Friday, December 18, 2015

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி திமுக உண்ணாவிரதம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியை (டிசம்பர் 18) நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மனு அளித்தனர்.

டிசம்பர் 28 ஆம் தேதி அலங்காநல்லூரில் மதுரை திமுக சார்பில் எனது தலைமையில் மிகப் பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்  என்று திமுக பொருளாளர்  தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tuesday, December 15, 2015

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது மூடநம்பிக்கைதான்!

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடைபோடுவது மூட நம்பிக்கை என்றார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ண வெங்கட்ராமன். மைசூரு பல்கலைக் கழகத்தின் சார்பில் மைசூருவில் டிசம்பர் 13ல்  நடந்த நோபல் பரிசு நூற்றாண்டு தொடர்சொற்பொழிவு-4-இல் பங்கேற்று 'யாருக்கும் சொந்தமில்லா உலகம்: சான்றுகள் மற்றும் நவீன அறிவியல்' என்ற தலைப் பில் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் பேசினார்.


அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அய்ரோப்பா நாடுகள் முன்னேறியுள்ளதற்கு நவீன அறிவியல் பயன்பாடுதானே தவிர, அது விபத்தால் நேர்ந்ததல்ல. நவீன அறிவியல் நடைமுறைகளை பின்பற்றி அமெரிக்காவும், மேற்கத்திய அய்ரோப்பிய நாடுகளும் முன்னேறிக் கொண்டிருக்க, பிற நாடுகள் பின் தங்கிவிட்டன. மூடநம்பிக்கைகள், ஜோதிடம் போன்ற அடிப்படை ஆதாரங்கள் இல்லாத பல வழக்கங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுத்து வருகின்றன என்று கூறினார்.


ஜோதிடமும் ஹோமியோபதியும் மனரீதியான நம்பிக்கையால் செயல் படுகின்றன. ஜோதிடம், குத்துமதிப்பாக கூறப்படும் ஆலோசனைகளால் ஆனது. அவரவர் வீட்டை தூய்மையாகவும் வெளிச் சமாகவும் வைப்பதற்கு ஜோதிட ஆலோசனைகள் தேவையில்லை. இந்தியர்கள் மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட வேண்டும் அல்லது குறையவேண்டும். இந்தியர்கள் எதையும் ஆராய்ந்து நோக்கும் பகுத்தறிவாளர்களாக மாற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் விண்கலங்கள் விண்ணில் ஏவப்படுவதற்கு முந்தைய கடைசி நிமிடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் தெரிவித்தார்.


இந்தியாவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டப் போது, அது வெற்றிகர மாக விண்ணில் ஏவுவதற்காக அப்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்று கூறினார் .


மங்கள்யான் விண்கலத்தை ஏவுவதற்கு பொருத்தமான நாளாக செவ்வாய்க்கிழமையையும் தேர்ந்தெடுத்தனர். இது போன்ற நடவடிக்கைகள் மேற்கத்தியநாடுகளில் காணமுடியாதது. மக்களிடையே உயிரியல் சார்ந்த அடிப்படை புரிதல் இல்லை. ஆண் குழந்தையை ஈன்றெடுக்காததற்கு தாயை குறைசொல்லும் மூடநம்பிக்கை இந்தி யாவில் உள்ளது. இதை எப்படிஏற்றுக்கொள்ள முடியும்? என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் தெரிவித்தார்.


2009 ஆம் ஆண்டில் சூரியகிரகணம் ஏற்பட்ட போது அதனால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க கர்நாடக அரசு சார்பில் கோயில்களில் பூஜை நடத்த தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. விண்வெளி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ள கர்நாடகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது ஆச்சரியமளித்தது என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் கூறினார்.


ஒருபக்கம் அதிநவீன தொழில்நுட்பமும், மறுபக்கமும் மூடநம்பிக் கையும் இந்தியாவில் குவிந்துள்ளன. தவறான நம்பிக்கைகள், ஜோதிடம் போன்றவற்றின் எதிர் வினையால் தான் உண் மையான அறிவியல் மலர்ந்தது. மனிதர்களி டையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடர்கள் கருதியதன் விளைவால் கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகள் தொடங்கின. மாறிக்கொண்டே இருக்கும் அறிவியலைப் போல அல்லாமல் ஜோதிடம் வளர்ச்சியில்லாமல் உறைந்துபோயுள்ளது என்றார் விஞ்ஞானி ராமகிருஷ்ண வெங்கட்ராமன்.


மண்ணின் மைந்தர்களை நினைவுகூர்ந்த மாணவர்கள்

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகதில் எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 21.11.2015 அன்று காலை 11.15மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியினை பாடசாலை நிர்வாகி திரு ஆறுமுகம் சஞ்ஜீவன் ஏற்றிவைக்க பிரித்தானியக் கொடியினை செல்வன் கிரிஷாந்த் நகுலதாஸ் ஏற்றிவைத்தார். அதன்பின்பு   அகவணக்கத்துடன் மாவீரர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்களை நினைவுகூர்ந்து ஈகைச்சுடரினை வீரவேங்கை சாந்தன் அவர்களின் தங்கை திருமதி சுகுமாரன் ஏற்றிவைக்க மாவீரர் துயிலுமில்ல பாடல் இசைக்கப்பட்டது. 

எமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சகோதரர் அல்லது உறவினர்களில் எமது மண்ணுக்காக தம் உயிரை மாய்த்தவர்களின் பெற்றோர்களும் இச்சுடரை ஏற்றினார்கள்.  அடுத்து மாவிரரர் தொடர்பான தலைமை உரையினை எமது பாடசாலையின் தலைமை ஆசிரியர் திருமதி சசிகரன் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து மாவீரர் தொடர்பான நிகழ்ச்சிகளான கவிதை, பேச்சு, நடனம் மற்றும் நாடகம் போன்ற மாவிரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் எமது பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக விழ விழ எழுவோம் என்ற எழுச்சி பாடலுக்கு நடனமாடி அனைவரின் உள்ளத்தையும் தட்டி எழுப்பினார்கள் வளர்தமிழ் 4 மாணவர்கள்.  

உல்பா தலைவரை இந்தியாவிடம் ஒப்படைத்தது வங்கதேசம்

உல்பா இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர் அனுப் சேத்தியாவை, 20 ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசம் நவம்பர் 11 அன்று இந்தியாவிடம் ஒப்படைத்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு வந்த சோட்டா ராஜன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டான். இந்நிலையில் உல்பா அமைப்பின் முக்கிய தலைவர் கோலப் பருவா என்ற அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் வங்கதேசம் ஒப்படைத்தது. இவர் மீது கொலைகள், கடத்தல்கள், வங்கி கொள்ளைகள் உட்பட பல வழக்குகள் உள்ளது. கடந்த 91ம் ஆண்டில் அனுப் சேத்தியா அசாமில் கைது செய்யப்பட்டார். அப்போதைய அசாம் முதல்வர் ஹிதேஸ்வர் சைகியா, இவரை சிறையில் இருந்து விடுவித்தார். அதன்பின் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றார். இவரை ஒப்படைக்கக் கோரி இந்தியா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேண்டுகோள் விடுத்து வந்தது. ஆனால் வங்கதேசத்தில் அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த அரசுகள் இதை கண்டு கொள்ளாமல் இருந்தன. 

கடந்த 1997ம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சிக்காலத்தில் அனுப் சேத்தியா கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக வங்கதேசத்துக்குள் ஊடுருவியது மற்றும் வெளிநாட்டு பணம், ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை முடிந்ததும், அரசியல் தஞ்சம் கோரினார். அதனால் இவரை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது அரசியல் தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்பும், இந்தியாவிடம் அவரை ஒப்படைக்காமல் வங்கதேச அரசு இழுத்தடித்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் அரசியல் தஞ்சம் அளிக்கக் கோரி, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அனுப் சேத்தியா கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விஷயத்தில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் நேரடியாக தலையிட்டனர். இதையடுத்து அனுப் சேத்தியா நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதற்கிடையே, அசாம் முதல்வர் தருண் கோகோய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அனுப் சேத்தியா, தற்போது அரசுக்கும், உல்பா அமைப்புக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன். மத்திய அரசும் அனுப் சேத்தியாவை விடுவித்து, அமைதி நடவடிக்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

அனுப் சேட்டியா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை போனில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியா மேற்கொள்ளும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார். 

Monday, December 14, 2015

சுற்றுலா சென்ற போது விபத்து - 4 கல்லூரி மாணவர்கள் பலி.

பெங்களூரு கே.ஆர்.புறம் சிட்டி கல்லூரி மற்றும் சைதன்யா கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்கள் (13-12-2015) கல்லூரியை புறக்கணித்து சொகுசு காரில் நந்தி பெட்டா என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றனர். நந்தி பெட்டா செல்லும் வழியில் தேவனஹள்ளி என்ற இடத்தில் அவர்கள் வாகனம் மிக வேகமாக சென்றுகொண்டிருந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிர் இழந்தனர். மேலும் 6 பேரை வைட் பீல்ட் பகுதியில் உள்ள சத்ய சாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது அங்கு சிகிச்சை பயனளிக்காமல் இருவர் உயிரிழந்தனர். மேலும் தற்பொழுது நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. 

விபத்தில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான கிரண் குமார் என்ற மாணவன் 13-12-2015 அன்று காலையில் கல்லூரிக்கு வரும் போது தனது 3 சக மாணவர்களை அழைத்துக்கொண்டு காரில் கல்லூரிக்கு வந்துள்ளான். கே.ஆர். புறம் சிட்டி கல்லூரியில் மாணவர்கள் காரில் வர தடைவிதிக்க பட்டுள்ளது. அதனால் காருடன் கல்லூரிக்குள் வந்த மாணவர்களை காவலாளி தடுத்து நிறுத்தி காரை வெளியே விட்டுவிட்டு வர வலியுறுத்தியுள்ளார்.
காருடன் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கபட்டதால் அந்த நான்கு பேரும் சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். இதனிடையே அவர்கள் சநந்தி பெட்டா செல்லும் வழியில் சைதன்யா கல்லூரிக்கு சென்று அங்கு வகுப்பில் இருந்த நான்கு மாணவர்களை அழைத்துக்கொண்டு செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் தற்பொழுது நான்கு மாணவர்கள் உயிர் இழந்துள்ளனர்.

Friday, December 11, 2015

வண்ண தாள்களில் அழகிய மோட்டார் சைக்கிள்

கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் சாதாரண விவசாயியான 32 வயதுடைய சந்திக அருண சாந்த என்ற இளைஞர் மக்களை வியக்கவைக்கும் அளவில் பத்தாயிரம் ஏ4 வர்ண தாள்களை கொண்டு அழகான மோட்டார் சைக்கிள் ஒன்றை உருவமைத்துள்ளார்.

இவர் செய்துள்ள கைப்பணி வேலைகளை தினமும் இப்பகுதி மக்கள் பார்வையிடுகின்றனர். அத்துடன் இவற்றை விலை கொடுத்தும் கொள்வனவு செய்கின்றனர்.

நவீன உலகில் நாமும் ஆக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினை கொண்டு இவ்வாறான வேலைப்பாடுகளை செய்து வருவதாக சந்திக அருண சாந்த கூறினார். 

மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி அபார வெற்றி

நான்கு நாட்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்த மியான்மர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி யுள்ளது. அதிக இடங் களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் கீழ்சபையில் அக்கட்சிக்கு அளித்துள்ள 21 இடங்களையும் சேர்த்து மொத்தம் 348 இடங்களில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சி புதிய ஆட்சியை அமைக்கின்றது.

சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும்கட்சியான ஒற்றுமை கட்சிக்கும், ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

440 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 330 இடங்களுக்கும், 224 இடங்கள் கொண்ட மேல்சபையில் 168 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. அந்நாட்டின் அரசியல மைப்பு சட்டத்தின்படி, மீதமுள்ள 25 சதவீத இடங்களை ராணுவமே நிரப்பிக்கொள்ளும்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்த மூன்று கோடி மக்களில் 80 சதவீதம் பேர் தங்களது ஜனநாயகக் கடமையை பதிவு செய்தனர். வாக்குப் பதிவு முடிந்த ஞாயிற்றுக்கிழமை மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. பல்வேறு காரணங்களால் முழுமையான தேர்தல் முடிவு அறிவிப்பதில் கடந்த நான்கு நாட்களாக தாமதம் ஏற்பட்டது. ஆங் சான் சூகி தான் போட்டியிட்ட காஹ்மூ தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. முன்பு அவரிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த ராணுவ ஆட்சியாளர்கள் தற்போது புதிய ஆட்சியை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 348 தொகுதிகளில் ஆங் சான் சூகி தலைமை யிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்ற தாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் 13.11.2015 முறைப்படி அறிவித்துள்ளது. அந்த கட்சி வெற்றிபெற்ற இடங்களின் அடிப்படை யில் நாடாளுமன்ற கீழ் சபையில் 21 இடங்களை தேர்தல் ஆணையம் இக் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. எனவே, முழு மெஜாரிட்டி யுடன் ஆங் சான் சூகி-யின் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆங் சான் சூகி அதிபராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மியான்மரில் வெளி நாட்டவரை மணந்தவர்கள் அதிபர் பதவி வகிக்க முடியாது என்ற ராணுவ ஆட்சியின்போது தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இதனால் ஆங்கிலேயரான மைக்கேல் ஆரிசை மணந்த ஆங் சான் சூகியால் அதிபர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி அவரிடம் கேட்ட போது, ஆளும் கட்சி தலைவர் என்ற முறையில் அரசின் முடிவு களை தானே எடுக்க இருப்பதாகவும், அதிபருக் கும் மேலான தலைமை பொறுப்பை வகிக்க இருப்பதாகவும் ஆங் சான் சூகி சமீபத்தில் தெரிவித்தி ருந்தது நினைவிருக்கலாம்.

ராணுவத்தின் சார்பில் போட்டியிட்ட மேம்பாட்டு கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி கண்டாலும் நாட்டின் அதிகாரம் முழுவதும் ராணுவ தளபதி மின் ஆங் ஹெலாங், அதிபர் தெய்ன்சீன் ஆகியோரிடம்தான் இன்னும் இருக்கிறது. எனவே, அமையவிருக்கும் புதிய அரசாங்கத்துக்கு அதிகாரங்களை மாற்றுவது தொடர்பாக ஆங் சான் சூகி அதிபர் தெய்ன் சீனை நேற்று சந்தித்து பேசினார். 

புதிய அரசாங்கம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி

கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் 19 எம்.பி.க்கள் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் பியேர் ட்ரூடோவின் மகனும், லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ புதிய பிரதமராகப் பதவியேற்கிறார். தேர்தலில், மொத்தமுள்ள 338 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி 184 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, பிற கட்சிகளின் ஆதரவு இல்லாமலே அவர் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சி 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரு கட்சிகளில் லிபரல் கட்சிக்கு 39.5 சதவீத வாக்குகளும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைத்தன. புதிய ஜனநாயகக் கட்சி 19.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. 

இதையடுத்து, கனடா வரலாற்றில் மிக நீண்ட காலமாக 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஸ்டீஃபன் ஹார்ப்பரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றத் தேர்தலில் லிபரல் கட்சி மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.

அந்தத் தேர்தலில் வெறும் 34 இடங்களை மட்டுமே கைப்பற்றிய அக்கட்சி, வலிமையற்ற புதிய ஜனநாயகக் கட்சிக்கும் அடுத்தபடியாக 3-ஆவது இடத்தைக் கைப்பற்றியது. இந்த நிலையில், அந்தக் கட்சிக்கு ஜஸ்டின் ட்ரூடோ புத்துயிர் அளித்து, இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவுக்கு சாதகமான நிலைப்பாடுகளை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 பேர் வெற்றியடைந்துள்ளனர்.

தற்போது ஆட்சியமைக்கவிருக்கும் லிபரல் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரும், கன்சர்வேடிவ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வேட்பாளரும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கனடா மக்கள் தொகையில் 3 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் கனடாவில் வசிக்கும் 19 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 18 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இது கடந்த தேர்தலை காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஏனெனில் கடந்த தேர்தலில் 8 இந்தியர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். 

இந்நிலையில், லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் திருதியோ கனடாவின் 23-ஆவது பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அக்கட்சியை சேர்ந்த 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அதில், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்தோ கனடியரான ஹர்ஜித் சஜ்ஜன் என்ற சீக்கியர் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார். 
இந்தியாவில் பிறந்த சஜ்ஜன் 5 வயதாக இருக்கும் போது தனது குடும்பத்துடன் கனடா சென்று அங்கு வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகையில் 456,090 உள்ள சீக்கியர்களில் 18 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 138,675 உள்ள தமிழர்களின் பிரதிநிதியாக லிபரல் கட்சியை சேர்ந்த கேரி அனந்தசங்கரி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏன் இந்த நிலை? கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இலங்கை தமிழரான ராதிகா சிற்சபேசன் இந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

செந்தூரன் உயிர் அர்ப்பணிப்பு

கல்வியிலும், பழக்க வழக்கங்களிலும் ஆசிரியர்களே போற்றும் நல்ல மாணவனாக திகழ்ந்த ராஜேஸ்வரன் செந்தூரன் அவர்களின் அகால மரணச் செய்தி எம்மை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அமைதியான குணாதிசயமுடைய செந்தூரன் அவர்கள், திடீரென ஒரு அரசியல் கோரிக்கையை முன்வைத்து தற்கொலை செய்திருப்பதை எண்ணிப்பார்க்கும்போது, பெருமையாக தமிழ் மக்கள் கருதுவார்கள்.

ஆனால் ஒரு கோரிக்கைக்காக உயிரை பலியிடும் முடிவானது அவரது பெற்றோருக்கும், கல்விச் சமூகத்திற்கும், நண்பர்களுக்கும், மக்களை நேசிக்கும் எமக்கும் பேரிழப்பையே ஏற்படுத்தியுள்ளது.


செந்தூரனுக்காக கவலை கொள்ளும் அதேவேளை அதை ஒரு முன்னுதாரணமாக எதிர்காலத்தில் எவரும் பின்பற்றி, எமது இனம் இழந்த இழப்புக்களை தொடர்கதையாக்கிவிடக் கூடாது. தமிழர்களாகிய நாம் இழந்த உயிர்கள் போதும். இனியும் நாம் உயிர்களை இழக்கத் தயாரில்லை. எமது உரிமையையும், விடுதலையையும், நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் வென்றெடுக்க உறுதியெடுத்து செந்தூரனுக்கு இறுதி மரியாதை செய்வோம்.

Thursday, December 10, 2015

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்

கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது.

ஸ்ரீநிவாஸ் - தமிழர்கள் அரசியல் அடிமைத்தனத்தை விட்டு தமிழால் முன்னுக்கு வரவேண்டும் என்ப தையே மூச்சாக கொண்டிருந்தவர். வி.எஸ்.என்.எல். நிர்வாகத்துடன் இணைந்து இணையம் வழியாக வும் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட வைத்ததில் பெரும் பங்காற்றியவர். இணையப் பயன்பாடு பணக்காரர்கள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமான சொத்து என்பதை தகர்த்து சாமானியர்களும் அதைப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மென்பொருட் களை அறிமுகம் செய்தவர்.

`தெய்வமுரசு’ ஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர்,  எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்துடன் இணைந்து சைவத் தமிழ் பட்டயப் படிப்பை நடத்தியவர். ஸ்ரீநிவாஸ் இப்போது உயிரோடு  இல்லை என்ற செய்தி அவரைச் சார்ந்தவர்களுக்கே கூட தெரியாது. ஆர்ப்பரித்து ஓடிய அடையாற்று வெள்ளம் அவரையும் அவரது மனைவி சங்கராந்தியையும் இணை பிரிக்காமல் இழுத்துச் சென்றுவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இருவரது உடல்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

ஈக்காட்டுத்தாங்கல் மாஞ் சோலை தெருவில் ஸ்ரீநிவாஸ் வீடு. பக்கத்து தெருவில் அவரது தம்பி கந்தசாமியின் வீடு. அடையாற் றில் வெள்ளம் வந்து 
கொண்டிருந் ததால் தம்பியின் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ என்று செவ்வாய்க்கிழமை இரவு முழுக்கத் தூங்காமல் உழன்று கொண்டே இருந்திருக்கிறார் ஸ்ரீநிவாஸ். புதன்கிழமை பொழுது விடிந்ததுமே அலைபேசியில் தம்பியைத் தொடர்புகொண்டவர், அவரை தனது தெரு 
முனைக்கு வரும்படி சொல்லியிருக்கிறார்.

அப்படிச் சொல்லிவிட்டு தனது வீட்டைவிட்டு இறங்கி தெருவில் இறங்கி 
நடந்தவரை பேயென பாய்ந்து வந்த வெள்ளம் அதன் போக்கிலேயே இழுத்துச் 
சென்று விட்டது. இதைப் பார்த்துக் கதறித் துடித்த சங்கராந்தியையும் விட்டு 
வைக்கவில்லை அடையாற்று வெள்ளம்.


Monday, December 07, 2015

சவுதியில் கை வெட்டப்பட்ட கஸ்தூரி சென்னை திரும்பினார்

சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்குச் சென்று, உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட வேலூரைச் சேர்ந்த கஸ்தூரி தாயகம் திரும்பினார். வேலூர் மாவட்டம் மூங்கிலேறி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் சவுதியில் வீட்டு வேலைக்கு சென்றிருந்தார். ரியாத் நகரில் பணிபுரிந்த அவர், அங்கு வீட்டு உரிமையாளரின் சித்ரவதைக்கு உள்ளானதுடன், அவரது வலது கையும் துண்டிக்கப்பட்டது. 

மேலும், இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டது. இந்நிலையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டின் பேரில், விமானம் மூலம் தாயகம் திரும்பினார். அவரை, சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். தமிழக அரசு அதிகாரிகள் விமான நிலையத்திற்குச் சென்று கஸ்தூரியை வரவேற்று, தேவையான உயர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

கஸ்தூரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிதி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து பெறப்படும் மாத வட்டியான 8,330 ரூபாய் கஸ்தூரிக்கு மாதந்தோறும் அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல் திருநங்கை எஸ்ஐ பிரித்திகா யாஷினி

தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா. மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம். 

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார். 

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு நவம்பர் 5-ம் தேதிவிசாரணைக்கு வந்தது. 

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார். எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம்

ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அந்த பதவியை பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் வகிப்பார் என்று கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) தலைவராக என்.சீனிவாசன் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்டார். அவரின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங், பெட்டிங்கில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய(பிசிசிஐ) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை உச்ச நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அதன் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியும் பறிபோயுள்ளது. 
அவரை அந்த பதவியில் இருந்து நீக்கும் முடிவு இன்று மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதையடுத்து சீனிவாசனை ஐசிசி தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்தது. வரும் ஜூன் மாதம் வரை ஐசிசி தலைவர் பதவியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சஷாங்க் மனோகர் நீடிப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடத்தும் இடங்களை தேர்வு செய்வதில் சீனிவாசனுக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய மூத்த தலைவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இந்த முடிவு என்று தெரிகிறது.