த இயக்கத்தை ஆதரிக்கக்கூடாது என்பதுதான.¢ அவர்களின் கருத்துப்படியே பார்த்தாலும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு தார்மீக ஆதரவளிப்பது குற்றமா?

‘‘இலங்கையில் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர விடுதலைப்புலிகளால் மட்டும் தான் முடியும். எனவேதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை நேற்று ஆதரித்தேன்... இன்று ஆதரிக்கிறேன்... நாளையும் ஆதரிப்பேன்’’ என்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 28.06.2002இல் நடைபெற்ற மதிமுக பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 11 பேரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பொடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தது குற்றம் என்பதுதான்.
ஆனால், தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து வைகோ தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்குத் தார்மீக அடிப்படையில் ஆதரவு தருவது மட்டுமே குற்றமாகிவிடாது என்று நெத்தியடி தீர்ப்பு வந்தது.

கருத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இராஜேந்திர பாபு, ஜி.பி.மாத்தூர் ஆகியோர் 2003ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அளித்த அந்த அதிரடித் தீர்ப்பு.

‘‘பொடா சட்டத்தின் 21ஆவது பிரிவுதான் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசுவதை விளக்குகிறது. 21ஆவது பிரிவின்படி, இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலோ, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையிலோ, பயங்கரவாதத்திற்கு துணைபோகும் வகையிலோ, பயங்கரவாதத்தை தொடங்கும் வகையிலோ அல்லாத பேச்சுக்கள் எதுவும் குற்றமாக கருதப்படாது. மேலும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தார்மீக ஆதரவு அளித்து பேசுவதோ, ஆதரவுக் கூட்டங்கள் நடத்துவதோ பொடா சட்டத்தின் 21ஆவது பிரிவின்படி தவறாகக் கருதப்படாது’’ என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, பொடா சட்டம் பற்றி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் அளித்த அப்போதைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சோலி சோரப்ஜியும் கருத்துரிமையையோ, பேச்சுரிமையையோ எந்தச் சட்டத்தாலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அதை ஏற்றுக் கொண்டுதான் தடை செய்யப்பட்ட அமைப்புகளை ஆதரித்து பேசுவதோ, கருத்துக் கூறுவதோ தவறு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துரிமையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கும் நிலையில், இந்திய அரசும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தைத் தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பல்வேறு அமைப்புகள் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றன. அவற்றில் முதன்மையானது ஐசக் முய்வா தலைமையிலான நாகாலாந்து தேசிய சமுதாய மையம ஆகும். அந்த அமைப்பை இந்திய அரசு தடைசெய்திருந்தாலும், அதற்கு ஆதரவாக நாகாலாந்து மக்களில் ஒரு பிரிவினர் கருத்துக் கூறிவருவதை நாகாலாந்து அரசும், நடுவண் அரசும் இன்றுவரை அனுமதித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, நாகாலாந்து சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக நாகாலாந்து தேசிய சமுதாய மையத்தின் தலைவர்கள் ஐசக் முய்வா ஆகியோருடன் இந்திய அரசு தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. அவ்வளவு ஏன்?... விடுதலைப்புலிகள் இயக்கம் செயல்பட்டு வரும் இலங்கையில் கூட, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசு விலக்கிக் கொண்டு பேச்சு நடத்தியது.

வரலாறு கூறும் உண்மைகள் இவ்வாறு இருக்கும் நிலையில், விடுதலைப்புலிகள் இயக்க்ததிற்கு தார்மீக ஆதரவு தருவது கூடத் தவறு என்பதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தார்மீக ஆதரவு தருவதை எதிர்ப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.
இதைத்தான், ‘‘ஒருவரின் கருத்தை சுதந்திரமாக கூற அனுமதிப்பதுதான் ஜனநாயகத்தின் உயிர் நாடியாகும். அதை ஒடுக்கவோ, நசுக்கவோ, மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் ஜனநாயகத்திற்குச் சாவு மணியடித்துவிடும். இத்தகைய முயற்சிகள் சர்வதிகாரம் ஏற்படுவதற்குதான் வழிவகுக்கும்’’ என்று ஜோத்பூரில் உள்ள தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அரசியல் சட்ட வல்லுனருமான சுரபிசிங்கி வர்ணித்துள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் கருத்துரிமை நசுக்கப்படுவதை எதிர்க்கவும், கருத்துரிமையை பாதுகாக்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக வரும் 25ஆம் தேதி கருத்துரிமை மீட்பு மாநாட்டை அவர் நடத்த உள்ளார். இந்த முயற்சியின் பயனாகத் தமிழகத்தில் கருத்துரிமை பாதுகாக்கப்படும்; குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்ல¦ம்களை கொன்று குவித்துவிட்டு அதை நியாயப்படுத்தும் நரேந்திர மோடி போன்றவர்களை ஒருபுறம் வாழ்த்திவிட்டு, மறுபுறம் தமிழர்களுக்கு ஆதரவு தருவதை தவறு என்று கூறும் ஜெயலலிதா போன்ற ‘கருத்துரிமைக் காவலர்களின்’ முகமூடி கிழிக்கப்படும் என்பது உறுதி.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713

வெளிநாட்டில் நிதிதிரட்டும் ‘ஏழை’ நடிகர்கள்



வெளிநாட்டில் நிதிதிரட்டும் ‘ஏழை’ நடிகர்கள்
அன்பன்

மீண்டுமொருமுறை திருவோடேந்தி மலேசியா, சிங்கப்பூர் சென்று வந்திருக்கின்றனர் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர். என்னவொரு வேறுபாடென்றால் வழக்கமாக வெற்றிகரமாகத் திரும்புகிறவர்கள் இம்முறை பாதி வெற்றியும் மீதித் தோல்வியுமாகத் திரும்பியிருக்கிறார்கள்.

கலை, சமுதாயத்தைப் பண்படுத்தும், வெளிஉலகுக்கு அடையாளப்படுத்தும், பிரிந்தவர்களை இணைய வைக்கும், இணைந்தவர்களை இயங்க வைக்கும் ஒரு பெரிய சாதனம். எனவே எல்லாச் சமுதாயத்தினரும் போற்றக் கூடிய இடத்திலிருப்பவர்கள் கலைஞர்கள். தமிழ்த் திரையுலக நடிப்புக் கலைஞர்களில் சிலர்¢ மட்டும் இதற்கு விதிவிலக்கு. இவர்களுக்கு தனிமனிதப் பொறுப்பும் கிடையாது. சமுதாய அக்கறையும் தெரியாது.


சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கென்று ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் நடிகர் நடிகைகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகளை மலேசியா, சிங்கப்பூரில் நடத்தி அதில் கிடைத்த பணத்தில் கடனை அடைத்துவிட்டார்கள். அதோடு அவர்கள் தாகம் தீரவில்லை.
இப்போது நடிகர் சங்கத்துக்குக் கட்டிடம் கட்டுவதற்காக ஒரு கலைநிகழ்ச்சி. அதை மட்டும் சொன்னால் காறித்துப்பிவிடுவார்கள் என்பதால் நலிந்த கலைஞர்களுக்கு உதவுவதற்காக என்றும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு போய் வந்திருக்கிறார்கள்.

டிசம்பர் 21ஆம் நாள் மலேசியாவிலும், டிசம்பர் 23ஆம் நாள் சிங்கப்பூரிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. இதில் கலந்து கொள்ள நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் விஜய், விக்ரம், சிம்பு, சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களும் சந்தியா, விந்தியா, மும்தாஜ், லட்சுமிராய் உள்ளிட்ட பல நடிகைகளும் போய் வந்தனர்.

இவர்களில் விஜய் நடிக்கும் குருவி, சரத் நடிக்கும் 1977 ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆடு மேய்த்த மாதிரியும் ஆச்சு, அண்ணணுக்குப் பெண் பார்த்த மாதிரியும் ஆச்சு.
இவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சியின் நோக்கம் சரிதானா? உணவு, உடை, கல்வி, சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பொருட்டு இம்மாதிரிக் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டினால் கூட ஏற்றுக் கொள்ளலாம். நடிகர் சங்கத்துக்குக் கட்டிடம் கட்டுவதற்காக ஒரு கலைநிகழ்ச்சி தேவைதானா?

மலேசியாவில் கடுமையான சூழல் நிலவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவர்கள் கலைநிகழ்ச்சி நடத்தியதால் இவர்களின் சுயநல நோக்கம் அப்பட்டமாக வெளியில் தெரிந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு மலேசியாவில் நடைபெறவில்லையென்றால் கூட இவர்களுக்கு நிதி திரட்ட என்ன தார்மீக உரிமை இருக்கிறது?


இக்கலை நிகழ்ச்சிகள் மூலம் சுமார் நான்கு கோடி ரூபாய் நடிகர் சங்கத்திற்குச் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்பணத்தை நடிகர் சங்கத்திற்குக் கொடுத்துவிட்டு ராதிகாவின் ரேடான் மீடியா நிறுவனமும் கலாட்டா டாட்காம் நிறுவனமும் இணைந்து நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிக் கொள்ளும். இவர்களோடு ஊடகப் பங்குதாரராக சன் தொலைக்காட்சியும் உண்டு. இதில் பெரும் தொகையை சன் தொலைக்காட்சியே கொடுத்துவிட்டது என்கிறார்கள்.
நடிகர், நடிகைகள் உட்பட 300 பேர் கொண்ட இக்குழுவின் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவு மட்டுமே ஒன்றரை கோடிக்கு மேல் வருமென்கிறார்கள். இதற்கு மேல் வசூலாகும் தொகையைப் பொறுத்துப் பங்கீடு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடந்த அரங்கு சுமார் பனிரெண்டாயிரம் பேர் அமரக்கூடியதாம். கலை நிகழ்ச்சியன்று வந்திருந்தோர் இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரத்துக்குள்தான் இருக்குமாம். இதனால் மலேசியா நிகழ்ச்சியினால் இவர்களுக்குப் பெருத்த நட்டமே ஏற்பட்டிருக்கிறது. சிங்கப்பூரில் வழக்கம்போல் அரங்கு நிறைந்து வழிய நிகழ்ச்சி நடந்திருக்கிறது.
முன்னணி நடிகர் நடிகையர் உட்பட 300 பேர் கொண்ட குழு இரண்டு மாதங்களுக்கு மேலாக முன் தயாரிப்புச் செய்து போய் திரட்டி வந்த நிதி எவ்வளவு? (நிதிக் கணக்கை வெளிப்படையாக அவர்கள் சொல்லமாட்டார்கள்) நாம் தோராயமாகக் கணக்கிட்டு சுமார் பத்து கோடி என்று வைத்துக் கொள்வோம். திரைப்பட நடிகர்களுக்கு இந்தத்தொகை ஒரு பெரிய தொகையா?

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னணி நடிகரான விஜய் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளமே 7 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. விக்ரம்-4, சிம்பு-3, சூர்யா-3 என்று கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். வாங்குகிற சம்பளத்தை அப்படியே நடிகர் சங்கத்துக்குக் கொடுத்துவிடச் சொல்லவில்லை.

விஜய்யோ, விக்ரமோ நடிக்கும் ஒரு படத்தின் மொத்தத் தயாரிப்புச் செலவு 12லிருந்து 15 கோடி ரூபாய், அவற்றின் சந்தை மதிப்பு சுமார் 20 கோடி. இவை படத்துக்குப் படம் மாறுபடக்கூடியதே என்றாலும் கேரளாவைப் போல நடிகர் சங்கமே ஒரு படம் தயாரிக்கலாம்.

கேரளாவில் நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட வேண்டுமென்பதற்காக அம்மாநில முன்னணி நடிகர் தில¦ப் நாயகனாக நடிக்க ஒரு படத்தை நடிகர் சங்கமே தயாரிக்கிறது. இந்தப் படத்தில் மம்முட்டி, மோகன்லால் உட்பட அனைத்து நடிகர்களும் சிறப்புத் தோற்றத்தில் கலந்து கொள்கிறார்கள். இதனால் அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறதாம். இதன் விளைவு அப்படம் பெரும் தொகைக்கு விற்பனையாகும். அதன் லாபம் நடிகர் சங்கத்தைச் சேரும் அதுபோல இங்கே.
விஜய்க்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கொடுத்து ஒரு படத்தைத் தயாரித்தால் கூட மூன்று மாதங்களுக்குள் பெரும் தொகையைத் திரட்டிவிட முடியும்.

அண்மையில் மும்பையைச் சேர்ந்த தோதோதனா எனும் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கும் தகவல், இந்தியர்கள் சினிமா பார்ப்பதில் ஆர்வத்துடன் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் எட்டாயிரம் கோடி ரூபாய்க்குச் சினிமா டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் முப்பது விழுக்காடு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இவற்றில் நாற்பது விழுக்காட்டை இந்தித் திரையுலகம் எடுத்துக் கொள்கிறது. மீதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகள் எடுத்துக் கொள்வதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆண்டுக்கு ஆயிரம் கோடி அளவில் பணம் புழங்கும் ஒரு தொழிலில் அப்பணத்தின் பெரும்பகுதியைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் நடிகர்கள், தங்களுடைய சங்கத்தின் கட்டிட நிதிக்காகக் கையேந்துவது எவ்வளவு கேலிக்குரிய செயல்.

மக்களை மகிழ்விக்கும் எங்களுக்கு அவர்களிடமிருந்து காசு வாங்க உரிமையில்லையா? என்று அவர்கள் கேட்கக் கூடும். உங்களைக் கொண்டாடும் மக்களை மகிழ்விப்பதைவிட மழுங்கடிப்பதையே நீங்கள் செய்து வருகிறீர்கள். அதோடு கலைஞன் தான் கலந்திருக்கும் சமுதாயத்தைப் பிரதிபலிப்பவனாக இருக்க வேண்டும். ஆனால் தமிழக நடிகர்கள் பலருக்கோ தேசமே பற்றியெரிந்தாலும் அதுபற்றி எந்தக் கவலையும் இல்லை. வெகுமக்களைப் பாதிக்கும் எந்தச் சிக்கலின் போதும் வாயையே திறக்காமல், மக்களிடம் காசு கேட்கும் உரிமை மட்டும் எப்படி வரும்?.

அரசியல் சிக்கல்களைத் தாண்டி மனிதநேய விசயங்களில்கூட வாய்திறந்¢ததில்லை இவர்கள். ஆழிப்பேரலை தாக்கி ஆயிரக்கணக்கானோர் இறந்தபோது வடநாட்டு நடிகன் விவேக் ஓபராய் செய்த அளவு கூட தமிழ் நடிகர்கள் எதுவும் செய்யவில்லை.

கோடி கோடியாகப் பணம் புரளும் ஒரு தொழிலில் ஆண்டுக்காண்டு தங்கள் சொத்து மதிப்பை மேன்மேலும் உயர்த்திக் கொண்டே வரும் தமிழக நடிகர்கள், சில கோடிச் சில்லறைகளுக்காகக் கையேந்தாமல் இருங்கள். ஒருவன் துயரத்தில் பங்கு கொள்ளாத எவனுக்கும் அவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்கும் தார்மீக உரிமையும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்னும் குரல் ஒலிக்கிறது.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713

மரண தண்டனை கூடாது


மரண தண்டனை கூடாது

எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன.... தருமபுரிக்கு அருகே மூன்று கல்லூரி மாணவிகள், பேருந்தில் வைத்துக் கொளுத்தப்பட்ட கொடூரம், நெஞ்சை இன்றும் நெருப்பாய்ச் சுடுகிறது.


எந்தக் குற்றமும் செய்யாத, எதற்காகக் கொல்லப்படுகிறோம் என்று கூட அறியாத அந்தப் பிள்ளைகள் அன்று அரம்பர்களால் எரிக்கப்பட்டனர். கொடிய மனம், குடிபோதை இப்படியெல்லாம் செய்தால் தங்கள் கட்சித் தலைமையிலிருந்து பாராட்டும், பதவியும் கிடைக்குமென்ற தன்னலம் எல்லாம் சேர்ந்து இளம்பிள்ளைகள் மூவரை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது. அந்தப் பெண்களின் பெற்றோர் எப்படி அழுது அரற்றிப் புரண்டு கதறியிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

அன்று அந்தக் காட்டு விலங்காண்டித்தனத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றங்கள் மிகக் கடுமையான தண்டனையை விதித்துள்ளன. பணபலம், அரசியல் செல்வாக்கு முதலானவைகளால் முடங்கி விடாமல், நீதி தன் பணியை நேர்மையாய்ச் செய்துள்ளது.

எனினும், வழங்கப்பட்டிருப்பது மரண தண்டனை என்னும் போதுதான், நமக்கு ஒரு தயக்கம் ஏற்படுகின்றது. அந்தக் கொடியவர்களுக்கு மரணதண்டனைதான் சரியானது என்று பெற்றோர் மட்டுமின்றி, பொதுமக்கள் பலரும் கருதுவது நமக்குப் புரிகின்றது. தம் பிள்ளைகளை இழந்த சோகத்திலும், கடுமையான தண்டனைகளே எதிர்காலத்தில் குற்றங்கள், கொலைகள் குறையும் என்ற நம்பிக்கையிலும் அவர்கள் அவ்வாறு எண்ணுகின்றனர்.
கொலைக்கு இன்னொரு கொலைதான் தீர்வு என்பது சரியானதில்லை. மரண தண்டனை என்பது பழிக்குப்பழி வாங்குவதேயல்லாமல், அது ஒரு தண்டனை ஆகாது என்பதால், எச்சூழலிலும் மரண தண்டனை கூடாது என்னும் நிலைப்பாட்டில் நாம் உறுதிகாட்ட விரும்புகின்றோம். மேலும், வாழ்நாள் (ஆயுள்) தண்டனை என்பதும் மிகப் பெரிய தண்டனைதான் என்பதை நாம் உணர வேண்டும். 15. 20 ஆண்டுகள், பூட்டப்பட்ட ஒரு சிறைக்குள் கிடப்பது, சாவைக் காட்டிலும் கடுமையானது என்பதோடு, செய்த தவற்றை உணர்வதற்கும் வாய்ப்புத் தரக்கூடியது.

தமிழக முதலமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கருத்துக் கேட்ட போது, ‘எதிர்கட்சியினர்தானே, அவர்களைத் தூக்கில் போடட்டும்’ என்று கருதாமல் ‘‘நான் ஒவ்வொரு தூக்குத் தண்டனைக்கும் தனித்தனியாகக் கருத்து சொல்ல முடியாது. பொதுவாக யாருக்குமே மரண தண்டனை கூடாது என்பதே என் கருத்து’’ என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அது மரணதண்டனை போன்ற, பழிக்குப் பழி வாங்கலாக இருக்கக்கூடாது. உலக நாடுகள் பலவற்றைப் பின்பற்றி, இந்தியாவும் மரண தண்டனையைச் சட்டப்படியே நீக்கிவிட வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.

பட்டுக்கோட்டை மாப்பிள்ளையின் வைத்தியம் தேவை!

பட்டுக்கோட்டை மாப்பிள்ளையின் வைத்தியம் தேவை!
- கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்.

இது பனிபொழியும் பருவம் மட்டுமல்ல; இசை மழை பொழியும் பருவமும் கூட!
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்று ஒரு பக்கத்தில் கோயில் பஜனைகள் - இன்னொரு பக்கத்தில் சபாக்களில் இசைக் கச்சேரிகள் ஜாம் ஜாமென்று நடந்து கொண்டு இருக்கின்றன.

ஏதோ பொழுது போக்கு என்றும் இருக்க முடியவில்லை. இரண்டிலும் பல்வேறு சமாச்சாரங்கள் மண்டைக் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன என்பதுதான் நமக்குக் கவலையளிப்பதாக இருக்கிறது.

மார்கழி மாத பஜனையில் அப்படி என்னதான் பாடுகிறார்கள்?
பள்ளியறை சுற்றிலும் நிலை விளக்குகள் ஒளி வீச, யானைத் தந்தத்தால் கடையப்பட்ட கால்களை உடைய கட்டிலின் மேல் மிருதுவாயிருக்கும் பஞ்சணையின் மீது ஏறி, கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களைச் சூட்டியுள்ள கூந்தலை உடைய நப்பின்னைப் பிராட்டியின் கொங்கையின் மீது வைத்துத் (?) துயில் கொண்ட விசால மார்பினை உடையவனே!
குத்து விளக்கெரிய
கோட்டுக் கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்¬னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
ஆண்டாள் என்ற பெண் பக்தை கடவுள் மீது மையல் கொண்டு இப்படியெல்லாம் பாடுவதாக இந்தப் பக்தர்கள் பக்தி சொட்டச் சொட்ட பஜனைகள் பாடுவதுதான் மார்கழி மாதத்தின் தேஜஸ்.
சாதாரணமாக அல்ல; ஒலி பெருக்கியை வைத்து அலற விடுகிறார்கள்.
நாள்தோறும் இந்தப் பாட்டைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன நிலையில் இந்தப் பாட்டுக்குப் பொருள்தான் என்ன? சிறுமி கேட்டுவிட்டால் பெரிசுகள் என்ன சொல்லுமோ தெரியவில்லை.

இன்னொரு பக்கம் இசைக் கச்சேரிகள் கன ஜோர்!
இசைக்கும் நமக்கும் காததூரம்; ஆனாலும் விமர்சனங்களைப் படிப்பதில் என்ன கஷ்டம்?
அதுவும் இசை விமர்சகர் சுப்புடு என்றால் கொக்கா?
அவர் எழுதிய விமர்சனம் ஒன்றை - அதுவும் தினமலரில் (18.12.2003) படிக்க நேர்ந்தது. அப்பொழுதுதான் இசைக் கச்சேரியில் எதைப் பற்றி விஸ்தாரமாகப் பாடுகிறார்கள் என்ற ‘குட்டும்’ நமக்கு உடைப்பட்டது.
இதோ சுப்புடு எழுதுகிறார்.

