Monday, December 07, 2015

ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கம்

ஐசிசி தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அந்த பதவியை பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் வகிப்பார் என்று கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) தலைவராக என்.சீனிவாசன் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்டார். அவரின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங், பெட்டிங்கில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய(பிசிசிஐ) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை உச்ச நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அதன் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியும் பறிபோயுள்ளது. 
அவரை அந்த பதவியில் இருந்து நீக்கும் முடிவு இன்று மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வருடாந்திர பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதையடுத்து சீனிவாசனை ஐசிசி தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்தது. வரும் ஜூன் மாதம் வரை ஐசிசி தலைவர் பதவியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சஷாங்க் மனோகர் நீடிப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடத்தும் இடங்களை தேர்வு செய்வதில் சீனிவாசனுக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய மூத்த தலைவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இந்த முடிவு என்று தெரிகிறது. 

No comments: