உல்பா இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர் அனுப் சேத்தியாவை, 20 ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசம் நவம்பர் 11 அன்று இந்தியாவிடம் ஒப்படைத்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு வந்த சோட்டா ராஜன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டான். இந்நிலையில் உல்பா அமைப்பின் முக்கிய தலைவர் கோலப் பருவா என்ற அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் வங்கதேசம் ஒப்படைத்தது. இவர் மீது கொலைகள், கடத்தல்கள், வங்கி கொள்ளைகள் உட்பட பல வழக்குகள் உள்ளது. கடந்த 91ம் ஆண்டில் அனுப் சேத்தியா அசாமில் கைது செய்யப்பட்டார். அப்போதைய அசாம் முதல்வர் ஹிதேஸ்வர் சைகியா, இவரை சிறையில் இருந்து விடுவித்தார். அதன்பின் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றார். இவரை ஒப்படைக்கக் கோரி இந்தியா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேண்டுகோள் விடுத்து வந்தது. ஆனால் வங்கதேசத்தில் அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த அரசுகள் இதை கண்டு கொள்ளாமல் இருந்தன.
கடந்த 1997ம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சிக்காலத்தில் அனுப் சேத்தியா கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக வங்கதேசத்துக்குள் ஊடுருவியது மற்றும் வெளிநாட்டு பணம், ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை முடிந்ததும், அரசியல் தஞ்சம் கோரினார். அதனால் இவரை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது அரசியல் தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்பும், இந்தியாவிடம் அவரை ஒப்படைக்காமல் வங்கதேச அரசு இழுத்தடித்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் அரசியல் தஞ்சம் அளிக்கக் கோரி, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அனுப் சேத்தியா கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், அனுப் சேத்தியாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விஷயத்தில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் நேரடியாக தலையிட்டனர். இதையடுத்து அனுப் சேத்தியா நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையே, அசாம் முதல்வர் தருண் கோகோய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அனுப் சேத்தியா, தற்போது அரசுக்கும், உல்பா அமைப்புக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன். மத்திய அரசும் அனுப் சேத்தியாவை விடுவித்து, அமைதி நடவடிக்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
அனுப் சேட்டியா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை போனில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியா மேற்கொள்ளும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment