Friday, December 11, 2015

கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி

கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் 19 எம்.பி.க்கள் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் பியேர் ட்ரூடோவின் மகனும், லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ புதிய பிரதமராகப் பதவியேற்கிறார். தேர்தலில், மொத்தமுள்ள 338 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி 184 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, பிற கட்சிகளின் ஆதரவு இல்லாமலே அவர் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சி 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரு கட்சிகளில் லிபரல் கட்சிக்கு 39.5 சதவீத வாக்குகளும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைத்தன. புதிய ஜனநாயகக் கட்சி 19.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. 

இதையடுத்து, கனடா வரலாற்றில் மிக நீண்ட காலமாக 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஸ்டீஃபன் ஹார்ப்பரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றத் தேர்தலில் லிபரல் கட்சி மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.

அந்தத் தேர்தலில் வெறும் 34 இடங்களை மட்டுமே கைப்பற்றிய அக்கட்சி, வலிமையற்ற புதிய ஜனநாயகக் கட்சிக்கும் அடுத்தபடியாக 3-ஆவது இடத்தைக் கைப்பற்றியது. இந்த நிலையில், அந்தக் கட்சிக்கு ஜஸ்டின் ட்ரூடோ புத்துயிர் அளித்து, இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவுக்கு சாதகமான நிலைப்பாடுகளை மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 பேர் வெற்றியடைந்துள்ளனர்.

தற்போது ஆட்சியமைக்கவிருக்கும் லிபரல் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரும், கன்சர்வேடிவ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வேட்பாளரும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கனடா மக்கள் தொகையில் 3 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் கனடாவில் வசிக்கும் 19 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 18 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இது கடந்த தேர்தலை காட்டிலும் மிகவும் அதிகமாகும். ஏனெனில் கடந்த தேர்தலில் 8 இந்தியர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். 

இந்நிலையில், லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் திருதியோ கனடாவின் 23-ஆவது பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அக்கட்சியை சேர்ந்த 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அதில், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்தோ கனடியரான ஹர்ஜித் சஜ்ஜன் என்ற சீக்கியர் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார். 
இந்தியாவில் பிறந்த சஜ்ஜன் 5 வயதாக இருக்கும் போது தனது குடும்பத்துடன் கனடா சென்று அங்கு வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகையில் 456,090 உள்ள சீக்கியர்களில் 18 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 138,675 உள்ள தமிழர்களின் பிரதிநிதியாக லிபரல் கட்சியை சேர்ந்த கேரி அனந்தசங்கரி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏன் இந்த நிலை? கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இலங்கை தமிழரான ராதிகா சிற்சபேசன் இந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

No comments: