Tuesday, December 15, 2015

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது மூடநம்பிக்கைதான்!

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடைபோடுவது மூட நம்பிக்கை என்றார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ண வெங்கட்ராமன். மைசூரு பல்கலைக் கழகத்தின் சார்பில் மைசூருவில் டிசம்பர் 13ல்  நடந்த நோபல் பரிசு நூற்றாண்டு தொடர்சொற்பொழிவு-4-இல் பங்கேற்று 'யாருக்கும் சொந்தமில்லா உலகம்: சான்றுகள் மற்றும் நவீன அறிவியல்' என்ற தலைப் பில் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் பேசினார்.


அமெரிக்கா மற்றும் மேற்கத்திய அய்ரோப்பா நாடுகள் முன்னேறியுள்ளதற்கு நவீன அறிவியல் பயன்பாடுதானே தவிர, அது விபத்தால் நேர்ந்ததல்ல. நவீன அறிவியல் நடைமுறைகளை பின்பற்றி அமெரிக்காவும், மேற்கத்திய அய்ரோப்பிய நாடுகளும் முன்னேறிக் கொண்டிருக்க, பிற நாடுகள் பின் தங்கிவிட்டன. மூடநம்பிக்கைகள், ஜோதிடம் போன்ற அடிப்படை ஆதாரங்கள் இல்லாத பல வழக்கங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுத்து வருகின்றன என்று கூறினார்.


ஜோதிடமும் ஹோமியோபதியும் மனரீதியான நம்பிக்கையால் செயல் படுகின்றன. ஜோதிடம், குத்துமதிப்பாக கூறப்படும் ஆலோசனைகளால் ஆனது. அவரவர் வீட்டை தூய்மையாகவும் வெளிச் சமாகவும் வைப்பதற்கு ஜோதிட ஆலோசனைகள் தேவையில்லை. இந்தியர்கள் மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட வேண்டும் அல்லது குறையவேண்டும். இந்தியர்கள் எதையும் ஆராய்ந்து நோக்கும் பகுத்தறிவாளர்களாக மாற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் விண்கலங்கள் விண்ணில் ஏவப்படுவதற்கு முந்தைய கடைசி நிமிடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் தெரிவித்தார்.


இந்தியாவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டப் போது, அது வெற்றிகர மாக விண்ணில் ஏவுவதற்காக அப்போதைய இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்று கூறினார் .


மங்கள்யான் விண்கலத்தை ஏவுவதற்கு பொருத்தமான நாளாக செவ்வாய்க்கிழமையையும் தேர்ந்தெடுத்தனர். இது போன்ற நடவடிக்கைகள் மேற்கத்தியநாடுகளில் காணமுடியாதது. மக்களிடையே உயிரியல் சார்ந்த அடிப்படை புரிதல் இல்லை. ஆண் குழந்தையை ஈன்றெடுக்காததற்கு தாயை குறைசொல்லும் மூடநம்பிக்கை இந்தி யாவில் உள்ளது. இதை எப்படிஏற்றுக்கொள்ள முடியும்? என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் தெரிவித்தார்.


2009 ஆம் ஆண்டில் சூரியகிரகணம் ஏற்பட்ட போது அதனால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்க கர்நாடக அரசு சார்பில் கோயில்களில் பூஜை நடத்த தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. விண்வெளி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ள கர்நாடகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது ஆச்சரியமளித்தது என்று ராமகிருஷ்ண வெங்கட்ராமன் கூறினார்.


ஒருபக்கம் அதிநவீன தொழில்நுட்பமும், மறுபக்கமும் மூடநம்பிக் கையும் இந்தியாவில் குவிந்துள்ளன. தவறான நம்பிக்கைகள், ஜோதிடம் போன்றவற்றின் எதிர் வினையால் தான் உண் மையான அறிவியல் மலர்ந்தது. மனிதர்களி டையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடர்கள் கருதியதன் விளைவால் கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகள் தொடங்கின. மாறிக்கொண்டே இருக்கும் அறிவியலைப் போல அல்லாமல் ஜோதிடம் வளர்ச்சியில்லாமல் உறைந்துபோயுள்ளது என்றார் விஞ்ஞானி ராமகிருஷ்ண வெங்கட்ராமன்.


No comments: