சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்குச் சென்று, உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட வேலூரைச் சேர்ந்த கஸ்தூரி தாயகம் திரும்பினார். வேலூர் மாவட்டம் மூங்கிலேறி கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் சவுதியில் வீட்டு வேலைக்கு சென்றிருந்தார். ரியாத் நகரில் பணிபுரிந்த அவர், அங்கு வீட்டு உரிமையாளரின் சித்ரவதைக்கு உள்ளானதுடன், அவரது வலது கையும் துண்டிக்கப்பட்டது.
மேலும், இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டது. இந்நிலையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டின் பேரில், விமானம் மூலம் தாயகம் திரும்பினார். அவரை, சென்னை விமான நிலையத்தில் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். தமிழக அரசு அதிகாரிகள் விமான நிலையத்திற்குச் சென்று கஸ்தூரியை வரவேற்று, தேவையான உயர் மருத்துவ சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
கஸ்தூரியின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிதி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து பெறப்படும் மாத வட்டியான 8,330 ரூபாய் கஸ்தூரிக்கு மாதந்தோறும் அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment