| இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையை கண்டித்து தென்னாபிரிக்காவில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். |
பிரிட்டோரியா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக அங்கு வாழும் தமிழர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இக்கண்டன கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தினர். இந்நிகழ்வில் பல அமைப்புக்கள் சார்பாக அவற்றின் பொறுப்பளர்களும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
சிறிலங்கா இனவாத அரசு மேற்கொள்ளும் இனவெறிப் போரில் அப்பாவித் தமிழ் மக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்படுவது தொடர்பில் தென்னாபிரிக்க அரசாங்கம் அமைதிப் போக்கினைக் கையாள்வதைக் கண்டித்தும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மௌனப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றமையைக் கண்டித்துமே இக்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. 'ஐக்கிய நாடுகள் சபையே உனது மௌனத்தைக் கலை" 'ஐநா உடனடியாகச் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவளி" போன்ற முழக்கங்களை கவனயீர்ப்பு நிகழ்வில் பங்கேற்றோர் எழுப்பினர்.
நிகழ்வின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்திய அதிகாரி டேவிட் ஜோன்சனிடம் மனு கையளிக்கப்பட்டது. இரண்டாவது மனுவினை தென்னாபிரிக்க அரசாங்கத்தின் சார்பாக, வெளிவிவகாரத்துறையின் பிரதி இயக்குநர் சூஸ் இம்ரில்வாவும் வெளிவிகாரத்துறையின் தென் கிழக்காசியப் பிராந்தியத்திற்கான இணை இயக்குனர் காரி சிமித்தும் பெற்றுக்கொண்டனர். அங்கு கையளிக்கப்பட்ட மனுவில் கீழ் குறிப்பிட்ட நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. - ஈழத் தமிழர்களின் தாயகத்தில் றுவாண்டா போன்ற நிலைமையை உருவாகாமல் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உடனடியான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - உடனடியான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் - பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பிவைக்க அணுசரணை வழங்க வேண்டும் - சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள கண்மூடித்தனமான இனப்படுகொலையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பவேண்டும் மனிதநேயப் பணியாளர்கள் உடடினடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, தங்குமிட வசதி உணவு வசதி இல்லாமல் அல்லலுறும் மக்களுக்கு உதவி மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்
|
Saturday, October 25, 2008
தென்னாபிரிக்காவில் ஈழத்தமிழர் ஆதரவு பேரணி
கொட்டும் மழையில் லட்சக்கணக்கில் திரண்ட தமிழக உறவுகளின் "மனித சங்கிலி அணிவகுப்பு"
| சிங்களப் பேரினவாதத்தால் இலங்கைத் தீவில் தமிழ் உறவுகள் இனப் படுகொலைக்குள்ளாக்கப்படுவதைக் கண்டித்து தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான தமிழக உறவுகள் மனித சங்கிலியாக அணிதிரண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். |
வடசென்னை பகுதியில் தமிழ்நாடு நிதியமைச்சரும் தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தொடங்கிய இந்த மனித சங்கிலி அணிவகுப்பு முழுமையாக சென்னை நகரைக் கடந்து புறநகர் சென்னைப் பகுதிகளையும் கடந்து செங்கல்பட்டு மாவட்டத்தைத் தொட்டு நின்றது. மனித சங்கிலி அணிவகுப்பு தொடங்கிய நேரத்தில் கனமழை கொட்டியது.
இயற்கையும் வடித்த கண்ணீரை தம் தேகங்களில் தாங்கிய தமிழ்நாட்டு உறவுகள்- 'இந்திய அரசே! ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடு"! 'ஈழத் தமிழர்களைக் காப்பாற்று" என்பது உள்ளிட்ட முழக்கங்களையும் ஈழத் தமிழர்கள் மீதான சிங்களத்தின் இனப்படுகொலைகளைச் சித்தரிக்கும் வகையிலான புகைப்படங்கள்- பதாகைகளை ஏந்தியும் கொட்டும் மழையில் உணர்வெழுச்சியாகத் திரண்டிருந்தனர்.
தமிழ்நாடு முதல்வர் கலைஞரின் குடும்பத்தினரும் இந்த உணர்வெழுச்சியான அணிவகுப்பில் பங்கேற்றிருந்தனர். பாட்டாளி மக்கள் கட்சி- இடதுசாரிக் கட்சிகள்- விடுதலைச் சிறுத்தைகள்- திராவிடர் கழகம்- தமிழ்த் திரை உலகத்தினர் மற்றும் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள்- பொதுமக்கள் இந்த அணிவகுப்பில் திரண்டனர். நன்றி / புதினம் மனித சங்கிலி அணிவகுப்பை முதுமையும் பாராது கொட்டும் மழையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி பார்வையிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டே சென்றார்.
|
Friday, October 24, 2008
இத்தாலியில் ஈழத்தமிழர் ஆதரவு பேரணி
இத்தாலியில் உள்ள பலெர்மோவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு பேரணியினை இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.
பலெர்மோ மத்திய
பகுதியில் அமைந்துள்ள பியாட்சா பொலித்தியாமத்தில் இருந்து முற்பகல் 10:30 நிமிடத்துக்கு தொடங்கிய பேரணி, இத்தாலி உள்நாட்டு அமைச்சினை நோக்கி சென்றது.தமிழர் தாயகம் மீதான சிறிலங்கா அரசின் இனவாதப்போரை நிறுத்துமாறும்-
இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்குமாறும்-
தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பணிகளை தடையில்லாது மேற்கொள்ள அனுமதியளிக்குமாறும்-
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறும்
கோரிக்கை விடுத்து இந்த பேரணி நடைபெற்றது.

சிறிலங்கா அரசுக்கு எதிரான கண்டனக்குரல்களை எழுப்பியும் தங்கள் உணர்வலைகளை வெளிப்படுத்தியும் மக்கள் உணர்வுபூர்வமாக பேரணியில் பங்கேற்றனர்.
நிகழ்வின் இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை இத்தாலி உள்நாட்டு அமைச்சின் அலுவலகத்தில் கையளித்தனர்.
நன்றி / புதினம்
ஈழப்போர்களத்தில் செப்ரெம்பர் மாதம் வரை

தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை மொத்தம் 1,099 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 7 ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இத்தகவலை பாதுகாப்பு பக்கம் என்ற படை ஆய்வு ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
செப்ரெம்பர் மாதம் வரையான 9 மாதங்களில் 1,099 படையினர் போரில் கொல்லப்பட்டனர். 7,000 படையினர் காயமடைந்துள்ளனர்.
செப்ரெம்பரில் 200 படையினர் கொல்லப்பட்டனர். 997 படையினர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா படைத்தளபதிகளைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகள் தம்மிடம் அடைக்கலமடைவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், விடுதலைப் புலிகள் தமது போராளிகள் கொமாண்டோக்களைக் கொண்டு மிக மோசமான தாக்குதலைத்தான் நடத்துவார்கள். அதில் அவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொல்வார்கள் என்று எதிர்பார்த்தனர்.
காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் இரு கப்பல்கள் சேதமாகியுள்ளன.
இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் முதனிலை தளபதி நிலையினர் கரும்புலிகளாக செயற்பட்டனர்.
அக்கராயனில் 21 ஆம் நாள் படையினர் நடத்திய தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் 33 பேர் கொல்லப்பட்டனர்.
இது விடுதலைப் புலிகள் காட்டுகின்ற கடுமையான பலமான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றது.
இப்போது பெய்கின்ற கடும் மழை படையினரின் ஊர்திகளின் பயணங்களை பலவீனப்படுத்தியுள்ளதுடன் படையினரின் வழங்கலைப் பாதித்துள்ளது.
கிளிநொச்சிக்கு சில கிலோ மீற்றர்கள் தொலைவில் சிறிலங்கா படையினர் சிலர் நிற்கின்றனர். ஆனால் பின்னாள் 10 முதல் 15 கிலோமீற்றர்கள் தொலைவில் படையினர் மழை நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர் என பாதுகாப்பு பக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்துலக படைத்துறை ஆய்வு ஊடகம் தெரிவித்துள்ளது.
Saturday, October 18, 2008
ஜெயலலிதாவை வரலாறு மன்னிக்காது! சுப.வீரபாண்டியன் கண்டனம்
ஜெயலலிதாவை வரலாறு மன்னிக்காது!
சுப.வீரபாண்டியன் கண்டனம்
தமிழீழ மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் விடுதலைப் போராட்டக் கோரிக்கையைப் புரிந்து ஏற்றுக் கொள்வதாகவும் சில நாள்களுக்கு முன்பு அறிக்கை விடுத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இப்போது அதற்கு நேர் எதிராகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தன் ஆட்சியில் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்களை விரட்டி விரட்டி வேட்டையாடிப் பொடாச் சிறையில் தள்ளிய அவர், திடீரென்று தமிழீழ மக்களுக்காகப் பொய் ஒப்பாரி வைத்து ஓலமிட்ட போதே நமக்கு ஐயம் எழுந்தது. இப்போது மீண்டும் தன் கோர முகத்தை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.
"இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப்புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம், கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்" என்கிறார் ஜெயலலிதா. போரில் செத்து மடியும் ஆயிரக்கணக்கான மக்களும், அகதிகளாய்த் தெருவில் நிற்கும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும் அவர் கண்ணில் படவே இல்லை. தமிழினத்தில் பிறந்திருந்தால் அந்தக் கொடுந்துயரம் அவர் நெஞ்சைச் சுட்டிருக்கும். இப்போது அவரிடம் சிங்கள இனவெறிப் பாசமே மேலோங்கி நிற்கிறது.
சில நாட்களுக்குள் இப்படி ஒரு முரண்பட்ட அறிக்கையை அவர் ஏன் வெளியிட நேர்ந்தது? அக்டோபர் 6ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற தி.மு.கழகக் கூட்டத்திற்குப் பிறகே, தமிழகமெங்கும் ஒரு புத்தெழுச்சி புறப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தத் தலைவன் குரல் கேட்டுத்தான் தமிழகம் எழுந்தது. அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டம் நடந்த அக்டோபர் 14க்குப் பிறகு, அந்த எழுச்சி இன்னும் பன்மடங்காகப் பெருகியது. உலகத் தமிழர்களெல்லாம் ஒவ்வொரு நாளும் தலைவர் கலைஞருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். இவை அனைத்தையும் கண்டு பொறுக்க முடியாத ஆற்றாமைதான் இப்படி அறிக்கையாய் வந்து விழுகிறது.
(சுப.வீரபாண்டியன்)
Wednesday, October 15, 2008
தமிழக தீர்மானம்- சுப.வீரபாண்டியன்
| தமிழக தீர்மானம்- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கது: சுப.வீரபாண்டியன் |
தமிழ்நாட்டு அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமானது- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய தீர்மானம் என்று அக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். |
தமிழக முதலமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை கூட்டிய அனைத்து கட்சிக்கூட்டத்தில் ஒரு அதிச்சித் தரத்தக்க- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரத்தக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டது. இன்னும் இரு வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படவில்லையென்றால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்னும் தீர்மானம் வரலாற்றுச் சிறப்புடையதாக அமைந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விஜய டி ராஜேந்தர், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வராதார்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். அவர்கள் தமிழர்களே இல்லை என்றார். ஈழ மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்றார். உடனே இடைமறித்த முதலமைச்சர் கலைஞர், அப்படிச் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு மிக அரிய விளக்கம் ஒன்றையும் கொடுத்தார். அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிர்ப்பாக இங்கு வராமல் இருக்கிறார்கள் என்று கருதவேண்டாம். எனக்கு எதிராகத்தான் வராமல் இருக்கிறார்கள். மற்றபடி அவர்கள் வெளியில் இருந்தாலும் நம்மைப் போலவே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் எதிராக இருப்பதைப் போலக்காட்டுவது சிங்களவர்களுக்குத்தான் நன்மை பயக்கும் என்று விளக்கம் அளித்தபோது அவருடைய பெருந்தன்மையையும் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து அவர் கொண்டுள்ள அக்கறையையும் அறிய முடிந்தது. எனவே முதல்வர் கலைஞர் ஆளும் காலத்திலேயெ தமிழீழம் அங்கு மலரும் நாளும் வந்து சேரும் என்ற நம்பிக்கை இப்போது பலருக்கும் ஆழமாய் வேரூன்றி இருக்கிறது என்றார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். நன்றி புதினம் |
Tuesday, October 14, 2008
கனடாவில் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டம்
| கனடாவில் மூன்றாம் நாளாக கவனயீர்ப்பு போராட்டம்- பரபரப்பை ஏற்படுத்திய வானூர்தி பதாகை |
கனடாவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நான்கு நாடுகள் பங்குபற்றும் 20 ஓவர்கள் அடங்கிய துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. |
நேற்றய நாள் மிகவும் சிறப்பான முறையில் தமிழ் மகளிர் அமைப்பினராலும் மாணவர் அமைப்பினராலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. City இல் Dufferin & Blumington சந்திப்பிற்கு அருகில் உள்ள திடலிலேயே இந்த துடுப்பாட்டப் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை முதல் நடைபெறும் இந்தப் போட்டியின் போது கனடா வாழ் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றினர். துடுப்பாட்ட வீரரும் சிறிலங்கா படையின் பீரங்கி படையைச் சேர்ந்தவருமான அஜந்த மென்டிசுக்கு எதிரான முழக்கங்களை கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் குறிப்பாக கனடிய தமிழ் இளைஞர்களும், யுவதிகளும், உணர்வாளர்களும் எழுப்பினர். வீதியால் சென்று கொண்டிருந்த கனடிய மக்களுக்கு ஆங்கில மொழியிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.
தமிழ் மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு கனடிய காவல்துறையினர் தமது ஒத்தாசையை வழங்கியிருந்ததோடு முதலுதவி காப்புப் பணியினரையும் அழைத்திருந்தனர். காவல்துறையினருக்கு ஒத்தாசை புரியும் வகையில் நிகழ்வின் ஏற்ப்பாட்டாளர்கள் மக்களை கட்டுப்படுத்தி வீதியின் ஒருபுறமாக மக்களை வழிநடத்தி ஒழுங்கமைப்பினை செய்திருந்தனர் தமிழர்களை சிறிலங்கா அரசு கொல்வதை நிறுத்தவேண்டும் என்ற அங்கில மொழிப்பதாதை தாங்கியவாறு வானூர்தி ஒன்று ஒன்றரை மணிநேரத்தக்கு மேலாக மைதானத்தைச் சுற்றி பறப்பில் ஈடுபட்டு துடுப்பாட்டத்தினை பார்வையிட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனை அவதானித்த காவல்துறையினர் அவர்களில் இருவரை கைது செய்து கொண்டு சென்றனர்.
|
Saturday, October 11, 2008
லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு
| உக்கிரமான மோதல் நடைபெறும் பகுதியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு |
சிறிலங்கா படையினரின் உக்கிரமான தாக்குதல்கள் நடைபெற்று வரும் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைமடுச் சந்தியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது. |
கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம்அண்டு நினைவு நிகழ்வு நடைபெற்றது. பாரதிபுரம் வட்டப் பொறுப்பாளர் திருமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி பேசியதாவது: மாலதியின் திருவுருவச்சிலை 2004 ஆம் ஆண்டு இதே நாளில் மகளிர் படையணிகளின் அணிவகுப்புடன் பேரெழுச்சியான நிகழ்வுடன் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மண்ணை கைப்பற்றி விடுவோம் என்று சிங்களப் பேரினவாதிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்வை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றோம். தமிழீழ பெண்களுக்கு நம்பிக்கை என்ற பெரும் ஆயுதத்தை மாலதி விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்தியப் படைகளுடன் மோதல்கள் தொடங்கிய போது எம்மிடம் கனரக போர்க்கலங்கள் இல்லை. இருந்தவையெல்லாம் நம்பிக்கை மட்டுமே. போராளிகளிடம் இருந்த நம்பிக்கையும், மன உறுதியும், ஓர்மமும் அர்ப்பணிப்புமே பெரும் வல்லரசை வெல்லக் கூடிய நிலையை உருவாக்கியது. மாலதி முதல் பெண் மாவீரராக வித்தாகியுள்ளமையால் மாலதியின் வழியில் தமிழீழப் பெண்கள் அணிவகுத்துள்ளனர் என்றார் தமிழினி.
முன்னதாக பொதுச்சுடரினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை ராதா வான்காப்புப் படையணியின் அரசியல் பொறுப்பாளர் விழியன் ஏற்றினார். 2 ஆம் லெப். மாலதியின் திருவுருவச்சிலைக்கான ஈகைச்சுடரினை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான நாவேந்தன் ஏற்றி மலர்மாலை சூட்டினார். புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான கானகன் கிளிநொச்சிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் மாவீரர் பணிமனை நிர்வாகப் பொறுப்பாளர் இனியவன் மாவீவரர்; பணிமனை மகளிர் பொறுப்பாளர் ஆவர்த்தனா உதயநகர் வட்டப் பொறுப்பாளர் ஜூட் தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி ஆகியோர் மலர்மாலைகளை சூட்டினர்.
|
Friday, September 26, 2008
தியாகி திலீபன் நினைவு தினம்
திலீபன் வெள்ளையனே வெளியேறு என்பது போல இந்தியனே வெளியேறு என ஒரு போதும் கேட்டதில்லை. எதற்காக ஈழத்திற்கு வந்தீர்களோ ? என்ன உறுதிமொழிகளை தந்தீர்களோ அவற்றை அமுல்ப் படுத்துங்கள் என்று மட்டுமே கேட்டான். பசி மறந்து கிடந்த பிள்ளையின் போருக்கு பாரதம் சாவினைப் பரிசளித்துப் பல்லிளித்தது.
திலிபன் நினைவுகள்
தியாகி திலீபன்
உலக வரலாற்றிலே ஓர் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் மட்டுமல்ல... தமிழீழ மக்கள் புரட்சியின் திறவுகோல். ஈழ விடுதலைப் போராட்டத்தின் அகிம்சைத் தீ. அணையா விளக்கு, அகிம்சையால் எழுந்த பாரதமெனும் நாட்டுக்கு, அகிம்சையின் அர்த்தம் கற்பித்த புலிவீரன்.இந்திய-சிறீலங்கா ஒப்பந்தமெனும் சூழ்ச்சிப் பொறியோடு, தமிழீழ மக்களின் துன்பங்களையும், வேதனைகளையும் வெட்டி வீழ்த்தி விடுவோமென்று கூறிக்கொண்டு பாரதப் படைகள் எம் மண்ணில் காலூன்றியபோது தமிழீழ மக்களின் மகிழ்ச்சி உச்சிமேவிப் பிரவாகித்தது.
ஆனால் இந்திய அரசின் கபடம் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியபோது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்கள் தண்ணீருமின்றி உண்ணாநோன்பிருந்த தமிழீழ விடிவிற்காய் உயிர்த்தியாகம் செய்தான் தியாகி திலீபன்.1963.11.27 இல் ஊரேழு என்னும் கிராமத்தில் பிறந்த இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன் கல்வியில் சிறந்துவிளங்கி பல்கலைக்கழக மருத்துவபீட அனுமதியைப் பெற்றான்.
தமிழீழ மக்களின் இன்னல்கண்டு தனது கல்வியை உதறித்தள்ளி 1983 காலப் பகுதியில் லெப். கேணல் பொன்னம்மான் அவர்களின் தொடர்பு மூலமாக தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டான். ஆரம்ப காலங்களில் இயக்க அரசியல் வேலைகளில் ஈடுபட்ட திலீபன், பின்னர் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான்.
இக்காலப்பகுதியில் சிறீலங்காப் படைகளுடனான நேரடி மோதல்களிலும் தனது திறமையினை வெளிப்படுத்தி வந்தார். மக்கள் மத்தியில் மிக அன்பாகப் பழகியதுடன் அவர்களது முன்னேற்றத்துக்காக பல அமைப்புகளையும் நிறுவினான். விடுதலைப் புலிகள் அமைப்பையும் பல புதிய பரிணாமங்களிற்கு இட்டுச் செல்ல வழிவகுத்துச் செயற்பட்டார். களத்தில், சுதந்திரப் பறவைகள் உட்பட பல பத்திரிகைகளை ஆரம்பித்து செயற்படுத்தினான். விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பு, மகளிர் அமைப்பு, சுதந்திர பறவைகள் அமைப்பு, தேச பக்தர் அமைப்பு என்பவற்றுடன் தமிழீழ கிராமிய நீதி மன்றங்கள், விழிப்புக் குழுக்கள், சர்வதேச உற்பத்திக் குழுக்கள், தமிழீழ ஒலி ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, தமிழர் கலாசார அவை என இவன் ஆரம்பித்து நெறிப்படுத்திய பலவற்றைஅடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு விடுதலைக்காய் தீவிரமாய் உழைத்துவந்த லெப். கேணல் திலீபன் இந்திய-சிறீலங்கா ஒப்பந்தத்தை சிறீலங்கா அரசு மீறுவது கண்டு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலிலும், சிறைகளிலும் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும், புனர்வாழ்வு என்னும் பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ‘புனர்வாழ்வு’ என்னும் சகல வேலைகளையும் நிறுத்த வேண்டும். வடக்கு கிழக்கில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் உள்ள ஊர்காவற் படையினரின் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் என்பவற்றில் குடியிருக்கும் இராணுவ பொலீஸ் நிலையங்கள் அகற்றப்பட வேண்டும் என ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள் முன் தண்ணீருமின்றி தன் பட்டினிப்போராட்டத்தை ஆரம்பித்தான் திலீபன்.
பன்னிரு நாட்கள் தன்பாராமுகத் தன்மையினால் திலீபன் என்னும் தியாக வீரனை சாவின் வாய்க்குத் தீனியாக்கியது பாரத அரசு.
‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்று கூறி மரணித்த அந்த மாவீரனின் 21ஆம் ஆண்டு நினைவுடன் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாய் எழுந்து நின்று, தினம் தினம் தீக்குளித்து போராடி நிற்கிறது எம்மினம்.
Monday, September 22, 2008
கனடா தமிழர்களின் கவன ஈர்ப்பு நிகழ்வு
உக்கிரமடைந்து வரும் போரினால் பெரும் சரிவைச் சந்தித்துள்ள சிறிலங்காவின் உல்லாசப்பயணத்துறை மற்றும் ஏற்றுமதித்துறைகளை வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் முகமாக, கனடா ரொறன்ரோவில் உள்ள "ஹாபர் ஃபுரொன்ட் சென்டரில்" (Harbour Front Centre) இல் "சிறிலங்கா நாள்" என்னும் நிகழ்வு இந்த வார இறுதி நாட்களில் (20-21.09.08) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இங்கு இலங்கையின் உண்மை நிலையினை மறைத்து உல்லாசத்துறை மற்றும் தேயிலை போன்ற ஏற்றுமதித்துறைகளை ஊக்குவிக்கும் முகமாக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


ஆனால், அங்கு எமது தமிழர்கள் படும் அவலங்களை வெளி உலகுக்கு எடுத்துக்கூறி சிறிலங்காவின் உண்மை முகத்தை தெரிவிக்கும் வகையில் தமிழ் மகளிர் அமைப்பினராலும் கனடிய தமிழ் இளையோர்களாலும் எதிர்ப்பு நிகழ்வு ஒன்று "சிறிலங்கா நாள்" நடைபெற்ற மண்டபத்துக்கு முன்பாக நடைபெற்றது.
இதில் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளைச் சித்தரிக்கும் படங்கள் மற்றும் வாசகங்கள் என்பனவற்றை தாங்கியவாறு வீதிக்கு இரு புறங்களிலும் திரண்டிருந்த மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
அத்துடன் இது மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதும், உல்லாசப் பயணிகள் பெருமளவில் பார்வையிடும் நகரின் மத்திய பகுதி என்பதனால், இங்கு வழங்கப்பட்ட சிறிலங்காவின் முகத்திரையைக் கிழித்துக்காட்டும் ஆதாரங்களுடன் கூடிய சிறு பிரசுரங்களை வேற்றின மக்கள் படித்துவிட்டு தம்முடன் கொண்டு சென்றதையும், அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டதுடன் தமது ஆதரவினையும் கவனயீர்ப்பு நிகழ்விற்கு தெரிவித்துக் கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது.


இந்நிகழ்வினை கனடிய ஊடகங்களும் பதிவு செய்தன.
நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் "சிறிலங்காவே, தமிழர்களைக் கொலை செய்யாதே" (Sri Lanka, Stop Killing Tamils) என்ற வாசகத்தினைக் கட்டியிழுத்தபடி வானூர்தி ஒன்று சுமார் இரண்டு மணித்தியாலங்களாக ரொறன்ரோ நகர் முழுவதினையும் வலம் வந்ததாகும்.
ரொறன்ரோ நகரின் பெரும்பாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்து பார்க்கக்கூடியதாகப் பறந்த இந்த வானூர்தியின் பின்னால் எழுதப்பட்டிருந்த வாசகம் அனைத்து மக்களுக்கும் ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கும்.


அதாவது, நடக்கும் உண்மைகளை வெளித்தெரிய விடாது தடுத்து தனது போலி முகத்தினை வெளிக்காட்டும் சிறிலங்காவின் உண்மை முகத்தினை தோலுரித்துக் காட்டுவதாக இச்செய்தி அமைந்திருந்தது.
இதேவேளை, அங்கு வருகை தந்திருந்த வேற்றினச் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு அந்த வானூர்தி அந்த வாசகத்துடன் சுற்றி வந்ததன் காரணம் பற்றி சுற்றுலாப் பிரயாண வழிகாட்டிகள் எடுத்துக்கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் இந்த அமைதி வழியிலான எதிர்ப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமையும் இதே இடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்
Wednesday, September 17, 2008
பெரியார் 130

பெரியார்
130 ஆவது பிறந்த நாள்
விளக்கை ஏற்றி
வெளிச்சம் தந்தவர்கள் உண்டு
நீயோ
உன்னையே எரித்து
வெளிச்சம் தந்தாய்
எங்களுக்கு நீதான்
எழுதவும் படிக்கவும்
அடித்தளமிட்டாய்
நாங்களோ இன்னும்
நன்றி சொல்லவே
கற்றுக்கொள்ளவில்லை
எங்களுக்காகவே
நீ வாழ்ந்தாய்
மன்னித்துவிடு
தந்தையே
நாங்களும்
எங்களுக்காகவே வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
- சுபவீ.
(தென்செய்தி 1/15 அக்டோபர் 2004
Thursday, September 11, 2008
அன்பளிப்பு ராடார்
| புலிகளின் வானூர்தி தாக்குதலில் காயமடைந்த இந்திய தொழில்நுட்ப நிபுணர்களுக்கு கொழும்பில் தொடர்ந்து சிகிச்சை |
| வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைமையகத்தின் மீது நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மும்முனைத் தாக்குதலில் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்களும் தொடர்ந்தும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. |
சிறிலங்கா வான்படையின் ராடர் பிரிவில் பணிபுரிந்த இந்த இந்த இருவரும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்து உடனடியாகவே கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டனர். இருந்தபோதிலும், வவுனியா முகாமில் வெளிநாட்டவர்கள் எவரும் பணிபுரியவில்லை என சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல நேற்று முன்நாள் தெரிவித்திருந்தார். "இவ்வாறான நிலைமைகளைக் கையாள்வதற்கு எம்மிடம் போதியளவு ஆட்கள் உள்ளார்கள். வெளிநாட்டவர்கள் எமது படைகளுடன் இணைந்து பணியாற்றுகின்றார்கள் எனக்கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை" எனவும் அமைச்சர் நேற்று முன்நாள் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்திருந்தார். காயமடைந்த இரண்டு இந்திய தொழில்நுட்ப நிபுணர்களான ஏ.கே.தாகூர், சிந்தமாணி ராவுட் ஆகிய இருவரும் ஓகஸ்ட் மாதத்திலிருந்து வவுனியா முகாமில் வைக்கப்பட்டுள்ள இந்திய ராடர் சாதனத்தை பராமரிப்பதற்காகவும், அதன் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் வந்து தங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2005 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் இந்த ராடர் சாதனம் சிறிலங்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகள் தமது முதலாவது வான் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து இதன் தரம் மேம்படுத்தப்பட்டது. இதற்கான உதவிகளையும் இந்தியாவே வழங்கியது. வவுனியா முகாமில் இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றியதை ஏற்றுக்கொள்ளும் இந்திய தூதரக அதிகாரி ஒருவர், "காயமடைந்த இருவரும் தொழில்நுட்ப நிபுணர்களாகப் பணிபுரிந்தவர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ராடர் சாதனத்தைப் பராமரிப்பதற்காக இவர்கள் காலத்துக்குக் காலம் கிரமமான முறையில் சிறிலங்காவுக்கு வந்து செல்கின்றார்கள்" எனவும் குறிப்பிட்டார். காயமடைந்த இந்த இருவரும் தீவிரமான மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வன்னி கூட்டுப் படைத் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகளில் தரை மற்றும் வான் வழியாக நேற்று முன்நாள் தொடுத்த கடுமையான தாக்குதலில் படையினர் குறைந்தபட்சம் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகாமிலிருந்த இந்தியா வழங்கிய ராடர் சாதனம் தாக்கியழிக்கப்பட்ட போது அதற்கான தொழில்நுட்பவியலாளர்களாகப் பணிபுரிந்த இரண்டு இந்தியர்கள் காயமடைந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமை தெரிந்ததே. நன்றி புதினம் |
முகமூடியை கிழித்துள்ள வவுனியா ரா அதிகாரி பாராட்டு
| சிறிலங்கா இராணுவத்தின் பிரசார முகமூடியை கிழித்துள்ள வவுனியா தாக்குதல்: பி.இராமன் |
சிறிலங்கா படையினரின் வவுனியா தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்த்தியாக திட்டமிட்டு நடத்திய தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தின் பொய்ப்பிரசார முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றது என்று இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான றோவின் முன்னாள் பிரதிச்செயலரும் அனைத்துலக விவகார ஆய்வாளருமான பி.இராமன் தெரிவித்துள்ளார். |
வவுனியா தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து அவர் எழுதியுள்ள பத்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வடக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா இராணுவத்தினர், தமது தாக்குதல்களால் புலிகளின் ஒட்டுமொத்த மன உறுதியையும் சிதைத்துவிட்டதாக பிரசாரம் செய்து வருகிறாரகள். ஆனால், வவுனியா தாக்குதலை பார்க்கப்போனால் புலிகளின் மூத்த தளபதிகளோ போராளிகளோ எள்ளளவும் தமது உறுதியில் குலைந்துவிட்டதாக கணிப்பிடமுடியாது என்று அடித்துக்கூறவேண்டியுள்ளது. புலிகளது மனஉறுதி தொடர்ந்து உச்ச நிலையிலேயே காணப்படுகிறது. அவர்களின் தளபதிகளின் நேர்த்தியான திட்டமிடலும் குறைந்த ஆள்பலத்துடனும் ஆயுத பலத்துடனும் படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் வியூகங்களும் அவர்களின் வீரத்தின் வீச்சை வெளிப்படுத்தியிருக்கின்றன. விடுதலைப் புலிகளின் மரபுரீதியான போராட்ட வலுவை முற்றாக அழித்து போராளிகளின் மனஉறுதியை சிதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அண்மையில் கூறியிருந்தது. இராணுவம் கூறியதைப்போல உண்மையிலேயே நடைபெற்றிருந்தால், புலிகளின் தளபதிகளினதும் போராளிகளதும் ஓர்மம் குறைந்திருக்கும். புலிகள் அமைப்பு பல பிரிவுகளாக உடைந்து அதன் உறுப்பினர்கள் அந்த அமைப்பிலிருந்து தப்பியோடியிருப்பர். அவ்வாறு ஏதாவது நடைபெற்றதா? அதற்குரிய எந்த அறிகுறியும் புலிகள் அமைப்பிலிருந்து தென்படவில்லை. பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகியவற்றிடமிருந்து தொடர்ந்து ஆயுதங்களை பெற்று ஓயாது சண்டையிடும் சிறிலங்கா படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் சளைக்காது சமரிட்டு வருகின்றனர். வன்னி மீது எத்தனை தடவைகள் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் சென்று தாக்குதல்களை நடத்தினாலும் அங்கிருந்து புலிகள் தொடர்ந்தும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். புலிகளின் இந்த தாக்குதல்களினால் - சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட - இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்து வருகின்றது. ஈரானிடமிருந்து பெறும் பணத்தினால் பெருந்தொகையான ஆயுதங்களை தனது நேச நாடுகளிடம் பெற்று அவற்றை போரில் பயன்படுத்துவதில் மட்டும்தான் சிறிலங்கா படைகள் ஆசுவாசப்பட்டுக்கொள்கின்றன். இந்த வசதி புலிகளுக்கு இல்லை என்பது உண்மை. விடுதலைப் புலிகளினது நேர்த்தியான திட்டமிடலையும் அரச படையினருக்கு எதிரான அவர்களது ஓர்மத்தையும் அண்மையில் இடம்பெற்ற வவுனியா தாக்குதல் தெளிவாக காண்பித்திருக்கின்றது. கடந்த ஆண்டு ஒக்டோபரில் அனுராதபுரம் படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்று - ஒரு படி மேலே சென்று - வான் வழியாகவும் தரை வழியாகவும் - ஆட்லறி மூலமும் மிகவும் கவனமாக திட்டமிட்டு வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருக்கின்றனர். தாக்குதல் மேற்கொண்ட புலிகளின் வானூர்திகளை கொழும்பிலிருந்து சென்ற தமது சிறப்பு தாக்குதல் வானூர்திகள் சுட்டு வீழ்த்தியதாக சிறிலங்கா வான்படை தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்குரிய ஒளிப்பட ஆவணம் தம்மிடம் இல்லை என்று வான்படை பேச்சாளர் கூறியுள்ளார். அனுராதபுர படைத்தளம் மீதான புலிகளின் வான் தாக்குதலின்போதும் அது ஒரு கண்துடைப்பு தாக்குதல் என்றும் புலிகள் தமது இலக்கை அடையவில்லை என்றும் சிறிலங்கா அரசு முதலில் கூறியிருந்தது. ஆனால், பின்னர் வெளிவந்த சுயாதீன அறிக்கைகள் இராணுவத்துக்கு ஏற்பட்ட பாரிய இழப்பை வெளிக்கொண்டு வந்தது. வவுனியா படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் வானூர்திகள் ஆறு நிமிடங்கள் மாத்திரமே வவுனியா வான் பரப்பின் மேல் பறப்பில் ஈடுபட்டிருக்கின்றன. ஆகவே, அவ்வளவு நேரத்திற்குள் கொழும்புக்கு தகவல் போய், அங்கிருந்து வந்து புலிகளின் வானூர்தியை தாக்கியழிக்க வல்ல வேகமான வானூர்திகள் எவையும் சிறிலங்காவிடம் இல்லை. சிறிலங்கா இராணுவம் தாம் ஈட்டிய வெற்றிகளை பூதாகாரப்படுத்தி வெளியிட்டுவிட்டு தமது தரப்பு இழப்புக்களை மூடி மறைத்துவரும் வேளையில், விடுதலைப் புலிகள் ஆதாரங்களுடன் இழப்பு விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். தாம் போரில் பாரிய இழப்புக்களை சந்தித்தாலும் கூட அதனை புலிகள் ஒருபோதும் மூடிமறைக்க முயற்சிப்பதில்லை. இதனால்தான், விடுதலைப் புலிகளின் அறிக்கைகளை போராளிகளும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் நம்பகத்தன்மை உடையவையாக பார்க்கின்றனர். வவுனியா தாக்குதலை பொறுத்த வரையில் விடுதலைப் புலிகள் விடுத்த அறிக்கை, சிறிலங்கா அரசு விடுத்த அறிக்கையிலும் பார்க்க கூடுதல் நம்பகத்தன்மை உடையது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி புதினம் |






















தமிழ்நாட்டு அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமானது- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய தீர்மானம் என்று அக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நான்கு நாடுகள் பங்குபற்றும் 20 ஓவர்கள் அடங்கிய துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.











சிறிலங்கா படையினரின் உக்கிரமான தாக்குதல்கள் நடைபெற்று வரும் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இரணைமடுச் சந்தியில் 2 ஆம் லெப். மாலதியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றது.








சிறிலங்கா படையினரின் வவுனியா தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேர்த்தியாக திட்டமிட்டு நடத்திய தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தின் பொய்ப்பிரசார முகமூடியை கிழித்தெறிந்திருக்கின்றது என்று இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான றோவின் முன்னாள் பிரதிச்செயலரும் அனைத்துலக விவகார ஆய்வாளருமான பி.இராமன் தெரிவித்துள்ளார்.