“நமக்குள் இருப்பது போலி ஆச்சாரம். சிலதைப் புனிதம் இல்லைன்னு தடை பண்ணி வச்சிருக்கோம். ஆன்மீகம் என்பதை நம்மைப் போல தப்பாப் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. ‘நேத்து மாலை முழுவதும் உனக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நீ ஏன் வரல்லே? என் தாபம் தாங்கல்லே!’ இப்படி ஒரு பாட்டு தெலுங்குல இருக்கு. அர்த்தம் தெரிஞ்சா நடை போட்டுடுவாங்க.
க்ஷேத்திரக் பாட்டு ஒண்ணு இருக்கு. ‘கிருஷ்ணா! வந்திருக்கிறே.. போ.. போயிடு... அப்புறம் வா.. என் புருஷன் வர நேரமிது!’ என்று. யாராவது அர்த்தம் தெரிஞ்சு ஆடறாங்களா?
அஷ்டபதி ஒண்ணு இருக்கு. தலைவி சொல்றா... ‘தாபம் அதிகமாயிட்டது. அவனைப் போய் இழுத்¢துக் கொண்டு வாடி என்கிறாள். தோழி போயிட்டு லேட்டா வரா. ‘ஏன் தலை எல்லாம் கலைஞ்சிருக்கு’ என்னும் தலைவி தோழிக்கிட்ட கேட்கிறாள். ‘காத்துல கலைஞ்சு போயிட்டுது’ ன்னு பதில் சொல்றா.

ஜீவாத்மா பரமாத்மாவை அடைய தாபத்துல துடிக்கிறது என்பதெல்லாம் மழுப்பலாகத் தான் தோன்றது”
இவ்வளவும் சொல்லுவது பாவாத்மாக்களாகிய நாம் அல்ல! பிரபல சங்கீத விமர்சகர் சுப்புடு - தகவல் சொல்லுவதும் ‘விடுதலை’யல்ல - தினமலர்!
கூடுது கூடுது இசைக் கச்சேரிகளில் எல்லாம் கிழடுகள் வரை கூட்டம் கூடுது என்றால் எதற்காகவாம்? எல்லாம் இம்மாதிரி சமாச்சாரங்களுக்காகத்தான் என்பது இதுவரை புரிந்து கொள்ளத் தவறினாலும் இப்பொழுதாவது புரிந்து கொள்ளலாம்.

ஜீவாத்மாக்கள் பரமாத்மாவைக் கூடுவதற்கு இத்தியாதி இத்தியாதி முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன என்பதை நம்புவோமாக’
தமிழ்நாட்டில் இசை மழை; தமிழில்தானே கச்சேரிகள் இருக்கும் - தமிழர்கள்தானே பாடுவார்கள் என்று அந்தப் பக்கம் கொஞசம் தலை காட்டினால், அங்கு தமிழும் இல்லை, தமிழர்களும் மருந்துக்கும் கிடையாது.
கேட்டால் இசையில் இந்தக் கண்ணோட்டமெல்லாம் கூடாது; இசைக்கு மொழியில்லை என்று பரந்து விரிந்த உள்ளத்திற்குச் சொந்தக்காரர்கள் போல எச்சில் சொட்டச் சொட்டப் பேசுவார்கள்.

சரி, இசைக்குத் தான்¢ மொழி கிடையாதே - தமிழ்நாட்டில் அது தமிழில் இருந்து விட்டுப் போகட்டுமே என்று நாம் கேட்டால் ‘இது விதண்டாவாதம், மொழித் துவேஷப் பார்வை’ என்று தயாராக வைத்திருக்கும் அஸ்திரங்களை நம் மீது ஏவுவார்கள்.
இப்படிச் சொல்லுகிறவர்கள் தான் கோயில்களில் கடவுளுக்கு மொழி உண்டு - அது சமஸ்கிருதம்தான் என்பார்கள்.
இந்தப் போராட்டம் இன்று நேற்று அல்ல - நீண்ட காலமாகவே தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருப்பதுதான்.
தந்தை பெரியார் தாம் நடத்திய மாநாடுகளில் எல்லாம் 1930-களில் தமிழிசை மாநாடு என்றும் இணைத்து நடத்தி, தமிழிசைக் கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். அந்த மாநாடுகளில் தமிழ்நாட்டு மேடைகளில் இசை நிகழச்சி தமிழில் அமைய வேண்டும் என்று தீர்மானங்களையெல்லாம் நிறைவேற்றியும் இருக்கிறார்கள்.

1944 ஏப்ரல் 8ஆம் தேதி பட்டுக்கோட்டையில் ஒரு சம்பவம்; இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பார்ப்பனர் ஒருவர் தந்தை பெரியார் அவர்களுக்கு எழுதிய கடிதம் சுவையானது. அந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியாரின் இயக்கத் தொண்டர்கள் கொளுத்திய தன்மான உணர்வுக்கு அது ஒரு அடையாளம்.
இதோ அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி.

இராமசாமி நாயக்கருக்கு பட்டுக்கோட்டைவாசி எழுதிக் கொண்டது...
8.4.1944இல் இவ்வூர் நாடியம்மன் உற்சவத்திற்கு மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் கச்சேரி செய்ய வந்தார். அப்பொழுது ஸ்ரீமான் நாடி முத்துப்பிள்ளை, போல¦ஸ் சூப்பிரிண்டண்ட், டிப்புடி கலெக்டர், ஸ்பெஷல் கலெக்டர், சப் மாஜிஸ்டிரேட், டிஸ்டிரிக்ட் முன்சீப் இன்னும் இவ்வூர் பிரபலஸ்தர்களும் வீற்றிருந்தார்கள். அப்பொழுது இவ்வூர் சு.ம. காரியதரிசி என்று நினைக்கிறேன். மாப்பிள்ளையன் தமிழில்தான் பாட வேண்டும் என்று சொன்னார். அவர் தமிழில் தெரியாது என்றார். மீண்டும் பாடினார். நிறுத்து என்று மறுபடியும் சொன்னார். உடனே நாடி முத்துப்பிள்ளை மாப்பிள்ளையனை வெளியே பிடித்துத் தள்ளச் சொன்னார். நாடி முத்துப் பிள்ளையைப் பார்த்து மாப்பிள்ளையன் சொல்கிறார்.
‘கொலை விழும் ஜாக்கிரதை’ என்று. தங்கள் கட்சிக் கொள்கை இதுதானா? போல¦ஸ் சூப்பிரிண்டண்டும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்.
உடனே டிப்டி கலெக்டர் தமிழில் பாடும் என்று பாடகரைச் சொன்னார். பிறகு பாடினார் தமிழில். அதில் வெற்றிதான். அது மாதிரி காரியங்களில் தலையிடலாம். முறையுங்கூட! பிராமணர்கள் இருக்கக் கூடாது என்றால் அவர்கள் எங்கு போவது?

என்று தந்தை பெரியார் அவர்களுக்குப் பட்டுக்கோட்டை பார்ப்பனர் ஒருவர் கடிதம் எழுதினார். இன்றைக்கு 63 ஆண்டுகளுக்குமுன்
தமிழில் பாடத் தெரியாது என்று முதலில் சொன்ன பார்ப்பனர், எதிர்ப்புக்குப் பின் எப்படித் தமிழில் பாடினார்?
இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை; பார்ப்பனர்கள் வெறியைப் பணிய வைக்கும் அணுகுமுறையையும் நமது பெரியார் இயக்கத் தோழர்கள் 63 ஆண்டுகளுக்கு முன்பே நமக்குக் கற்றும் கொடுத்திருக்கிறார்கள்.
சபாக்களில் இப்பொழுது நடக்கும் கச்சேரிகளைப் பார்க்கும்போது அந்த அணுகுமுறை இன்றைக்கும் தேவைப்படுவதாகவே தெரிகிறது.
ஜேசுதாஸ் என்றால் இசை உலகில் அறியாதார் யாரும் இருக்க மாட்டார்கள்.
பார்ப்பனத் தேள் அவரையும் கொட்டிப் பதம் பார்த்து இருக்கிறது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.
இதற்கான ஆதாரமும் நமது இயக்க ஏடுகள் அல்ல. ஆனந்தவிகடன் தான் (20.12.1992)

பிரபல இசை வல்லுநர் டி.வி.கோபால கிருஷ்ணன் ஆனந்த விகடனுக்காக ஜேசுதாஸ் அவர்களைப் பேட்டி காணுகிறார்.
கேள்வி ஒன்றுக்கு ஜேசுதாஸ் பதில் சொல்லியிருக்கிறார்.

“யாராவது இந்த சீஸன்லே எங்கெல்லாம் பாடறேள்?’னு கேட்டா வீணா லிஸ்ட் கொடுத்திண்டிருக்க வேண்டாமே மியூசிக் அகாடம’¤ தவிரனு ஒரே வார்த்தையில சொல்லிட்டுப் போயிண்டே இருக்கலாமே” என்று ஜேசுதாஸ் பதில் சொல்லுகிறார்.
எவ்வளவு புகழ் பெற்றவராக, இசை உலகில் கொடி கட்டி ஆள்பவராக இருந்தாலும் மியூசிக் அகாடமியில் ஜேசுதாஸ் போன்றவர்கள் பாட முடியாததற்குக் காரணம் என்ன? புரியவில்லையா? அதனை இன்னொரு இடத்தில் புரிய வைத்து விட்டார்.

டி.வி. கோபாலகிருஷ்ணன்: “நாம எல்லோரும் ரொம்ப டிடே„டு பெ˜ச¡ இல்லையா? நமக்குள்ளேயே முதல்ல ஒண்ணு சேர மாட்டோமே! அப்புறம் எங்கே வரிஞ்சு கட்டறது?! இப்போ நீங்க இருக்கீங்க. உங்க கச்சேரிக்கு வர்ற கூட்டத்தைப் பார்த்து நாங்க வாய் பிளக்கிறோம். ஆனா நம்மள்ல சில பேருக்கு அதுவே வயித்தைக் கலக்கிறதே! வயித்தெரிச்சல்ல, ‘பிரமாண்ட கூட்டத்துக்குக் காரணம் - அவருக்கு இருக்கிற சினிமா புகழ்!னு வாய் கூசாம சொல்றவங்க கூட இருக்காங்களே!”

ஜேசுதாஸ் : “இல்லே டி.வி.ஜி. அவங்களுக்கு இருக்கிற பாரம்பரியம் எனக்கு இல்லையே! அந்த ஆதங்கம்கூட இருக்கலாமில்லையா?’’
டி.வி.ஜி. : ‘தயவு பண்ணி அப்படி நமக்குப் பாரம்பரியம் இல்லேன்னு சொல்லிடாதீங்க...’
ஜேசுதாஸ் : “இல்லே... தியாகராஜர் என் தாத்தாவை மடியிலே உட்கார்த்தி வெச்சுண்டு பாட்டுப் பாடி சாதம் ஊட்டியிருக்கார்!னு சொல்றவங்களுக்கு மத்தியிலே, நான் பாரம்பரியம் இல்லாத அந்நியன்தானே! அதைத்தான் சொன்னேன்.’’

ஜேசுதாஸ் என்ன சொல்ல வருகிறார் என்பது இப்பொழுது புரிந்திருக்குமே?
மியூசிக் அகாடமியில் அவாள் பாஷையில் ‘சான்ஸ்’ கிடைக்க வேண்டுமானால் முதுகில் பூணூல் தொங்க வேண்டும் என்பதை லாவகமாகப் பாடுவது போலவே ஜேசுதாஸ் இந்த இடத்திலும் சொல்லிவிட்டாரா இல்லையா?
பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் - தமிழ் - தமிழரல்லாத போராட்டம் என்பது நீண்ட காலமாகவே பல வடிவங்களிலும் நடந்து கொண்டு தானிருக்கிறது.

1946 பிப்ரவரி ஒன்பதாம் தேதி ‘குடிஅரசு’ இதழின் 7ஆம் பக்கத்திலே ஒரு கட்டுரை காணப்படுகிறது. அதன் தலைப்பு ‘‘தீட்டாயிடுத்து!’’ என்பதாகும்.
அந்தக் கட்டுரை இதோ
‘‘இந்த ஆண்டு திருவையாற்றில் நடைபெற்ற தியாகராஜ அய்யர் உற்சவத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில் ‘சித்தி விநாயகனே’ என்ற பாட்டைப் பாடினாராம். அடுத்தபடி கச்சேரி செய்ய வந்த அரியக்குடி ராமானுச அய்யங்கார் ‘தேசிகர் தமிழ் பாடி சன்னிதானத்தைத் தீட்டுப்படுத்தி விட்டார். நான் இந்த மேடையில் பாட மாட்டேன்’’ என்று கூச்சலிட்டுத் தாம்தோம் எனத் தாண்டிக் குதித்தாராம்.

இது இன்று நேற்றல்ல, மனுமந்தாதா காலத்திலிருந்து ‘தமிழ் பாஷை நீச்ச பாஷை’ என்றும், பிராமணாள் ஸ்நானம் செய்துவிட்டு சாப்பிடும்வரை தமிழ் பேசக் கூடாது’’ என்றும், வீட்டில் விசேஷ காலங்களில் தமிழ் வாயில் நுழையக் கூடாதென்றும் கூறி வந்ததோடு, அனுஷ்டானத்திலும் இருந்து வருகிறது. அகத்திலும், அக்கிரகாரத்திலும் இருந்துவந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்துவிட்டது. தமிழ்நாட்டிலே - தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே - தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத்தரவு! ஆங்கில அரசாங்கமல்ல - ஆரிய அரசாங்கத்தின் ஆணை! ‘தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகிவிட்டது’’ என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக - அனுமார்களாக வாழ்வதுதான். தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய்விட்டது. தியாகராஜர் திருநாளுக்கு நன்கொடை வழங்கும் முட்டாள் தமிழர்களும், தொண்டர்க்குத் தொண்டராம் சிஷ்யகோடிகளின் வரிசையிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷணர்களும் உள்ளவரை அரியக்குடிவர்க்கம் அகம்பாவத்தோடுதான் வாழும். அரியக்குடிகள் அங்கலாய்ப்புக்கு அவர் இனபந்து காந்தி மகாத்மா(?)வின் விஜயமும் ஒரு காரணமாகும்.

இந்தக் கட்டுரையைத் தீட்டியவர் அன்றைய ‘குடிஅரசு’ இதழின் எழுத்தாளர் - இன்றைய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்தான்.
தண்டபாணி தேசிகர்கள் முதல் ஜேசுதாஸ் வரை அவமானப்படுத்தப்படுவது தொடந்து கொண்டு தானிருக்கிறது. இதற்கப் பரிகாரம் பட்டுக்கோட்டை மாப்பிள்ளையன்களின் வைத்தியம்தானோ!

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713

பொங்கல் - தமிழரின் மே தினம்- பேராசிரியர் கா. சிவத்தம்பி

இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றிலிருந்து - உண்மையில் திராவிட முன்னேற்றக் கழகத் தோற்றுகை காலம் முதல், தைப்பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடும் வழக்கம் வளர்ந்து வருகின்றது.


இந்திய, தென்னிந்தியத் தமிழகச் சூழலில் தீபாவளியையே வருடத்தின் பிரதானமான விழாக் காலமாகக் கொள்ளும் ஒரு மரபு நிலவி வந்தது. இந்து மதச் சடங்கு ஐதீகப் பாரம்பரியங்களுடன் தொடர்பு கொண்டிருந்த தீபாவளியின் சனரஞசகத் தன்மை திராவிடக் கருத்து நிலையின் அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்குவதாகக் கொள்ள வேண்டும்.

தீபாவளியின் தோற்றம் பற்றி ஆராய்ந்தவர்கள் பின்னர் அதற்கு ஒரு இந்தோ ஆரியச் சார்பின்மை உண்டு என்று கூறியது கூட அந்த ஜனரஞ்சகத் தன்மையைக் குறைக்க முடியவில்லை.

இந்தச் சூழலிலே தமிழகத்துக்கு மாத்திரமே உரிய அதிலும் பார்க்க முக்கியமான இந்தோ ஆரிய பிராமணியச் சார்பற்ற ஒரு வைபவத்தை முன்னிறுத்துவது அரசியல் பண்பாட்டுத் தேவையாக அமைந்தது எனலாம். இந்த பின்புலத்திலே தான் சி.என்.அண்ணாதுரை அவர்கள் பொங்கலைத் தமிழர் கொண்டாட வேண்டிய தினமாக முன்வைத்தார். அவர்கள் தைப்பொங்கலின் சிறப்பு தமிழ்நாடு நிலைப்பட்டதும் அதிலும் பார்க்க பிராமணியச் சடங்குச் சார்பற்றதுமாகும்.
இந்தப் பண்பாட்டரசியல் உந்துதலொன்று இருந்தது உண்மையெனினும், தமிழக நிலையில் பிராமணரல்லாதார் இடையேயும் குறிப்பாகத் தமிழ் விவசாயிகளிடையே உண்மையில் தைப்பொங்கல் நாள் மிக முக்கியமுடைய ஒரு நாளாகக் கருதப்பட்டது “பொங்கல்”. பொங்குதலென்பது வைபவ கொண்டாட்டங்களின் பொழுது மேற்கொள்ளப்படும் ஒரு பிரதான சடங்காக தமிழ்ப் பண்பாட்டு நடைமுறையிலிருந்து வருகின்ற நன்னாள் எனினும், (வருஷப்பிறப்பு, பொங்கல், ஆகமஞ்சரா கோயில்களில் நேர்த்திக்காக பொங்கல் என) இந்நடைமுறை ஜனரஞ்சகமாகவே இருந்து வருகிறது. ஆனால், தமிழ்ச் சமூக அடிநிலையில் பொங்கல் விழாவினை மக்கள் சூரியனுக்குப் பொங்குதல் என்றே கூறிவந்துள்ளனர். சில கிராமங்களில் ஆதித்யனுக்குப் (சூரியனுக்கு) பொங்கல் என்ற கருத்தில் ஆயித்தியனுக்கு பொங்கல் என்று சொல்லும் வழக்கம் இன்று வரை உண்டு. இலங்கை வடமராட்சியில் இந்த வழக்கு இன்றும் காணப்படுகிறது. தைப்பொங்கல் பற்றிய உண்மையான முக்கியத்துவம் இதுவே.
சூரியனுக்குப் பொங்கல் என்ற அழுத்தத்தின் பின்புலத்தில் தமிழக இலங்கை புவியியலின் பின்புலமாக அமையும் காலநிலை முக்கியமாகின்றது. தமிழ்நாட்டில் பாரம்பரியமாக ஆவணியுடன் மழைக்காலம் தொடர்வதாகச் சொல்வார்கள். சங்க இலக்கியப் பாரம்பரியத்தில் தலைவன் வீட்டுக்குத் திரும்பல் மழைக்காலம் பற்றிய குறிப்புகளில் இருந்து இவ்வுண்மை புலனாகின்றது.


தமிழ்நாட்டில் ஆவணி, புரட்டாசி, மார்கழி காலத்தில் மழைக்காலம் அல்லது மாரிக்காலம் என்பர். மாரி என்பது மழை தாரை தாரையாக விழுவதைக் குறிக்கு‹ தமிழ்நாட்டின் வெப்பத்தை நீக்குவதற்கு மாரி அவசியமாகும். இதனாலேயே அம்மன் வணக்கத்தில் மாரியம்மன் வணக்கம் முக்கியமாகின்றது. மாரியைத் தருகின்ற அம்மன் என்றே இதன் பொருள் கொள்ள வேண்டும். இந்த மாரியில் உச்சகட்டம் மார்கழியாகும்.
அந்த உச்சக்கட்டத்திலிருந்து மாறி சூரியனது கதிர்கள் வடக்கு நோக்கியவையாக திரும்புவது தையிலேயாகும். இதனாலேயே தை மாதத் தொடக்கத்தினை உத்தராயணம் என்று சொல்வர். மற்ற மாற்றம் சூரியனின் கதிர்கள் தெற்கு திசை வழிபடல் ஆடி மாதம் 1ஆம் திகதியாகும். இதனாலேயே தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் ஆடிப்பிறப்பைத் தமிழர்கள் விசேடமாகக் கொண்டாடுவார்கள். ஆடி மாதத்திலிருந்து காற்றின் திசைமாறும் என்பது கடலோடி, மீன்பிடி மக்களின் அனுபவ அறிவாகும். விவசாயிகளைப் பொறுத்தவரையில், “ஆடிக் காற்றில் தேடி உழு” எனும் பழமொழி உண்டு. எனவே, தமிழ்நாட்டின் தை மாதம் 1ஆம் திகதி முக்கியமான நாளாகும். தமிழ்நாட்டின் பாரம்பரிய விவசாய நடைமுறையை அவதானிப்பின் மார்கழியோடு மழை முடிய தையிலே புதிர் எடுக்கும் வழக்கம் உண்டு. உண்மையில் கோவில்களில் தைப்பொங்கல் அன்று புதிர் நெல்லை அழகுறக் கட்டி கோயில் வாசலில் தொங்கவிடுவர். தைப்பொங்கல் அன்று கோயில் வாசல்களில் நடக்கும் பொங்கலை புதிர்ப் பொங்கல் எனும் மரபு இன்று வரை உண்டு.

தமிழ்நாட்டுக் கிராம வாழ்க்கையின் பாரம்பரியங்களை நன்குணர்ந்திருந்த அண்ணாத்துரை அவர்கள், தமிழ்த் தேசிய இன எழுச்சியில் ஓர் குறிப்பாக தைப்பொங்கலைக் கொண்டது மிகப் பொருத்தமான ஒன்றாகும். பிராமணியத்தின் ஐதீகப் பின்புலங்கள் எதுவும் இல்லாத விழா தைப்பொங்கல் ஆகும். எனவே தான் அதனை உழவர் தினமாகக் கொண்டாடுகின்ற ஒரு பாரம்பரியம் ஏறப்டுத்தப்பட்டது. உண்மையில், இந்தச் சமகால அடையாளப்படுத்துகை நிறைந்த பொருளுடையதாகும். ஏனெனில், தைப்பிறப்புக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் செய்யப் பெறும்.
வயல் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட காளை மாடுகளை அலங்கரித்து மாட்டுத் தொழுவத்தடியினை நன்கு செய்து ஓர் புதிய தொடக்கத்தினை ஏற்படுத்துவர். மாட்டுப் பொங்கலும் தொழுவத்திற்கு அருகாமையிலேயே நடைபெறும். இந்த அம்சம் தைப்பொங்கலை நிச்சயமாக ஒரு விவசாய விழாவாகவே காட்டுகின்றது.

தை முதல் நாளும், 2ஆம் நாளும் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சிகள் அளவு இன்றுமொரு முக்கிய நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடைபெறுவதுண்டு. பொங்கலுக்கு முதல் நாள் இரவு வீட்டில் உள்ள பழம் பாய்கள், குப்பை கூளங்களை பெரு நெருப்பாக எரிப்பர். அதாவது, மழையினால் பாதிக்கப்பட்ட எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு புதிய நடைமுறை தொடங்குவதென்பதற்கு இது ஓர் நல்ல குறிப்பாகும். பண்டைய நாட்களில் மாரி காலத்தில் மாடுகள் கட்டப்பட்டிருந்த தொழுவத்தை குறிப்பாகச் சாணத்தை கொழுத்தி விடும் ஓர் வழக்கம் இருந்தது. இந்த சாண எருப்பிலிருந்தே ‘திரு நீறு’ எனும் மதச் சின்னமும் இந்து தமிழ்ப் பாரம்பரியத்தில் வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. பொங்கலின் முதல் நாள் இரவு அது காலவரை பாவித்து, எறியப்படவேண்டிய பொருள் பண்டங்களை எரிக்கும் வழக்கம் இன்று வரை தமிழ்நாட்டில் உண்டு. சென்னை நகரச் சேரிகளில் பொங்கல் விழா இதனுடனேயே ஆரம்பிக்கிறது.

பொங்கல் பற்றிய அண்மைக்கால வளர்ச்சிகளை நோக்கும்போது சென்னையில் ஏற்பட்டு வரும் ஒரு புதுவளர்ச்சியினைக் குறிப்பிடல் வேண்டும். பொங்கலை அடுத்து வரும் ஞாயிறன்று சேரி வாழ் மக்கள் மெரினாக் கடற்கரை ஓரமாக வந்து பொங்கி உண்டு மகிழ்வர். கடற் பெருக்கால் ஏற்படும் அலைகள் இந்த பொங்கல் இடங்களின் அடையாளங்களைத் தெரியாமலே அழித்து விடுவதும் வழக்கம். இந்நாள் அன்று கடற்கரையில் மக்கள் ஆடிப்பாடி மகிழ்வர். இதனைக் ‘காளைப் பொங்கல்’ என்றழைக்கும் மரபும் உண்டு.
இப்பொங்கல்கள் பொழுது பாடப்படும் பாடல்கள் பற்றி சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவர் வீ.அரசு ஆய்வினை செய்துள்ளார். தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் வசிக்காத சென்னை நகரப்புற அடிநிலை மக்களின் இவ்வழக்கம், பொங்கல் விழாவானது தமிழ் மக்களது பண்பாட்டுப் பிரக்ஞையினுள் எத்துணை ஆழமாகச் சென்றுள்ளது என்பதைக் காட்டுகின்றது.
இப்பிரதேசத்தில் பிரதான தொழிலான விவசாயத்துடன், விவசாயிகளுடன் தொடர்புற்ற இந்த விழாவினை உலகப் பொதுநிலைப்படுத்திக் கூறவேண்டுமானால் இது தமிழரின் மே தினம் எனக் கொள்ளப்படத்தக்கதாகும். அதாவது, தமிழ் உழைப்பாளியின் தினம் தைப்பொங்கல் ஆகும். அது மாத்திரமல்ல, இந்த உழைப்பாளி தன் விவசாயத்திற்கு வேண்டிய மாடுகளையும் கௌரவிக்கும் விழா இதுவாகும். உண்மையில் தமிழ் மக்களின் பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங்களின் புவியியலோடும் பொருளியலோடும் தொடர்புற்ற பண்பாட்டுத் திருவிழா தைப்பொங்கலாகும்.

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008.
தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713


மலேசியத் தமிழர்களே கவனம்!

மலேசியத் தமிழர்களே கவனம்!
- இனியன்
மலேசியாவிலும் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர், தங்களின் உரிமைகளுக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்னும் செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதிலும், மக்களவையின் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த பாரிசான் கட்சியின் உறுப்பினர் டத்தோஸ்ரீ யூசுப் பின் யாக்கோப், நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரனைப் பார்த்து, “மானா அடா பங்சா தமிழ், யாங் பெர்ஹொர்மாட்” (தமிழினம் என்று ஒன்று இருக்கிறதா, அவர்கள் எங்குள்ளனர்?) என்று கேட்டதை அறிந்தபோது நமக்குக் கொதித்துப் போனது.
பிரித்தானியர்களின் ஆட்சியின்போது, தமிழர்கள் பலர், கூலித் தொழிலாளர்களாக உலகின் பல நாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அவற்றுள் மலேசியாவும் ஒன்று. இலங்கை, மலேசியா, பிஜித் தீவுகள், மொரீசியஸ், தென் ஆப்ரிக்கா என்று பல நாடுகள் செல்வ வளமடையத் தங்களின் வியர்வையையும், குருதியையும் தமிழர்கள் சிந்தியுள்ளனர்.
அந்த உழைப்பை மறந்து, நன்றி ஏதுமின்றி “தமிழினம் என ஒன்று உள்ளதா?” என்று கேட்பது, நெஞ்சைச் சுடும் நெருப்பாகவே உள்ளது.
ஈழத்தில் அடிபட்ட தமிழன் இப்போது மலேசியாவிலும் அடிபடுகிறானோ என்று வேதனையாக இருக்கிறது.
25.11.2007 அன்று தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைத் தொலைக்காட்சியில் கண்டபோதும், ஐந்து முன்னணித் தலைவர்களைச் சர்வதேசப் பாதுகாப்புச் சட்டத்தின் (ஐஎஸ்ஏ) கீழ்ச் சிறையில் அடைத்துள்ளதை அறிந்தபோதும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் பெரும் வேதனைக்குள்ளாயினர்.
அமைதியான பேரணிக்கு ஏன் அனுமதி மறுப்பு என்பதும் புதிராகவே உள்ளது.
சுமத்ரா தீவிற்குப் பாலம் கட்ட வேண்டும் என்ற ஒன் பின் ஜாபரின் கனவை இன்று நனவாக்கத் திட்டமிடுகின்ற முகமது அலி ரஸ்தாம் போன்ற மேல்தட்டு மலாய்க்காரர்களின் தூண்டுதலால்தான், தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று ஒரு தகவல் கிடைக்கிறது.
இயல்பாக மலாய் மக்கள் மிக நல்லவர்கள். சில மேல்தட்டினர் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகளுக்குக்¢ காரணம் என்னும் கருத்தும் உள்ளது.
எனினும் இங்கு சில செய்திகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். நேற்றுவரை, தமிழர்களுக்கும், மலாய் மக்களுக்குமிடையே பெரிய பிணக்கு ஏதும் இல்லை.
கேபினட் அமைச்சர், துணை அமைச்சர் நிலை வரை தமிழர்கள் எட்டியுள்ளனர். அந்நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற அஜீத்சிங் ஒரு தமிழர். இன்னும் உயர் அதிகாரிகள் மட்டத்தில் தமிழர்கள் பலர் உள்ளனர். தமிழர்களுக்கான வானொலி, தொலைக்காட்சி, தமிழ்ப் பள்ளிகள், தமிழ் நாள், வார, மாத இதழ்கள், தமிழ்ப் படங்கள் ஓடும் திரையரங்குகள் அனைத்துமே இன்று வரை உள்ளன.
பிறகு எப்படித் தமிழர்களுக்கும், மலாய் மக்களுக்குமிடையே ஓர் உரசல் ஏற்பட்டது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இயல்பாகவே செயல் ஊக்கம் உடைய தமிழர்கள் மற்றும் சீனர்களின் வளர்ச்சி, மலாய் மக்களிடம் ஓர் உறுத்தலை ஏற்படுத்தியது. தங்கள் மண்ணில் தங்களைக் காட்டிலும் பிற இனத்தினர் ஏற்றம் பெறுவது கண்டு அவர்களுக்கு ஓர் இயற்கையான சீற்றம் ஏற்படத் தொடங்கியது. ‘பூமிபுத்ரா’ என்ற இயக்கம், மண்ணின் மக்களுக்கே கல்வி, வேலை வாய்ப்பு அனைத்திலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
அரசும் அக்கோரிக்கையைச் சிறிது சிறிதாக ஏற்கத் தொடங்கியது. சிறு பிணக்குகளும் தொடங்கின.
கடந்த நவம்பர் மாதம் மலேசியாவில் உள்ள ‘ஹிண்ட்ராப்’ என்னும் அமைப்பு, பிரித்தானியர் இந்தியாவில் இருந்து அழைத்து வந்த தொழிலாளர்களுக்குச் சரியான நியாயம் வழங்கவில்லை. அதற்குரிய பொறுப்பை ஏற்று பிரித்தானிய அரசு அவர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியே பேரணி நடத்தியது.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, லண்டனில் ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளது. அவ்வழக்கை நடத்த, அரசி எலிசபெத்தே நல்ல வழக்குரைஞர்களை நியமித்துத் தர வேண்டும் என்ற மனுவை, அங்குள்ள பிரித்தானியத் தூதரகத்தில் ஒரு பேரணியாகச் சென்று கொடுக்கத் திட்டமிட்டது.
மலேசிய அரசு மனுவைக் கொடுக்க ஏற்பாடு செய்த போதும், பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் ஹிண்ட்ராப் அமைப்பினர் தடையை மீறிப் பேரணி நடத்தத் திட்டமிட்டபோதுதான், அது தடியடியிலும், கலவரத்திலும் முடிந்தது.
இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு செய்திகள் உள்ளன.
1. தமிழர்களுக்கும், பிரித்தானிய அரசுக்கும் இடையிலான சிக்கல், மலேசிய அரசுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான சிக்கலாக மாறியது எப்படி?
2. தமிழர்கள் தங்கள் அமைப்பிற்குத் தமிழ் இனம் சார்ந்த பெயரைச் சூட்டிக் கொள்ளாமல், “இந்து உரிமை நடவடிக்கைப் படை” (Hindu Rights Action Force - Hindraf) எனப் பெயர் வைத்துக் கொண்டது ஏன்?
இரண்டாவது வினாவை ஆராய்ந்தால், அதில் முதல் வினாவிற்கும் விடை கிடைக்கும் என்று மலேசியத் தமிழர்கள் சிலரே கூறுகின்றனர்.
இது குறித்து, மலேசியா-சிங்கப்பூரில் பல ஆண்டுகள் வாழ்ந்த, ‘சன்’ தொலைக்காட்சி வீரபாண்டியன் தரும் சில தகவல்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. அவர் எழுதுகின்றார்:-
“உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத இஸ்லாமிய அரசு, உருவ வழிபாடு கொண்ட இந்து சமயக் கோவில்களைத் தடை செய்ததில்லை. செந்தூர் முருகன் கோவிலும், பத்துமலை முருகன் கோவிலும் தைப்பூச விழா கொண்டாடி மகிழ்கின்றன. 59 விழுக்காடு மலாய் முஸ்ல¦ம்கள் இருக்கும் நாட்டில் 4000 பள்ளி வாசல்கள் இருக்கின்றன. அதே நேரம், 8 விழுக்காடு இந்தியர்கள் வாழும் நாட்டில் 17,000 இந்துக் கோயில்கள் இருக்கின்றன. அரசாங்கமே நிதியுதவி செய்து கட்டிக்கொடுத்த மாரியம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடத்திப் பிரதமர் பரிவட்டம் கட்டிக் கொண்ட காட்சியை நாடு பார்த்து ரசித்துள்ளது. பொது இடங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் அத்துமீறிக் கட்டப்பட்ட கோவில்களை மட்டுமின்றிப் பள்ளிவாசல்களையும் கூட அரசு இடித்துள்ளது.”
இத்தனை உரிமைகள் இருக்கும்போது, இந்துக்கள் என்ற பெயரில் உரிமை கோரியதின் அடிப்படை என்ன என்று நாம் காண வேண்டியுள்ளது.
அண்மைக்காலமாக இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் உள்ள சில இந்து அமைப்புகளுக்கும், மலேசியாவில் வாழும் சில (பார்ப்பனத்) தமிழர்களுக்குமிடையே நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, மலேசியப் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியப் பிரிவில், நேற்று வரை நடைபெற்று வந்த தமிழ்க் கலை விழாவிற்குப் பதிலாக, ‘பாரதீயப் பண்பாட்டு விழா’ நடைபெற்றுள்ளது. தமிழகத்திலிருந்து சென்றவர்கள் சமஸ்கிருத ஸ்லோகம், பஜனை, பயிற்சி ஆகியனவற்றை மேற்கொண்டு அதனைப் பாரதிய ஜனதா விழாவாகவே மாற்றியுள்ளனர்.
எல்லாம் போதாதென்று அமைப்புக்கும் ‘ஹிந்து’ வின் பெயரால் பெயர் சூட்டியுள்ளனர்.
ஓர் இஸ்லாமிய அரசை இச்செயல்கள் அச்சம் கொள்ளவும், சினங் கொள்ளவும் செய்துள்ளன. எனவேதான், பிரித்தானியத் தூதரகத்துக்கு மனுக் கொடுப்பதைப் பேரணியாகச் சென்று கொடுக்க மலேசிய அரசு தடுத்துள்ளது.
ஆக மொத்தம், மலேசிய அரசுக்கும், தமிழ் மக்களுக்குமிடையே இருந்த நல்லுறவை, இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் இடையில் புகுந்து கெடுத்துள்ளது என்பதையும், இவ்வுண்மை அறியாத தமிழர்கள் பலர் அதற்குப் பலியாகியுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.
மலேசியத் தமிழர்களுக்காக இல.கணேசனும், இராம.கோபாலனும் கண்ணீர் வடித்தபோதே, நமக்குச் சந்தேகம் தட்டியது. ஆராய்ந்து பார்க்கையில், இப்படிப் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
தமிழர்களே கவனம்.....
ஆமை புகுந்து வீடு உருப்படுமோ, உருப்படாதோ நமக்குத் தெரியாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். புகுந்த நாடு உறுதியாய் உருப்படாது!

நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், சனவரி 2008. தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024. பேசி - 044-24732713